சனி, 16 ஆகஸ்ட், 2025

புரிதல் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். அனைத்து நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




ஒரு வார்த்தையை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்! அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம்! என்பதில் நிறைய வித்தியாசம் இருக்கிறது! அதைப் போல நாம் சொல்லும் விதத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் தானே! அப்போதிருக்கும் மனநிலையைப் பொறுத்தும் அது மாறுபடும்! இப்படி நாம் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலவித அர்த்தங்கள் உருவாகும்! எதற்காக இதைச் சொல்கிறேன்??


நேற்று மாலை வாரச்சந்தைக்கு மகளும் நானும் சென்றிருந்தோம்! அப்போது வானம் கருமேகங்கள் சூழ காட்சியளித்தது! எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்பது போல தான் இருந்தது! அதற்கு முந்தைய நாள் பெரும் இடிச்சத்தத்துடன் மழை பெய்ததால் வியாபாரிகள் எல்லோரும் முன்னெச்சரிக்கையுடன் தான் வியாபாரம் செய்ய வந்திருந்தனர்! பெரிதாக கடையாக விரித்து போடாமல் சிறியதாக தான் போட்டு வைத்திருந்தனர்!


வழக்கமாக கடை போடும் ஒருசிலர் நேற்று வரவும் இல்லை! கிடைத்தவற்றை வாங்கிக் கொண்டே வந்த நான், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாய் மட்டும் விற்கும் ஒரு வியாபாரியிடம் கறிவேப்பிலை கொத்தமல்லி வாங்குவதற்காக நின்றேன்! வழக்கமாக நான் வாங்குபவர் தான்! அவர் மூட்டையைக் கூட பிரிக்காமல் தான் அமர்ந்திருந்தார்!


அண்ணே! பத்து ரூபாய்க்கு கறிவேப்பிலை குடுங்க! என்றதும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு கட்டாக எடுத்து வெளியே வைக்கத் துவங்கினார்! முதலில் எடுத்து போட்டது அனைத்தும் புதினா தான்! அதன் பின்பே கறிவேப்பிலையை வெளியே எடுத்தார்! அவரிடம் சற்று பேச்சு குடுக்கலாமே என்ற எண்ணத்துடன், அண்ணே! பொறுமையா கடை போடலாம்னு இருக்கீங்களா? என்று கேட்டேன்!


அவர் உடனேயே அதற்கு, ஆமா! இங்க பின்னாடி எவ்வளவு தண்ணி நிக்குது பாருங்க! இதுல ரொம்ப பொறுமையா எடுத்து போட்டுட்டு இருக்கேன்னு வேற கேட்கறீங்க! என்று சலிப்புடன் சொன்னார்! நான் அவரிடம் கேட்டது ‘மழை வருமான்னு பார்த்துட்டு பொறுமையா கடை போடலாம்னு இருக்கீங்களா! என்பது தான்! ஆனால் அவர் எடுத்துக் கொண்ட விதம் வேறு! ‘பொறுமை’ என்ற ஒரு வார்த்தையில் தான் எத்தனை அர்த்தங்கள்!


பின்பு அவரிடம், இல்லண்ணே! நான் அப்படி சொல்லல! எப்பவுமே இந்நேரம் கடை முழுசா போட்டுருப்பீங்களே! அதனால தான் கொஞ்சம் நேரம் கழிச்சு பொறுமையா போட்டுக்கலாம்னு இருக்கீங்களான்னு தான் கேட்டேன்! என்று சொன்னதும் தான் அவர் நிம்மதியானார்..🙂 அவரிடம் கறிவேப்பிலையை வாங்கிக் கொண்டு நகர்ந்தேன்!


இரண்டு நாட்கள் முன்பு கூட மகளும் நானும் ஒரு விஷயத்தைப் பற்றி இப்படித்தான் இருவரும் வெவ்வேறு கோணத்தில் எடுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம்! நான் அப்படி சொல்லலடா கண்ணா! என்று நானும், நானும் அதையே தான் இப்படி சொல்றேம்மா என்று மகளும் சொல்லிக் கொண்டிருந்தாள்! நேற்றைய சம்பவத்தை பற்றி குறிப்பிட்டும் மகளிடம் சொல்லிக் கொண்டு வந்தேன்!


ஒவ்வொரு நாளும் நமக்கான அனுபவங்களில் தான் எத்தனை புரிதல்கள் இல்லையா! அன்றைய காலநேரத்துக்கும் மனநிலைக்கும் ஏற்ப அந்த புரிதல்கள் மாறுபடும்! கொஞ்சம் யோசித்து பேசலாம்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

16 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....