அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
விஜி வெங்கடேஷ் அவரது குடியிருப்பு வளாகத்தில் இந்த வருடம் நடந்த நவராத்திரி கொண்டாட்டங்கள் குறித்த தனது அனுபவங்களையும் நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ்.
******
Casa Grande Verdant நவராத்திரி கொண்டாட்டம் Sep' 2025
இந்த நவ ராத்திரி பதினோரு நாட்கள் அதுவே ஒரு சிறப்பு!
வித விதமான பொம்மைகள்
பார்க்கப் பார்க்க வியப்பு!
நாளொரு வண்ணமாய் சேலைகள் கண்ணுக்கு விருந்து;
அதே வண்ணத்தில் ஆண்களும் அணிந்தது சிறப்பு;
பலப் பல பாடல்கள், பஜனைகள் காதுக்கு விருந்து;
விதவிதமாய் உடுத்தி உலா வந்த சிறார்கள் அழகு;
அவர்தம் சிறு வாயால் மழலையில் பாடியது கொள்ளை அழகு;
மகேஷ்வரன் பாடல்கள் தினமும் முதலில் ஒலித்தன;
உமையொருபாகனவன் எனப் பறைசாற்றின;
நவராத்திரியில் இது சிவராத்திரியாய் சிறந்தது;
கேட்டு மகிழ்ந்த அம்பிகையின் முகம் குங்குமமாய்ச் சிவந்தது;
அவளிரு பிள்ளைகள் புகழும் பாட்டால் பரவின;
அவளின் மகிழ்ச்சிக்கு எல்லை எது என வினவின;
குறையில்லாமல் அவள் புகழும் பாடப் பெற்றது;
அதில் ஆழ்ந்த நெஞ்சமதில் பக்திமணம் சூழ்ந்தது;
கோலாட்டமும், கும்மியும் நிலவொளியில் கோலாகலம்;
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கொண்டாட்டமோ கொண்டாட்டம்;
தொகுத்து வழங்கிய அன்பர்கள் மொழி கலகலப்பூட்டிட;
காண்போர் கண்ணுக்கும் கருத்துக்கும் அவை சுவையூட்டியதே!
பிரசாத வகைகள் ஒவ்வொரு நாளும் பல விதம்;
ஏங்கியது மனமும் நாவும் தினம் தினம்!
2025 CGV நவராத்திரி அதகளம்;
அமர்க்களம்!
நெடுநாட்கள் நினைவில் அவை அலைமோதும்;
*காதில் விழுந்தவை*
CGV நவராத்திரி விழாவில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிற பொறுப்பு எனக்குக் கொடுக்கப் பட்டது.
கொலுவுக்கு சமீபம் நின்று பேசும்போது யாரோ கிசு கிசுப்பது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தால் கொலுவின் நாலாவது படில உக்கார்ந்துகிட்டிருந்த உம்மாச்சி தான்.அதான் சிவனும் பார்வதியும்..என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று உன்னிப்பாகக் (ஒட்டு) கேட்டேன்.அவை உங்களுக்காக👇🏻
தேவி உடம்பெல்லாம் ஜிலீர்னு இருக்கு, லேசா குளிர்ரா மாதிரி இருக்கு..
பனி மலைல உக்காந்துகிட்டு தலையில கங்கை, குளிர்ச்சியான சந்திரன், கழுத்துல ஜில்லுனு வழவழப்பா ஊர்ர ஆபரணம் இத்தனையும் இருந்தும் உங்களுக்கு குளிராதே நாதா, இப்போ என்ன ஆச்சு?
அதில்ல தேவி, நீ கூப்டியேன்னு இங்க CGV கொலுவுக்கு வந்தேன், இங்க வந்து பாத்தா...
ஓஹோ அதுவா, நான் கிளம்பும்போது என்ன சொன்னீங்க?
எனக்கு ஒரு நாள்தான் சிவ ராத்திரி அதுவும் எல்லாரும் உபவாசம் இருக்கேன்னிட்டு 1 கிலோ சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வெச்சு சாப்டுட்டு ராத்திரி கண் விழிக்கறேன்னு OTT ல படம் பாத்து சிவ ராத்திரி கொண்டாடுவாங்க.உனக்கு என்னன்னா 9 நாள்.இந்த தடவை 11 நாள்! ம்ம்ம்ம்...அலங்காரம்,பூஜை, பாட்டு, ஆட்டம், பாட்டம்,பிரசாதம்..ஒரே கொண்டாட்டம்தான்.enjoy னு சொன்னீங்க இல்ல? அதான் உங்களையும் CGV க்குக் கூப்பிட்டேன்.அங்க பாடுவதற்கு என்னோட 64 கோடி யோகினிகள்ல select பண்ணி ஒரு 14 பேர அனுப்பினேன். அவங்க
கிளம்பும்போது சொன்னேன், என் கணவர் அங்க வரப் போறார் பார்த்துக்கோங்கன்னு.என் குறிப்ப புரிஞ்சிக்கிட்டாங்க. அதான் உங்கள குஷி படுத்த தினமும் வேயுறு தோளி பங்கன், சிவபுராணம், தில்லைவாழ் அந்தணர்க்கடியேன், மார்க்கபந்து சுலோகம்னு அடிச்சு தூள் கிளப்பிட்டாங்க. அதைத்தவிர அந்த நிகழ்ச்சியில வந்து பாடினவங்களும் தில்லை அம்பல நடராஜா, இடது பதம் தூக்கி ஆடும் அப்படின்னு உங்களையே தூக்கி வச்சுப் பாடி அமர்க்கள படுத்திட்டாங்க. இப்ப சந்தோஷம்தான? அதான் ஜில்லுனு குளிருதா?
ஆமாம் தேவி.உன்னைப் பத்தியே பாடுவாங்க கேக்கலாம்னு வந்ததுக்கு ஒரு pleasant surprise...
ஒரு வாண்டு பாடினான் பாத்திங்களா இந்தியும் இங்கிலீஷும் கலந்து?
ஆமாமா நம்ம சித்தாந்த் குட்டிதான? சூப்பர். அதுவும் அவனோட ஜிப்பாவோட கை நீளமா இருந்ததுனால ஒரு கையை கொடிகாத்த குமரன் மாதிரி தூக்கிக்கிட்டு வலது கையால மைக்க புடிச்சுகிட்டு பாடினான் பாரு! பார்க்க ரொம்ப ரசிக்கும்படியா அழகா இருந்தது🥰...
குழந்தைங்க எல்லோரும் மழலையோட பாடினது ரொம்ப நல்லா இருந்தது. நம்ம குழந்தைங்க ஞாபகம் வந்துடுத்து...
வாய்ப்பாட்டு தவிர Flute, வீணை ன்னு இசைக் கருவிகளை வேற இருவர் இசைத்தார்களே.அருமையா இருந்தது..👌🏻👌🏻👌🏻
ஆமா, நீ எப்பவும், உன்னுடைய வலது கால மடிச்சு வச்சுக்கிட்டு சூப்பரா அழகா அமைதியா புன்சிரிப்போட நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்த.ஆனா நடுவுல ஒரு நாள் உன்னை கவனிச்சேன், லேசா தலையும் உடம்பும் ஆடிக்கிட்டு இருந்ததே என்ன விஷயம் தேவி? AC னாலயா?
இல்ல நாதா, எல்லாம்.இந்த CCM effect தான்...
அப்படின்னா?
அதான் Cheல்லாத்தா Cheல்ல Maaரியாத்தா எபெக்ட். நானும் கண்ட்ரோல்டா தான் இருந்தேன், ஆனா கடைசியா ஒரு யோகினி *Aaththaaaaaaa* ன்னு ஒரு கத்து கத்தவும் என்னால முடியல.. அதான் பிரேக்கிங் பாயிண்ட்...
அது பரவாயில்ல, ஆனா என்னை பாம்பாக மாறி ஆடி வான்னு வேற சொல்லி இருக்காங்க..
பக்தைகளாச்சே பாசமா கேக்குறாங்க அதான் என்ன பண்றதுன்னு தெரியல நாதா...
ஓ அதான் நேத்து நாகினி படத்தை போட்டு ஸ்ரீதேவி ஆடறத பார்த்துட்டு இருந்தியா.. சரி சரி நடத்து...ஆனா யாரையும் பயமுறுத்திடாத தேவி,பாவம்...
ஆமா, தாண்டியா பாத்திங்களா எப்படி இருந்தது?
நல்லாத்தான் இருந்தது, ஆனா இப்ப எல்லாம் சாமி பத்தி பாடி ஆடுவதில்லையோ..
எந்த உலகத்தில் இருக்கீங்க நாதா? இப்ப எல்லாம் குத்து பாட்டு தான். அதுவும் எல்லாரும் கூலிங் கிளாஸ்😎 போட்டுக்கிட்டு அப்படி போடு போடுன்னு ஆடினார்களே பாத்திங்களா படு தமாஷ் இல்ல?
ஆமா அதுவும் ராத்திரி ஒன்பது மணிக்கு நிலா வெளிச்சத்தில😎! செம👌🏻👌🏻👌🏻
அந்த நிகழ்ச்சியை ரெண்டு பேரு தொகுத்து வழங்கினார்கள் பார்த்தீங்க இல்ல? ஆடினவங்கள செமையா கலாய்ச்சிகிட்டு இருந்தாங்க. ஆனா அந்த லேடிஸ் பாவம், ரொம்ப ஸ்போர்ட்டிவா எடுத்துக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தாங்க, இல்ல?
ஆமா அவங்க ஆடினது டென்னிஸ் கோர்ட்ல இல்ல? அதனாலதான் ஸ்போர்டிவ்...😁.
நாதா......இந்தக் கடி இப்போ தேவையா🤨...
Ok ok...மொத்தத்துல நவராத்திரி சூப்பரா கலகலன்னு அமர்க்களமா நடந்து முடிந்தது இல்ல தேவி? ஆமா, உன் முகம் ஏன் வாட்டமா இருக்கு? ரக ரகமா பிரசாதம் சாப்பிட்டதோட விளைவா?
இல்லல்ல. அதுக்குத்தான் இஞ்சி, சுக்கு, ஓம கஷாயம் இருக்கே..
பின்ன????
இப்ப இந்த நவராத்திரி முடிஞ்சு அதைப் பத்தி கவிதை (மாதிரி) எழுதுறேன்னு ஒரு ஜீவன் படுத்தும் பாருங்க, அதை நினைச்சாத்தான் குலை நடுங்குது...
யாரு நம்ம விஜியா? சேச்சே பாவம் ஏதோ ஆர்வக்கோளாறு, விடு. ச்சும்மா பிரமாதம்னு கமெண்ட் போட்டு வை.உன்னை யாரு படிக்கச் சொன்னா? இப்ப இந்த குரூப்ல எல்லாரும் பண்றது இல்லையா அது மாதிரிதான்....
இதுக்கு மேல அவங்க சம்பாஷனையை உற்று (ஒட்டு) கேட்கும் தெம்பு தைரியம் இல்லாததால் மரியாதையாக என்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்😒...
விஜி வெங்கடேஷ்.
4.10.25.
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
28 அக்டோபர் 2025


நவராத்திரி கவிதை அருமை. கொலு படமும் அருமை.
பதிலளிநீக்கு//நாளொரு வண்ணமாய் சேலைகள் கண்ணுக்கு விருந்து;
அதே வண்ணத்தில் ஆண்களும் அணிந்தது சிறப்பு; //
ஒவ்வொரு கிழமை ஒவ்வொரு வண்ணம் அறிவித்து விட்டதால் அன்று எல்லோரும் ஒரே நிறத்தில் அணிந்து வந்தார்கள் இந்த முறை.
வரிவரியாய் வர்ணனையில் வந்து சென்ற நாட்களின் சிறப்பு தெரிந்தது. உங்கள் உள்ளம் அதனால் அடைந்த மகிழ்ச்சியும் புரிந்தது.
பதிலளிநீக்குஉடையிலிருந்து, குழந்தைகள் பாடியது, பிரசாதம் வரை சொல்லியதிலிருந்து நவராத்திரி சூப்பரா நடந்திருக்கு எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது உங்களுக்கும் அதனால் வரிகளாக இங்கு பகிர்ந்திருக்கீங்க நல்ல நினைவுகள் உங்களுக்கு என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குகூட்டாக நடப்பதும் ஒரு சிறப்புதான் என்று தெரிகிறது பல அபார்ட்மென்ட்களில் இப்படிச் செய்கிறார்கள் கூடி மகிழ்ந்து கொண்டாட்டம் என்று.
கீதா
ஹாஹாஹா உங்களை தொகுக்க நியமிச்சாங்களா! அது சரி, அப்ப அங்க கொலு பொம்மைகளுக்கு உங்க கமென்ட்ஸ் கொடுத்து பேசியிருப்பீங்களே!!!! இல்லையா?
பதிலளிநீக்குகீதா
Cheல்லாத்தா Cheல்ல Maaரியாத்தா எபெக்ட்.//
பதிலளிநீக்குஹாஹாஹாஹாஹா சிரித்து முடியலை.
நாங்க வீட்டில் இப்படி நானும் மகனும் பேசிக் கொண்டதுண்டு. குறிப்பாக ஆடி மாசங்களில் பக்கத்துல அம்மம் கோயில்ல கூழ் ஊத்தி பாட்டு போட்டுடுவாங்களே அப்போது,.
நானும் இப்படி லக்ஷ்மி விஷ்ணு சிவன் பார்வதி பேசிக்கறாப்ல வேற கான்டெக்ஸ்ட்!!! எங்க தளத்துலே எழுதிய நினைவு வந்தது.
கீதா
ஓ அதான் நேத்து நாகினி படத்தை போட்டு ஸ்ரீதேவி ஆடறத பார்த்துட்டு இருந்தியா.. சரி சரி நடத்து..//
பதிலளிநீக்குசிரிப்பு வந்துவிட்டது காட்சியாக நினைத்துப் பார்க்கையில்..
இப்ப இந்த நவராத்திரி முடிஞ்சு அதைப் பத்தி கவிதை (மாதிரி) எழுதுறேன்னு ஒரு ஜீவன் படுத்தும் பாருங்க, அதை நினைச்சாத்தான் குலை நடுங்குது...//
ஹாஹாஹா........
ரசித்தேன், விஜி.
கீதா
நன்றி நன்றி நன்றி. ரசித்தற்கும் கமெண்ட் செய்ததற்கும்.....
பதிலளிநீக்குவிஜி.