அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி முப்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சக்கரவள்ளிக்கிழங்கு - 25 ஜூலை 2025:
'ஆதியின் அடுக்களை'யில் புதிய முயற்சிகள் செய்து பார்த்து ரொம்ப நாளாச்சு! வழக்கமான சமையலும், டிபனுமாக தான் சென்று கொண்டிருக்கிறது! ரிலாக்ஸாக இருந்தால் ஏதேனும் செய்து பார்க்கத் தோன்றும்! அல்லது பண்டிகைகள் இருந்தாலாவது அதை சாக்கிட்டு ஏதேனும் செய்யலாம்! நவம்பர் மாதம் வரை எங்களுக்கு பண்டிகைகளும் இல்லை!
சக்கரவள்ளிக்கிழங்கு பராட்டா:
காய்கறி சந்தையில் வாங்கிய 1 கி சக்கரவள்ளிக்கிழங்கு இன்னும் வைத்திருந்தால் வீணாக போய்விடுவேன் என்று ப்ளாக்மெயில் செய்யவே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஏதாவது செய்து காலி செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்! ஒருநாள் அதை வேகவைத்து மசித்து உப்பு, காரம், மசாலா சேர்த்து சப்பாத்தி உள்ளே ஸ்டஃப்பிங்காக வைத்து பராட்டா செய்தேன்! சக்கரவள்ளிக்கிழங்கு பராட்டா! மாங்காய் தொக்கு மற்றும் தயிருடன் சாப்பிட அருமையாக இருந்தது!
சக்கரவள்ளிக்கிழங்கு போளி:
அடுத்த முறை இன்னும் கொஞ்சம் கிழங்கை வேகவைத்து மசித்து நாட்டுசர்க்கரை ஏலக்காய்த்தூள் மற்றும் தேங்காய்த்துருவலுடன் பூரணமாக கிளறி போளியாக தட்டி போட்டு எடுத்தேன்! கடலைப்பருப்பு போளி மற்றும் தேங்காய் போளிக்கு இணையாக இருந்தது இந்த போளி என்பேன்! சுவையிலும் மணத்திலும் ஜோர்! செய்யும் போது என்னவரை நினைத்துக் கொண்டேன்! அவருக்கு போளி என்றால் பிடிக்கும்!
சக்கரவள்ளிக்கிழங்கு டிக்கி:
மீதம் இருந்த கிழங்குகளை மற்றொரு நாள் வேகவைத்து மசித்து உப்பு, காரம் மசாலா சேர்த்து பிசைந்து கட்லட் போல் தட்டி ரவையில் பிரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தேன்! எண்ணெயில் பொறித்து எடுக்க வேண்டும் என்றால் மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து போட வேண்டும்! கெட்சப் உடன் சுவைக்கலாம்! மாலைநேரத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இருக்கும்!
ஆக வாங்கிய 1 கிலோ கிழங்கையும் மீதம் வைக்காமல் மூன்று விதமாக செய்து ருசித்தாச்சு! நான் வாங்கிய போது என்னருகில் நின்றிருந்த பெண்மணி 3 கி கிழங்கு வாங்கினார்! அவர் என்ன செய்திருப்பார்???
******
நம்பிக்கை விதைகள் - 26 ஜூலை 2025:
சென்ற வாரம் மீட்டர் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்ய வேண்டி இருந்தது! ராஜகோபுரம் அருகில் உள்ள ஆர்த்தோ க்ளினிக் வரை தான் செல்ல வேண்டும்! ஆர்த்ரைட்டீஸின் காரணமாக அவ்வப்போது டாக்டரை ஒரு விஸிட் அடிப்பது வழக்கம்! அப்படி செல்லும் போது தான் ‘நம்பிக்கை விதை’ ஒன்றை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது! அதைப் பற்றி உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாமே என்று நினைத்தேன்!
குறிப்பிட்ட மீட்டர் ஆட்டோவில் ஏறி பயணம் செய்யத் துவங்கினேன்! இந்த ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தம்பியையும் எனக்கு சில வருடங்களாகவே தெரியும்! அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வீடாகச் சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்பவர் ஒருவரிடம் இந்த தம்பி முதலில் பணியில் இருந்தார்! பின்பு ஒருசில வருடங்களில் தானே அந்த ஏஜென்சியையும் எடுத்து நடத்தத் துவங்கினார்!
அதன் பின் தனியொருவராக தண்ணீர் கேன்களை சுமந்து சென்று சப்ளை செய்து கொண்டிருந்தவர் பின்பு தன் உதவிக்காக பணிக்கு சிலரையும் வைத்துக் கொண்டார்! இப்படியாக வாழ்வில் உயர்ந்து கொண்டிருந்தவர் தான் இப்போது மீட்டர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்! தம்பியிடம் சற்று பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்!
“என்ன தம்பி! இப்போ முழுநேரமும் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சிட்டியா?? என்று கேட்டதும், “தண்ணீர் கேன் சப்ளை எல்லாம் ஆளுங்க பார்த்துப்பாங்க அக்கா! அவங்கள்ல யாராவது லீவு போட்டா தான் நான் போவேன்! மத்தபடி முழுநேரமும் இப்போ ஆட்டோ தான் ஓட்டறேன்! அக்கா! இந்த ஆட்டோ எடுத்து 3 மாசம் தான் ஆகுது! இன்னொரு ஆட்டோவ வாடகைக்கு விட்டுருக்கேன்! இந்த ஆட்டோல ஸ்கூல் ட்ரிப்பும் எடுத்திருக்கேன்! என்று மகிழ்வோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார்!
ரொம்ப சந்தோஷம் தம்பி! நம்மள நாமே develop பண்ணிட்டே இருக்கணும்! உழைச்சு சம்பாதிக்கணும்! எந்தத் தொழிலும் குறைவானதுன்னு கிடையாது! All the best தம்பி! என்று மனதார வாழ்த்தி விட்டு இறங்கினேன்! எவ்வளவு ஆச்சு தம்பி? மீட்டர் காண்பித்த தொகையை சொல்லவும், பணத்தைக் கொடுத்தேன்! டாக்டரை பார்த்துட்டு கால் பண்ணுங்க அக்கா! முடிஞ்சா நான் வரேன்! இல்லன்னா வேற வண்டி அனுப்பி விடறேன்! என்றார் அந்த தம்பி!
அந்த தம்பிக்கு வயது 25 இருக்கலாம்! இன்றைய இளைஞர்களில் பலர் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமல் வெட்டி அரட்டையிலும், ரீல்ஸ் எடுத்துக் கொண்டும் இருக்கும் இந்நாளில் வாழ்வில் உயர்வதற்கு உண்டான நேர்த்தியை தெரிந்து கொண்டு சுறுசுறுப்புடன் ஜெயித்துக் கொண்டிருக்கும் இவர் ‘நம்பிக்கை விதை’யாக எனக்கு தென்பட்டதில் என்ன தவறு! உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து நேர்மையான வழியில் எப்படியும் முன்னேறலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்!
******
மண்ணோடு ஏற்பட்ட பந்தம் - 27 ஜூலை 2025
படத்தில் இருக்கும் இந்த மண்சட்டியை வாங்கி 9 வருடங்கள் இருக்கலாம் என நினைக்கிறேன்! இதன் உள்ளேயும் வெளியேயும் விரிசல் வந்துவிட்டது, அதனால் மாற்றி விட வேண்டும் என்று நான் நினைத்து வேறு வாங்கியே மூன்று வருடங்களாகி விட்டது..🙂 அதற்கு முன்பு 5 (அ) 6 வருடங்கள் இருக்கும்! உயரம் குறைவாகவும் கொஞ்சம் அகலமாகவும் வேண்டும் என்று கடையில் கேட்ட போது அந்தக் கடைக்காரர் 'மீன்குழம்பு' வைக்கறதுக்கா!! என்று கேட்டார்...🙂
நான் பதறிக் கொண்டு இல்ல! இல்ல! சாம்பார், ரசம் வெக்கறதுக்குன்னு சொன்னேன்...🙂 இத்தனை வருடங்களாக சாம்பார், வத்தக்குழம்பு, கூட்டு, அவியல், கீரை மசியல், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சப்ஜிகள் என்று எல்லாமே இதில் பண்ணியிருக்கிறேன். கோடைக்காலத்தில் கூட காலையில் இதில் செய்த குழம்பு வீணாகப் போனதில்லை! மாலையில் வேண்டுமானால் அதை சிறிது சூடுபடுத்தி வைத்துக் கொள்ளலாம்!
சரி! எதற்கு இந்தக் கதையெல்லாம்??? இந்த மண்சட்டிக்கு இப்போது 'பை! பை!' சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது! விரிசல் விட்டுவிட்டால் திரவங்கள் கசிந்து விடும், அப்போது தூக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தே ரொம்ப நாளாச்சு! இப்போது வரை கசியவில்லை! சரி! பாவம் அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைத்து தோழி ஒருவரிடம் செடி வைக்க கொடுத்து விட்டேன்! அதற்கு முன்பு ஒரு பிரியாவிடை..🙂
எந்தப் பொருளாக இருந்தாலும் அதனோடும் ஒரு பந்தம் வந்து தான் விடுகிறது! மனிதர்களிடையே உள்ள நட்போ உறவோ கூட ஏதேனும் ஒரு காரணத்தால் என்றேனும் முறிந்து விடுகிறது! ஆனால் எனக்காக உழைத்த இந்த பாத்திரம் என்னை விட்டு எளிதில் நீங்கி விடவில்லை! நான் தான் அதை விட்டு விலகி விட்டேன்!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
11 ஆகஸ்ட் 2025
சர்க்கரைவள்ளிக்கிழங்கை மூன்று விதமாக சமைத்தது சூப்பர். கடைசியில் அதை வேகவைத்து எல்லோரும் சாப்பிடுவது போல சும்மா மட்டும் சாப்பிடவில்லை! மிளகு சீரகப்பொடி தூவி சாப்பிடலாம்.
பதிலளிநீக்குநான் ச.வ கிழங்கு வாங்கி வருடங்களாகின்றன. ஏனோ வாங்குவதில்லை.
//என்னருகில் நின்றிருந்த பெண்மணி 3 கி கிழங்கு வாங்கினார்! அவர் என்ன செய்திருப்பார்??? //
கடைசி கேள்வி, சந்தேகம் புன்னகைக்க வைத்தது.
ஆட்டோக்காரர் பற்றி பேஸ்புக்கில் படித்தது நினைவுக்கு வருகிறது. உழைப்பாளிகள் வாழ்க.
பதிலளிநீக்குநீங்கள் மண்பாண்ட சமையல் என்று தெரியும். எப்போதுமே நான் வியக்கும் விஷயம் அது. கேஸ் ஸ்டவ்வில் அப்படியே வைத்து சமைப்பீர்களா? ஆரம்பத்தில் பழக்க வேண்டுமா?
பதிலளிநீக்குஎனக்கும் முயற்சிக்க ஆசைதான். பாஸ் என்ன சொல்வாரோ...!
ஆஹா என்ன பொருத்தம் சமையலில் என்ன பொருத்தம்!!!! ஆதி இன்னிக்கு நம்ம வீட்டில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பராட்டாதான். வெங்காயமும் சேர்த்து, பச்சை மிளகாய், கொஞ்சம் மிள்காய்ப் பொடி, கொத்தமல்லி அம்சூர் பொடி என்று சேர்த்துச் செய்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
ரெண்டுமே அருமை.....
பதிலளிநீக்குநானும் டிக்கி, ரோல் என்று எண்ணையில் பொரிக்காமல் நீங்க செய்திருப்பது போல் தோசைக்கல்லில் போட்டு எடுப்பது வழக்கம். அது போல குழிப்பணியாரம் செய்யலாம்.....உருளைக் கிழங்கில் என்னவெல்லாம் செய்வோமோ எல்லாம்.
நானும் நிறைய வித்தியாசமாகச் செய்ய முயற்சிப்பதுண்டு.
கீதா
ஆட்டோ இளைஞர் நல்ல முன்னுதாரணம்!
பதிலளிநீக்குமண் சட்டி நல்லா யூஸ் பண்ணியிருக்கீங்க. விரிசல் லேசாகத் தெரிகிறது. ஆனால் அது கசிவதில்லை. இன்னும் வந்தால்தான் கசியும்.
என்னிடமும் நாட்பட்டவைதான் இருக்கு. கல்சட்டி முதல்.
சூடானவற்றை டக்கென்று தண்ணியில் சிங்கில் போடாமல், மெதுவாகக் கீழே இறக்கி வைப்பது போன்று இருந்தாலே நாட்பட்டுவரும், விரிசல் சீக்கிரம் வராமல்.
கீதா