அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சுதந்திர தினம் - பாட்டும் பயிற்சியும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நெடுநாட்களுக்குப் பின் அருமையான ஒரு சரித்திர நூலை வாசிக்க வாய்ப்பு கிட்டியது! எங்கள் வீட்டில் என்னவரும் மகளும் இந்த நூலை முன்பே வாசித்து விட, எனக்கு இப்போது தான் வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது! நிச்சயமாக இதை யாரும் வாசிக்க தவற விட்டு விடக்கூடாது என்று சொல்வேன்! நம் சரித்திரத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா!! ஹொய்சாள ராஜ்ஜியத்தில் அமையப் பெற்றுள்ள பஞ்ச நாராயணக் கோவில்களின் கதைக்குள் செல்வோமா!!
சரித்திர பேராசிரியரும் எழுத்தாளருமான மதனகோபாலன் என்பவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருக்கும் ஆறு மாணவிகளை அழைத்துக் கொண்டு பேலூர் ஹளபேடு சிற்பங்களை புகைப்படம் எடுப்பதற்காக அழைத்து வருகிறார்! அங்கே துவாரசமுத்ரா என்ற ஹோட்டலில் எல்லோரும் தங்குகின்றனர்! அங்கே நுழைவாயிலில் காணும் ஒரு வித்தியாசமான சிற்பமே அவரின் ஆர்வத்தை தூண்டுகிறது! அங்கே இரவில் அவருக்கு மட்டும் கேட்கும் உளியின் ஓசையும் ஆச்சரியத்தை தருகிறது!
மறுநாள் மாணவிகளை அழைத்துக் கொண்டு பேலூர் ஹளபேடு சிற்பங்களை புகைப்படம் எடுக்கச் செல்லும் அவரிடம் முகலிங்கம் சென்னம்மா தம்பதி அறிமுகமாகின்றனர்! அவர்களின் மூலம் பஞ்ச நாராயணக் கோவில்கள் உருவான சரித்திரம் அறியப்படுகிறது! அங்கே உள்ள ஒவ்வொரு சிற்பமும் கதை சொல்கிறது! அன்றாடம் அந்தக் கதைகளைக் கேட்பதும், இரவில் உளியின் ஓசையால் உந்தப்பட்டு அவர் காணும் காட்சிகளுமாக சரித்திரத்தில் பயணிக்கத் துவங்குகிறோம்!
கிபி 1102ல் ஹொய்சாள ராஜ்ஜியத்தில் ‘பிட்டிதேவன்’ என்ற சமண மதத்தை சேர்ந்த அரசனின் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வுகளில் தான் எத்தனை கதைகள்! அவர் காதல் மணம் புரிந்து கொண்ட வைணவப் பெண்ணான லஷ்மிபிரபா! நிர்பந்தத்தால் ஏற்றுக் கொண்ட சமண மதத்தை சேர்ந்த பெண்ணான பட்டமஹிஷி ஷாந்தலா தேவி! அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் என பயணிக்கிறது சரித்திரம்! ஒருகட்டத்தில் சமண மதத்தைச் சேர்ந்த பிட்டிதேவன் வைணவனாக மாறி விஷ்ணுவர்த்தனாக அரசாள்கிறான்!
குலோத்துங்கனின் ஆட்சிப் பிடியிலிருந்து வெளியேறி ஹொய்சாளத்திற்கு வருகை தரும் ஆச்சாரியார் இராமானுஜர் தான் பிட்டிதேவனைத் திருத்தப் பணி செய்து விஷ்ணுவர்த்தனாக மாற்றுகிறார்! அவனை பஞ்ச நாராயணக் கோவில்களை அமைக்கவும் வழிநடத்திச் செல்கிறார்! அந்த காலகட்டத்தில் சைவம், வைணவம், சமணம் என்று இவற்றுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரம்! இந்த பஞ்ச நாராயணக் கோவில்களை அமைப்பதற்கு தான் எத்தனை போராட்டங்கள்!!
இந்த ஹொய்சாள ராஜ்ஜியத்தில் இந்திரசேனா என்பவள் தான் முக்கிய கதாப்பாத்திரம்! இவள் ஒரு நபும்சகி! (திருநங்கை) இப்போது நான் சமஸ்கிருதம் படித்துக் கொண்டிருப்பதால் இந்த வார்த்தைக்கான உள் அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது! சமஸ்கிருத இலக்கணத்தில் ஆண் பால்(पुल्लिङ्ग) பெண் பால்(स्त्रिलिङ्ग) என்பதோடு நபுன்சக லிங்கம் (नपुन्सकलिङ्ग) என்ற Neutral ம் உண்டு! அவற்றுக்கான இலக்கண நியதிகள் ஆண் பாலைப் போலவே தான் இருக்கும்! இந்த சரித்திரத்தில் இடம்பெறும் இந்திரசேனா எனும் நபும்சகி யார்??
சிற்பங்களோடு பயணிக்கும் இந்த சரித்திரத்தில் சிற்ப சாஸ்திரம், அவற்றை வடிவமைக்கும் முறை, அதன் பின்னணி என்று எண்ணிலடங்காச் செய்திகளுடனும் கதைகளுடனும் நாமும் உடன் பயணிக்கிறோம்! பதவி ஆசை என்பது எல்லா காலகட்டத்திலும் இருக்கும் ஒன்றாக போய்விட்டது! அந்த பதவி வெறியினால் எத்தகைய நிகழ்வுகள் எல்லாம் நிகழ்கின்றன! வாசித்து முடித்த போது மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நூல் என்று சொல்வேன்! என்னை கலங்கவும் வைத்தது! நிறைய யோசிக்கவும் வைத்தது! என்றோ அரங்கேறிய சம்பவங்கள் தான் என்றாலும் இப்போது நம் கண்முன்னே நடப்பது போல் உணர வைக்கும் எழுத்துநடை!
சரித்திர பேராசிரியரான மதனகோபாலன் முகலிங்கம் என்பவரிடமிருந்து தெரிந்து கொள்ளும் சரித்திரமும் அவருக்கு அன்றாடம் இரவில் கேட்ட உளி சத்தத்தின் பின்னணியும் என்ன?? ஆச்சாரியார் இராமானுஜர் பஞ்ச நாராயணக் கோவில்களை தோற்றுவித்த வரலாறு என்ன?? சிற்பங்கள் சொன்ன கதைகள் தான் என்ன?? இந்திரசேனா என்பவள் யார்?? போன்ற உங்கள் அனைத்து கேள்விகளுக்கான பதிலாக இருக்கப் போவது பஞ்ச நாராயண கோட்டம் என்னும் இந்த பொக்கிஷ நூல்!
இந்த மாபெரும் சரித்திர நூலை சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியர் திரு காலச்சக்கரம் நரசிம்மா சாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்! நிச்சயமாக இந்த வரலாற்று நூலை மீண்டும் மீண்டும் வாசிக்கலாம் சார்! நான் வாசித்த போதே மகளும் ஆர்வத்துடன் மீண்டும் ஒருமுறை வாசித்தாள்! இருவரும் கதையைப் பற்றி நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்! நன்றிகள் சார். தொடர்ந்து இதுபோன்ற நம் சரித்திர நிகழ்வுகளை உங்கள் ஆய்வுகளுடன் வெளியுலகுக்கு தெரியப்படுத்துங்கள்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
22 ஆகஸ்ட் 2025
இவரது இந்தக் கதையை நான் படித்ததில்லை. படிக்கும் ஆவல் வருகிறது. இது மாதிரி பகிர்வுகளோடு பதிப்பகம், பக்கங்கள், விலை ஆகியவற்றையும் அடிக்குறிப்பாகக் கொடுக்கலாம்.
பதிலளிநீக்கு