அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சோலோ ட்ரிப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : தொப்பை
எனது வயிறு பெரிதாக இருக்கிறது என்று அவ்வப்போது மகள் என்னிடம் கேட்பாள் - இதுக்குள்ள என்ன இருக்கு? என்று 🙂 என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் வயிறு குறைவதில்லை - மற்றவர்களை ஒப்பிடும்போது வயிறு அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும் வயிறு இருப்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்! சில சமயங்களில் எனக்கே என் வயிறு பெரிதாக இருப்பதாகத் தோன்றுகிறது. எனது பெரியப்பாவிற்கு நல்ல பெரிய தொப்பை இருக்கும்! எங்கள் சிறு வயதில் அவரது தொப்பையில் ஏறி உட்கார்ந்து கொண்டு விளையாடுவோம் - அவர் ஒரு முறை வயிற்றை எக்கி மீண்டும் விடும்போது கீழே விழுவோம் - அந்த விளையாட்டில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி - எங்களுக்கும் ஆனந்தம். அந்த மாதிரி இப்போது என் தொப்பையிலும் குழந்தைகள் ஏறி விளையாடலாம் என்று தோன்றுகிறது! தொப்பை பல சமயங்களில் கஷ்டம் தான். நடைப்பயணம், சரியான அளவு சாப்பாடு என்று Controlled ஆக இருந்தாலும் தொப்பை குறைவதில்லை! இந்த சிந்தனையெல்லாம் வந்ததற்குக் காரணம் - சமீபத்தில் பார்த்த, மேலே இருக்கும் படம்!
******
இந்த வாரத்தின் சிறுகதை : மன எல்லைகள் விரியும்போது….
சொல்வனம் தளத்தில் இந்த வாரம் இரண்டு கதைகள் படித்தேன். முதல் கதை ஷ்வார்ஸ்வால்டில் தண்ணீரைத் தேடி என்ற தலைப்பிட்ட, தருணாதித்தன் என்பவர் எழுதிய கதை. இரண்டாம் கதையாக படித்தது - மன எல்லைகள் விரியும்போது என்கிற கதை - ரேவதி பாலு என்பவர் எழுதிய கதை. கதையிலிருந்து சில வரிகள் கீழே!
“ஏன் முன்னாடியே சொல்லலியா? யு. எஸ். போறதுன்னா எத்தனையோ மாசங்களுக்கு முன்னால பிளான் செஞ்சிருப்பாங்களே?” அவள் ஒரு நிமிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருக்க,
“என்ன? கேக்கறது காதில விழலியா? பெரிய போயஸ் கார்டன், தண்ணி ஊத்திக்கிட்டிருக்கா?” வார்த்தைகள் வெறுப்பாக வந்து விழுந்தன.
ராதிகாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. அலுவலகம் கிளம்பும் நேரத்தில் கோபம் வந்தால் அது எந்த திசையில் பாயும், எப்படி முட்டி மோதி நிற்கும் என்று சொல்லவே முடியாது.
“ரொம்ப நாளா போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இப்ப தான் முடிவாகியிருக்கும்னு நினைக்கிறேன்.“ என்று யோசித்து தயங்கி தயங்கி அவள் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
“என்னாச்சு உங்களுக்கெல்லாம்? ஒரு காலத்தில இன்னிக்கி என்ன சமையல்ங்கிறதில ஆரம்பிச்சு என்ன கலர் புடவை இன்னிக்கு ஆபீசுக்கு கட்டிட்டு போகலாங்கிறது வரை தினமும் ஓயாம போன் பண்ணி பேசிப்பீங்களே அக்கா தங்கச்சி!”
ராதிகா இதற்கும் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் நின்று கொண்டிருக்கும்போது அவனே கேட்டான் .
“ஏன் இப்போவெல்லாம் பேச்சு கொறஞ்சு போச்சு?” அவன் வார்த்தைகளில் ஒரு நக்கல் இருந்தது போல தோன்றியது.
படித்த இரண்டு கதைகளில் இந்தக் கதை தான் அதிகம் கவர்ந்தது என்பேன். முழுக் கதையும் படிக்க விரும்பினால் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்! படித்துப் பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : சாப்பிட வாங்க: குந்த்ரு துவையல்
2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சாப்பிட வாங்க: குந்த்ரு துவையல் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
குந்த்ரு – இது என்ன புது காய்? என கேள்விக் கணைகளை வீச வேண்டாம்.... தெலுங்குல தொண்டைக்காய்னு சொல்ற கோவைக்காயைத் தான் ஹிந்தில ”குந்த்ரு”ன்னு சொல்வாங்க! சாதாரணமா இந்த குந்த்ருவை சப்பாத்தியோட தொட்டுக்கொள்ள சப்ஜியாக அதாவது சூக்கா சப்ஜியாகத் தான் செய்வது வழக்கம் – வடக்கே இரண்டு விதமான சப்ஜிகள் சப்பாத்திக்கு – ஒண்ணு சூக்கா சப்ஜி, இரண்டாவது தரி வாலி சப்ஜி! அதாவது Dry-ஆக இருப்பது சூக்கா சப்ஜி, கொஞ்சம் Liquid-ஆ இருந்தா அது தரி வாலி சப்ஜி! அப்பாடா ஒரு ஹிந்தி பாடமே எடுத்துட்டேனா......
இரண்டு நாள் முன்னாடி காய்கறி மார்க்கெட்டிலிருந்து கையில பையோட, பையில குந்த்ருவோட திரும்பி வரும்போது வழக்கம் போல பாலாஜி கோவில்ல இருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நண்பர்களைச் சந்தித்தேன். அவங்கள்ல ஒருத்தர், அதாங்க என்னோட பதிவுகள்ல சுதா த்வாராகாநாதன் அப்படிங்கற பேர்ல கருத்துரை போடுவாங்களே அவங்க தான், கையில குந்த்ருவைப் பார்த்த உடனே இதை வைச்சு துவையல் செய்தா சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க! அவங்களுக்கு அவங்க மாமியார் சொல்லிக் கொடுத்ததாம்.....
எப்படிச் செய்யணும்னு கேட்க, அவங்க மாமியார் சொன்ன மாதிரியே, அவங்க சொன்ன அளவோட சொன்னாங்க! குந்த்ரு துவையல் செய்ய குந்த்ரு சர்வ நிச்சயமா தேவை... வேற என்னென்ன வேணும்..... பார்க்கலாமா?
சாப்பிட வாங்க என்ற தலைப்புடன் முன்பு நிறைய எழுதி இருக்கிறேன். இப்போது சமைப்பதும் இல்லை அது குறித்து எழுதுவதும் இல்லை! 🙂 முழு பதிவும் படிக்க விரும்பினால் மேலே இருக்கும் சுட்டியைச் சொடுக்கி படிக்கலாம்! படித்துப் பாருங்களேன் - இது வரை படித்திருக்காவிட்டால்!
******
படித்ததில் பிடித்தது : நீதி
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”
******
இந்த வாரத்தின் ஆசை - பம்ப் செட் குளியல் :
சில வாரங்கள் முன்னர் அலுவலக நண்பர்களுடன் ஒரு நாள் பயணம் மேற்கொண்டிருந்தது பற்றி சில தகவல்கள் காஃபி வித் கிட்டு பதிவு வழி எழுதி இருந்தேன். திரும்பி வரும் வழியில் சாலையோரத்தில் இருந்த பம்ப் செட் பார்த்ததும் எங்கள் வண்டிகள் அங்கே நின்றன. பம்ப் செட் போட்டு வயலுக்கு தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் குளிக்க ஆவல் வர நண்பர்கள் அங்கே வண்டியை நிறுத்தி, வயல் சொந்தக்காரரிடம் கேட்க, “அதுக்கென்ன தாராளாமாகக் குளிக்கலாமே” என்று அனுமதி தந்தார். மாற்றுடை இல்லாததால் என்னால் அங்கே குளிக்கமுடியவில்லை. ஆனால் இரண்டு நண்பர்கள் அங்கே மிகவும் அனுபவித்துக் குளித்தார்கள். அது வரை நான் வயல்வெளியையும் இயற்கையையும் படம் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. சிறு வயதில் அம்மாவின் ஊரான உறையூர் (கடலூர் மாவட்டத்தில் பன்ரூட்டி அருகே இருக்கிறது இந்த ஊர்) சென்ற போது இப்படி ஒரு பம்ப் செட்டில் உற்சாகமாகக் குளித்திருக்கிறேன். அதன் பிறகு வாய்ப்பு அமையவில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்தும் குளிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு முறை இதற்காகவே எங்கேனும் ஒரு இடத்தில் பம்ப் செட் தண்ணீரில் குளிக்க ஆசை! உங்களில் எத்தனை பேர் இந்தப் பம்ப் செட் குளியல் அனுபவித்திருக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
******
இந்த வாரத்தின் ஓவியம் : பெண்மை
சமீபத்தில் பார்த்து ரசித்த ஓவியம் ஒன்று - உங்கள் பார்வைக்கு! - சஷிகுமார் அப்புக்குட்டன் என்பவர் வரைந்த ஓவியம்! ரசிக்கலாமே.
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - Fevicol Alien :
இந்த விளம்பரம் வெளிவந்து 15 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனாலும் இன்றைக்குப் பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. ஃபெவிகால் விளம்பரங்கள் அனைத்துமே இப்படி பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருப்பது எனக்கு வியப்பைத் தரும். இந்த விளம்பரம் கூட அப்படித்தான். பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
12 ஜூலை 2026






வயிற்றில் எக்கி கீழே விழுந்து விளையாடுவோம்...... பழைய நினைவு வருகிறது. குழந்தை இல்லாத பெரியப்பாவிற்கு நாங்கள் எல்லோரும்தான் குழந்தை. அவ்வளவு விளையாடியிருக்கிறோம் அவருடன்..... ஆனால் கடைசி காலத்தில் நாங்கள் யாருமே அருகில் இல்லை என் அப்பா தவிர
பதிலளிநீக்குஅறியாக் காலத்தில், நாம் உடல் ஃபிட்டா இருக்கணும் என்ற எண்ணம் வருவதற்குள் தொப்பை வந்துவிடுகிறது. வந்த செல்வத்தைப் போக்கடிக்க விரும்பாமல் சேர்த்து வைக்கிறோம். எதிர்பாராமல் வந்த சொத்தான தவப்பை, போ என்றாலும் போகாமல் நம்முடனேயே இருந்துவிடுகிறது.
பதிலளிநீக்குநீதி..... அமேசிங். ரொம்பப் பிடித்தது. பாதிரியார் மழைக்காக்க பிரார்த்திக்கிறேன் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் வாங்க என்று சொல்ல, ஒரு சிறுமி மாத்திரம் குடையோடு வந்த நீதிக் கதையை நினைவூட்டியது
பதிலளிநீக்குபம்ப்செட் குளியல் இரண்டு இடங்களில் அனுபவித்திருக்கிறேன். எட்டாவது, சாம்ராஜ்நகர், பத்தாவது ஹாஸ்டல் டூரின்கோது. அப்கோது நமக்கு லஜ்ஜை கிடையாது. நண்பர்களுடன் குளித்திருக்கிறோம்.
பதிலளிநீக்குமுதல் பாரா வயிற்றில் பாலை வார்த்தது. ஹிஹிஹி சேம் பின்ச்! போதாக்குறைக்கு கடந்த ஆறு மாதங்களாக நடைப் பயிற்சியையும் நிறுத்தி விட்டேன். உடற்பயிற்சியையும் நிறுத்தி விட்டேன். சோம்பேறித்தனம்...
பதிலளிநீக்குரேவதி பாலு... கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது. அந்த பழைய புகழ்பெற்ற எழுத்தாளரின் பேத்தியா மகளா... அவர்தானா என்று பார்க்க வேண்டும். .கதையை படிக்கவேண்டும்.
பதிலளிநீக்குஅந்த எழுத்தாளர் பெயர் நினைவுக்கு வந்து விட்டது. ரஸவாதி.
நீக்கு'' நம் மனதிற்குள் ஆசாபாசங்கள் அலைமோதும்போது தான் பிறர் செயல்களில் ஒரு தேவையற்ற அதீத ஆர்வம், குறுகுறுப்பு அதனால் மனதில் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி அதை தொடர்ந்து யார் என்ன செய்தாலும் அதில் குற்றங்குறை காண்பது என்று எல்லா எதிர்மறை உணர்வுகளும் ஏற்படுகிறது என்று தோன்றியது. அதை கடந்த வந்து விட்டோமானால் எல்லோரும் நல்லா இருக்கணும்னு ஒரு மௌனமான பிரார்த்தனையோடு அவர்களை கடந்து போக முடியும் என்றே தோன்றியது. //
பதிலளிநீக்குகதையை படித்தேன். இதுதான் கதை உருவாதற்கான முக்கிய கரு. இதை வைத்துதான் பின்னப்பப்பட்டிருக்கிறது கதை. என்ன அனுபவமோ.. யாருடைய அனுபவமோ..
'பழைய நெனப்புடா' பதிவின் வழி, எதை வேண்டுமானாலும் உடன் வைத்து துவையல் அரைத்து விடலாம் என்பது அடிப்படை விஷயம்!!
பதிலளிநீக்குநல்ல ஆபிஸர்வேஷன் உள்ள நீதிபதி! எல்லோரும் வாசலையே பார்த்திருக்க, இவர் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவரையே பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்!
பதிலளிநீக்குபடித்ததில் பிடித்தது ஏற்கனவே படித்திருக்கிறேன்.
அடடே.. நானும் சிறுவயதில் இப்படி பம்ப்செட் குளியலை அனுபவித்திருக்கிறேன். அந்த இன்பநினைவு வரும்போதே காலில் ஒரு வலி நினைவும் கூடவே வரும்.. ஏனெனில் குளித்து விட்டு வரும்போது காலில் ஒரு பெரிய முள் குத்தி அவஸ்தைப்பட்டேன். இரண்டு நாட்களுக்கு கடுத்துக் கொண்டே இருந்தது! அதுசரி, இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதானே வாழ்க்கை.. இல்லை?!!
பதிலளிநீக்குஓவியத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனுமான ஜோசியம் :
உன் பெயர் என்ன
அனுவா?
வேலை முடிந்து
உள்ளே செல்கிறாயா
அல்லது
இப்போதுதான் வேலைக்கு
வெளியில் வருகிறாயா
பெண்ணே
உனக்கு எழுவயதில்
ஒரு
பெண் குழந்தை
இருக்கவேண்டுமே
சரிதானா?!
நிச்சயம் உன் கணவன்
பொறுப்பில்லாதவனாகத்தான்
இருக்கவேண்டும்!
- விளம்பரம் ஓகே.
வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே
நீக்குகவிதை அருமை. தங்களின் அனுமான ஜோசிய கவிதை நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். ஓவியப் பெண்ணின் பெயருடன், அவளின் குடும்ப ஜாதகத்தைப் பற்றி அழகாக சொல்லி விட்டீர்கள். சிறந்த ஜோதிடத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய காஃபி வித் கிட்டு பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இலையை குடையாக வைத்து தன் செல்வங்களை காக்கும் படம் மனதை மிக கவர்கிறது.
தொப்பையை பற்றிய நல்லதொரு அலசல். ஒரு வயதிற்குப் பிறகு உடலின் மாற்றங்கள் அவை. சிலருக்கு எப்போதுமே "அப்பள வயிறுதான்." அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
தொண்டகாயயை துவையல் நானும் செய்திருக்கிறேன். அதற்கு குந்த்ரு என்ற ஹிந்திப் பெயரையும் தெரிந்து கொண்டேன் பழைய பதிவுக்கும் சென்று வந்தேன். துவையல் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.
படித்ததில் பிடித்த நீதிக்கதை நன்றாக உள்ளது.
இந்த வாரத்தின் சிறுகதை பகிர்வில் நீங்கள் தந்த சுட்டி வழி சென்று பிறகு அந்தக்கதைகளை படித்து விட்டு வருகிறேன்.
பம்ப் செட் தண்ணீர் விழுவதை பார்த்து ரசித்திருக்கிறேன்.
பெண்மை ஓவியம் நன்றாக உள்ளது. அதை வரைந்தவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
இன்றைய பதிவில் அனைத்தும் பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.