வியாழன், 27 நவம்பர், 2025

பீட்ரூட் துருவல் - கோணங்கள் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


முகநூலில் எழுதிய சில இற்றைகள் இன்றைக்கு ஒரு தொகுப்பாக இங்கே - எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் என்னை தொடராத நண்பர்களின் வசதிக்காகவும்!


பீட்ரூட் துருவல் நினைவுகள் - 23 நவம்பர் 2025:



பீட்ரூட் துருவி, தேங்காய் சேர்த்த  பொரியலாக அம்மா செய்யும்போது, சிறு வயதில் எனக்கு சாப்பிடப் பிடிக்காது...... இப்போது  இல்லாள் செய்யும்போது, பிடிக்கிறதோ இல்லையோ, எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு விடுகிறேன். எதுக்கு வீண் வம்பு என்ற எண்ணமில்லை your honour! கஷ்டப்பட்டு செய்யும்போது அந்த உழைப்பிற்கு மரியாதை தர வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான். ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு! 😀


நான் வேண்டாம் என்று சொல்லி விடுவதால் எனக்கு மட்டும் பீட்ரூட்டின் சத்து கிடைக்காமல் போய் விடும் என்று அம்மா அதனை துருவியவுடன், அதில் கொஞ்சம் எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு மேலே கொஞ்சம் சர்க்கரை தூவி, கலந்து வைத்து விடுவார்கள்..... சிறிது நேரம் கழித்து இன்னும் ஒரு முறை கலந்துவிட்டால் போதும்....   சர்க்கரை கரைந்து பீட்ரூட் துருவலின் இனிப்புடன் சர்க்கரை இனிப்பும் சேர்ந்து சுவைக்க நாவில் அப்படி ஒரு ஆனந்த தாண்டவ உணர்வு வரும்.


இன்றைக்கு அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு, சின்ன வயதில் சாப்பிட்ட அதே போல இன்றைக்கு நான் சாப்பிடப் போகிறேன் என்று சொல்ல, "சாப்பிட வேண்டியது தானே...." , என்று சொல்லியபடி ஒரு சிறு கிண்ணமும் எடுத்துத் தந்தார். உடனடியாக துருவிய பீட்ரூட் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, அதனை கண் முன்னால் வைத்துக் கொண்டு இதோ தட்டச்சு செய்து கொண்டு இருக்கிறேன்.....   


அம்மாவின் நினைவுகள் மறக்கக்கூடியவை அல்ல...... பீட்ரூட் கூட நினைவுகளைத் தூண்டலாம்.  அம்மாவின் நினைவுகளில் ஆழ்ந்தபடி, கண்முன் இருக்கும் பீட்ரூட் சாப்பிடுகிறேன்..... பீட்ரூட் அல்வா, பர்ஃபி என விதம் விதமாக சுவைத்து இருந்தாலும் இந்த சர்க்கரை மற்றும் சேர்த்த துருவலில் இருக்கும் சுவைக்கு ஈடு ஆகாது...... ஆஹா..... என்ன சுவை...   


உங்களுக்கு பீட்ரூட் எப்படி பயன்படுத்தினால் பிடிக்கும்? சொல்லுங்களேன்.  


*******


கோணங்கள் - 24 நவம்பர் 2025:



அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வாழ்க்கை அவ்வப்போது நமக்கு பல விஷயங்களை புரிய வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பல கோணங்கள் இருக்கமுடியும் என்பதையும் உணர்த்திய வண்ணமே இருக்கிறது. நமக்குச் சரியாகத் தோன்றும் ஒரு செயல் மற்ற ஒருவருக்குத் தவறானதாகத் தோன்றலாம்.  சென்ற வாரம் கூட, பெயர் தெரியாத ஒரு இளைஞனை ஹலோ என்று சொன்னது அவனுக்குத் தவறாகப் பட்டது..... அதில் தவறொன்றும் இல்லை என்பதே என் எண்ணம்.... எனது இல்லாளையே நான் பல சமயங்களில் அப்படி அழைப்பதுண்டு 😃.


அதிகாலை நேரத்தில் ஏன் இந்த சிந்தனைகள்?


நேற்று மாலை நேரத்தில் மகளுடன் வாகனத்தில் உலா சென்று வந்தேன். அப்போது சில்லென்று காற்று....  "மழை வரட்டுமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்து. மேகங்களையும் அதன் முன்னே வெள்ளை கோபுரத்தையும் அவளது அலைபேசியில் படம் எடுத்துக் காண்பித்தாள்..... அழகாய் இருக்கிறது என்று சொல்லி, நான் வேறு கோணத்தில் படம் எடுத்து அவளுடன் பகிர்ந்து கொண்டேன்....  கோணம் பற்றிய சிந்தனைகள் அப்போது தான் தோன்றியது..... நிழற்படத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையைப் பார்க்கும் விதத்திலும் எத்தனை எத்தனை கோணங்கள்......


மழையும் சில்லென்ற காற்றும் காலை நேர நடையில் தடையைக் கொண்டு வந்திருக்கிறது.... நேரம் கடந்து செல்லலாம் என்றால் அலுவலகம் செல்ல தாமதம் ஆகிறது..... கடந்த ஒரு வாரமாக நடைக்குத் தடை...... இதோ இன்று கூட நான்கு மணிக்கு விழித்து விட்டேன். வேலைகளை முடித்துக் கொண்டு, அரங்கனின் வீதிகளில் உலா வரலாம் என்றால் மழை பெய்த வண்ணம் இருக்கிறது. எனவே இன்றைக்கும் நடை ரத்து.... 


நடை தடையானது மட்டுமல்லாது நடை குறித்து இங்கே பகிர்வது கூட அதனால் தடை..... பரவாயில்லை..... எது நடந்தாலும் அது நல்லதாகவே நடந்ததாகக் கருதுவோம்....


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

27 நவம்பர் 2025


6 கருத்துகள்:

  1. நேற்று எங்கள் வீட்டில் பீட்ரூட் பொரியல் - தேங்காய் போட்டு.  ஒருமுறை தேங்காய் போட்டு செய்தால் ஒருமுறை வெங்காயம் போட்டு செய்யலாம் என்பது என் கட்சி.  வெங்காயம் என்றாலே முகம் சுளிப்பது பாஸ் கட்சி!

    பதிலளிநீக்கு
  2. பீட் ரூட் துருவல் சர்க்கரையுடன் என் பாட்டி, அதில் கொஞ்சம் நெய்யும் கலந்து தருவார்!!! சில சமயம் தேங்காய் துருவல் கலந்து. கூடவே சில சமயம் வறுத்த முந்திரி!!!! அடுப்பில் வைக்காமலேயே செய்து தரும் இதை சிறு வயதில் சுவைத்திருக்கிறேன். பெரும்பாலும் பள்ளியில் இருந்து வரும் போது இதைக் கொடுப்பார். ஊறி சூப்பரா இருக்கும்.
    அந்தப் பாட்டியோடு இருந்த வரை. அதன் பின் இல்லவே இல்லை. எப்போதும் செய்யப்படும் பொரியல், அல்வா என்று.

    அதன் பின் நானே இனியவள் அப்புறம் பாட்டி செய்து கொடுத்தது போல ஆசை இருந்தாலும் NO!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஜி, அம்மாவின் நினைவுகள் வந்து கொண்டேதான் இருக்கும் ஒவ்வொன்றிலும். அதுவும் அவர்கள் நமக்கென்று செய்து தருவதில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பல கோணங்கள் இருக்கமுடியும் என்பதையும் உணர்த்திய வண்ணமே இருக்கிறது.//

    ஆமாம் ஜி. ஹலோ என்று சொல்வதில் தவறில்லை என்பதும் என் எண்ணம். ஆனால் ஒரு சிலருக்கு அது தவறாகப் படுவதை நானும் உணர்ந்திருக்கிறேன் வீட்டில் இல்லை...வெளியில்.
    அதுவும் பெயரே தெரியாத நபர். ஹெலோ கொஞ்சம் நகர்ந்துக்கறீங்களா? மேடம் என்று சொல்லியிருக்கணுமாம்...அவர்/அவள் கலவை. புரிந்து கொள்ள முடிந்தது அவரின் உணர்வை.

    //எனது இல்லாளையே நான் பல சமயங்களில் அப்படி அழைப்பதுண்டு//

    ஹிஹிஹி நம்ம வீட்டிலும்!!

    வாழ்க்கை முழுவதுமே பல கோணங்களில்தானே செல்கிறது, இல்லையா.

    ஒரு கதையைக் கூட நாம் வாசிக்கும் போது ஆசிரியர் என்ன எண்ணத்தில் எழுதியிருப்பாரோ ஆனால் நமக்குப் பல கோணங்கள் தோன்றும்.

    கோபுரம் படம் கவர்கிறது. மேகமும் கோபுரமும் எப்போதுமே அழகுதான்.

    தூய வானம் ப்ளஸ் கோபுரம் பார்க்கவும் அதுவும் ஓர் அழகுதான்...இப்படி ஒவ்வொரு கோணத்திலும் நாம் பார்க்க ரசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை இனியதுதான் ஆனால் ஏற்றுக் கொள்ளும் மனம்....அங்குதானே பிரச்சனை ! வருகிறது சில சமயம். ஹாஹஹாஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய அழகான வாசகமும் அருமை. வந்ததை ஏற்றுக் கொண்டால் மனதிற்கும் நிம்மதி இருக்கும். உண்மைதான்.படங்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது

    பீட்ரூட் துருவல் பார்க்கவே மிக அழகாக இருக்கிறது. கூடவே அம்மாவின் நினைவுகளும். அம்மாவின் பாசத்தை வாழ்நாளில் மறக்க இயலுமா.? பீட்ரூட்டின் இனிப்புக்கு தோதாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டில என் மருமகள் தயிர், உப்பு கலந்து கடுகு தாளித்துக் கொட்டி சாப்பிடுவார். ஒவ்வொருவரின் இந்த ரசிப்பு கோணங்களும் வித்தியாசமானதுதான்.

    அதுபோலவே தங்கள் மகளும், தாங்களுமாக எடுத்த கோபுர படங்களின் கோணங்களும். எப்படியோ எங்களுக்கு ஸ்ரீரங்கம் கோபுரங்கள் தினமும் தரிசனமாக கிடைக்கிறது. இதற்கே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வாசகம் அருமை.
    என் cousin beetroot என்றாலே காத தூரம் ஓடுவான்.அசட்டுத் திதிப்பு, அதையெல்லாம் ஒரு காயோடு சேர்ப்பதா என்று அவன் எண்ணம். நன்றாக எண்ணெய் விட்டு roast செய்யும் காய்கள்+ பருப்பு உசிலி தான் அவன் தொண்டையில் இறங்கும்.ஒரு முறை அவன் சாப்பிட வந்தபோது பீட்ரூட் செய்திருந்தேன்(தெரியாமல்).
    உடனே வெளியே போய்(கீழேயே கடை) ஆளுயர potato chips packet வாங்கி வந்துட்டான்😁.
    என் cousin ஒருத்தி சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள பீட்ரூட் குருமா செய்வாள்.நன்றாக இருக்கும்..
    நாங்கள் தேங்காய் துருவலில் சர்க்கரை போட்டு சாப்பிட்டதுண்டு.கோதுமை மாவை வறுத்து நெய் சர்க்கரை போட்டும்..ஆனால் பீட்ரூட் கறி மட்டுமே..
    அம்மா நினைவுகள் நம் உயிர், உணர்வு உள்ளமட்டும் உயிர்ப்போடு இருக்கும்.அவள் தன் ஒரு பாகத்தையே நமக்குக் குடுத்தவளாயிற்றே...அவள் இருக்குமட்டும் அருமை தெரியலை..
    கோபுர தரிசனம் கோடி புண்ணியம்🙏🏻

    பின் குறிப்பு:
    எந்த சிறிய விஷயத்தையும் ஒரு கட்டுரையாக்கும் வித்தை தெரிந்திருக்கிறது கிட்டு உனக்கு.சூப்பர்.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....