அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம். முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினொன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பன்னிரெண்டு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதிமூன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பதினான்கு
பக்குவம்:
சென்ற பகுதியில் கோவை மாதம்பட்டியில் உள்ள Tapovan என்ற இடத்துக்குச் சென்றதைப் பற்றி சொல்லியிருந்தேன்! அண்ணா சொல்லிக் கொண்டிருந்த விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! அமைதியான இடம்! சீனியர் சிட்டிஸன்களுக்கு என்று அங்கு செய்து தரப்பட்டுள்ள பிரத்யேக விஷயங்கள்! 24 மணிநேரமும் அங்கேயே வசிக்கும் ஒரு செவிலியர்! அன்றாடம் கோவிலில் செய்யப்படும் பூஜைகள்! விழாக்கள்!
அங்கு வசிக்கும் நண்பர்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார்! ரிடையர்டு சயிண்டிஸ்ட், எஞ்சினியர், எழுத்தாளர், ஆசிரியர் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இப்போது ரிலாக்ஸாக தனக்கான நேரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்! எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி பொழுதைக் கழிப்பதும், ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்வதுமாக இருக்கிறோம் என்றார் அண்ணா!
நாங்களும் அந்தப் பகுதியை சற்று சுற்றிப் பார்த்து அவர்களுடன் பேசி நேரத்தை இனிமையாக செலவழித்தோம்! இந்த இடத்துக்கு வந்து பார்த்த பின் அன்றே என் மனதில் ஒரு விஷயத்தை முடிச்சிட்டுக் கொண்டேன்! எங்கள் கடமைகள் எல்லாவற்றையும் முடித்து விட்டு நாங்கள் இருவரும் இது போன்ற ஒரு இடத்தில் வந்து தங்கி விட வேண்டும்! எங்களுக்கான நேரத்தை அங்கு ரிலாக்ஸாக செலவிட வேண்டும் என்று! மகளிடமும் என்னவரிடமும் கூட இது பற்றி பகிர்ந்து கொண்டேன்!
தோழி ஒருவரிடம் பயண அனுபவத்தையும், இந்த என் எண்ணத்தையும் சொன்ன போது 40+ல் இந்த எண்ணம் வந்திருக்கிறது என்றால் அது தான் பக்குவம் என்றார்! உண்மை தான்! வாழ்வில் கிடைக்கும் அனுபவங்கள் மட்டும் தான் மனதிற்கான தைரியம், பக்குவம், தன்னம்பிக்கை, அனுமானம், லட்சியம் என்று எல்லாவற்றையும் தருகிறது என்று நினைக்கிறேன்! அனுபவப் பாடம் தானே சிறந்த ஆசான்!
மனதில் ஒரு தீர்க்கமான எண்ணத்தையும் அண்ணா எங்களுக்காக தந்த அன்பு பரிசுகளையும் சுமந்து கொண்டு அங்கிருந்து கிளம்பி மீண்டும் கல்யாண மண்டபத்துக்கு வந்தோம்! அண்ணாவே காரில் எங்களை கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்! அவர்களுக்கும் எங்கள் வருகையினால் அன்றைய நாள் சற்று மாறுதலாக இனிமையாகச் சென்றிருக்கும் என்று நினைத்துக் கொண்டோம்!
மண்டபத்தில் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு தங்குமிடம் திரும்பினோம்! அங்கிருந்து எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாங்கள் அடுத்து செல்லப் போவதைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்! காலையில் சாப்பிட்ட காலைச் சிற்றுண்டியே ஹெவியாக இருந்ததால் மதிய உணவை தவிர்த்து விட்டு ரெட் டாக்ஸி புக் செய்துவிட்டோம்! இங்கிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்துக்கு தான் பயணப்பட போகிறோம்! எங்கே??
புவனா & புவனா:
தபோவனத்தில் நாங்கள் செலவிட்ட தருணத்தை பற்றி சொல்லியிருந்தேன்! அங்கே சென்ற அழகான பாதை, தோட்டத்தில் மயிலின் நாட்டியம், ஒன்று போல அமைந்த வீடுகள், அங்கே செய்திருக்கும் வசதிகள் என்று எல்லாவற்றையும் பார்த்தவுடன் எதிர்காலத்தை பற்றிய ஒரு புரிதல் உருவானது என்று சொல்வேன்! நான் இப்போது 40+ ல் தான் இருக்கிறேன் என்றாலும் இன்னும் பத்து ஆண்டுகளில் அம்மாதிரியான சூழல் கிடைக்கிறது என்கிற போது அதை ஏற்றுக் கொள்ள நான் தயார் என்று தான் சொல்வேன்! பதட்டமும் பரபரப்பும் இல்லாத அமைதியான சூழல்!
சரி! அடுத்து நாங்கள் எங்கே சென்றோம்! நாங்கள் புக் செய்திருந்த ரெட் டாக்ஸியும் வந்துவிட்டது! அதில் பயணித்துக் கொண்டே உங்களுக்கு சொல்கிறேன்! 2012 ஆம் வருடம் நிறைய பேர் இடம்பெயர்ந்து இருப்பார்கள் போலிருக்கிறது! நான் திருவரங்கத்தில் செட்டில் ஆனதும், கீதா மாமி திருவரங்கத்திற்கு வந்ததும், எனக்கு தெரிந்த ஒரு அண்ணா சென்னையிலிருந்து திருவரங்கம் வந்ததும் என நாங்கள் அனைவருமே 2012ல் வந்தவர்கள்! அதுபோல தான் நாங்கள் சந்திக்கப் போகும் அந்தத் தோழியும் கூட வெளிநாட்டிலிருந்து அதே வருடம் இங்கே வந்தவர் தான்!
அந்த வருடமே நாங்கள் திருவனந்தபுரத்திற்கு செல்லும் பாதையில் கோவையில் இவரை முதன்முதலாக சந்தித்தோம்! அதன் பின் தோழி இருமுறை திருவரங்கம் வந்திருக்கிறார்! நாங்கள் இவரை கோவையில் சந்திப்பது இது இரண்டாம் முறை! இணைய உலகில் அறிமுகமானவர் தான்! அழகான எழுத்துக்கு சொந்தக்காரர்! பன்முகத்திறமை கொண்டவர்! ரொமாண்ட்டிக் கதைகள், நகைச்சுவை சீரிஸ் என்று கலக்கலாக எழுதுபவர்! மின்னிதழ் ஆசிரியர்! இவை எல்லாவற்றையும் விட என் அன்புத்தோழி!
இப்போது உங்கள் எல்லோருக்குமே இவரைத் தெரிந்திருக்குமே! ஆமாங்க! நம்ம அப்பாவி தங்கமணியான Bhuvana Govind தான்! இன்முகத்துடன் வாசலில் வந்து வரவேற்று எங்களை உள்ளே அழைத்துச் சென்றார்! சில நிமிடங்களிலேயே கல்லூரியிலிருந்து கோவிந்த் சாரும் உடனேயே வந்துவிட்டார்! நண்பர்கள் ஒன்று கூடினால் அங்கே நேரம் போவது தெரியாத பேச்சு தான் இருக்கும்!
சஹானா குட்டி பள்ளியில் இருந்ததால் அவளை பார்க்க முடியவில்லை! சென்ற முறை அவள் திருவரங்கம் வந்த போது என்னிடமும் மகளிடமும் நன்கு ஒட்டிக் கொண்டாள்! இப்போது இன்னும் வளர்ந்திருப்பாள்! சிறிது நேரத்திலேயே தோழி புவனாவின் அப்பாவும் அம்மாவும் அங்கே வந்துவிடவே எங்கள் அரட்டையில் அவர்களும் கலந்து கொள்ள நேரம் இனிமையாக கடந்து சென்றது! என் பெயரை அவரிடத்தில் சொன்ன போது, புவனி உங்களப் பத்தி சொல்லியிருக்கா! என்றார் அம்மா!
தேநீர், பழங்கள், இனிப்பு காரம் என வரிசையாக எங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்! இதுபோக மதிய உணவு நாங்கள் சாப்பிட வில்லையே என்று அதற்கான ஏற்பாடும் செய்யச் சென்றார் தோழி! பதறியடித்துக் கொண்டு ஓடி தடுத்தேன்! இத்தனையும் சாப்பிட்ட பிறகு உணவு வேறு சாப்பிட முடியுமா!! எங்கள் இனிமையான நேரத்தை தோழி வீட்டில் செலவிட்ட நாங்கள் மனம் நிறைய அன்பும், பை நிறைய புத்தகப் பரிசுகளையும் சுமந்து கொண்டு அங்கேயிருந்து மனமின்றி கிளம்பினோம்!
மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
4 ஆகஸ்ட் 2025
தபோவன் இல்லங்களின் விலை நிலவரங்கள் எழுதி இருக்கலாம். அப்பாவியுடனான சந்திப்பு விவரங்கள் மகிழ்ச்சி அளித்தன.
பதிலளிநீக்கு