திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கதை சொல்லிகளின் சந்திப்பு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் அவர்கள் சமீபத்தில் கோவையில் நடந்த ஒரு நிகழ்வில் பங்குகொண்டபோது கிடைத்த அனுபவங்கள் குறித்து நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


கதை சொல்லிகளின் (Story tellers) - இரண்டாவது சந்திப்பு - 10.8.25 கோவை.



கதை சொல்லியான என் neighbour cum தோழி Smt. பார்வதி இந்த நிகழ்வுக்கு  என்னைக் கூட்டிச் சென்றாள். Registration fee Rs.100 each. அது ஒரு மணி நேர நிகழ்வு. 4 பேர், ஒவ்வொருவரும் 10 நிமிட நேரம் கதை சொல்லவேண்டும்.பின்னர் அதைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லக் கேட்கிறார்கள்.மொழி : தமிழ்,ஆங்கிலம், இரண்டும் கலந்து அல்லது எந்த மொழியிலும் (முன்னாடி அதன் சாராம்சத்தை புரியும் மொழியில் சொல்லிவிட்டு) சொல்லலாம்.அப்படியாவது ஏதாவது சொல்ல ஊக்குவிப்பு! 


முதலில்  திரு.ஈஸ்வரன் ஒரு கதை சொன்னார்.பப்புவா நியூ கினி எனும் நாட்டில் நடந்ததாக ஒரு கதை.நிஜமும் கற்பனையும் கலந்தது.எப்படி மூன்று (நர மாமிசம் சாப்பிடும்) பழங்குடியினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கின்றனர். பின் அதில் ஒரு பழங்குடியினர் தாங்கள் கட்டிய பாலத்தை அவர்களே எரித்துவிடுகின்றனர்.பின்னர் மூவரும் தங்களுக்குள்  சமாதானமாகி புது பாலம் கட்டிக் கொள்கின்றனர் என்பது கதை.இதில் சொல்லப் படுவது என்னவென்றால் புது பாலம் கிடைக்கவேண்டு மானால் பழையதை எரிக்கக்கூட எரிக்கலாம் என்பது.இதைக் கேட்டுவிட்டு இங்கு ஏற்கெனவே இருக்கும் பழைய பாலங்களை யாராவது அழிக்க ஆரம்பித்தால் ஆபத்து. அப்புறம் அதைத் திருப்பிக் கட்ட பல்லாயிரம் கோடி நம் வரிப் பணம் ஸ்வாஹா..


ஆனால் அவர் சொன்னவிதம் நன்றாக இருந்தது.பெயர்கள் விவரங்களை ஒரு சிறு குறிப்பு கூட வைத்துக் கொள்ளாமல் சொன்னது சிறப்பு👌🏻


அடுத்து மங்களம் எனும் ஒரு story teller Orissa வின் ராணியாக தன்னை மாற்றிக்கொண்டு கதை சொன்னார்.கையில் ஒரு நீண்ட நிஜ கத்தியோடு (வாளுக்கும் கத்திக்கும் பிறந்தது மாதிரி தோற்றம்.வாத்தின்னு வச்சுக்கலாம்😜). கொஞ்சம் தள்ளியே உக்கார்ந்து இருந்ததில் சற்று ஆறுதல்.ஏனென்றால் அவள் ராணியாகவே மாறி வீர வசனம் பேசி அபாரமாக முக பாவனையுடன் நடித்தாள்.நிஜமாவே நாம் போர்க்களத்தில் / ராஜ சபையில் இருப்பது போலவே இருந்தது.உணர்ச்சி வசப்பட்டு வாத்தியை வீச நேர்ந்தால் நம் கதி?😳 மொட்டைக் கத்தியானாலும் காயம் படுமல்லவா🤕? ஆனால் அக்கதையின் கருத்து அருமை.என்றுமே பழிக்குப் பழி வாங்குவது மேலும் பகைமையையே வளர்க்கும் என்பது moral.


பின் மூன்றாவதாக திரு.நாகராஜன் கதையென்று சொல்லாமல் (அவருக்கு இது முதல் முறையாம் கதை சொல்வது) குட்டிக்கதை/ joke/ துணுக்கு எல்லாம் கலந்து ஒரு அவியல் கொடுத்தார் (ஆமாம் கேரளாவைச் சேர்ந்தவரல்லவா😊). அதில் பாலம் வரவில்லையாயினும் சொன்னவற்றை ஒன்றுக் கொன்று link செய்து பாலம் கட்டினார்.ஒரு இளமையான அழகான பெண்ணை ஒரு இளைய வாலிபத் துறவி சுமந்த கதையை (அட வெள்ளத்தை கடக்கத்தாங்க..


ஏதாவது தாறுமாறா கற்பனை பண்ணிக்காதீங்க🫢) நம் மனம் இப்போதும் கூட சுமக்கிறது, அவர் கூட வந்த சீனியர் துறவி போல்! இளைஞரான  புனிதத் துறவி எப்பவோ இறக்கிவிட்டுட்டார். ( தேவையில்லாமல் நம் மனம் நித் திய ஆ(யா)னந்தம் கற்ற, பெற்ற சன்யாசிகள் பற்றி நினைக்கிறது! 🤦🏻‍♀️🙅‍♀️) 



இறுதியில் நம் Smt.பார்வதி.இது ஜப்பானிய நாட்டுக் கதை.அதற்கு ஏதோ ஊஷோ கோஷோ என்று ஏதோ ஒரு ஜப்பானியப் பாடல் பாடிவிட்டு அப்புறம் ஆரம்பித்தார்(இனிமேல் ஜப்பானிய மொழியும் கற்றுக் கொண்டு செல்லவேண்டும்போல😧) இது ஒரு காதல் கதை.அழகான இயற்கை எழில், வானவில் இவற்றை தன் கையால் நெய்யும்(!!!???) ஒரு தேவதை, மாடு மேய்க்கும் ஒரு வாலிபன் இருவருக்கும் இடையே காதல் (எல்லாம் ஆதி காலம் தொட்டு வந்த நம்ம சினிமா தீம்களின் வேற்று உருவம்தான்) அக்காதல் எப்படி பல சங்கடங்களை சந்தித்து பின் வெற்றி பெறுகிறது என்பது கதை. மாடு மெய்ப்பவனை ஒரு தேவதை எப்படி... என்று அச்சு பிச்சுத் தனமாகக் கேட்கக் கூடாது..காதல் காதல்தான்...காதல் யாருக்கு  வேண்டுமானாலும் மலரலாம்.அது வெற்றி பெறும் (சில பல தவிர) அங்கும் ஒரு பாலம் வந்து விடுகிறது (வரணுமே - தீம்!) பார்வதி அந்த தேவதையாகவே மாறி கதை சொன்ன விதம்  ரசிக்கும்படியாக இருந்தது.என்ன, ஒரு கிமோனா அணிந்து, உச்சிக் கொண்டை போட்டு அதன் நடுவில் 4,5 மூங்கில் குச்சிகள் சொருகி,கையில் விசிறியுடன் கதை சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!😊 (Mr.India ஶ்ரீதேவியின் ஹவா ஹவாயிக்கு tough கொடுத்திருக்கலாம்! Incidentally இன்று ஶ்ரீதேவியின் பிறந்ததினம்!)நாமும் ஜப்பானுக்கே போய்விட்டு வந்திருக்கலாம் கற்பனையில்...)


இதில் சொல்லப்படாத Bridge, சீட்டு விளையாட்டான பிரிட்ஜ் தான். நல்லவேளை.


பார்வதியின் தூண்டுதலால் நான் ஒரு joke சொன்னேன். அனைவரும் ரசித்து சிரித்தனர். அவர்களின் கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது என்று சொல்ல ஆசைதான்.இருந்தாலும் வந்திருந்த ரசிக மகாஜனங்கள் (என்னைச் சேர்த்து 11 பேர்😊) ரசித்தது என்னை குளிர்வித்தது..


அடுத்த முறை ஒவ்வொருவரும் குறைந்த பக்ஷம் இன்னொருவரை அழைத்துக் கொண்டு வரவேண்டும், அதற்கு சிறப்புப் பரிசு என்று அறிவிக்கப் போகிறோம்.


என்ன? தவறாம வந்துடுங்க.Tea, coffee, biscuit எல்லாம் உண்டு. ஆட்கள் எண்ணிக்கை உயர உயர சமோசா, வடை ஆகியவை கொடுப்பது பற்றியும் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.. (இதுதான் கொக்கி.. 😜😁 )


நல்லபடியாக சிந்தித்து,ரசித்து, சிரித்து பொழுது போயிற்று… இந்த நிகழ்வு குறித்து இன்ஸ்டாவிலும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சுட்டி கீழே!


Building Bridges


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

18 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....