அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
பாலகுமாரன் - 1991-ஆம் ஆண்டு தில்லி வந்தபிறகு அறிமுகமானது அவரது எழுத்து - உபயம் அறை நண்பர் பாலாஜி. அறிமுகம் ஆன பிறகு அவரது நிறைய நூல்களை வாசித்து இருக்கிறேன். நானும் நண்பர் பாலாஜி அவர்களும் ஒவ்வொரு நூலையும் எங்களுக்குள் அலாதியாக விமர்சனம் செய்வோம். ஒவ்வொரு நூலும் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவரது சில நூல்களை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை - உதாரணம் - இனிது இனிது காதல் இனிது (முதலாம் பாகம்). அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு காதல் குறித்தும் நாங்கள் மீண்டும் மீண்டும் பேசி இருக்கிறோம். தொடர்ந்து அவரது நூல்களை வாசித்து வந்தாலும் பிறகு ஒரு நீண்ட இடைவெளி வந்துவிட்டது. தற்போது மீண்டும் ஒரு பாலகுமாரன் நூலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது - வாசித்த நூல் - பலா மரம்!
அந்த நூலில் ஒரு வாசகர் கடிதத்தின் பகுதி - “ஒரு ஆணுக்குள் பெண்ணும், பெண்மைக்குள் ஆண்மையும் கலந்திருப்பது இயற்கை. இறைவனே அர்த்தநாரீஸ்வரனாய் இருக்கும்போது, மனிதர்கள் மட்டும் ஏன் உப்புச் சப்பில்லாத விஷயத்துக்கு மாய்ந்து போகிறார்கள்?”
அதே வாசகர் கடிதத்தில் இன்னுமொரு பகுதி…
என்னைப் பொறுத்தவரை ஆண்-பெண் சிநேகம் கம்பி மேல் நடப்பது போன்றது. நூலிழை தவறினால் கூட அதல பாதாளத்தில் விழுந்துவிட நேரிடும். அந்த அதி அற்புதமான சிநேகம் இழை இழையாய்ப் பின்னப்படுவது சுகம்… இறுகிக் கயிறாவது கொடுப்பினை…! இந்தக் கொடுப்பினை நிறைய பேருக்கு இங்கு கிடைக்கவில்லை என்பதினாலோ என்னவோ, எல்லோரும் இவ்விஷயத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள். மானுடன் இன்னும் நிறைய பக்குவடப்பட வேண்டும்.
இப்படியான நிறைய விஷயங்களைக் குறித்து நானும் நண்பர் பாலாஜியும் அடிக்கடி விவாதிப்போம். அது ஒரு கனாக் காலம். சரி இந்த பலா மரம் நூலுக்கு வருவோம்.
பலா மரம் - பழமையான கட்டிடம் ஒன்றில் இயங்கிவரும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி. அதில் இருக்கும் 48 சிறுவர்கள். ஏதோ ஒரு வேகத்தில், பிரச்சனையில் முன்யோசனை இன்றியோ அல்லது கோபத்திலோ எடுத்த முடிவின் காரணமாக, செய்த குற்றத்தின் காரணத்திற்காக சீர்திருத்தப் பள்ளியில் வந்திருக்கும் சிறுவர்கள். அங்கேயிருந்து வெளியே வரும்போது தனது தவறை உணர்ந்து திருந்தி வருவார்களா இல்லை இன்னும் அதீத குற்றங்களை புரியும் மனப்பாங்குடன் வருவார்களா? இதில் இரண்டுமே நடக்க வாய்ப்பு உண்டு. அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் காவலர்களைப் பொறுத்தே இவர்கள் வருங்காலம் அமையும். அங்கே நடக்கும் விஷயங்கள் குறித்த பொதுவான தகவல்கள் மேம்போக்காக மக்களுக்கு தெரிந்திருக்கலாமே தவிர அங்கே இருக்கும் சிக்கல்கள் நம்மைப் போன்ற சாதரணர்களுக்கு தெரிவதில்லை. ஊழல், கஞ்சா மற்றும் சாராயம் போன்ற போதைப்பொருட்கள் கூட மிகச் சுலபமாக அங்கே கிடைப்பது என எல்லாவற்றையும் சொல்லிச் செல்கிறார்.
அப்படி ஒரு சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றாலாகி வருகிறார் சரவணன். அப்பள்ளியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள், அவரது வாழ்க்கை, அவருக்கும் மனைவிக்கும் இருக்கும் சிக்கல்கள், அவரது நிறைவேறாத காதல், பணியில் இருக்கும் உட்பூசல்கள் என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறது பாலகுமாரனின் பலாமரம் எனும் இந்தக் கதை. படித்துக் கொண்டே வரும்போதும் நூலை நிச்சயம் கீழே வைக்கமுடியாது. அத்தனை விறுவிறுப்பு. என்ன நடக்கப் போகிறதோ என்று சிந்திக்க வைப்பதோடு, அது போன்ற சீர்திருத்தப் பள்ளிகளில் வந்து சேரும் சிறுவர்களின் மனநிலை, அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் என பலவற்றையும் நமக்கு புரியவைக்கிறது இந்தக் கதை. காதல், காதலில் உள்ள சிக்கல்கள், திருமணம் மற்றும் அதில் இருக்கும் பிரச்சனைகள் என பல விஷயங்களை கடையின் ஊடே சொல்லிக் கொண்டே செல்கிறார் ஆசிரியர்.
என்னதான் பலா வெளியே பார்க்க முள்ளோடு இருந்தாலும் உள்ளுக்குள் இருக்கும் சுளைகளின் சுவை நமக்கு பலாவைச் சுவைத்த பிறகே தெரிகிறது. அது போல இங்கே பல மனிதர்கள் இருக்கிறார்கள் - ஆண்களும் இப்படி பலா போல இருக்கிறார்கள் - வெளியே முரட்டுத் தனமாகத் தெரிந்தாலும் உள்ளுக்கும் பலாச்சுளை போலவே இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறார் ஆசிரியர். இது ஆசிரியரின் சிந்தனை. ஒவ்வொருவருக்கும் இந்தச் சிந்தனை மாறுபடலாம்.
நூலை நிச்சயம் ஒரு முறை வாசிக்கலாம். விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு. இணையத்திலும் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
15 ஆகஸ்ட் 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....