சனி, 9 ஆகஸ்ட், 2025

கதம்பம் - AI ஆடி - மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் - கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


AI ஆடி - 23 ஜூலை 2025: 



பொதுவாக துணிக்கடையில் மணிக்கணக்காக நின்று எடுப்பதெல்லாம் எனக்கு பழக்கமே இல்லை! பெரிதாக எனக்கு உடைகளின் material பற்றியெல்லாமும் தெரியாது..🙂 என்றாவது ஏதேனும் காரணங்களுக்காக ஷாப்பிங் செல்வதும் சட்டென்று கண்ணில் படும் உடைகளில் கண்ணை உறுத்தாத வகையிலும், மென்மையாகவும் இருக்கும் உடைகளை நிமிடங்களில் தேர்வு செய்து விடுவதும் தான் வழக்கம்! என்னவருக்கு எப்படி ஒரு ப்ளஸ் பாருங்களேன்…:) இதை அவரல்லவா சொல்ல வேண்டும்? சொல்ல மாட்டார்..🙂


சரி! எதற்கு இந்த கதையெல்லாம்?? மகள் தன் கல்லூரிப் படிப்புக்காக fabric எடுக்கணும் என்று சொல்லியிருந்தாள்! அதற்காக வார இறுதியில் திருச்சி மலைக்கோட்டை வரை சென்றிருந்தோம்! எங்கு நோக்கினும் ஆடி ஆஃபர்கள் தான்! அதுவும் திருச்சி புகழ் சாரதாஸில் AI ஆடி என்று வேறு விளம்பரம் செய்திருக்கவே, செயற்கை நுண்ணறிவு மூலம் ஏதேனும் டிசைன் செய்திருப்பார்களோ என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்!!


அங்கு சென்று பார்த்த போது தான் அது ‘ஆல் இந்தியா ஆடி’ என்று தெரிய வந்தது! இந்தியாவின் புகழ்மிக்க இடங்களிலிருந்து ஆடைகளை வரவழைத்து இருக்கிறார்களாம்! அதற்கான வரைபடத்தையும் முகப்பில் அமைத்திருந்தார்கள்! பரந்து விரிந்த கடையில் பொறுமையாக பார்க்க நேரம் இல்லாததால் குறிப்பிட்ட fabric எங்கு கிடைக்கும் என்று கேட்டு நேராக அங்கு சென்றோம்!


இந்த செமஸ்டரில் மகளுக்கு portfolio செய்ய வேண்டும்! அவளுக்கான ஆடையை கம்ப்யூட்டரிலும், கையாலும் அவளே டிசைன் செய்து தைக்க வேண்டும் என்பதால் அதற்கான தேடலில் தான் இங்கு இறங்கியிருக்கிறோம்! ஒரு குறிப்பிட்ட மலரின் நிறத்தில் ஆடை அணிகலன்கள் தயார் செய்ய வேண்டும்! Satin, crepe, ஜார்ஜெட் என்று ரோலாக விதவிதமான துணிகள் இருந்தன! நிறைய ரகங்கள்! இப்படி தாம்மா ரோலாக இருக்கும்! என்று மகள் அவள் பங்குக்கு சில தகவல்களை பகிர்ந்து கொண்டாள்! இந்த இடத்துக்கெல்லாம் நான் வந்ததே இல்லை..🙂


அவள் computerல் டிசைன் செய்த மாடலை காண்பித்து குறிப்பிட்ட நிறத் துணியைத் தேடினோம்! அதே நிறம் இங்கு கிடைக்கவில்லை! அங்கிருந்து கிளம்பி போத்தீஸுக்கு சென்றோம்! அங்கு அவள் எதிர்பார்த்த நிறம் கிடைத்தது! ஆனால் அங்கிருந்த பணியாளர், எதுக்காக கேட்கிறீங்க என்று கேட்டு விட்டு ‘இதை லைனிங்கா வெச்சுக்கோம்மா! வேற நல்ல துணி எடுத்து தரேன்! ஷைனிங்காகவும் இருக்கும்! தைக்கவும் ஈஸியா இருக்கும்! அங்கங்க குண்டூசி குத்திட்டு தைத்தால் நழுவவும் செய்யாது! டிரஸ்ஸுக்கு 10 மீட்டர் எடுத்துக்கோங்க! லைனிங்குக்கு 6 மீ போதும்! என்று சில டிப்ஸ்களை தந்து எங்களை வழிநடத்தினார்! 


அவருக்கு நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்! எனக்கு இது முற்றிலும் வித்தியாசமான அனுபவம் தான்! மகள் தேர்ந்தெடுத்த துறையினால்  அவளிடமிருந்து ஒவ்வொரு நாளும் நான் தெரிந்து கொள்ளும் விஷயங்களும் அதன் பின் வெளியில் செல்லும் போது நான் காணும் கண்ணோட்டமும் என்று புதுப்புது அனுபவங்களால் அழகாகிறது நாட்கள்!


******


மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ் - 24 ஜூலை 2025:



அவ்வப்போது நேரத்திற்கும் மனதுக்கும் தகுந்தாற்போல அன்றாட வாழ்வில் பின்பற்றும் சில முறைகளை மாற்றிக் கொள்வது தான்! முதலில் சில நாட்கள் அல்லது மாதங்கள், பிறகு ஏதேனும் ஒரு காரணத்திற்காக விதிகளை சற்று தளர்த்திக் கொள்வது, பிறகு முற்றிலும் மறந்துவிடுவது என்று செல்வது தானே நம் வழக்கம்! இவ்வளவு விளக்கமாக சொல்லும் போதே தெரிந்திருக்குமே! அதில் நானும் ஒருவள் என்று…:)


அப்படி சில நாட்களாக மாலை நேர நடைப்பயிற்சியை பின்பற்றி கொண்டிருக்கிறேன்! இதுவும் அவ்வப்போது பின்பற்றும் விஷயங்களில் ஒன்று தான்! அந்தி சாயும் மாலையில் வானின் வர்ணஜாலத்தை ரசித்துக் கொண்டு காற்றில் ஆடை படபடக்க spotifyல் ராஜா சாரின் கானங்களை கேட்ட படி சற்று நேரம் நடைப்பயிற்சி! இயற்கையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் காட்சி தருகிறது!


நடைப்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது சில குட்டீஸ்களும் அங்கே விளையாடுவதுண்டு! நேற்றைய பொழுதில் chubbyஆக ஒரு குட்டிப்பொண்ணு அங்கே தன் நண்பர்களுடன் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்! நானும் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன்! நானும் கூட இப்படியே இருந்திருக்கலாம்! எந்த கவலையும் பொறுப்புகளும் இல்லாத பருவம்! அப்பா அம்மாவுக்கு செல்லக்குட்டியாக சிட்டாக வலம் வரலாம்!


இப்படி சிந்தித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்த போது அந்த குட்டிப்பொண்ணு எங்கேயோ  ஒளிந்து கொண்டிருந்த இடத்தில் தலையில் இடித்துக் கொண்டு விட்டாள் என்று தெரிய வந்தது! அடடா! என்று உடனே ஓடிச்சென்று என்னோடு அணைத்துக் கொண்டு அவளை சமாதானம் செய்து தலையை நன்றாக தேய்த்து விட்டேன்! அழத் துவங்கி விட்டாள்! அவள் யாருடன் இங்கு வந்திருக்கிறாள் என்று கேட்டதும் தூரத்தில் அமர்ந்திருந்த அவள் அம்மாவைக் காண்பித்தாள்!


அவரிடம் குழந்தையை அழைத்துச் சென்று நடந்ததைச் சொல்லி தலையில் ஏதேனும் அடி பட்டிருக்கிறதா என்று அவளுடைய பின்னலை அவிழ்த்து பார்க்கும் படியும் சொன்னேன்! ஏனோ எனக்கு தான் பதட்டமாக இருந்தது! ஆனால் அவள் அம்மாவோ நான் வந்து அவரிடம் சொன்னதைப் பற்றியோ குழந்தைக்கு அடிபட்டதை பற்றியோ லட்சியமே இல்லாததைப் போன்று தான் நடந்து கொண்டார்! ஒருவேளை இப்படித்தான் இருக்கணுமோ!!??


இன்றும் கூட அந்த குட்டிப்பொண்ணு அதே இடத்தில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்! நான் அவளை பார்ப்பதை தவிர்த்து விட்டு நடக்கத் துவங்கினேன்! விசித்திரமான மனிதர்கள்! நான் தான் எல்லாவற்றுக்கும் உணர்ச்சி வசப்படுவது போன்று இருக்கிறது! ஒவ்வொரு நாளும் எத்தனையோ சவால்களை கடக்க வேண்டியதாக இருக்கிறது! எதற்கு இந்த கவலை வேறு! மனசே கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

9 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....