வியாழன், 28 ஆகஸ்ட், 2025

ஏகாதசி உபவாச மகாத்மியம் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சாரி எனும் கிராமம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் ஏகாதசி உபவாச மகாத்மியம் குறித்த தனது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், புது தில்லி. ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


ஏகாதசி உபவாச மகாத்மியம்



ஏகாதசி வருதுன்னா காலண்டர் ல தேதி பாத்துட்டு மூணு நாலு நாள் முன்னாடிலேர்ந்தே பழங்கள் சேகரிக்க ஆரம்பிச்சுடுவோம். அன்னிக்கி கொலைப் (???!!) பட்னியாச்சே!😌. பின்னர் அன்றைக்கு அரிசி தவிர்த்து மற்ற உணவு எடுத்துக் கொள்பவர்களுக்காக (சாப்பிடுவது என்னும் சொல் அன்று கெட்ட வார்த்தை - தவிர்க்கவும்) என்னென்ன(!!!???) செய்து குடுக்கலாம்னு discussion நடக்கும். சப்பாத்தி, தால் பகலுக்கு. இரவு சம்பா ரவை உப்புமா (எல்லா காய்களும் போட்டு) + தேங்காய்ச் சட்னி அல்லது கோதுமைமாவு, ரவை போட்டு பச்சை மிளகாய் கொத்துமல்லி கடுகு தாளித்து (அரிசிமாவு போட மாட்டோம் - கடுமையான விரத ரூல்😁) கரைச்ச தோசை + தக்காளி சட்னி அல்லது கொத்துமல்லி பச்சைமிளகாய் சட்னி.ஆச்சா? நடுவில் அதாவது இந்த இரண்டு வேளைகளுக்கு நடுவில் வயிறு கொஞ்சம் நமு நமுன்னு இருந்தா பழங்கள், காபி டீ இருக்கவே இருக்கு. பச்சை வேர்க்கடலை சிலர் மெல்லுவதுண்டு. இதுல இன்னொன்னு என்னன்னா விரதத்துக்கு sweet சாப்பிடலாமாம், தப்பில்லையாம் (ஒரு வெறிபிடிச்ச இனிப்புப் பிரியர் போட்ட இடைச்செருகல் இது) இப்படிக் கடுமையாக(??!!) விரதம் இருந்த பின்னர் மறுநாள் ரொம்ப க்ளிப்தமாக (தவறாமல்) கண்டிப்பாக நெல்லிக்காய் சேர்க்கணும். அதை தயிர் பச்சைமிளகாய் சேர்த்து அரைச்சுக் கலக்கியாகப் பண்ணுவது சாலச் சிறந்தது. அது தவிர அகத்திக்கீரை கறி & சுண்டை வத்தல் தாளித்த மோர்க்குழம்பு வேண்டும். ஏனென்றால் முதல் நாள் கடும் பட்டினியாக🥴🤐 இருந்ததால் வயிறு புண்ணாகியிருக்குமாம். அதுக்கு இந்த items தான் புண்ணை ஆற்றுமாம்... இதில் கொடுமை என்னன்னா வெறும் பழங்கள் மட்டும் சாப்பிடும் ஜீவன்கள்தான் (தாய், மனைவி) பிறர்க்கு வித விதமாக அரிசி கலக்காத items பண்ணிக் குடுக்கணும். மூக்கை, வாயை கட்டிக் கொண்டு சமைப்பது நலம். வாசனை உள்ளே போகக் கூடாதல்லவா? (ஜொள்ளும் விடக்கூடாதே!😷) நானும் என் கணவரும் ஒருமுறை பண்டரிபுரம் சென்றோம். அன்று யதேச்சையாக குருவாரம், ஏகாதசி. நாங்கள் உபவாசமிருக்க முடிவு செய்தோம். தெருவெங்கும் மிக நீள வரிசையில் நின்று அதிசயமாக ஒரு மணி நேரத்திலேயே பண்டரிநாதரின் திவ்ய தரிசனம். அது முடிந்த பின்னும் ஒருவர் (கோவிலில் பூஜை செய்யும் பிராமணர் போன்ற தோற்றம்) எங்களைப் பார்த்து உங்களுக்கு மறுபடியும் தரிசனம் செய்யணுமா என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கோவில் பின் பக்கம் உள்ள ஒரு கதவு வழியாக எங்களைக் கூட்டிக் கொண்டு போய் அருமையான தரிசனம் செய்து வைத்து விட்டு போயே விட்டார். எங்கு போனார் என்பதே தெரியவில்லை (விட்டல விட்டல விட்டல பாண்டுரங்கா🙏🏻). தரிசனம் முடிந்த பின்னர் நாங்கள் ஒரு auto ரிக்ஷா வைத்துக் கொண்டு அருகிலிருக்கும் சில இடங்களைப் பார்க்கக் கிளம்பினோம். நிற்க (பரவாயில்லை உக்காந்தே படிங்க😊) ஆட்டோவில் ஏறு முன்னரே கையில் ஒரு டஜன் வாழைப் பழம், சப்போட்டா, திராட்சைப் பழங்கள் போன்றவற்றை வாங்கிக் கொண்டுவிட்டோம். உபவாசமாச்சே! என் கணவரின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தம். வீட்டுக்கு வரும் கூரியர் பையனுக்கு முதற்கொண்டு juice, பழம், sweet அவன் வேண்டாம்னு சொல்லச் சொல்ல குடுத்து மகிழ்வார். இப்போ auto போய்க்கிட்டிருக்கு. எங்களுக்கு வயிற்றில் நமு நமு. மெதுவா ஒவ்வொரு பழமா வெளில எடுத்து உள்ள தள்ள ஆரம்பித்தோம். இவர் Bபாய் (நாயகன் படத்தில் வரும் bhai - velubhai mera beta aapka beta - இப்ப ஞாபகம் வருதா?) ஏ லேலோ ன்னு சொல்லி சொல்லி ஒவ்வொரு பழமா அவன் கண் முன்னாடி காட்டறார், அவன் வேண்டாம் வேண்டாம்கறான். வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கான் இல்ல? எனக்கா எரிச்சல். அடுத்தது திராட்சை. ஒரு கொத்து எடுத்து அவன் முன்னாடி காட்டினாரோ இல்லையோ எனக்கு வந்தது பாருங்க ஒரு கோவம். கத்திட்டேன்,கொஞ்சம் சும்மா இருக்கீங்களா, அவனும் ஒரு மூடுல ஸ்டீயரிங் வீல விட்டுட்டு இத வாங்கினான்னா நம்ம நிலைமை? அந்த திராட்ச கொத்து மாதிரி ஊசலாடிக்கிட்டு இருக்கு நம்ம உசுரு! இறங்கினப்புறம் குடுங்கன்னு சொன்னப்புறம் தான் இந்தக் கூத்து நின்னுது. ஆனாலும் ஓவர் dangerous விருந்தோம்பல்😳. அப்புறம் சில இடங்களை பார்த்துவிட்டு ஒரு சிறிய juice கடைக்குப் போனோம். அவனிடம் நாங்கள் உபவாசத்துக்கு லைட் ஆ சாப்பிடற மாதிரி இங்க பக்கத்துல என்னென்ன கிடைக்கும் என்று கேட்டோம் (இந்த லைட் ஆ வார்த்தை underline😁) அவன் முழிக்கறான் - ஏன்னா உபவாசம் & சாப்பிட என்கிற ரெண்டு வார்த்தையை அவனால் இணைத்துப் பார்க்கவே முடியலை. கீழ குனிஞ்சுக்கிட்டே (எனக்கு என்னவோ அவன் லேசா சிரிச்சமாதிரி இருந்தது - பிரமையாக இருக்கலாம்😊) பக்கத்துல சாபுதானா (ஜவ்வரிசி) வடை கிடைக்கும் என்றான். பின்னர் ஒரு அரை அடி உயர சின்ன(!!) கண்ணாடி கிளாசில் juice வாங்கிக் கொண்டோம். மும்பையில் ஏகாதசி விரதத்தை இதுபோல் வெரைட்டியாக கடைபிடிப்பார்கள். என் மராத்திய அலுவலகத் தோழி வந்தனா எல்லா நாளும் இரண்டு டப்பா (சப்பாத்தி & side dish க்காக) கொண்டு வருபவள், ஏகாதசியன்று நாலு கொண்டு வருவாள். ஒன்றில் (b)பகர் உப்புமா (நம் ஊர் கம்பு போன்ற தானியம்) ஆரம்பிச்சுடுவோம் அன்னிக்கி), அதற்கு தொட்டுக் கொள்ள சட்னி, சக்கரை வள்ளிக் கிழங்கை பாலில் சீவிப்போட்டு ஒரு கீர், உருளை chips அல்லது வடகம். அவற்றை நிறைய கொண்டுவந்து எங்கள் எல்லார்க்கும் (5 பேர்) கொடுப்பாள். ஆகவே நாங்கள் ஏகாதசிக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்😊. அவர்களைப் பொறுத்தவரை அரிசி, கோதுமை தவிர்த்து தானியங்கள், கிழங்குகள் ok. Cadbury chocolate கூட ok. ஏன்னா அதுல கொக்கோ (பழம்) தான இருக்கு!(அவளின் explanation) இதில் அங்கேயே சில extreme category இருக்காங்க. ஏகாதசிக்கு பச்சத் தண்ணி கூட பல்லுல படாம விரதம் இருக்கிறவங்க. நிர்ஜல உபவாசமாம். அவங்களையெல்லாம் நாங்க பக்கத்துல கூட சேர்க்க மாட்டோம்🫢. இதுமாதிரி பல விதமாக வயிற்றுக்குப் பழம், பால், (அரிசியில்லா) tiffin உட்கொள்ளா வேளையில் சிறிது செவிக்கும் ஈந்து (உபன்யாசம் கேட்டு) விரதமிருபோம். இன்று ஏகாதசி (19.08.2025) ஆதலால் இந்த ஞாபகங்கள் வந்தன. உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இதைப் படித்துவிட்டு உங்களுக்கு விரத பங்கம் ஏற்பட்டால் அதற்கு company பொறுப்பாகாது🙏🏻😊 மேற்கண்ட பாண்டுரங்கன் படம் சும்மா ஏகாதசி பற்றிய கட்டுரை என்பதால் சேர்த்தது.🙏🏻😊




நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

28 ஆகஸ்ட் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....