சனி, 10 டிசம்பர், 2011

ராம் ராஜா மந்திர்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-23] 
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22) 


சாதாரணமான கணவன் – மனைவிக்குள் மட்டும்தான் கருத்து வேறுபாடு இருக்குமா?    சிவபெருமானுக்கும் பார்வதிக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றி நாமெல்லாம் திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது ராஜா – ராணி மட்டும் விதிவிலக்கா என்ன?  அப்படி ஒரு ராஜா-ராணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாய் தோன்றியது தான் இந்த ராம் ராஜா மந்திர்.

சென்ற பகுதியில் புந்தேலா ராஜாங்கம் பற்றி சொல்லியிருந்தேன்.  அந்த ராஜாங்கத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு ராஜா மதுகர் ஷா.  தீவிரமான கிருஷ்ண பக்தர்.  வருடா வருடம் மதுரா சென்று கிருஷ்ணபகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தவர்.  எது தவறினாலும் தவறும் ராஜா மதுகர் ஷா மதுரா செல்வது மட்டும் தவறாது.
ராணி கணேஷ் குவா[ன்]ரி ராம பக்தை.  வருடம் ஒருமுறையாவது அயோத்யா செல்ல வேண்டும் என நினைத்து அதைக் கடைப்பிடித்தும் வருபவர்.   மதுரா செல்வதை விட அயோத்யா செல்வதையே விரும்புபவரும் கூட. 

இப்படி ராஜா-ராணி இருவரும் இரு துருவங்களாக இருக்க, ஒரு முறை ராஜா மதுரா கிளம்ப யத்தனிக்கும்போது ராணியையும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார்.  எப்போதும் போலவே ராணி மறுத்து தான் ராஜாவுடன் மதுரா வர விரும்பவில்லையென்றும் அயோத்யா செல்ல விரும்புவதாகவும் சொல்கிறார். 

ராஜாவுக்கு பயங்கர கோபம். அவருடைய வார்த்தையை வேறு யாராவது கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார்.  ஆனால் சொன்னது பட்டத்து ராணியாயிற்றே.  இருந்தாலும் எதாவது தண்டனை தரவேண்டும் என்று நினைத்தவர் ”நான் மதுரா செல்கிறேன்.  நீ அயோத்யா செல்! திரும்ப வரவேண்டும் என நினைத்தால் உன்னுடைய ஆத்ம தெய்வம் ராமனுடன் திரும்பி வா!” என்று கோபமாக சொல்லிவிட்டு மதுரா சென்று விட்டார்.

ராணிக்கு தனது ராமனின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. நிச்சயம் தன்னுடன் அவர் ஓர்ச்சா வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தோழிகள் புடை சூழ தன்னுடைய மாளிகையிலிருந்து ரதத்தில் கிளம்பி அயோத்யா வந்து சேருகிறார்.  அங்கே ராமனை தரிசித்து தன்னுடன் ஓர்ச்சா வந்துவிடும்படி சொல்ல, அதற்கு பதிலேதுமில்லை.  ஆனாலும் துவண்டு போய்விடாமல் அயோத்யா நகரின் சரயு நதிக்கரையில் ராமனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.

நாட்கள் ஓடின .  ராமனின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நீண்ட காலம் தவமிருந்தும் ராமன் பிரத்யட்சமாய் தரிசனம் தராததால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் ராணி கணேஷ் குவா[ன்]ரி.  ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதியில் பாய்ந்து விட எத்தனிக்கும்போது ராமன் ஒரு சிறுவன் வேடம்பூண்டு ராணியின் முன் தரிசனம் தருகிறார். 

தரிசனம் தந்ததுடன் நில்லாமல் சிறுவன் உருவத்திலேயே ஓர்ச்சாவில் கோவில் கொள்ளவும் சம்மதிக்கிறார் – ஒரு சிறிய நிபந்தனையோடு.  அது – 'ஓர்ச்சா சென்றபின் எங்கு முதலில் அமர்கிறேனோ  அங்கேயே கோவில் கொள்வேன்' என்பது தான்.  ராமன் தன்னுடன் வரச் சம்மதம் சொன்னவுடன் ராஜா மதுகர் ஷாவிற்கு முன்தகவல் அனுப்பி ராம்ராஜாவிற்கான கோவிலை தயார் செய்யச் சொல்கிறார்.  ராஜாவும் “சதுர்புஜ் மந்திர்” என்ற கோவிலை நிர்மாணிக்கிறார். 

ராணி கணேஷ் குவா[ன்]ரி ஓர்ச்சா நகரத்தினை வந்தடையும் போது சதுர்புஜ் மந்திரில் இன்னும் ஒரு நாள் வேலை பாக்கி இருந்திருக்கிறது.  ஆகவே ராணி தன்னுடைய அரண்மனையிலேயே சிறுவன் ராமனை உட்கார வைக்கிறார் – அவரின் நிபந்தனையை மறந்து. அடுத்த நாள் சதுர்புஜ் மந்திர் தயாராகிவிடவே அவரை அங்கே பிரதிஷ்டை செய்ய நினைக்க, சிறுவன் ராமனை அசைக்கவே முடியவில்லை.

அதனால் தன்னுடைய அரண்மனையையே ராமனுக்கு ”ராம்ராஜா மந்திர்” என்ற கோவிலாக்கி விட்டு வேறு மாளிகைக்குக் குடியேறுகிறார் ராணி.  இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில்.  சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் இருந்து சாரிசாரியாக வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!

மீண்டும் ஒரு ஓவியப் பகிர்வில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்


புதன், 7 டிசம்பர், 2011

அண்மையில் விரிந்த அருமையான வலைப்பூ




இரண்டு  வாரங்களுக்கு முன் தில்லியின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இருக்கும் ஒரு சமுதாயக் கூடத்தில் ஒரு கல்யாண வரவேற்பு.  என்னையும் குடும்பத்துடன் அழைத்திருந்தார்கள்.  நானும் இன்னொரு நண்பரும் சென்றிருந்தோம். 

கடற்படை இசைக்குழுவின் இனிமையான இன்னிசையோடு மாலை ரம்மியமாக இருந்தது.  நான் எழுதப்போவது இந்த வரவேற்பில் இருந்த அற்புதமான உணவு பற்றியோ அந்த இடத்தின் பெருமை பற்றியோ இல்லை.  ஆனால் நான் சந்தித்த ஒரு மூத்த ஆசிரியர் பற்றி. 

சென்னையின் பொன்னேரி பகுதியில் ஒரு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மூத்த தமிழாசிரியர் அந்த கல்யாண வரவேற்பிற்கு வந்திருந்தார்.  அவரிடம் என்னை ”இவர் தமிழில் வலைப்பூ வைத்திருக்கிறார், நிறைய எழுதுகிறார்!” என்றெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே அறிமுகம் செய்து விட்டு என்னுடைய நண்பர் வேறு வேலையாக சென்று விட அவருடன் அளவளாவிக் கொண்டு இருந்தேன்.

தமிழாசிரியர் என்பதால் நிறைய தமிழில் வார்த்தை விளையாட்டுகளைச் சொல்லி தமிழின் சிறப்பு பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார்.  அவர் சொன்ன ஒரு வார்த்தை விளையாட்டு கீழே:

”பணியில் இருக்கும்போது அவரது பள்ளியை வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்தார்களாம்.  அந்த இடம் Sub-Treasury பக்கத்தில் இருக்கிறது என்று மட்டும் தான் தெரியும், Sub-Treasury-க்கு எப்படிச் செல்வது எனத் தெரியவில்லை என அவருடன் பணிபுரியும் மற்றொருவர் சொல்ல, அது தன்னைத்தானே சுய அறிமுகம் செய்து கொள்ளும், கவலைப்படேல்!” என்று இவர் சொன்னாராம்.  அவருடைய நண்பருக்குப் புரிந்ததோ இல்லையோ, எனக்குப் புரியவில்லை. 

அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் நான் பார்க்க, ”Sub-Treasury-க்கு தமிழில் என்ன?” என்றார்.  நானும் ”சார்நிலைக் கருவூலம்” எனச் சொன்னேன்.  அதிலேயே பதில் இருக்கிறது என்றார்.  “சார், நில், ஐ [I], கருவூலம்” எனப் பிரித்து, பார்தீர்களா, ”சார்” என விளித்து, ”நான் தான் கருவூலம்” என தன்னையே சுய அறிமுகம் செய்து கொள்கிறது என்றாராம்.

தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் நல்ல பாண்டித்வம் பெற்றிருக்கிறார்.  எந்த மொழியாகினும் அதனை ஆழ்ந்து ரசித்தால் மட்டுமே அதனை நன்கு உபயோகிக்க முடியும் இல்லையா?  கல்யாணத்திற்கு அழைத்துப்  போக முடியாமல் போனால் நாம் என்ன சொல்வோம், “கொஞ்சம் வேலையிருந்தது, வெளியூர் போய் விட்டேன்” என்று ஏதாவது சொல்லி சமாளிப்போம். 

அவர் சொன்னார், “எனக்கு உங்கள் வீட்டு கல்யாணத்திற்கு வரக்கூடாது என்ற “Intention” கிடையாது, “In Tension” வர முடியவில்லை.  எனக்கு சில பிரச்சனைகள், அந்த Tension-ல் வர முடியவில்லை என்பதை அழகாய் இப்படி சொல்லலாமே….”

இது போல நிறைய விஷயங்கள் அவருடன் பேசிக்கொண்டு இருந்ததில் கவனித்தேன்.  அவைகளுடன்  கதைகள், கவிதைகளையும் கூட தன் கைப்பட எழுதி வைத்திருக்கிறாராம்.  பல இலக்கிய அமைப்புகளில் இருந்தாலும் வலைப்பூ என்பது தனக்கு புதிது என்றும், அப்படியென்றால் என்ன, அதை எப்படி ஆரம்பிப்பது  என்றெல்லாம் ஆர்வத்துடன் கேட்க நானும் விளக்கமாகச் சொன்னேன். 

கூடிய விரைவில் தானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து விடுகிறேன் என அவர் சொல்லவும் "சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள்" என்று சொல்லி அவரிடமிருந்து விடை பெற்றேன்.  மூத்த தமிழாசிரியர், நிறைய விஷய ஞானம் உடையவர் என்பதால், இவர் போன்றவர்கள் வலைப்பூக்களில் எழுதினால் நாமும் நல்ல பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாமே என்ற எண்ணமே இதற்குக் காரணம். 

நேற்று அவரிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு.  அவரது மகனின் உதவியுடன் ஒரு வலைப்பூ ஆரம்பித்து விட்ட சந்தோஷ செய்தியை சொன்னார்.  அவரது வலைப்பூ முகவரி www.kanakkayan.blogspot.com.  [கணக்காயன் என்பது அவரது புனைப்பெயர்]. ஆரம்பித்த உடனேயே, தன்னுடைய கவிதைகள், அறிமுகம் என்று மள மளவென்று 15 இடுகைகளை இட்டு விட்டார்.  வலையுலக நண்பர்களே, அவரது பக்கத்திற்குச் சென்று படித்து கருத்துரைகளை வழங்கி வரவேற்கும் படி விண்ணப்பிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.
புது தில்லி.


திங்கள், 5 டிசம்பர், 2011

ராய் ப்ரவீனின் – பாடலும் நடனமும்


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி - 22]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21) 


புந்தேலா ராஜாக்களில் ஒருவரான ராஜா இந்திரமணி அவர்கள் பதினேழாம் நூற்றாண்டின் பாதிகளில் ஓர்ச்சா நகரத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம்.  அவர் இயல் இசை நடனத்தில் மிகுந்த நாட்டம் உடையவராக இருந்தாராம்.  எப்போதும் நிறைய இசை நிகழ்ச்சிகளும், நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளில் பாட்டு பாடி, நடனம் ஆடும் ஒரு அழகிய பெண்மணி தான் ராய் ப்ரவீன்.  அந்த ராஜாங்கத்திலேயே பாட்டு மட்டுமல்லாது நடனத்திலும் தலை சிறந்தவள்.  பாட்டு பாடி நடனம் ஆடும் ராய் ப்ரவீன் அழகிலும் குறைந்தவளல்ல.  அவள் மீது ராஜா இந்திரமணிக்கு ஆசை.  ராய் ப்ரவீனுக்கும் ராஜா மீது தீராத காதல். 

என்ன தான் காதலும் ஆசையும் இருந்தாலும் எல்லா ராஜாக்களைப் போல இவரும் தனது காதலியும் நடனம் ஆடுபவருமான ராய் ப்ரவீனை கல்யாணம் செய்து கொள்ளவில்லை.  ஆசை நாயகியாகத்தான் வைத்திருந்தார்.  நடனம், பாடல், காதல் என்று சென்று கொண்டிருந்த அந்த வாழ்வில் ஒரு திருப்பம். 

ராய் ப்ரவீன் அவர்களின் பாடல்-நடனம் ஆகியவற்றின் சிறப்பினால் வந்த புகழ் அவர்கள் நாட்டில் மட்டுமல்லாது தில்லியை ஆண்ட முகலாய மன்னரின் காதுகளையும் எட்டியது.  ராய் ப்ரவீனின் அழகு, அவளது குரலின் மேன்மை, நாட்டியமாடும் அழகு ஆகியவற்றைக் கேள்விப்பட்ட முகலாய் மன்னர் உடனே அவளை தில்லிக்கு அனுப்பி வைக்குமாறு ஓலை அனுப்பி விட்டார். 

முகலாய மன்னர்களின் ஆதரவு பெற்று ஆட்சி செய்த ராஜா இந்திரமணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  முகலாய மன்னர் ஒரு பக்கம், ஆசை நாயகி மறுபக்கம் என இரண்டு பக்கங்களிலும் இழுக்கப்பட என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியிருந்தபோது, ராய் ப்ரவீன் ராஜாவிற்கு தைரியம் சொல்லி, ”என்னை அனுப்பி வையுங்கள், நான் சீக்கிரமே திரும்பி வருவேன்” என்று சொல்லி தில்லி கிளம்பி சென்றாள்.

முகலாய மன்னர் அரண்மணையில் ராய் ப்ரவீன் பாடல்-நடனத்திற்கு ஏற்பாடு செய்தார்.  முதல் பாடலிலேயே  மன்னரை மறைமுகமாக ”நாய்” என்று திட்டியபடி அவள் தைரியமாக பாடி நடனம் ஆட, மன்னரைச் சுற்றி இருக்கும் எல்லோருக்கும் அதிர்ச்சி.  மன்னர் நிச்சயம் மரண தண்டனை வழங்குவார் என அவர்கள் எதிர்பார்க்க, ஆனால் அவரோ எதற்காக இப்படி சொல்கிறாள் இந்தப் பெண் என்பதை  விசாரித்து, ராஜா இந்திரமணியின் மேல் கொண்ட காதலைத் தெரிந்து அவளை திரும்பவும் ஓர்ச்சா நகரத்திற்கே மரியாதை செய்து அனுப்பி வைக்கிறார். 

திரும்பவும் ராஜா இந்திரமணியின் சபையில் ராய் ப்ரவீனின் பாடலும் நடனமும் தொடர்கிறது.  கூடவே அவர்களின் காதலும்.  தனது காதல் தலைவிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் “ஆனந்த் மஹால்” இருக்கும் பெரிய புல்வெளியில் ஒரு இரண்டு அடுக்கு மாளிகையைக் கட்டி அதில் அவரை தங்க வைத்திருக்கிறார்.  அப்படிக் கட்டப்பட்ட மாளிகை தான் ராய் ப்ரவீன் மஹால்.

கீழே நாட்டியம் – பாடல் ஆகியவை நடத்த ஒரு பெரிய கூடமும், மேலே அழகிய கூடங்களும், பூமிக்குக் கீழே குளிர்ந்த தங்குமிடமும் அமைந்த கட்டிடமாகக் கட்டி தனது காதல் நாயகிக்காக கொடுத்து விட்டார் ராஜா இந்திரமணி. 

ஆனால் தற்போது இந்த மஹால் இருக்கும் நிலை பார்த்தால் மனதுக்குக் கஷ்டம் தான் மிச்சம்.  மாடுகள் அங்கே வளர்ந்திருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிருக்கிறது.  எங்கும் வௌவால் எச்சங்களின் நாற்றம்.  படிக்கட்டுகள் மூலம் தட்டுத் தடுமாறி ஏறி மேலே சென்று பார்த்தால் ஆங்காங்கே சிதிலமடைந்து கிடக்கிறது கட்டிடம். 

இந்த இடமா நடனமும் பாடலுமாக சந்தோஷமாக இருந்தது என்று எண்ணும்படி இருக்கிறது.  ஓர்ச்சா நகரம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டிடங்களின் நிலையும் இதுதான்.  ஒரு சில கட்டிடங்களை பராமரித்து வருகிறார்கள்.  


எத்தனையோ வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இப்படி அழிவினை நோக்கிச் செல்ல விட்டுவிட்டார்களே!  நாங்கள் சென்றபோது இந்த இடத்திலும் சில விளம்பரப் படங்களை எடுத்துக் கொண்டிருந்தனர்.  அப்படத்தில் நடிக்க வந்தவர்களின் பின்னே தான் பெரும் கும்பல் ஓடியது  – வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்க அல்ல என்பதை நினைக்கும் போது வருத்தம்தான் மேலோங்கியது. 

அடுத்ததாக உங்களுக்குச் சொல்லப் போவது ராம் ராஜா மந்திர் பற்றி.  ஆனால் இந்தப் பகுதியில் அல்ல – அடுத்த பகுதியில்.  அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.


வெள்ளி, 2 டிசம்பர், 2011

அறுவை சிகிச்சை…


[மனச்சுரங்கத்திலிருந்து…]



அந்த மருத்துவமனையின் மகளிர் உள்நோயாளிகள் பிரிவில் உடல் நிலை சரியில்லாது அனுமதிக்கப்பட்டிருந்தார் என் அம்மா. மாத்திரை மருந்துகள் எடுத்தும் சரியாகாததால் நான்கு-ஐந்து நாட்கள் அங்கேயே இருந்து தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தது.  இரண்டு நாட்கள் சிகிச்சை முடிந்த நிலையில், மூன்றாவது நாள் காலை…

செவிலியர் ஒருவர் வந்து அம்மாவிடம் ஒரு பச்சை நிற அங்கியைக் கொடுத்து “ம்ம்ம்…  சீக்கிரம் உடைகளைக் களைந்து விட்டு இந்த அங்கியை மாட்டிக் கொள்! தலைமுடியை இரட்டைப் பின்னலாக போட்டுக்கொள்!” என்று சொல்ல, “ஏன்?” என்று கேட்டார் அம்மா.

அதற்கு அந்த செவிலியர், “மருத்துவமனையில் சொன்னால், சொன்னதைச் செய்யணும், கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது, பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை” என்று மிரட்டியபடியே  அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்.  அம்மாவும் எதுக்கு என்று புரியாமலேயே, தனது 47 –வது வயதில் இரட்டை பின்னல் பின்னிக்கொண்டு மருத்துவமனையின்  பச்சை அங்கியை போட்டுக் கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க, அந்தப் புரியாத நிலையிலும் தன்னைப் பார்த்து ஒரு சிரிப்பு…  “இந்த வயதில் இது தேவையா?” என்று நினைத்தாரோ என்னவோ!

இந்த அலங்காரத்தோடு தயாராகி, அந்த முரட்டு செவிலியர் வருகைக்குக் காத்திருந்தார்.  10-15 நிமிடங்களுக்குப் பிறகு வந்த அந்த செவிலியர் ”என்ன தயாரா?  அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு நடந்து வர முடியுமா, இல்லை தள்ளுவண்டி வேணுமா?” எனக் கேட்க, அப்போதும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “எனக்கென்ன, நல்லாத்தானே இருக்கேன், நடந்தே வரேன்.  ஆனால், அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு எதுக்கு வரணும்?” என்று கேட்க, அந்த செவிலியர் சொன்ன பதில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

”அட என்னம்மா, உன்னோட ரொம்ப பேஜாராப் போச்சு! சொன்னபடி செய்ய மாட்டியா, சும்மா கேள்வி மேல கேள்வி கேட்காத! இன்னிக்கு உனக்கு கண் ஆபரேஷன்.  இனிமே தொணதொணக்காம என் கூட வா!” என்று சொல்லி முன்னே நகர, அம்மாவோ அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டார்.

பத்தடி சென்றதும் திரும்பிப் பார்த்த அந்த செவிலியர், ”அட ஏன் நின்னுட்டே, முடியல்லியா? இதுக்குத்  தான் தள்ளுவண்டி வேணுமான்னு அப்பவே கேட்டேன், இப்ப இப்படி பண்ற!” என்று சொல்ல, அம்மா “எனக்கு, எதுக்கு ஆபரேஷன்?” என்று  கேட்டே விட்டார்.

அப்போது அந்த செவிலியர் சொன்ன பதில் தான் இந்தக்  கட்டுரையின் ஹைலைட்!  “ஏம்மா, உனக்குப் படிக்கத் தெரியுமா, இங்க பாரு சீட்டு! உன் பேர் ஃபிலோமினா, வயசு 74, உனக்கு இன்னிக்கு கண் ஆபரேஷன்”. அப்போது தான் எதற்கு இந்த கூத்தெல்லாம் என்பது அம்மாவுக்கு மெள்ள புரிய ஆரம்பித்தது. 

”அடடா, நல்ல வேளை, இப்பவாவது சொன்னீங்களே, என் பேரு ஃபிலோமினா இல்லை, என் வயசு 47, ஒவ்வாமையினால் அரிப்பு ஏற்பட்டு அதற்காகத்தான் இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்! எனக்கு இரண்டு கண்ணும்  நல்லாத்தான் தெரியுது” என்று சொல்ல, அதற்கு அந்த செவிலியர் அலட்சியமாக சொன்ன பதில் – “ஏம்மா இதை முன்னாடியே சொல்ல மாட்டியா!  சரி, சரி, இதெல்லாம் மருத்துவரிடம் சொல்லிடாதே…. போய் உன் உடைகளை மாட்டிக்கொள், நான் ஃபிலோமினாவைத் தேடறேன்”.

இதெல்லாம் நடந்த ஒரு மணி நேரத்தில் அம்மா, எனக்கு இப்போ நல்லா இருக்கு, நான் வெளி நோயாளியா வந்து சிகிச்சை எடுத்துக்கறேன் எனச் சொல்லி டிஸ்சார்ஜ் வாங்கிக்கொண்டு எதுவும் அசம்பாவிதம் நடப்பதற்குள் தப்பித்து வீட்டுக்கு வந்துவிட்டார். 

இந்த நிகழ்ச்சி நடந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது.  மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரது பணி மிகவும் மகத்தான ஒன்று.  இப்பணியில் மிகவும் பொறுமையும் பொறுப்பும் தேவை.  எத்தனையோ நல்லவர்கள் இந்தப் பணியில் இருந்தாலும், மேலே சொன்ன செவிலியர் போன்ற சிலரால் மொத்த மருத்துவத் துறைக்கும், சேவகர்களுக்கும் பழி ஏற்பட்டு விடுகிறது. 

மருத்துவமே வியாபாரமாகி விட்ட இந்நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகிக் கொண்டே போவது தான் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலை என்றுதான் மாறுமோ என்ற கேள்வி என் மனதில் தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை.

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட்.