ஒரு சனிக்கிழமை அன்று காலை திருவரங்கத்திலிருந்து
பல்லவன் பல்லில் மாட்டிக்கொண்டு சென்னை வந்தேன். மாலை தமிழகத்தின் தலைநகரிலிருந்து
இந்தியத் தலைநகருக்குச் செல்ல தமிழ்நாடு விரைவுவண்டியை பிடிக்க வேண்டும். சென்னை அருகே வரும்போது தில்லி நண்பர்
பத்மநாபன் [எனது பதிவுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துப் பகிரும் நண்பர்]
அவர்களின் கைபேசியில் அழைக்க தானும் சென்னையில் இருப்பதாகவும், அவரும் அன்றைய இரவு
தமிழ்நாடில் தில்லி செல்வதாகவும் சொன்னார். நல்லவேளை மதியத்திலிருந்து இரவு வரை
பொழுது போக்க ஒரு வழி கிடைத்தது!
சென்னை சென்ட்ரலில் உடைமைகளை பாதுகாப்பு அறையில்
வைத்துவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவை முடித்து விட்டு, வெளியேறினோம். இரவு வரை பொழுது போக வேண்டுமே, அதனால் ஏதாவது
சினிமாவிற்குப் போகலாம் என பேருந்து பிடித்து சாந்தி திரையரங்கிற்குச் சென்றோம். அங்கே பார்த்தால் மூன்றரை மணிக்கு ’அம்மாவின் கைபேசி’,
நான்கு மணிக்கு ‘போடா போடி’ எனப்
போட்டிருந்தார்கள். சரி பக்கத்து
திரையரங்கில் என்ன என்று பார்த்தால் அங்கே துப்பாக்கி, சுந்தரபாண்டியன், போன்ற
படங்கள். துப்பாக்கி படம் ஹவுஸ்
ஃபுல். சுந்தரபாண்டியன் ஆறு மணிக்குத்
தான். அதனால் வேறு வழியின்றி அம்மாவின்
கைபேசி பார்க்க முடிவு செய்தோம். விதி வலியது என்று புரியவில்லை அப்போது.
சரி படத்தின் கதைக்கு வருவோம். ஒன்பது பிள்ளைகளைப்
பெற்ற அம்மாவின் [ரேவதி] கடைசி பிள்ளை அண்ணாமலை [சாந்தனு]. செல்லப்பிள்ளையான
அண்ணாமலை வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். மாமன் மகள் செல்வி
[இனியா] மீது கொண்ட காதலால் நல்ல பிள்ளையாக மாறி, மாமாவிடமே வேலைக்குச்
சேர்கிறார். இனியாவுடன் ஒரு டூயட்டும்
பாடுகிறார்.
வீட்டில் நடந்த ஒரு விழாவின் போது தங்கநகை காணாமல்
போக அண்ணாமலை மீது சந்தேகம் கொண்டு அவரை அவரது அம்மாவே துடப்பத்தால் அடித்துத்
துரத்தி விடுகிறார்கள். சில முதலாளிகளிடம் வேலைப் பார்த்து பிறகு ஒரு கல் குவாரி
முதலாளியிடம் வேலைக்குச் சேர்ந்து நல்ல நிலையை அடைகிறார். அதற்குள் ஏழு வருடங்கள் ஓடி விடுகிறது. ஏழு வருடங்களாக்க் காத்திருந்த செல்வியும்,
அண்ணாமலையின் இன்னோரு சகோதரரை மணம் புரிகிறார்.
மணம் முடித்த நான்காம் நாள் அண்ணாமலையிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. கூடவே தலைப்பில் வரும் கைபேசியும்!
அவ்வப்போது அம்மாவிடமும்,
செல்வியுடனும் பேசுகிறார். சீக்கிரமே வருவதாகச் சொல்கிறார். பணி செய்யுமிடத்தில்
உண்மையாக நடந்து கொண்டதால் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். எதிரிகளின் கைப்பாவையாக
பிரசாத் [தங்கர் பச்சான்]. அவர்கள்
சொல்வதையெல்லாம் செய்து கடைசியில் எதிரிகள் சொல்பேச்சு கேட்டு சாந்தனுவை
தீர்த்துக் கட்டுகிறாரா இல்லையா என்பது உங்களுக்கே புரிந்திருக்கும் – பாதி
படத்திலேயே. நடுவே தங்கர் பச்சானும்
மனைவியுடன் ஒரு குத்தாட்டம் ஆடுகிறார். அவர் மனைவியாக நடித்திருப்பது மீனாள்.
பல இடங்களில் படம்
பார்ப்பவர்களை “இது உனக்குத் தேவையா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள
வைக்கிறது. பல காட்சிகள் வருவதற்கு முன்னே இப்படித்தான் இருக்கும் என ஊகிக்க
முடிகிறது. பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தியேட்டரின் உள்ளே சுத்தமாக இருந்தாலும்,
கழிப்பறைகள் முகம் சுளிக்கவும், மூக்கை அடைக்கவும் வைக்கின்றன. பகல் காட்சியிலேயே
பல டாஸ்மாக் மன்னர்களையும் பார்க்க முடிந்த்து.
படம் பார்த்து
விட்டு எங்களையே நொந்து வெளியே வந்தபோது சாந்தி தியேட்டரின் வாசலில் பெரிய பேனர்களில்
விதம் விதமாய் நடிகர் திலகத்தின் படங்கள் – மற்றும் சாந்தி தியேட்டர் பற்றி
இதழ்களில் வந்திருந்த பேட்டிகள் ஆகியவை இருந்தது. அதில் இருந்த ஒரு சிவாஜி படம் –
நெற்றியில் கைவைத்து சிரிப்பது போன்ற படம் – எங்களிருவரையும் பார்த்து, இந்தப்
படத்தையா பார்த்துட்டு வர என்று சிரிப்பது போல இருந்தது!
ஒரு வழியாக
சென்னை சென்ட்ரல் திரும்பி தமிழகத்திற்கு வணக்கம் சொல்லி தமிழ்நாடு விரைவு
வண்டியில் தில்லி கிளம்பினோம்! இனி சினிமா பார்ப்பதற்கு, அதாவது தில்லியில்
திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அடுத்த முறையாவது நல்ல சினிமாவாக பார்க்க
வேண்டும்.
வேறொரு
பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.






