திங்கள், 27 அக்டோபர், 2025

கதம்பம் - 14 வருடத் தவம் - அன்பு சூழ் உலகு - பண்புடன் மின்னிதழ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


14 வருடத் தவம் - 6 அக்டோபர் 2025: 


இன்பமும் துன்பமும் இணைந்தே இருப்பது தானே நம்முடைய வாழ்வின் பொருள்! நிகழும் செயல்கள் எல்லாவற்றுக்கும் பின்னணியிலும் அதற்கான காரணமும் காரியமும் நிச்சயமாக இருக்கிறது! காலம் தான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லணும் என்றும் நாம் சொல்வது தானே! இதுபோன்று நமக்குப் புரிபடாத எத்தனையோ விஷயங்களுக்காக நாம் இங்கே உழன்று கொண்டிருக்க, சட்டென்று ஒருநாள் எல்லாமே துடைத்து விட்டதைப் போல பளிச்சென்று மாறும் போது நம் மனது எப்படி இருக்கும்!!! அப்படியொரு மனநிலையில் தான் இப்போது நான்!


பகவான் ஸ்ரீராமனுக்கு 14 வருட வனவாசம் கிடைத்தது போல, ‘அவரும் நானும்’ கூட இந்த 14 வருடங்களாக குடும்பத்திற்காக, குடும்பத்தின் நலனுக்காக ஒரு தவம் தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே! இந்த 14 வருடங்களில் எங்கள் இருவரின் மனதிலும் எவ்வளவோ மாற்றங்கள், போராட்டங்கள், இக்கட்டான சூழல்கள் என்று பலவற்றை கடந்து வந்துவிட்டோம்! 


இத்தனை வருடங்களில் குடும்பம் ஒன்றாக வசிக்க எனக்குள் எத்தனையோ பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்! பின்பு ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு வித எண்ணங்கள்! எந்த தெய்வமும் கண் திறக்கலையே! நான் ரொம்ப பேராசைப் படறேனோ! சரி! என்னோட இருக்காவிட்டாலும் பரவாயில்ல! எங்கேயோ அவர் டென்ஷன் இல்லாமல் ஆரோக்கியமா நல்லா இருக்கட்டும்! பிடித்த நண்பர்களோடு பயணம் செய்து கொண்டிருக்கட்டும்! என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்!


ஏ லூசு! நான் நிஜமாத் தான் சொல்றேன்! நான் அங்கே வந்துடப் போறேன்!


இந்தச் செய்தியை கேட்டதும் ஒருபுறம் சிரிக்கிறேன்! ஒருபுறம் அழறேன்! இனம் புரியாத உணர்வு! என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை!  ‘அவரும் நானும்’ தொடரிலும், ‘யாரிவள்’ தொடரிலும் கூட கடந்து சென்ற காலங்களின் அப்போதைய என் மனநிலையைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன்!


வேலை கிடைக்கிறதே கஷ்டம்னு அன்னைக்கு ஏதோ அவன டெல்லிக்கு அனுப்பிட்டேன்! வந்துடேண்டா! பகவானே! என் புள்ளையோட எப்போ சேர்ந்திருக்கப் போறேனோ! என்று சொல்லிக் கொண்டிருந்த அம்மாவின் குரல் தான் காதுகளில் கேட்கிறது!


தன் குழந்தைக்கு நல்லதொரு வழியை காண்பித்து சென்றிருக்கிறார் அம்மா! நிச்சயமாக அம்மாவின் ஆசியால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்று முழு மனதுடன் நம்புகிறேன்!


மழை விட்ட பின்னர் வானம் பளிச்சென்று ஆனது போல சட்டென்று எல்லாமே மாறிவிட்டது! வாழ்க்கை பாதையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது! மிகுதி வாழ்வை மகிழ்வுடன் கரம் கோர்த்துப் பயணிக்கவும், கடமைகளை நிறைவேற்றவும் இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் நல்லதொரு வழி.


வாழ்க்கைப் பாதையில் மீண்டும் ரிவர்ஸ் சென்று முதல் பத்து வருடக் காலத்தை recall செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும். லஞ்ச் பேக் செய்து கொடுத்து தெருமுனை வரை கையசைத்து பை சொன்ன இனிமையான காலங்கள்…:)


நல்லதே நடக்கட்டும்!


******


அன்பு சூழ் உலகு - 10 அக்டோபர் 2025:



அன்றாட வாழ்க்கை புதியதொரு கோணத்தில் புத்துணர்வுடன் மலர்கிறது! அதிகாலை நடைப்பயிற்சியில் கோபுர தரிசனம், வீதிகளில் வாசல் தெளித்து தெருவையடைத்து போடப்படும் அழகு மிளிரும் கோலங்கள், சாலையோரங்களில் பூத்திருக்கும் வண்ண மலர்கள், டீக்கடைகளில் அந்த அதிகாலை நேரத்திலும் சுறுசுறுப்புடன் காணப்படும் மனிதர்கள், வெளியூரிலிருந்து அரங்கனைக் காண வந்திருக்கும் பக்தர்கள், எங்களைப் போல நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் என்று பார்வைக்கும் இற்றைகளுக்கும் பஞ்சமில்லா திருவரங்கத்து இதமான வாழ்க்கை!


இன்னிக்கு என்ன சமைக்கலாம்னு இருக்க?? சரி! சரி! நான் காய்கறியெல்லாம் நறுக்கித் தந்துடறேன்! நீ சமையலை கவனி! என்று ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து கொண்டு பரபரப்புடன் செயல்பட்டு, அப்பாவுக்கும் மகளுக்கும் லஞ்ச் பேக் செய்து தந்து இங்கே சாப்பிடவும் வைத்து எனச் செல்கிறது! 


நேத்து ஆஃபீஸ்ட்ட ஜிகிர்தண்டா குடிச்சேன்! கரும்பு ஜூஸ் கூட கிடைக்கறது!


அதெல்லாம் என்னிக்காவது குடிக்கலாம்! அனாவசியமா எதுக்கு சுகர்! நான் நெல்லிக்காய், கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து க்யூப்ஸ் பண்ணி வெச்சிருக்கேன்! அதுல ரெண்டு கியூபும் உப்பும் தண்ணில போட்டுத் தரேன்! அத அப்பப்போ குடிங்களேன்!  உடம்புக்கும் நல்லது!


இன்னிக்கு லஞ்சுக்கு ரொட்டியும், பிண்டி சப்ஜியும், கொஞ்சம் சுண்டலும் தரேன்! என்ன! நாளைக்கு வெரைட்டி ரைஸ் தரேன்! இங்கெல்லாம் எல்லாரும் சாதம், குழம்புன்னு தான் எடுத்துண்டு வருவாங்கன்னு நினைக்கிறேன்! டெல்லியில இருந்தவரைக்கும் காலையில எழுந்ததும் நான் பண்ணின முதல் வேலை ரொட்டிக்கு மாவு பிசைஞ்சு வைக்கிறது தான்...🙂 


அப்பாவும் மகளும் கிளம்பிய பின்னர். வீட்டுவேலைகளுடன் பெரியம்மாவைக் கவனித்துக் கொள்வதும், உடன் என்னுடைய வகுப்புகளை அட்டெண்ட் செய்வதுமாகச் செல்கிறது தினசரி! நவம்பர் முதல் வாரத்தில் அடுத்த யூனிட் டெஸ்ட் நடைபெற இருக்கிறது! அதற்கான ரிவிஷன், செமினார் என்று சென்று கொண்டிருக்கிறது!


என்னுடைய சென்ற பதிவிற்கு கிடைத்த உங்களின் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் எங்கள் இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள்! எத்தனை எத்தனை வாழ்த்துகள், வாய்ஸ் மெசேஜ்கள், அலைபேசி அழைப்புகள்! இது அன்பு சூழ் உலகு தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அவர்கள் வீட்டில் ஏதோ நல்ல விஷயம் நடந்தது போல ஒவ்வொருவரின் கருத்திலும் அத்தனை மகிழ்ச்சி! முத்தாய்ப்பாக அன்று காய்கறிச் சந்தைக்கு சென்றிருந்தேன்! அங்கே 80 வயதைக் கடந்த முதிய தம்பதிகள்! இருவரும் எப்போதும் சேர்ந்தே தான் வருவார்கள்! இந்த திருவரங்க வாழ்வில் நான் பெற்ற பொக்கிஷங்கள்! 


வழக்கமான விசாரிப்பில் நான் இந்த விஷயத்தை சொன்னதும்,  என் கையைப் பற்றி 'உன்னோட ஆத்துக்காரர் இங்கேயே வந்திட்டார்னு கேட்டு இந்த பாட்டி ரொம்ப சந்தோஷப்பட்டான்னு அவர்ட்ட சொல்லு' என்று சொல்லிச் சென்றார்! எப்போதும் இணைந்தே இருக்கும் வாக்கும் பொருளும் போல உலகிற்கே அன்னையும் பிதாவுமாக இணைந்தே இருக்கும் பார்வதியும் பரமேஷ்வரனும் ஆசி வழங்கியதைப் போல உணர்ந்தேன்!


******


பண்புடன் மின்னிதழ் - 17 அக்டோபர் 2025:



பண்புடன் மின்னிதழ் தீபாவளிச் சிறப்பிதழில் என்னுடைய  சுவையான படைப்பும் வெளியாகி இருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி.சிறுகதைகள், கட்டுரை, தீபாவளி சிறப்புகள் என்று பல சுவையான தகவல்களுடன் எழுத்தாளர்கள் பலரின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் இதழில் நானும் இடம்பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறேன். தோழி Shanthy Mariappan க்கு என்  அன்பான நன்றிகள். வாசிப்பதற்கான சுட்டி கீழே!


தீபாவளிச் சிறப்பிதழ் 2025 – Panbudan


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

27 அக்டோபர் 2025


3 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தங்களின் கனவு (பதினாலு வருட தவம்) நல்லபடியாக நிறைவேறி, தங்கள் கணவர் தற்போது இங்கேயே வந்து தங்கி பணி மேற்கொண்டது நல்ல விஷயம். மிகவும் சந்தோஷமான விஷயமும் கூட.

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும், உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துகள். சகோதரரிடமும் சொல்லி விடுங்கள் உங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிகள் உங்களுடன் தொடர்ந்தேயிருக்க, நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பண்பிதழ் சிறப்பிதழில் தங்களது படைப்பும் வெளி வந்திருப்பதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாமே நல்லதாக நடக்கட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. 14 வருட தவம்...   உண்மையிலேயே மிகப்பெரிய தவம்.   மிகவும் சிரமமான காலங்களைக் கடந்து இப்போது நல்ல நேரம் பிறந்திருப்பது நீங்கள் சொல்லி இருப்பது போல அம்மாவின் ஆசிதான்.  வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. பண்புடன் மின்னிதழில் உங்கள் படைப்பு வெளிவந்திருப்பதற்கு வாழ்த்துகள். 

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....