வெள்ளி, 30 அக்டோபர், 2026

நிழற்படமும் எண்ணங்களும் - ஒன்று - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் தொடர்ந்த நடை - மனிதர்கள் பலவிதம்  பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




நாம் பயணித்துக் கொண்டிருக்கும் போதோ, வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ ஒரு காட்சியைக் காண்கிறோம்.  உடனேயே நம் எண்ண அலைகள் அங்குமிங்கும் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விடுகிறதல்லவா? பார்க்கும் காட்சியைப் பொறுத்து நமது எண்ணங்கள் அந்தக் காட்சியைக் குறித்தும், அதனுடன் நமக்கு ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றும் யோசிக்க ஆரம்பித்து விடுகிறது மனம். எண்ண அலைகளை நம்மைப் போல் சாதாரணர்கள் யாரேனும் தடுத்து விட இயலுமா என்ன? பெரிய பெரிய ஞானிகள் கூட எண்ணத்தின் ஓட்டத்தினைத் தடுத்து நிறுத்துவதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.  நாமோ சாதாரணர்கள்! நம்மால் முடியுமா என்ன?


படம் - ஒன்று - ஆட்டோ: 




காலை நேர நடையின் போது பார்த்த ஒரு காட்சி - பாழடைந்த ஆட்டோ ஒன்று ஏதோ ஒரு அபார்ட்மெண்ட் வளாகத்தின் வெளிப்புறச் சுவருடன் சுவராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  அது இயங்கும் வரை எத்தனை மனிதர்களை தன்னுள்ளே அமர வைத்து எங்கேயெல்லாம் சென்றிருக்கும்? எத்தனை மனிதர்கள் அதனால் பயன் பெற்று இருப்பார்கள்? அதனுடைய உரிமையாளர் இந்த வாகனத்தின் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தை எவ்வளவு சிறப்பாக நடத்தி இருப்பார்? அதன் மூலம் ஈட்டிய பொருள் கொண்டு தன் குடும்பத்தினரை கவனித்துக் கொண்டு பிள்ளைகளை படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்கியிருப்பார்? இப்படியெல்லாம் சிந்தனைகள்.  கூடவே அதை இனிமேல் இயக்க முடியாது என்ற நிலை வந்ததும் அதனை ஏன் இப்படி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்! பயன் இருக்கும் வரை பயன்படுத்தப்பட்ட அந்த வாகனம், பயனில்லை என்று தெரிந்ததும் ஏன் கைவிடப்பட்டது! பல பெரியவர்கள் கூட, வலு இருக்கும்வரை பிள்ளைகளுக்காவே உழைத்து, எல்லாம் செய்த பிறகு, மூப்பு காரணமாக அவர்களுக்குத் துணையும் பரிவும் தேவை ஏற்படும்போது சீந்துவோர் இல்லாமல் இருப்பது குறித்த எண்ணங்களும் மனதினுள் வந்து போனது. 


படம் - இரண்டு - செருப்பு : 





தினமும் செல்லும் மேலூர் நோக்கிய பாதையில் நடக்காமல், இருட்டாக இருக்க, உத்திர வீதியில் நடக்கலாம் என்று மேலூர் பக்கம் சில அடிகள் நடந்து திரும்பி விட்டோம். வேலை நாட்களில் உத்திர வீதிகளிலும், விடுமுறையாக இருந்தால் சித்திரம் வீதிகளிலும் நடப்பதை வழக்கமாக வைத்திருந்தோம்.  வடக்கு வாசல் அருகே முன்பு நிறைய கடைகள் இருந்தன.  அவற்றையெல்லாம் எடுத்து விட்டார்கள்.  ஆனால் அந்த இடங்களில் தற்போது சில தற்காலிக கடைகள் வந்தாலும், இரு சக்கர வாகனங்கள் ஒன்றிரண்டு நிறுத்துவதற்கும் இடம் இருக்கும்.  அங்கே நின்றிருந்த ஒரு சைக்கிளின் பின்பக்கம் Carrier-இல் வைத்திருந்த பொருள் கவனத்தை ஈர்த்தது - அந்தப் பொருள் - ஒரு ஜோடி செருப்பு! அரங்கனின் ஆலயத்திற்குள்ளே செல்லும் மூன்று வழிகளிலும் செருப்புகள் வைப்பதற்கென்று இடம் உண்டு.  ஆனாலும் மக்கள் அப்படியே கோபுரத்தின் கீழும், சாலையோரங்களிலும் போட்டுவிட்டுச் சென்று விடுவார்கள்.  இந்த மனிதர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையுடன் அதனை தனது சைக்கிள் கேரியரில் வைத்திருக்கிறார்! எனக்கு என் சிறு வயதில் நான் செய்ததாகச் சொல்லப்பட்ட விஷயம் நினைவுக்கு வந்தது.


நான் செய்ததாகச் சொல்லப்பட்ட விஷயம் எனக்கு நினைவில் இல்லை.  ஆனால் அதனை என் அம்மா, இல்லத்தரசியிடம் சொல்லி, அவரும் மகளுமாகச் சேர்ந்து என்னை சில சமயங்களில் கிண்டல் கூட செய்திருக்கிறார்கள்! அப்படி என்ன செய்திருக்கிறேன்? சொல்கிறேன்.  சிறு வயதில் அம்மா-அப்பாவுடன் ஏதோ ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கிறேன்.  திருமண நிகழ்வுகள் முடிந்து வாசலில் செருப்பு விட்ட இடத்தில் நான் வந்து சேர்ந்த போது எனது செருப்பை வேறு ஒரு மனிதர் போட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்போது நான், அந்த மனிதரிடம் அது எனது செருப்பு என்று சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.  அந்த வயதிலேயே எனக்கு பெரிய அளவு செருப்பு தான் பொருந்தும்! அந்த மனிதரோ, இல்லையப்பா இது என் செருப்பு தான் என்று சொல்ல, நான் அவரது கால்களில் இருந்த செருப்பில் நான் எழுதி இருந்த V என்ற வார்த்தைகளைக் காட்டி, “இது எனது செருப்பு! இதில் நான் எழுதி வைத்திருக்கிறேன் பாருங்கள்!” என்று சொல்லி இருக்கிறேன்!  அவ்வளவு முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லி இருக்கிறார் அம்மா! 🙂


சென்ற சில நாட்களில் எடுத்த படங்களில் இரண்டு படங்களும் அது தந்த எண்ணங்களையும் இன்றைய பகிர்வில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் இது போல சில படங்களும் அந்தப் படங்கள் என்னுள் உண்டாக்கிய எண்ணச் சிதறல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறேன் - முடிந்த போதெல்லாம் இது தொடரும்! வாசிக்க நீங்களும் தயார் தானே!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

30 அக்டோபர் 2026


4 கருத்துகள்:

  1. திருடர்கள் பார்த்தால் திருட அந்த ஆட்டோவில் இன்னும் பல பொருட்கள் மதிப்புடன் இருக்கின்றன.  எப்படி விட்டு வைத்திருக்கிறார்களோ..  மேலே உள்ள கான்வாஸ், ஸ்டியரிங் வீல், சீட் இப்படி...!

    பதிலளிநீக்கு
  2. பல நாட்கள் முன்பு நானும் இபப்டி ஒதுக்கப்பட்ட காரை படமெடுத்து பகிர்ந்திருந்தேன்.  நான் அதை பெசன்ட் நகர் பீச்சில் அஷ்டலக்ஷ்மி கோவில் அருகே பார்த்தேன்.  அப்புறம் ராமச்சந்திரா சித்தாண்டில் ஒரு பைக்.  பல வருடங்களாய் அது எடுக்கப்படவில்லை என்று பார்த்தாலே தெரியும்!

    பதிலளிநீக்கு
  3. சிலர் செருப்பை கழற்றி மஞ்சள் பையில் போட்டு, கோவிலுக்குள்ளும், கல்யாண வீட்டுக்குள்ளும், எடுத்து வந்து விடுவார்கள்!  இந்த மனிதர் தன்னைச் சுமக்கும் செருப்புக்கு ஓய்வு கொடுத்து உயர்ந்த இடத்தில ஆசனமும் கொடுத்திருக்கிறார் போல!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....