வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதிமூன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு


ஸ்ரீ அன்னபூர்ணா! கெளரிசங்கர்:



சென்ற பகுதியில் கோத்தகிரியிலிருந்து கிளம்பி கோவைக்கு பேருந்து ஏறிச் செல்லும் கதைகளைச் சொல்லியிருந்தேன்! இரண்டு நாட்களின் பயண அனுபவங்களை பேசிக் கொண்டும் வழியில் தென்பட்ட காட்சிகளை ரசித்தபடியும் சென்று கொண்டிருந்தோம்! கோத்தகிரிக்கும் ஊட்டிக்கும் போகும் போது காரில் வேகமாக கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து சென்றோம்! ஆனால் பேருந்தில் அப்படிப் போக முடியாது என்பதால் நிதானமாகத் தான் இப்போது கடந்து வந்தோம்!


டவுன் பஸ் போல நின்று நின்று சென்று ஒருவழியாக இரண்டரை மணிநேரத்தில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தோம்!! பேருந்தை விட்டு இறங்கி வெளியே வந்து முதலில் நாங்கள் சென்ற இடம் கோவையின் அடையாளங்களில் ஒன்றான புகழ்பெற்ற பாரம்பரிய உணவகமான ஸ்ரீ அன்னபூர்ணா கெளரிசங்கர்! என் சிறுவயதில் அப்பா அம்மா தம்பியோடு வந்த நினைவுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது!


வீட்டுல தான் இட்லி, தோசையெல்லாம் சாப்பிடறியே! இங்க வந்தும் அதையே சாப்பிடணுமா? பூரி கிழங்கு, சேவைன்னு ஏதாவது சாப்பிடேன்! இல்லைன்னா வேற ஏதாவது சொல்லு! வாங்கித் தரேன்! என்று அப்பா என்னிடம் பேசிய ஞாபகங்கள்! முதன்முதலாக நீள. ..மான ஃபேமிலி ரோஸ்ட்டை பார்த்து வியந்தது! அதை குடும்பத்தினரோடு பங்கிட்டு சாப்பிட்டது என்று இந்த உணவகத்தோடு தொடர்புடைய எத்தனையோ ஞாபகங்கள் சங்கிலித் தொடர் போல் நீள்கின்றன!


கையில காசு இருக்கோ! இல்லையோ! நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் குழந்தைகளை வெளியே அழைத்து வந்து அவர்களிடம் நாலு விஷயங்களைச் சொல்லி, பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று அட்வைஸ் தந்து எங்களை வயிறார சாப்பிட வைத்து அழைத்துச் சென்ற அப்பா எப்போதுமே எனக்கு க்ரேட் தான் இல்லையா! அப்பாவை பற்றி நினைத்தால் கண்கள் நிறைந்து விடுகிறது! 


காலையில் கோத்தகிரியில் அமுதாக்கா தயாரித்து தந்த தோசைகளை சாப்பிட்டதற்குப் பிறகு எதுவும் சாப்பிடவில்லை! பயணம் செய்யப் போகிறோம் என்பதால் மகளும் நானும் எச்சரிக்கை உணர்வோடு இருந்துவிட்டோம்…:) இப்போது மாலை நேரமாகி விட்டது! பசிக்கவும் செய்கிறது! நேரே ஃபேமிலி ரூமுக்குத் தான் சென்றோம்! சாப்பிட ஏதாவது ஆர்டர் செய்வதற்கு முன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும்! கோத்தகிரியிலிருந்து shawlஐ துப்பட்டா போல் போட்டுக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது!!


இப்படியே இங்கு நான் சுற்றினால் பிறகு ஒரு திரைப்படத்தில் விக்ரம் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு சுற்றுவதைப் பார்த்ததும் சந்தானம் சொல்வாரே ஒரு டயலாக்! அதுபோல் என்னை நினைத்து விடுவார்கள் என்று என்னவரிடமும் மகளிடமும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தேன்! முதலில் அதை மாற்றி விட வேண்டும் என்று பெட்டியில் வைத்திருந்த காட்டன் துப்பட்டாவை எடுத்து போட்டுக் கொண்டேன்…:) இப்போ தான் நிம்மதியா ஆச்சு…:) சரி! என்ன ஆர்டர் செய்யலாம்??? எங்கு சென்றாலும் நான் என்ன ஆர்டர் செய்வேன் என்று என்னவருக்கும் மகளுக்கும் தெரியும் ..🙂 உங்களுக்குத் தெரியுமா?


கடலமிட்டாய் மில்க்‌ஷேக்:



அப்பாவை பற்றி எழுதினால் இத்தொடர் இன்னும் நீண்டு கொண்டே சென்று விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்! சுருங்கச் சொன்னால் அப்பாவுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் ஏதும் இருந்ததில்லை! அவருக்கு குடும்பம் தான் உலகம்! 


சிறுவயது முதலே ஹோட்டலுக்கு செல்வது என்றால் என் தேர்வு எப்போதுமே மசால் தோசை தான்..🙂 அதைத் தான் அங்கும் சொன்னேன் என்று சொல்லவும் வேண்டுமா..)! என்னவரும் மகளும் கூட அன்று அதையே ஆர்டர் செய்திருந்தார்கள்! எங்களிடம் ஆர்டர் எடுத்த சர்வர் ஒரு வட இந்தியர்! இப்போது தான் எல்லா இடத்திலும் அவர்கள் தானே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்! எங்களின் ஆர்டரை அவரிடத்தில் சொன்னதும் எடுத்து வந்து பரிமாறினார்!


சூடான மசால் தோசையும் சட்னியும் சாம்பாருமாக ஜோராக இருந்தது! மகளும், அம்மா! சான்ஸே இல்ல! உங்க ஊரு சூப்பர்மா! என்று ரசித்து சாப்பிட்டாள்! தோசையின் சுவையில் ஆழ்ந்து போய்க் கொண்டிருந்த என்னிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார் என்னவர்! ஆனால் என் காதில் தான் எதுவுமே ஏறவில்லையே. .🙂 சிறிது நேரத்திற்குப் பின் வேறு என்ன வேண்டும் என்று அந்த சர்வர் கேட்டுக் கொண்டு வர…மில்க்‌ஷேக் குடிக்கலாம் என்று மூவரும் ஒருமனதாக ஏகோபித்த குரலில் ஓகே சொன்னோம்!


மகள் எதிரே உள்ள சுவற்றில் ஒட்டிருந்த ஸ்டிக்கரில் இருந்த விளம்பரத்தை பார்த்து விட்டு அப்பா! கடலமிட்டாய் மில்க்‌ஷேக்னு இங்க போட்டிருக்கு! என்று சொன்னதும், சரி! அதையே சொல்லலாம் என்று ஆர்டர் கொடுத்து விட்டு மூவரும் காத்திருந்தோம்! என் அப்பாவை போலவே என்னவருக்கும் கடலமிட்டாய் என்றால் உயிர்! அவர்கள் இருவரின் வட்டார மொழியில் அதன் பெயர் மல்லாட்டை கேக்! 


சில நிமிடங்களில் மீண்டும் அங்கே வந்த சர்வர் என்னவரிடத்தில், சாப்! மூணு மில்க்‌ஷேக் மட்டுமே 690ரூ வருகிறது! உங்களுக்கு ஓகேவா? என்று கேட்டார்! என்னது கடலமிட்டாய் மில்க்‌ஷேக் ஒண்ணு 230ரூபாயா? என்று தான் எங்களுக்கு தோன்றியது! அப்படி என்ன இருக்கு அதுல! வேணாம்! கண்ணா! நாம வீட்டுலயே ஒருநாள் பண்ணிப் பார்க்கலாம்! என்று சொல்லிவிட்டேன்!


அதற்குப் பதிலாக மூவரும் மாம்பழ மில்க்‌ஷேக் ஆர்டர் செய்து பருகினோம்! அதுவும் ஜோராகவே இருந்தது! சுவைத்து முடித்ததும் எங்களுடைய பில்லும் வந்தது! மூன்று கடலமிட்டாய் மில்க்‌ஷேக்கின் விலையை விட எங்கள் மொத்த பில்லின் தொகை குறைவு தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆமாங்க! அன்றே மனதில் முடிச்சிட்டுக் கொண்டேன்! ஊருக்குப் போறோம்! ஒருநாள் கடலமிட்டாய் மில்க்‌ஷேக் செய்து தெறிக்க விடறோம் என்று தான்…:)


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

1 ஆகஸ்ட் 2025


5 கருத்துகள்:

  1. ஹோட்டல் அனுபவங்களும், அப்பாவின் நினைவுகளும் சுவாரஸ்யம், நெகிழ்ச்சி. 

    நாங்கள் சேர்ந்து ஹோட்டல் செல்லும்போது ஒரே ஐட்டத்தை எல்லோரும் ஆர்டர் செய்ய மாட்டோம்.  வெவ்வேறு ஐட்டங்கள் ஆர்டர் செய்து எல்லோரும் எல்லாவற்றையும் ருசிப்போம்!

    பதிலளிநீக்கு
  2. நல்லவேளை அந்த சர்வர் வந்து விலையைச் சொன்னானே...   அவன் பாட்டுக்கு எடுத்து வந்து கொடுத்து விட்டு பில் கொடுத்திருந்தால் தூக்கி வாரிப் போட்டிருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ அன்னபூர்ணா கெளரிசங்கர்! //

    ஆஹா எனக்கும் கோவை நினைவுகள் வந்துவிட்டன!

    ஃபேமிலி ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறோம் பகிர்ந்து. பொதுவாக நாங்க மூணு பேரும் அவங்க வங்க சாப்பிட நினைப்பதை அதாவது வேற வேற ஆர்டர் செய்து, எல்லாம் சுவைப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆதி! நீங்க சொன்னது போல கடலைமிட்டாய் மில்க் ஷேக் வீட்டிலேயே செய்துடுங்க. சூப்பரா இருக்கும். விதம் விதமாகச் செய்யலாம். எளிதுதான்.

    நம்ம வீட்டில் peanut butter செய்வதுண்டு. அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கடலை மில்க் ஷேக்கா? புதியதாக இருக்கிறது. அதன் விலையும் கூடுதலாக இருக்கிறது. பரவாயில்லை, சர்வர் விலையை சொன்னது ஆச்சரியம். ஒரு வேளை முன் அனுபவமாக இருக்கலாம்.

    நல்ல அனுபவங்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....