புதன், 26 நவம்பர், 2025

கதம்பம் - Hello - மினி கச்சோடி - பிச்சுவாய் ஓவியம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட துலா ஸ்னானம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


Hello - அவரும் நானும் - 21 நவம்பர் 2025: 



நேத்து எங்க ஆஃபீஸ்ல ஒரு பஞ்சாயத்து!


அப்படியா! என்னாச்சு?? உங்களுக்கு ஒண்ணும் சிக்கல் இல்லையே??


பதறாத! எனக்கு ஒண்ணுமில்ல! 'ஹலோ'ன்னு சொன்னதுக்காக சண்டை!!


என்னது! ஹலோன்னு சொன்னதுக்காகவா சண்டை!!?


ஆமா! அது எப்படி மரியாதை இல்லாம அப்படி கூப்பிடுவீங்கன்னு ஒருத்தருக்கொருத்தர் வாக்குவாதம்!! அப்புறம் எல்லாரும் பேசி தீர்த்து வெச்சோம்!!


ம்ம்ம்! எல்லாரும் புவனாவாக இருக்க முடியுமா! என்ன!


என்ன!!!??


ஆமா! 24 வருஷமா நானும் தான் ஹலோன்னு சொல்லி கேட்டுண்டு இருக்கேன்! அதுக்காக உங்களோட கோபிச்சிக்கறேனா! என்ன!!


புரியலையே??


ம்ம்! உங்களுக்கு கோபம் வந்தா தான் என்னோட பேரு மறந்து போய்டுமே!அப்போ என்னை 'ஹலோ'ன்னு தானே கூப்பிடுவீங்க...🙂


சரி! சரி! வேலையைப் பாரு! தேங்காய் உடைச்சு தரணுமா? காய்கறி என்ன நறுக்கணும்னு சொல்லு!


எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்! இன்னிக்கு 'உலக ஹலோ தினம்'! யாராவது உங்க கூட சமாதானமா போகணும்னா அவங்ககிட்ட சொல்லுங்க ஒரு ஹலோ!! Hello fm 106.4ல் RJ தன் உரத்த குரலில் இதைச் சொன்னதும் இருவரும் புன்னகைத்துக் கொண்டோம்...🙂


******


மினி கச்சோடி - 23 நவம்பர் 2025:



திருச்சியில் தற்சமயம் மழைத்தூறலும் சில்லென்ற சூழலுமாக நிலவி வரும் நிலையில் தேநீர் நேரத்தில் ஏதேனும் கொறித்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்! சென்ற வாரம் தான் பிரட் பக்கோடா செய்திருந்ததால் மீண்டும் எண்ணெய் வைக்க வேண்டாமென ஒரு எண்ணம்! நம்ம வீட்டில் எண்ணெயில் பொரிக்கும் பண்டங்கள் எப்பவாவது தான்! இப்போது என்ன செய்யலாம்???


நேற்று இரவு உணவாக ஆலு பராட்டா தான் செய்திருந்தேன்! அந்த ஆலு ஸ்டஃபிங் கொஞ்சம் மீதியிருந்தது! சப்பாத்தி மாவும் கொஞ்சம் இருந்தது! பராட்டாவாக தேய்த்தால் இரண்டு தான் கிடைக்கும்! சரி! டீ போடும் நேரத்தில் சட்டென்று ஒரு பரிசோதனை! அருகில் ஒரு அடுப்பில் இரும்பு குழிப்பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வைத்தேன்!


கொஞ்சமாக சப்பாத்தி மாவு எடுத்து கொழக்கட்டைக்கு கிண்ணம் செய்வது போல் செய்து அதில் ஆலு ஸ்டஃபிங் வைத்து மூடி அதை தட்டி குழிப்பணியாரக் கல்லில் போட்டு இருபுறமும் வாட்டி எடுத்தேன்! எண்ணெய் பெரிதாக தேவைப்படவே இல்லை! ஒருமுறை விட்ட ஒரு ஸ்பூன் எண்ணெயிலேயே மொத்த கச்சோடிகளையும் போட்டு எடுத்தாச்சு!


சூடான தேநீருடன் சுவைக்க நன்றாகவே இருந்தது! இதை மினி கச்சோடி என்று சொல்லிக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை..🙂 அதனுடைய தயாரிப்பு தனி! எல்லாவற்றுக்கும் மனசு தான் காரணம்னு சொல்வது போல் இதை மினி சமோசாவாக, மினி கச்சோடியாக என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்...🙂


******


ரோஷ்ணிகார்னர் - ஓவியம் 13 நவம்பர் 2025:


மகளின் கைவண்ணத்தில் ஒரு பிச்சுவாய் வகை ஓவியம் - உங்கள் பார்வைக்கு!



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

26 நவம்பர் 2025


11 கருத்துகள்:

  1. மினி கச்சோடி....நல்லா வந்திருக்கு. ஆமாம்.ஆதி நானும் இப்படி ennai அதிகம் வேண்டாம் என்று.செய்கிறேன்...எப்போதாவது....நல்லாதான் இருக்கு. பெயர் எதுவானால் என்ன நாக்குக்கு போதும்....அதைவிட முக்கியம் உடம்புதானே..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஓவியம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள் ரோஷனி

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஓவியம் சிறப்பு
    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பதிவு முகநூலில் படித்து விட்டேன், மீன்டும் இங்கும் படித்தேன். கச்சோடி நல்லா இருக்கிறது, டீ பார்க்க அழகு சுவையும் நன்றாக இருக்கும்.

    ரோஷ்ணியின் ஓவியம் அருமை, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. விஜயலஷ்மி சென்னை26 நவம்பர், 2025 அன்று 4:41 PM

    டீயும் கச்சோடியும் அருமை ஓவியம் அழகு

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. உலக ஹலோ தினம் பற்றி தெரிந்து கொண்டேன்.

    திப்பிசமாக செய்த கச்சோடியும், டீயும் பார்க்கவே அற்புதமாக உள்ளது. நீங்கள்தான் உணவுகளை விதவிதமாக செய்வதில் வல்லவராயிற்றே.. எதைச் செய்தாலும் அது நன்றாகத்தான் வரும். பாராட்டுக்கள்.

    உங்கள் மகள் வரைந்த ஓவியம் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். ரோஷிணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. எதெதை தப்பா எடுத்துக்கறதுன்னு இல்லாமப் போச்சு.  'ஹலோ'ன்னு சொல்றது தப்பா...?  மதுரையிலிருந்து மாறி சென்னை வந்தபோது 'சொல்லுய்யா' 'வாங்கய்யா' என்று மதுரை ஸ்லாங்கில் நண்பர்களுடன் பேசியபோது தவறாகி விட்டது.  'வாய்ய்யா',  'போய்யா' என்று மரியாதை இல்லாம பேசறான் என்றார்கள்.  'என்னபா' 'சொல்லுபா' என்று பேசுவது மரியாதை என்றார்கள்!

    பதிலளிநீக்கு
  8. சுலபமான திப்பிசத்தில் சுவையான ஸ்நாக்ஸ் தயார்!  சூப்பர்.

    ரோஷ்ணியின் ஓவியம் அருமை.  பிச்சுவாய் வகை ஓவியம் என்றால் என்ன?  எப்படி அந்தப் பெயர்?

    பதிலளிநீக்கு
  9. மிக அழகான ஓவியம்.congrats Roshni.
    சாப்பிடும் பண்டங்களை photo எடுத்துப் பார்த்தால் பிரமாதமாக இருக்கிறது.நீ செய்தது சாப்பிடவும் நன்றாக இருந்திருக்கும் புவனா.
    மும்பை போன புதிதில் நான் கற்ற ஹிந்தியை office இல் காட்டியபோது ஒரே மிரண்ட பார்வை (பின்னே சுத்தமான ஹிந்தியில் பேசினால்! அப்புறம் பேட்டை பாஷைக்கு (slang) வந்தேன்.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....