அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட Verdant சத்சங்கம் - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சுஜாதா அவர்களின் சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரை என எதைப் படித்தாலும் மனதில் ஒரு வித சிலிர்ப்பும், வியப்பும் கூடவே வரும் - என்னமா எழுதி இருக்கார்யா இந்த ஆளு என்ற எண்ணமும் தோன்றும். சமீபத்தில் வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பு - ”கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு”. கிழக்கு பதிப்பக வெளியீடு. 1963-லிருந்து 1972 வரை அவர் எழுதிய பதினைந்து கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஒரு விதம் - முதல் கதையாக “இது மட்டும்” எனும் கதை! ஆத்மா எனும் இளைஞர் ஒரு கொலை செய்ய முயற்சிக்கும் கதை. கதையில் ஆங்காங்கே இருக்கும் வார்த்தை விளையாட்டுகள் நிச்சயம் உங்களை ஈர்க்கும். உதாரணத்திற்கு சில இங்கே.
“இந்த வாக்கியத்தின் திடீர்ப் பிரவேசம் ஆத்மாவை ஒரு வில்லனாகக் காட்டுகிறது. இல்லன்!”
“சரஸ்வதி ஒரு நர்ஸ். மாமாவின் பர்ஸுக்காக வந்த நர்ஸ்”
தொகுப்பில் இருக்கும் இரண்டாவது சிறுகதை - சசி காத்திருக்கிறாள். தலைநகர் தில்லியில் வாழ்க்கைப்பட்ட பெண் சசி. ஆசைக் கணவன் சினிமா டிக்கெட்டுடன் வருவார் என்று காத்திருக்கிறாள். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும், போக வேண்டிய படம் தொடங்கியிருக்கும் நேரத்திற்குப் பிறகும் வரவில்லை - அவருக்கு என்னவாயிற்று என்று காத்திருக்கிறாள். கணவருக்கு என்ன ஆயிற்று - ஒரு விபத்து… விபத்தும் அதனைத் தொடர்ந்து நடந்த விஷயங்களும் என கொண்டு செல்கிறார் கதையை. முடிவு - நிச்சயம் எதிர்பார்க்காதது.
மூன்றாவது கதை - “வந்தேன்… பார்த்தேன்… கொன்றேன்…” நண்பரை கொலை செய்து அதிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதைச் சொல்லும் கதை. படித்துக் கொண்டே வரும்போதே நமக்கும் பதட்டம் ஒட்டிக்கொண்டு விடுகிறது. இப்படி கதை முழுவதும் நாட்டம் இருக்கும்படி எழுதுவது சுஜாதாவிற்கே சாத்தியம்.
புது தில்லி - 618271. பிழைப்புக்காக தலைநகர் தில்லி வரை வந்த ஒரு தமிழரின் கதை. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு அவர் உதாரணம் என்றாலும் அவருக்கு குருவாக அமைந்தவர் நேர் எதிர். இந்தக் கதையும் அடுத்து என்ன என்பதை யோசித்தபடியே படிக்க வைக்கும் யுக்தியுடன் உள்ள கதை. கதைக்களன் தில்லி என்பதால் கூடுதல் பிடிப்பு கதையைப் படிப்பதில்!
”மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல” என்ற தலைப்பில் ஒரு கதை. இதுவும் தில்லியைக் களமாகக் கொண்ட கதையே. இக்கதையில் இளம்பெண்ணைச் சந்திக்கச் செல்லும் ஒரு இளைஞரின் தவிப்பை சிறப்பாகக் கையாண்டு இருக்கிறார் சுஜாதா…
ஒரு திறந்த கடிதம்… இந்தத் தலைப்பில் இருக்கும் சிறுகதை - ஒரு மனைவி தனது கணவருக்கு எழுதிய கடிதம் குறித்த சிறுகதை. நடுநடுவே ஒரு கொலை செய்வதற்கான ஆயத்தங்கள் குறித்த சிறு சிறு பகுதிகள் வரவைத்து நம்மை என்ன நடக்கப்போகிறதோ என்று எண்ண வைக்கிறார் ஆசிரியர். அந்தக் கடிதத்திலும் கணவனிடம் நேரில் சொல்ல முடியாத விஷயங்கள், கேட்க முடியாத கேள்விகள் என எழுதிக்கொண்டு வருவதாகப் படிக்கும்போது நடுவில் வரும் ஆயத்தங்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்புடன் நம்மை படிக்க வைக்கிறது. முடிவு - எதிர்பாராத முடிவு தான்.
ஒரு கதையில் இரண்டு கதைகள் - நல்லதொரு யுக்தி! இளவரசி கால கதையும், சம கால கதையும் என இரண்டு கதைகள் எழுதி, அதனை இணைத்து வைத்த விதம் சிறப்பாக இருந்தது. கதை எழுதப்பட்ட காலத்திலேயே (50 வருடங்களுக்கு முன்னரே!) போதை வஸ்துவான LSD குறித்து எழுதி இருக்கிறார் என்பதைப் பார்த்த போது, அப்போதே இதெல்லாம் இருந்திருக்கிறது போலும் என்று நினைத்து எனது அறியாமையை நொந்தேன்.
சொல்லச் சொல்ல கேட்காமல் - மனைவி கண்ட ஒரு கனவு, விமானத்தில் பயணம் செய்யும் கணவன் என விறுவிறுப்பாகச் செல்கிறது இந்தச் சிறுகதை. விமானத்தில் பறக்க ஆரம்பிக்கும் போது காணக் கிடைக்கும் தரைக் காட்சிகளை எப்படி அழகாய் விவரிக்கிறார் சுஜாதா… படிக்கப் படிக்க ஆனந்தம். உங்களுக்குள்ளும் விமானத்தில் பறக்கம் அந்த உணர்வு தொற்றிக்கொள்ள ஏதுவாய்…
விமானம் ரன்வேயில் பிரவேசிக்கிறது. அருகில் வெளியில் நிலையத்தின் ‘ராடார்’ சுற்றிச் சுற்றித் தன் ’மைக்ரோவேவ்’ பணி செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கதவுக்கு அப்புறம் இருக்கும் ராஜேந்திரனும் மற்றவர்களும் செயல்பட, இன்ஜின்கள் முழுச் சக்தியுடன் ’ப்ரேக்’ விடுதலைக்குக் காத்திருக்க, விடுதலை கிடைக்க, விமானம் புறப்படுகிறது. ரன்வேயின் தரை விளக்குகள் ஜன்னலுக்கு வெளியே நகரத் துவங்குகின்றன. ஒன்று… எட்டு… இருபத்து நாலு….
பிரம்மாண்டமாகக் காற்றை உள்ளுக்கு இழுத்து சூடாக்கி, சுற்றிலும் கெரோசினை விசிறி எரிந்து ந்யூடனுக்கு வந்தனத்துடன் வெளிப்படும் சக்தி. அந்தச் சக்தியின் ஆணவம் கான்க்ரீட் பர்லாங்குகளைச் சாப்பிட்டபின் விமானத்தைத் தலை தூக்க வைத்து, அது உயர உயர உயர, சென்னை நகரத்தின் பரிமாணங்கள் மாறுகின்றன. அந்த மின்சார ரயில் மரவட்டை போல் ஊர்கிறது. சிவப்பு பஸ்களின் மண்டைகள் தெரிகின்றன. மேகப் பஞ்சுகள் சஞ்சரிக்கின்றன. நீல நீல நீல சமுத்திரத்தில் கப்பல்கள் காத்திருக்கின்றன. என் ஜன்னலின் முட்டை வடிவப் பரப்பில் சதுர மைல்கள் சரிகின்றன.
எங்கிருந்தோ வந்தான், படம் இல்லை நிஜம், 1000 வருடங்கள் உயிருடன் இருப்பது எப்படி?, கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, ஒரு நாள், மிஸ்டர் முன்சாமி 1.2.1 மற்றும் துணை ஆகிய சிறுகதைகளும் இந்தத் தொகுப்பில் உண்டு. மொத்தம் 15 கதைகள். ஒவ்வொன்றும் ஒரு விதம் - விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. சுஜாதா கதைகள் படித்திருக்கிறேன் என்றாலும், இந்தச் சிறுகதைகளை படித்த நினைவில்லை. உங்களுக்கும் படிக்க ஆர்வமிருந்தால் நிச்சயம் படிக்கலாம். கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. வாசித்துப் பாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
8 ஆகஸ்ட் 2025
என்னுடைய பெரிய சுஜாதா கலெக்ஷனில் இதுவும் இருக்கிறது. படித்திருக்கிறேன். மறுப்படியொரு பார்வை பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குசுஜாதாவின் வானமென்னும் வீதியிலேயும், ஜேகேயும் படித்திருக்கிறீர்களா?
சுஜாதா அவர்களின் சிறுகதைகள், நாவல், கவிதை, கட்டுரை என எதைப் படித்தாலும் மனதில் ஒரு வித சிலிர்ப்பும், வியப்பும் கூடவே வரும் - என்னமா எழுதி இருக்கார்யா இந்த ஆளு என்ற எண்ணமும் தோன்றும். //
பதிலளிநீக்குடிட்டோ, வெங்கட்ஜி!
ஆத்மா படித்திருக்கிறேனோ என்று தோன்றுகிறது.
சுவாரசியமாக ரசித்துச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட்ஜி.
வாசிக்க வேண்டும்.
கீதா
வாசகம் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
படிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம்...தொடர வாழ்த்துகள்
பதிலளிநீக்குநீங்கள் வாசித்த புத்தகம் பற்றிச் சொல்லிய விதம் அருமை.
பதிலளிநீக்குகம்ப்யூட்டரே கதை சொல்லு - சுஜாதா அவர்கள் தீர்க்கதரிசிதானோ என்று எண்ண வைக்கிறது. இப்போது இதுவும் சாத்தியமாகியிருக்கிறது என்று தோன்றுகிறது அதாவது ஏ ஐ யிடம்கதை கேட்டால் சொல்லுகிறது என்று அறிந்தேன். சோதித்துப் பார்க்கவில்லை.
துளசிதரன்