திங்கள், 26 நவம்பர், 2012

அம்மாவின் கைபேசி




ஒரு சனிக்கிழமை அன்று காலை திருவரங்கத்திலிருந்து பல்லவன் பல்லில் மாட்டிக்கொண்டு சென்னை வந்தேன். மாலை தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்தியத் தலைநகருக்குச் செல்ல தமிழ்நாடு விரைவுவண்டியை பிடிக்க வேண்டும்.  சென்னை அருகே வரும்போது தில்லி நண்பர் பத்மநாபன் [எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துப் பகிரும் நண்பர்] அவர்களின் கைபேசியில் அழைக்க தானும் சென்னையில் இருப்பதாகவும், அவரும் அன்றைய இரவு தமிழ்நாடில் தில்லி செல்வதாகவும் சொன்னார். நல்லவேளை மதியத்திலிருந்து இரவு வரை பொழுது போக்க ஒரு வழி கிடைத்தது!

சென்னை சென்ட்ரலில் உடைமைகளை பாதுகாப்பு அறையில் வைத்துவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவை முடித்து விட்டு, வெளியேறினோம்.  இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதனால் ஏதாவது சினிமாவிற்குப் போகலாம் என பேருந்து பிடித்து சாந்தி திரையரங்கிற்குச் சென்றோம்.  அங்கே பார்த்தால் மூன்றரை மணிக்கு அம்மாவின் கைபேசி, நான்கு மணிக்கு ‘போடா போடிஎனப் போட்டிருந்தார்கள்.  சரி பக்கத்து திரையரங்கில் என்ன என்று பார்த்தால் அங்கே துப்பாக்கி, சுந்தரபாண்டியன், போன்ற படங்கள்.  துப்பாக்கி படம் ஹவுஸ் ஃபுல்.  சுந்தரபாண்டியன் ஆறு மணிக்குத் தான்.  அதனால் வேறு வழியின்றி அம்மாவின் கைபேசி பார்க்க முடிவு செய்தோம். விதி வலியது என்று புரியவில்லை அப்போது.

சரி படத்தின் கதைக்கு வருவோம். ஒன்பது பிள்ளைகளைப் பெற்ற அம்மாவின் [ரேவதி] கடைசி பிள்ளை அண்ணாமலை [சாந்தனு]. செல்லப்பிள்ளையான அண்ணாமலை வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மாமன் மகள் செல்வி [இனியா] மீது கொண்ட காதலால் நல்ல பிள்ளையாக மாறி, மாமாவிடமே வேலைக்குச் சேர்கிறார்.  இனியாவுடன் ஒரு டூயட்டும் பாடுகிறார். 



வீட்டில் நடந்த ஒரு விழாவின் போது தங்கநகை காணாமல் போக அண்ணாமலை மீது சந்தேகம் கொண்டு அவரை அவரது அம்மாவே துடப்பத்தால் அடித்துத் துரத்தி விடுகிறார்கள். சில முதலாளிகளிடம் வேலைப் பார்த்து பிறகு ஒரு கல் குவாரி முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்து நல்ல நிலையை அடைகிறார்.  அதற்குள் ஏழு வருடங்கள் ஓடி விடுகிறது.  ஏழு வருடங்களாக்க் காத்திருந்த செல்வியும், அண்ணாமலையின் இன்னோரு சகோதரரை மணம் புரிகிறார்.  மணம் முடித்த நான்காம் நாள் அண்ணாமலையிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.  கூடவே தலைப்பில் வரும் கைபேசியும்!  



அவ்வப்போது அம்மாவிடமும், செல்வியுடனும் பேசுகிறார். சீக்கிரமே வருவதாகச் சொல்கிறார். பணி செய்யுமிடத்தில் உண்மையாக நடந்து கொண்டதால் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். எதிரிகளின் கைப்பாவையாக பிரசாத் [தங்கர் பச்சான்].  அவர்கள் சொல்வதையெல்லாம் செய்து கடைசியில் எதிரிகள் சொல்பேச்சு கேட்டு சாந்தனுவை தீர்த்துக் கட்டுகிறாரா இல்லையா என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் – பாதி படத்திலேயே.  நடுவே தங்கர் பச்சானும் மனைவியுடன் ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். அவர் மனைவியாக நடித்திருப்பது மீனாள்.

பல இடங்களில் படம் பார்ப்பவர்களை “இது உனக்குத் தேவையா?என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வைக்கிறது. பல காட்சிகள் வருவதற்கு முன்னே இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க முடிகிறது. பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.  தியேட்டரின் உள்ளே சுத்தமாக இருந்தாலும், கழிப்பறைகள் முகம் சுளிக்கவும், மூக்கை அடைக்கவும் வைக்கின்றன. பகல் காட்சியிலேயே பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்த்து.

படம் பார்த்து விட்டு எங்களையே நொந்து வெளியே வந்தபோது சாந்தி தியேட்டரின் வாசலில் பெரிய பேனர்களில் விதம் விதமாய் நடிகர் திலகத்தின் படங்கள் – மற்றும் சாந்தி தியேட்டர் பற்றி இதழ்களில் வந்திருந்த பேட்டிகள் ஆகியவை இருந்தது. அதில் இருந்த ஒரு சிவாஜி படம் – நெற்றியில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் – எங்களிருவரையும் பார்த்து, இந்தப் படத்தையா பார்த்துட்டு வர என்று சிரிப்பது போல இருந்தது!

ஒரு வழியாக சென்னை சென்ட்ரல் திரும்பி தமிழகத்திற்கு வணக்கம் சொல்லி தமிழ்நாடு விரைவு வண்டியில் தில்லி கிளம்பினோம்! இனி சினிமா பார்ப்பதற்கு, அதாவது தில்லியில் திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.  அடுத்த முறையாவது நல்ல சினிமாவாக பார்க்க வேண்டும்.

வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 25 நவம்பர், 2012

பூந்தொட்டிகள்





சென்ற ஞாயிறன்று நான் எடுத்த சில டேலியா மலர்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பகிர்ந்தேன்.  இந்த வாரம் வீட்டிற்குள் சில பூச்செடிகளை, அல்லது பூக்களை வைத்து அழகு செய்ய சில பூந்தொட்டிகளின் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்படங்களும் தில்லியின் Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை தான்.


ஒட்டகத்தில் சவாரி போக வாரீகளா?


நான் உங்கள் வீட்டுச் செடியை இப்படி அழகா பார்த்துப்பேன்...
பிச்சு போட மாட்டேன்!


நான் தண்ணில மட்டுந்தான் இருப்பேன்னு யார் சொன்னது... 
உங்க வீட்டுக்குள்ள கூட வருவேன்.


நான் பத்ரமா பார்த்துக்கறேன்
செடி மட்டும் வைச்சுடுங்க ப்ளீஸ்....


யார்ப்பா இது, பிஞ்சு கால்மேல பூத்தொட்டி வைச்சது....

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா....  மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

வெள்ளி, 23 நவம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 22: – சூரிய ஒளியில் தயாராகும் உணவு – ஜப்பானில் சுஜாதா




இந்த வார செய்தி: 

 
தில்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோவில் பற்றிய செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். பிறிதொரு சமயத்தில் “தலைநகரிலிருந்துதொடரில் எழுதுகிறேன்.  இன்று சொல்லப் போவது அக்கோவிலில் தயாராகும் உணவு பற்றியது.  கோவிலில் தினமும் சுமார் 4000 பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது.  இதுவரை குழாய் மூலம் இந்திரப்பிரஸ்தா வாயு நிறுவனம் தரும் இயற்கை வாயு கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு இனிமேல் சூரிய ஒளி கொண்டு தயாரிக்கப்பட இருக்கிறது.

ARUN®100 என்று பெயரிடப்பட்டுள்ள சூரிய ஒளியைக் குவித்து நீராவி உருவாக்கி அதன் மூலம் சாதம், பருப்பு, காய்கறிகள் வேகவைத்து உணவு தயாரிக்கிறார்கள்.  இந்த சூரிய ஒளி அடுப்பின் மூலம் உணவு தயாரிப்பதால் இயற்கை வாயு, எல்.பி.ஜி போன்றவற்றால் உண்டாகும் மாசுகள் உண்டாவதில்லை என்பது கூடுதல் சிறப்பு.

தற்போது தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்சார தட்டுப்பாடு சமயத்தில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் சூரிய ஒளியை பயன்படுத்தினால் இருண்டிருக்கும் தமிழகத்தில் நிச்சயம் ஒளி பிறக்கும். சற்றே விலை அதிகம் என்றாலும் நிச்சயம் பலன் தரும் விஷயம் என்றே தோன்றுகிறது.

நமது தமிழகத்தில் சூரிய ஒளி பயன்படுத்தி பயன்பெறுவது எப்போது – சூரியனுக்கே வெளிச்சம்!


இந்த வார முகப்புத்தக இற்றை:

கோபமாய் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
ஆணவமாய் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால் சிறப்பாய் இருப்பாய்!

இந்த வார குறுஞ்செய்தி

Earning a relation is a reward of our trust. Maintaining the same is the result of our sacrifice and strengthening the same is the result of our care.

ரசித்த புகைப்படம்:  திங்கள் முதல் ஞாயிறு வரை நமது நிலையை இதை விட அழகாய் படம் பிடிக்க முடியுமா தெரியவில்லை! நீங்களும் பார்த்து ரசியுங்களேன்!


 
ரசித்த பாடல்இமயம் படத்திலிருந்து கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் இசையில் கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் வாணி ஜெயராம் அவர்களுடன் இணைந்து பாடிய பாடல்.  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் ஸ்ரீவித்யா நடிப்பில் வெளிவந்த படம். இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன்.  இதோ இப்பாடல் உங்கள் ரசனைக்காக...

.
ராஜா காது கழுதைக் காது: திருவரங்கம் ரயில் நிலையத்தில் பல்லவனுக்காக காத்திருந்த போது – ஒரு அம்மா தனது மகனிடம் “ஏண்டா நீயும் உங்கப்பா மாதிரியே பராக்கு பார்த்துட்டு நிக்கற, போய் நம்ம கோச் எந்த பக்கம் வரும்னு பார்த்துட்டு வா!


படித்ததில் பிடித்தது:

அண்மையில் ஜப்பானுக்குப் போயிருந்தேன். ஒரு வாரத்தில் அந்த வேறு உலகத்தில் எனக்கும் சுத்தமும் ஒழுங்கும் மூச்சு திணறியது. ஜப்பானில் ஜப்பானியர்களைத் தவிர வேறு ஒருவரும் தொடர்ந்து வாசம் பண்ண முடியாது. அங்கு சனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்று கண்டுபிடிக்க முடியாதபடி அத்தனை மக்களும் தம்மைத்தாமே கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகை மிஷன்களாய் உலவிவரும் இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பார்க்க பயமாக இருக்கிறது.

பன்னிரண்டு கோடி மக்களில் ஒன்றரைக் கோடி தொண்டு கிழவர்களும், கிழவியர்களும் செத்துப் போக மாட்டேன் என்கிறார்கள். இவர்களை பராமரிக்க அரசாங்கம் திணறுகிறது. சுபிட்சத்தை சமாளிக்கவும் திணறுகிறார்கள். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், பாத்ரூம்களை அலங்கரிப்பதிலும், பத்தாவது மாடியில் வீனஸ் டிமிலோ சிலை அமைப்பதிலும், அமெரிக்க பல்கலைக் கழகங்களை விலைக்கு வாங்குவதிலும், அமெரிக்க கம்பெனிகளில் சிறுபான்மை ஷேர் வாங்குவதிலும் செலவு பண்ணுகிறார்கள்.

ஜப்பானில் நான் இருந்த பத்து நாட்களில் மொத்தம் மூன்று போலீஸ்காரர்களைத் தான் பார்த்தேன்.

திரும்பியபோது சென்னைக்கு வெங்கடராமன் வரப் போகிறார் என்று விமானநிலையத்திலிருந்து துவங்கி மவுண்ட் ரோடு வரை மரத்துக்கு மரம் போலீஸ்காரர்கள்.

-          சுஜாதா, கணையாழியின் கடைசி பக்கம், அக்டோபர், 1989.



மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை


நட்புடன்


வெங்கட்.
புது தில்லி.  

வியாழன், 22 நவம்பர், 2012

படுத்த நிலையில் ஹனுமான்



திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 11

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10

முஸ்கி:  ஒவ்வொரு திங்களும் வர வேண்டிய இத்தொடரில் சற்றே இடைவெளி.  தீபாவளி பயணமும், மற்ற வேலைகளும் நேரத்தினை எடுத்துக் கொண்டதால் வந்த இடைவெளி.



சென்ற பகுதியில் அக்பர் கட்டிய கோட்டை, அக்‌ஷய் வட் மற்றும் பாதாள்புரி போன்ற இடங்கள் பற்றி பார்த்தோம். இந்த பகுதியில் சங்கமத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் பிரசித்தி பெற்ற ஹனுமான் கோவில் பற்றி பார்க்கலாம். இக்கோவிலில் நின்ற கோலத்தில் இல்லாது வித்தியாசமாக படுத்த நிலையில் இருக்கிறார் அஞ்சனி மைந்தர். சங்கமத்திற்கு வரும் அனைத்து மக்களும் இக்கோவிலுக்கும் வந்து செல்வதால் எந்நேரத்திலும் கூட்டம் இருக்கிறது. 

இக்கோவில் பற்றிய கதையை அங்கேயிருக்கும் பிரசாதக் கடைகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.  பிரசாதம் என்றால் ஏதோ நம் ஊர் எள்ளு சாதம் என நினைக்க வேண்டாம்!  வடக்கில் ஹனுமனுக்கு படைப்பது – பூந்தி அல்லது மோதிசூர் லட்டு மட்டுமே. சரி கதையைப் பார்ப்போமா?

உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தியாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி. 

மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  [B]படே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.

கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்தியாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது.



அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார்.

நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்!

சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘[B]படே ஹனுமான்அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.

படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! 



செவ்வாய்க் கிழமைகளில் வெளியூர் பயணிகள் மட்டுமல்லாது உள்ளூர் மக்களும் வந்து வழிபாடு செய்கிறார்கள். சிறப்பான இக்கோவிலில் ஹனுமனை தரிசித்து வெளியே வந்தோம்.  அடுத்ததாக நாங்கள் சென்றது காமாட்சி கோவில்.  அவ்வனுபவத்தினை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.