அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட இரண்டாவது மலர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
விதம் விதமாய் - 11 ஜனவரி 2026:
சமீபத்தில் ஒரு டைல்ஸ் ஷோரூம் (விற்பனை நிலையம் என்று சொன்னால் நன்றாக இல்லையோ?) செல்ல வேண்டியிருந்தது. அடடா… எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள். வடிவேலு சொல்வது போல ஒரு பாத்ரூம் டைல்ஸ்-க்கு இத்தனை அக்கப்போரா என்று நினைக்க வைத்தது அங்கே இருந்த வகைகளும் வடிவங்களும். எத்தனை விதமாக டைல்ஸ் வைத்திருந்தார்கள். உள்ளே நுழைந்ததுமே ஏதோ ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருப்பது போல இருந்தது. கழிவறை, குளியலறை, ஹால், பெட்ரூம், சமையலறை என ஒவ்வொன்றுக்கும் தேவையான, பொருத்தமான வகைகளில் அவர்கள் காட்சிக்கு வைத்திருந்த டைல்ஸ்களை பார்க்கும்போதே பிரமிப்பு தான். அதிலும் வருபவர்களின் கண்களைக் கவரும் விதமாக ஃபோகஸ் லைட்கள் போட்டு பளபளவென வைத்திருப்பதைப் பார்க்கும்போதே வாங்கிவிடத் தூண்டும் விதமாக வைத்திருந்தார்கள்.
ஒரு காலத்தில் சாதா தரை தான் வீடெங்கும். சில வீடுகளில் ரெட் ஆக்ஸைட் கலந்து சிவப்பு வண்ணத்தில் தரையோ, ஓரங்களோ இருக்கும் அவ்வளவு தான். இல்லை எனில் காரைக்குடி பக்கங்களில் இருக்கும் ஆத்தங்குடி டைல்ஸ் தான். சில வருடங்களாகத் தானே இந்த ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்படும் டைல்ஸ் வகைகள், மார்பிள் கற்கள்! அதற்கு முன்னர் சாதாரணமாகவே இருந்தன நம் வீட்டின் தரைகள். நெய்வேலியில் இருந்தவரை சிமெண்ட் தரை தான் எங்கள் வீட்டில். தில்லியில் கூட சில வருடங்கள் வரை அதே போன்ற சிமெண்ட் தரை தான். பிறகு மொசைக் தரை! அதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் டைல்ஸ். இப்போது இருக்கும் வீட்டில் இரண்டுக்கு இரண்டு என்ற அளவில். சமையலறையில் மார்பிள் கற்கள். பல விதங்களில் மாற்றங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.
பாத்ரூம் ஃப்ளோர் டைல்ஸ், வால் டைல்ஸ் என்று விதம் விதமாக பார்க்கும்போது வியப்பும், பிரமிப்பும். ஒரு சதுர அடி இத்தனை ரூபாய் என்று விலையைக் கேட்கும்போது ஒரு சிறிய பாத்ரூம் மாற்றினால் எத்தனை செலவாகும் என்று கணக்குப் போட்டது மனது. அது மட்டுமல்லாது, அந்த அறைக்குத் தகுந்தாற்போல க்ளாசெட், வாஷ்பேசின் என அதில் தான் எத்தனை எத்தனை வகைகள்? கண்ணாடிகள் கூட விதம் விதமான அளவில், வடிவில் விற்பனைக்கு வைத்து பார்வையாளர்களை ஈர்க்கிறார்கள். நாங்கள் அங்கே இருந்த சில நிமிடங்களில் நிறைய சுற்றி வந்த போது எண்ணங்கள் முந்தைய காலத்தை நோக்கிச் செல்வதைத் தடுக்க முடியவில்லை. மிகமிகச் சாதரணமாக கட்டாந்தரையில் குளித்த காலமும், தோட்டத்து பைப்படியில் ஒரு கல்போட்டு அதன் மீது நின்றுகொண்டோ, உட்கார்ந்து கொண்டோ குளித்த காலங்கள் நினைவுக்கு வந்தது. அதில் இருந்த உற்சாகமும், புத்துணர்வும், இன்றைய பாத்ரூம்களில் வருமா என்றால் வராது என்றே தோன்றியது எனக்கு.
அங்கே இருந்த பணியாளர், “எங்கே இருந்து வருகிறீர்கள்” எனக் கேட்க, நான் திருவரங்கம் என்று சொன்னவுடன் என்னிடம் கேட்ட இன்னுமொரு கேள்வி - “உங்களுக்கு வெளியூரா? அப்பப்ப இங்கே வந்து தங்கிட்டு போவீங்களா?” அது போலவே டீயா, காஃபியா என்றெல்லாம் கேட்காமல், நேரடியாக “Gக்ரீன் டீ சாப்பிடறீங்களா?” என்று கேட்டார். நம்மளப் பார்த்தா வெளியூர் போலவும், Gக்ரீன் டீ சாப்பிடுபவர் போலவும் இருக்கிறது போல! எப்ப வீட்டுக்குண்டான டைல்ஸ் போன்றவை தேவைன்னாலும் வாங்க சார் என்று வேறு சொன்னார்! நான் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். எப்படியெல்லாம் காலம் மாறியிருக்கிறது என்பதை நினைத்தால் பிரமிப்பு தான் இல்லையா… சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டில் இருந்த சிமெண்ட் தரையும் அதன் சில்லிப்பும், அப்படியே படுத்தால் வரும் உறக்கமும் இப்போதைய டைல்ஸ்களில் வராது - அதைத் தவிர வழுக்கி விழும் அபாயமும் அந்தக் கால தரைகளில் இல்லையே! இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன, சொல்லுங்களேன்!
*******
என்னடா வேலையிது - 12 ஜனவரி 2026:
”என்னடா வேலையிது?” என்று அவ்வப்போது நம்மில் சிலர் புலம்புவதைக் கேட்க முடியும் இல்லையா? ஒவ்வொரு மனிதருக்கும் இப்படிச் சில எண்ணங்கள் உண்டு. தன் வேலையில் திருப்தி இல்லை எனில் மிகவும் கஷ்டம் தான். ஆனாலும் சந்தர்ப்ப சூழல்கள் ஒருவரை அந்தப் பிடிக்காத வேலையிலும் கூட நிலைக்க வைத்திருக்கும். கட்டவேண்டிய EMI, செலுத்த வேண்டிய பள்ளி/கல்லூரி கட்டணங்கள், மருத்துவ செல்வு, வீட்டுச் செலவு என அத்தனையும் நினைக்கும்போது வேலை பிடிக்கிறதோ இல்லையோ அந்த வேலையில் நிலைத்து இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். அந்த வேலையை விட்டு விடவேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், பிடித்த வேலை கிடைக்கும்வரை அதே வேலையில் தொடரத்தானே வேண்டியிருக்கிறது. அதுவும் நமது மனதுக்கு ஒவ்வாத வேலைகளை அந்தப் பணியின் காரணமாகச் செய்ய நேரும்போது பலருக்கும் அந்த வேலை பிடிக்காமல் போகிறது.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தோன்றுவது போல, நாம் பார்க்கும் வேலை சரியில்லை - அடுத்தவர்கள் பார்க்கும் வேலை தான் நல்லது என்று தோன்றினாலும், நமக்கு அந்த நேரத்தில் புரியாத விஷயம் - எல்லா வேலைகளிலும் சிக்கல்களும், பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். அந்தப் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது சூட்சுமம். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதில் இருக்கும் பிரச்சனைகளும் சவால்களும் ஒரு புறம் இருக்க, மாத/வாரக் கடைசியில் கிடைக்கும் ஊதியம் அந்தச் சவால்களையும் பிரச்சனைகளையும் நிச்சயம் மறக்கத்தானே செய்யும். ஒரு வேலையும் செய்யாமல் சும்மா அரசியல் செய்து சம்பாதித்தவர்களைப் போல நம்மால் இருக்க முடியாதே! பல தலைமுறைகளுக்குச் சொத்தும் சேர்த்துக் கொண்டே இருப்பவர்கள் அப்படி சும்மா இருக்க முடியலாம். சாதாரணர்களால் அப்படி வேலை பிடிக்கவில்லை என்று இருந்துவிட முடியுமா என்ன?
அது சரி எதற்காக, இன்றைக்கு இந்த மாதிரி சிந்தனைகள் என்று தானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன். நம்மில் பலரும் இப்படி செய்யும் வேலை பிடிக்கவில்லை என்று இருக்கும்போது, சமீபத்தில் நான் பார்த்த ஒரு மனிதர் மற்றும் அவரது வேலை என்னை மேலே சொன்ன விதங்களில் சிந்திக்க வைத்தது. இதற்கு முன்னரும் கூட அவர் போன்ற ஒருவரை சந்தித்து இருக்கிறேன். இப்போது மீண்டும். முதலாமவர் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரிபவர் என்றால், இரண்டாமவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் இருந்தவர். நல்ல உயரம், ஆஜானுபாகுவான உருவம். அவர் வேலை என்ன தெரியுமா, தேடித் தேடி கொசு அடிப்பது. கைகளில் கொசு அடிக்கும் Bபேட் உடன், நாள் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து கொசு அடிக்கிறார். வீட்டில் எப்போதோ கொசு வந்தால் இப்படி Bபேட் கொண்டு சில நிமிடங்கள் அடித்திருக்கலாம். ஆனால் நாள் முழுவதும் இதே வேலை எனில்… நினைக்கும்போதே ஆயாசமாக இருக்கிறது.
இது என்ன பெரிய வேலை என நம்மில் சிலர் நினைக்கலாம்! ஆனால் அப்படியில்லை…. ஒவ்வொரு இடமாக, இருக்கைகள் பின்னே, திரைச்சீலைகள் பின்னே, அப்படியே நடந்தபடி Bபேட்-ஐ இருபுறமும் வீசியபடி, என நாள் முழுவதும் கொசு அடிக்கும் வேலை தான் அவருக்கு! ஒரு சில மணித் துளிகள், ஒரு நாள், இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. தனது பணிக்காலம் முழுவதும் இப்படி கொசு தான் அடிக்க வேண்டும் என்றால் - சற்றே சிந்தித்துப் பாருங்கள்! நம்மால் இப்படி தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய முடியுமா என்ன? ஆனாலும் அந்த மனிதருக்கும் கட்டவேண்டிய EMI, பள்ளி/கல்லூரி கட்டணங்கள், வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு என ஏதோ ஒரு செலவினம் கண்களுக்கு முன்னே வந்து கொண்டே தான் இருக்கும்! இந்த வேலையும் இல்லை என்றால் என்ற எண்ணம் தொடர்ந்து அவரை அந்தப் பணியில் நிலைத்திருக்கச் செய்யும் அல்லவா?
இது போன்று பல பணிகள் - நாம் செய்யும் வேலையை விட மோசமான வேலைகள் உண்டு! வேலை செய்ய வேண்டிய காலம் வரை வேலை செய்து தான் ஆக வேண்டும். அப்படி வேலை செய்யும் போதே, எதிர்காலத்திற்குத் தேவையான ஒரு பக்கபலத்தினை உருவாக்கிக் கொள்வதில் தான் இருக்கிறது உங்கள் சாமர்த்தியம்! இந்தச் சிந்தனை குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். வேறு சில சிந்தனைகளுடன் மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 ஜனவரி 2026







நல்ல வாசகம்.
பதிலளிநீக்குகீதா
ரெட் ஆக்ஸைட் கலந்து சிவப்பு வண்ணத்தில் தரையோ, ஓரங்களோ இருக்கும்//
பதிலளிநீக்குஆமாம் ஊரில் பழைய பாட்டி வீட்டில் சிமெண்டையே மிகவும் நைசாகத் தேய்த்து இருப்பாங்க. தரை மழு மழு என்று இருந்தாலும் வழுக்காது. அது போல ரெட் ஆக்சைட். செங்கல்தரை என்று.
இப்போது இந்த டைல்ஸ் மனதைக் கவர்கின்றனதான். அதுவும் நீங்கள் சொல்லியிருக்கும் ஷோரூம் இங்கு நம் வீட்டருகில் இருப்பதை நடக்கும் போது பார்த்துக் கொண்டே செல்வேன். கண்ணாடிக் கதவுகள் சுவர்கள் என்பதால் மிக நன்றாகத் தெரியும் உள்ளே போனதில்லை.
மனதைக் கவர்நாலும் வழுக்கி விழும் வாய்ப்புகள் கூடுதல் என்ற பயமும். தண்ணீர் சிந்தினால் கூடத் தெரிவதில்லை. தரை உறிஞ்சவும் செய்யாதே.
இப்போது பெரும்பாலான கடைகளில் கூடப் படிக்கட்டுகள் எல்லாமே வழுக்கி விழும் அளவிற்கு இருக்கின்றன. மழைக்காலத்தில் தண்ணீர் இருக்கா இல்லையான்னும் தெரியாத அளவு பள பளன்னு படிக்கட்டுகளை பராமரிக்கறாங்களா....சில இடங்களில் ரொம்ப மெதுவாகப்பார்த்து பார்த்து ஏறணுமா இருக்கு.
கீதா
தனியார் மருத்துவமனையில் கூடப் படிகள் அப்படித்தான் கட்டறாங்க.
பதிலளிநீக்குகடையும் விற்கப்படுபவையும் பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது ஜி.
பெரிய பெரிய ஹோட்டல்களில், வீடுகளில் இருப்பது போன்று.
உங்கள் பழைய நினைவுகளை அப்படியே வழிமொழிகிறேன்! ஜி.
சிறு வயதில் நாங்கள் இருந்த வீட்டில் இருந்த சிமெண்ட் தரையும் அதன் சில்லிப்பும், அப்படியே படுத்தால் வரும் உறக்கமும் இப்போதைய டைல்ஸ்களில் வராது - //
அதே அதே.....
//அதைத் தவிர வழுக்கி விழும் அபாயமும் அந்தக் கால தரைகளில் இல்லையே! இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன, சொல்லுங்களேன்!//
சொல்லிவிட்டேன் மேலே!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
அதுவும் நமது மனதுக்கு ஒவ்வாத வேலைகளை அந்தப் பணியின் காரணமாகச் செய்ய நேரும்போது பலருக்கும் அந்த வேலை பிடிக்காமல் போகிறது. //
பதிலளிநீக்குவேலை செய்யும் இடத்தின் சூழலும் கூட...செய்துதான் ஆக வேண்டிய கட்டாயத்தில்தான் பெரும்பான்மையோர் இருக்காங்களோ என்றும் தோன்றும். மனதிற்குப் பிடித்த வேலை எல்லாருக்கும் அமைவது கஷ்டம்தான்.
செய்யும் வேலையை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டியதுதான் அல்லது குடும்பத்திற்காக நீங்கள் சொல்லியிருப்பது போல்....பல கடமைகளுக்காக.
இதில் சொல்ல வேறு சிலதும் உண்டு
கீதா
ஷோரூம் வெளிச்சங்கள் கண்ணைக் கவர்கின்றன.
பதிலளிநீக்குஉங்கள் போட்டோவை எடுத்தது யார்? உங்கள் பாஸா? அருமை.
வயிற்றுக்கு குறுக்கே வரும் வொயர் காதில் மாட்டும் ஹெட்செட்டா? அதை மாட்டியும் ஒரு போட்டோ எடுத்திருக்கலாமே..
வயிற்றுக்கு குறுக்கே வரும் ஒயர்..... நன்கு கவனியுங்கள்...... அது சென்டர் டேபிள் மேல் இருக்கும் கண்ணாடியின் ஓரம்.....:)
நீக்குபடம் எடுத்தது மகள்.... :) பொதுவாக நான் ஹெட்செட் போட்டுக் கொள்வதில்லை. சில சமயங்களில் blue tooth பயன்படுத்துவது உண்டு.
நீக்கு// நன்கு கவனியுங்கள்...... அது சென்டர் டேபிள் மேல் இருக்கும் கண்ணாடியின் ஓரம்.....:) //
நீக்குஆ.... OI..!
இரண்டாவது தகவலில் நீங்கள் குறிப்பிட்டுள்ள நண்பரை அவர் 'ஈ ஒட்டிக்கிட்டிருக்காரு' என்று சொல்லலாம். ஆனால் சம்பளத்துடன்! இதற்கெல்லாம் எவ்வளவு தருவார்கள்?
பதிலளிநீக்குஒரே வேலையை ஒரே மாதிரி தினசசரி செய்யும்போது ஒருவகை அலுப்பு ஏற்படுவது சகஜம். நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். என்றாலும் என் வேலையை ரசித்து செய்தேன் - கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வரை. கடைசி இரண்டு வருடங்கள் ரொம்பவே பொறுமையை சோதித்து விட்டது.
பதிலளிநீக்குசிறு வயதில் நான் வசித்த எனது பூர்வீக வீட்டில் சமையலறையிலும் இன்னும் ஒரு சில அறைகளிலும் மண்ணால் ஆன தரைகள். வாரம் ஒருமுறை பசுஞ்சாணம் கரைத்து மெழுகுவார்கள். இப்போது நினைக்கும் போதும் அந்த சாண வாசனை மூக்கில் நிற்கிறது. பின்னாளில் அந்தத் தரை கொஞ்சம் மேடு பள்ளமாக ஆனதால் அது பர பர சிமெண்ட் தரையாக மாற்றப்பட்டது. வீட்டின் உள் ஹாலில் நைஸ் ஆன சிமெண்ட் தரை. வெளிஹாலில் கருமை நிற சிமெண்ட் தரை. அந்த கருமையை கொண்டு வர மிகவும் நைஸ் ஆன மணல் கலந்த சிமெண்டில் சிரட்டைக் கரியை மையாக்கி கலந்தார்களாம். மிகக் கருமையான பார்க்க பள பளப்பான தரை. நாளடைவில் தேய்ந்து அங்கங்கே கருப்பு நிறம் மறைந்ததால் அதுவும் சாதாரண நைஸ் சிமெண்ட் தரை ஆனது.
பதிலளிநீக்கு