திங்கள், 23 பிப்ரவரி, 2015

ஹிமாச்சல் பிரதேசம் அழைக்கிறது



தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1

ஏழைகளின் ஊட்டிஎன்ற தலைப்பில் ஏற்காடு பயணத்தொடர் எழுதி முடித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த பயணத் தொடர் எழுதுவது பற்றி யோசிக்கவே இல்லையா என அவ்வப்போது கேள்விக்கணைகள் மனதிலிருந்தும், நண்பர்களிடமிருந்தும். இத்தனைக்கும் இரண்டு பயணங்கள் சென்று வந்த அனுபவங்கள் காத்திருக்கின்றன – குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் – இரண்டிலும் நான்கு நான்கு நாட்கள் பயணம். 

இப்பயணங்கள் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்களும் உண்டு.  ஆனாலும் கடந்த ஒரு மாதமாக இப்பயணத்தில் ஒன்று பற்றி கூட பதிவுகள் எழுதவில்லை. குஜராத் பயணத்தில் சந்தித்த சில விஷயங்களை வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த வாரங்களில் [10.11.2014 – 23.11.2014] வலைச்சரத்தில் எழுதி இருக்கிறேன்.  இருந்தாலும் முழு பயணம் பற்றிய குறிப்புகளை எனது தளத்தில் இன்னும் எழுதவில்லை.

 நான் ஹிமாச்சலத்துச் சூரியன்!

அதற்கு பின் சென்ற ஹிமாச்சல் பிரதேசப் பயணம் குறித்தும் இதுவரை எழுதவில்லை. முதலில் குஜராத் பயணமா, இல்லை ஹிமாச்சலப் பயணமா, எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்வதில் கொஞ்சம் குழப்பம்.


ஹிமாச்சலப் பிரதேசம் - ஒரு முன்னோட்டம்

பேசாம “இங்கி பிங்கி பாங்கிபோட்டு முடிவு செய்யலாமா என நினைத்தால் முழுசும் நினைவுக்கு வரல! இன்னுமா நினைவிலிருக்கும்! சரி போ, எதையாவது ஒண்ணை எழுதிடுவோம்னு ஒரு வழியா இதோ வந்துட்டேன்!

குஜராத் பற்றி கொஞ்சம் கொஞ்சம் முன்னரே வலைச்சரத்தில் பார்த்துவிட்டதால், இந்த வாரத்திலிருந்து உங்களை “தேவ பூமிஎன்று அழைக்கப்படும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஒரு சில இடங்களுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். நான் ரெடி நீங்க ரெடியா?


 ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் மிகவும் புராதனமான ஒரு சிவன் கோவில்.....

ஹிமாச்சலப் பிரதேசத்தினை தேவ பூமி என ஏன் அழைக்கிறார்கள் தெரியுமா? ஹிமாச்சலத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் – ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில் நிச்சயம் உண்டு – இதைத் தவிர கிராம தேவதைகள், குலதெய்வங்கள் என நிறையவே. இதைத் தவிர நெடுஞ்சாலைகளில் கூட நிறைய சின்னஞ்சிறு கோவில்கள் – பெரும்பாலும் நெடுஞ்சாலைகளில் ஆஞ்சனேயர் கோவில்கள் - அதனால் இந்த மாநிலத்தினை தேவ் பூமி என்று அழைக்கிறார்கள்.

 வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் என்று சொன்ன பாரதி நினைவுக்கு வருகிறானா!

ஹிமாஎனும் சமஸ்க்ருத வார்த்தைக்கு பனி என்ற அர்த்தம் உண்டு. முற்றிலும் பனிபடர்ந்த மலைகள் கொண்டதால் இப்பகுதிக்கு ஹிமாச்சலப் பிரதேசம் என்று பெயர் சூட்டினார்களாம். அப்படி பெயர் சூட்டியவர் ஆச்சார்யர் திவாகர் தத் ஷர்மா என ஹிமாச்சலத்தின் வரலாறு பற்றிய குறிப்பொன்று கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் எனக்கும் எங்கள் பகுதியில் இருக்கும் சில நண்பர்களுக்கும் இப்படி பனி படர்ந்த மலைப்பிரதேசத்திற்கு செல்ல ஒரு வாய்ப்பு கிடைக்க, பயணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம்.

எங்களைச் சுமந்து செல்லத் தயாராய் எங்கள் வாகனம்!

நவம்பர் மாதத்திலேயே பயணம் பற்றிய முடிவு எடுத்துவிட்டதால் ஒவ்வொருவராக கேட்டு பயணிக்க இருக்கும் நபர்களை முடிவு செய்தோம். 15 பேருக்கு மேல் வருவதாகச் சொல்ல, ஒரு Tempo Traveler அமர்த்திக்கொள்ளலாம் என முடிவாயிற்று. நடுவில் ஒரு சிலர் வர முடியாத சூழல், வேறு சிலர் வருவதாகச் சொல்ல, ஏற்கனவே முடிவெடுத்தபடி Tempo Traveler பயணம் தான்.

 குளிர் நடுக்கத்தில் தில்லி!

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ஆம் தேதி காலையில் தில்லியிலிருந்து தொடங்கியது எங்கள் பயணம். அதிகாலையில் அப்படி ஒரு பனிமூட்டம் – தில்லியிலேயே இத்தனை பனியும் குளிரும் இருந்தால் ஹிமாச்சலத்தில் இன்னும் அதிக குளிரப் போகிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னாலும் எதையும் தாங்கும் இதயமும், பலமும் எங்களுக்கு உண்டு என்று திடமாகப் புறப்பட்டது எங்கள் குழு!

 திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தில்லி கோவில் - புறத்தோற்றம்

மார்கழி மாதம் என்பதால், எங்கள் பகுதியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் காலையில் திருப்பாவை/திருவெம்பாவையோடு சேவை தொடங்கும். அதனால் பயணிக்கும் முன்னர் ஏழுமலையானிடமும் ஒரு ஹலோ சொல்லிவிட்டு பயணத்தினை நல்லபடியாக முடித்துத் தர வேண்டிக்கொள்வோம் எனச் சொன்னதற்கு இணங்க, அனைவரையும் சுமந்து கொண்டு புறப்பட்டது எங்கள் ரதம்.


 குளிர் உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியே ஒரு ரவுண்ட் போலாம் வாங்க! படம் எடுத்தது காலை 08.45 மணிக்கு!

ஏழுமலையானை தரிசித்து அங்கிருந்து புறப்பட்டோம். தலைநகரைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையைத் தொட முயற்சி செய்தோம். அங்கே தேசிய நெடுஞ்சாலையைக் காணவில்லை! யாருப்பா அத திருடிட்டு போனது!  என்ன ஆயிற்று?  அடுத்த பகுதியில் சொல்லட்டா! இப்ப வர்ட்டா!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஆம் ஆத்மி கட்சியின் சின்னமும் மேளாவும்

ஒரு துடப்பத்தால் என்ன செய்துவிட முடியும்? வீட்டைப் பெருக்க பயன்படும் என்று மட்டும் தானே யோசித்து இருப்பீங்க! கொஞ்சம் கோபம் வந்தால் பெண்களுக்கு இவை ஆயுதமாகவும் பயன்படும் என்பதும் சில அனுபவஸ்தர்களுக்கு தெரிந்த விஷயம்! பல உணவகங்களில் தோசைக்கல்லை நடுநடுவே தண்ணீர் விட்டு துடப்பத்தால் தட்டி சுத்தம் செய்வதும் பார்த்திருக்கிறோம். 

கட்சி ஆரம்பித்து வெகு சீக்கிரமாக அவர்களது சின்னமான துடப்பத்தினால் மற்ற பழம்பெரும் கட்சிகளையும் பெருக்கித் தள்ளிவிட்டார்களே! இப்படி ஒரு துடப்பக்கட்டையை வைத்து வேறு என்ன செய்துவிடமுடியும்? 

இப்படித் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்! சென்ற ஞாயிறன்று சூரஜ்குண்ட் மேளாவிற்குச் செல்லும் வரை! NCT என்று சொல்லப்படும் National Capital Territory பகுதிகளில் ஒன்றான ஃபரிதாபாத் அருகே இருக்கும் ஒரு சிறு கிராமம் சூரஜ்குண்ட். ஒவ்வொரு வருடமும் ஹரியானா சுற்றுலாத்துறை இந்த சூரஜ்குண்ட்-இல் ஒரு மேளா நடத்துவார்கள். பதினைந்து நாட்கள் நடக்கும் இம்மேளா ஒவ்வொரு வருடமும் ஃபிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

இங்கே ஒவ்வொரு மரத்திலும் துடப்பம் வைத்து அலங்கரித்து இருந்தார்கள்.  ஆஹா என்ன ஒரு யோசனை! துடப்பக்கட்டை தானே என்று நினைத்தாலும் அந்த அலங்காரமும் பார்க்க நன்றாகத் தான் இருந்தது! இந்த மேளாவில் எடுத்த சில படங்கள் இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி....


High Heels போட்டு சாதாரணமா நடக்க தடுமாறும் பலர் இருக்க, இரண்டு குச்சிகளில் சர்வசாதாரணமாக நடக்கும் கலைஞர்கள்!
 


ஏனுங்க்ணா, இது என்ன? 
இது அமர்ந்து கொள்ள ஓர் இருக்கை!
ஆமை தன்னைப் பாதுகாக்க ஒரு ஓடு கேட்க, 
அது மேலேயே உட்கார வசதி செய்துட்டாங்களே!


ஹரியானாக் காரர்கள் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை அதிகம் உண்பவர்கள். அதனால் கொஞ்ச பலசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் உறங்கும் கட்டில் அவர்களைத் தாங்க வேண்டாமா?  இது கட்டிலின் ஒரு கால் மட்டும்! யானைக் கால் மாதிரி இருக்குங்கோ! கட்டில் அளவும் 7 அடிக்கு 5 அடி!


ஹூக்கா புகைக்கும் ஹரியானா மாநிலத்தவர். ஹூக்கா புகைப்பது இவர்களது மிகவும் முக்கியமான பொழுதுபோக்கு! 


அப்படிக்கா போய் ஃபுட் கோர்ட்-ல சாப்பிட்டா நிச்சயம் மற்றதும் தேவைன்னு சொல்லாம சொல்றாங்களோ! 


அலங்கார விளக்குத் தோரணங்கள் 


மேளா என்றால் நடனம் இல்லாமலா? சில கலைஞர்கள் ஆடிக்கொண்டிருக்க, களத்தில் குதித்தது இந்தச் சிங்கம்! ஒரே ஆட்டம் தான்! 


ஹரியானா மாநிலப் பெண்மணி - அவரது பாரம்பரிய உடையில்... 


சத்தீஸ்கர் மாநில நாட்டிய மங்கைகள் - நடந்து செல்லும்போது கூட ஒரு வரிசையில் தான் செல்கிறார்கள்! 


சத்தீஸ்கர் நாட்டு பாரம்பரிய நடன உடையில் ஒரு மூதாட்டி - அவரது அனுபவம் - அவரது முகச் சுருக்கங்களில் தெரிகிறதோ! 


பாரு பாரு நல்லா பாரு.....  பயாஸ்கோப்பு படத்த பாரு..... 


 தனது இசைக்கருவியுடன் ஒரு இசை விற்பன்னர் - சிலையாக!


துடப்பக்கட்டை அலங்காரம்! மரங்களில்.... 


மின்விளக்குகள் பொருத்த ஒரு அழகிய கலைப்பொருள்! அதிலே தொங்கும் கயிற்றுப் பொம்மைகள். 


முறம் அலங்கரிக்கவும் பயன்படும் என்று சொல்லாமல் சொல்லும் படம்


இச்சிலை ”தலா” எனும் இடத்தில் [சத்தீஸ்கர்] அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த ”ருத்ர சிவா”  வின் பிரதி....  தனக்குள் எல்லாம் அடக்கம் எனச் சொல்கிறாரோ சிவபெருமான்!


 சத்தீஸ்கர் மாநில நடனக் கலைஞர்
 
என்ன நண்பர்களே, படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

டிஸ்கி-1: இரண்டு வருடங்களுக்கு முன்னர் சூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த சில படங்கள், மேளா பற்றிய மேலதிக தகவல்கள் எனது மூன்று பதிவுகளில் உண்டு.  அப்பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே...

சூரஜ்குண்ட் மேளா போகலாம் வாங்க! முதல் பகுதி

ஹொளிகே செய்ய ஒரு சுலப வழி

டிஸ்கி-2: இங்கேயும் நிறைய பிள்ளையார் சிலைகள் இருந்தன.  அவற்றின் புகைப்படங்கள் அடுத்த ஞாயிறில் தனிப்பதிவாக!


நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஃப்ரூட் சாலட் – 126 – மின் ரதம் – 5 பீர் 2 ஃபுல் – மந்திரக் குவளை


இந்த வார செய்தி:

சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம்

11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்) படிக்கிறார்.

இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்.பியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்காத்துக் கொள்ளும் புதிய கருவியைக் கண்டுபிடித்தார்.

இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்என்ற அதிநவீன இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று மானாமதுரையில் நடந்தது.

இதில் மாணவர் வி.ஆர். மணிகண்டன் பேசியது: ''வாகன எரிபொருளுக்கு அதிகம் செலவாகிறது. இதனால் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரதம்தயாரித்துள்ளேன். இதில் மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 11 யூனிட் மின்சாரம் பேட்டரியில் சேகரமாகும். இதன்மூலம், மணிக்கு 75 கிமீ வேகத்தில் சுமார் 400 கி.மீ. வரை பயணிக்கலாம். இதற்கான செலவு ரூ. 36 மட்டும்தான். பராமரிப்பு, தேய்மானம் இல்லை. இரைச்சல் இருக்காது. 300 கிலோ சுமையைத் தாங்கும்.

இந்த பைக்கில் விபத்தை அறிந்து தானாகவே தற்காத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை எடுக்க முடியாது. பெற்றோரின் பேச்சை மீறி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கு கடிவாளம் போடும் வசதியும் உள்ளது. ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பமும் உள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை மடிக்கணினி மூலம் இணைத்து உரிமையாளர்களே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. வாகனம் திருடுபோகாமல் தடுக்கும் வசதியும் உள்ளது.

ரதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1 கி.மீ.க்கு 9 பைசாதான் செலவாகும். இந்த வாகனத்தை ரூ. 80 ஆயிரம் செலவில் தயாரிக்கலாம். அரசு மானியம் கிடைத்தால் விலையில் 30 சதவீதம் குறையும். சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் ஏற்றும் வசதியும் உள்ளது. ரதம்ஸ்கூட்டரின் காப்புரிமை, விற்பனைக்காக புனேயில் உள்ள ஏர்ஏஐ-அமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.

நன்றி: தி இந்து இணைய இதழ்.

நல்ல விஷயமாகத் தான் தெரிகிறது. எரிசக்தி பற்றாக்குறை/விலை அதிகமாக இருக்கும் இந்நாளில் இது நல்ல வசதி! ஆனாலும் தமிழகத்தில் இருக்கும் மின்சாரப் பற்றாக்குறையை நினைத்தால் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது!

இந்த வார முகப்புத்தக இற்றை:

காப்பாத்தும்போது கடவுளாய்த் தெரியும் டாக்டர்கள், பில் போடும்போது மட்டும் எமனாய்த் தெரிகிறார்கள் – Prakash Ramaswamy.

இந்த வார குறுஞ்செய்தி:

நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்தே உங்களை பற்றி முடிவு செய்கிறார்கள்.  

எப்படின்னு கேட்டா ஒரு குட்டி கதை சொல்ல வேண்டியிருக்கு!

கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தாராம். நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொண்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த டாஸ்மாக் கடைக்குள் என்று பார்த்து வர உள்ளே சென்றாராம். சரி குடித்து தான் பார்த்து விடுவோம் என்று எண்ணி ஆர்டரும் செய்து விட்டார்.

5 பீர் முழுவதும் முடிந்தது. ஒரு வித்தியாசமும் தெரியல, தொடர்ந்தார் 2 FULL. அப்பொழுதும் ஒன்னும் ஆகல. மீண்டும் முதலிருந்து 5 பீர் ஆரம்பித்தார், கடைகாரருக்கு ஆச்சரியம் தாளாமல், கேட்டாராம்.....

"யாருய்யா நீ?  இவ்வளவு குடிச்சும் உனக்கு போதை ஏறல? மறுபடியும் கேட்கறே?

அதற்கு நம்ம கடவுள் சொன்ன பதில்: நான் தான்பா உங்களை ஆளும் கடவுள். எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைக்காரர்: "தோ டா...! தொரைக்கு இப்ப தான் ஏற ஆரம்பிச்சி இருக்கு! நடக்கட்டும்..! நடக்கட்டும்..!

இந்த வார நகைச்சுவை:

கணவர் குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் ஷாம்புவை தனது தோள்களிலும் உபயோகப்படுத்த, மனைவி யோவ் உனக்கென்ன பைத்தியமா புடிச்சு இருக்கு! ஷாம்பு தலைக்கு மட்டும் தான் போடணும்னு சொல்ல, கணவன் சொன்ன பதில் – உனக்கு தான் பைத்தியம்! இந்த ஷாம்பு பாட்டில்ல என்ன போட்டு இருக்குன்னு பாரு.....

Head and Shoulders Shampoo!

இந்த வார புகைப்படம்:

காலணிகள் – காலில் போட்டுக்கொள்ள மட்டும் தான் என்று யார் சொன்னது? அதை வேறு விதமாகவும் பயன்படுத்தலாம் என்று சொல்லாமல் சொன்னது ஒரு கடை! அங்கே இருந்தது இங்கே புகைப்படமாக!



இந்த வார கார்ட்டூன்:

இரண்டு வருடம் முன்னர் வந்த கார்ட்டூன் தான் – இப்போதும் இது பொருந்தும்! இந்தியாவில் உள்ள அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை சுத்தமான கழிவறைகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்! இந்நிலை என்று மாறுமோ? கார்ட்டூன் பாருங்களேன்!



படித்ததில் பிடித்தது:

மந்திரக் குவளை

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது.

பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. "உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது" என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது.

பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.

"மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது. அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன. உனக்கு நியாயமும் புலப்படுகிறது என்று கூறி மறைந்தது தேவதை......

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சாப்பிட வாங்க: ஜலேபா



குளிர் காலம் வந்துவிட்டாலே எங்களுக்கெல்லாம் கொண்டாட்டம் தான். எங்கள்என்று சொன்ன உடனேயே “திங்கக் கிழமையில் உணவு பதார்த்தங்களை ருசிக்கத் தரும் “எங்கள் பிளாக்நண்பர்களுக்கோ என நினைத்து விடவேண்டாம்.  இந்த எங்கள்குழு வேறு – எங்களில் இருப்பது ஒரு பல மாநில கூட்டணி – நட்பு மட்டுமே அதன் அஸ்திவாரம் – நட்பு என்று வந்தபிறகு மொழியோ, மதமோ, ஜாதியோ அதில் குறுக்கிடக்கூடாதே. 

எங்களில் நான், முரளி, வர்கீஸ், உஸ்மான் அலி, சத்பால், அனில் குமார் என ஆறு நண்பர்கள்.  தில்லியின் குளிர்காலங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது மதிய உணவு வெளியே தான். அதற்காகவே தில்லியின் சாந்த்னி சௌக், பாஹட்கஞ்ச், என்று தேடித்தேடி செல்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது. தமிழகத்திலிருந்து வந்த எனக்கு பல உணவுகள் புதிது.  அனைத்தையும் ரசித்து ருசித்து உண்போம். 

அப்படி ருசித்த பல உணவுகளில் ஒன்று தான் இன்று சாப்பிட வாங்க என்று அழைக்கும் ஜலேபா! ஜிலேபி தெரியும், அது என்ன ஜலேபா....என்று யோசிக்கும் உங்களுக்கு ஒரு பதில் – ஜலேபா ஜிலேபிக்கு அப்பா! ஆஹா பேர் சொல்லும் போதே அப்பா என்ன ஒரு சுவை அதற்கு எனத் தோன்றுகிறது!”  மதிய உணவு முடித்த பிறகு எப்படியும் ஒரு இனிப்பு உண்டு – காரட் ஹல்வாவோ, பாசிப்பருப்பு ஹல்வாவோ, ஜலேபாவோ எதேனும் ஒன்று சாப்பிடுவது சர்வ நிச்சயம்.

அப்படி சாப்பிட்ட ஜலேபா – இந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு மேளாவிற்குச் சென்ற போது விற்றுக் கொண்டிருந்தார்கள் – சாந்த்னி சௌக் அளவிற்கு சுவையாக இருக்குமோ, மேளாவில் இருக்கும் மண் புழுதி அனைத்தும் அதன் மேல் இருக்குமோ என்ற எண்ணங்கள் மனதில் அலைமோத அதனைப் புகைப்படம் மட்டும் பிடித்து வந்தேன்!



சரி ஜலேபா எப்படிச் செய்வது என்று நம்ம புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் உங்களுக்காக சொல்லவா! சுவையான, மொறுமொறுவென, ரசம் சொட்டும் ஜலேபா – பெரிய அளவு ஜிலேபி செய்யலாம் வாங்க!

தயாரிக்க ஆகும் நேரம்: 7 முதல் 8 மணி நேரம்.
சமைக்க ஆகும் நேரம்: சுமார் 30 நிமிடங்கள்.
எத்தனை பேர் சாப்பிடலாம்: 4 [அந்த நாலு பேரும் “நாலு பேருக்கு நன்றின்னு பாட மாட்டாங்க, செய்து கொடுத்த உங்களுக்கு மட்டும் தான் நன்றி சொல்வாங்க!]

தேவையான பொருட்கள்:

மைதா – 1.5 கப், சோடா உப்பு – 1 தேக்கரண்டி, சர்க்கரை – 2.5 கப், பச்சை ஏலக்காய் பொடி – அரை தேக்கரண்டி, குங்குமப்பூ – நான்கு அல்லது ஐந்து இதழ்கள், நெய் – பொரிக்க.....

எப்படிச் செய்யணும் மாமு?

மைதா மாவு மற்றும் சோடா உப்பு இரண்டையும் நல்ல கலந்துக்கோங்க. அது தலைல, இரண்டு கப் தண்ணீர் விட்டு நல்ல கலந்துக்கோங்க.....  கலக்கும் போது கவனம் தேவை – நடுவுல கட்டி வரவே கூடாது – கட்டி வந்தா மாவு பூரா போகும் குப்பைத் தொட்டிக்கு! இதைச் செய்ய வேண்டியது ஜலேபா செய்யறதுக்கு 7 – 8 எட்டு மணி நேரம் முன்னாடியே! எல்லாத்துக்கும் தயாரா இருக்க வேணாவா!

ஜலேபா செய்ய ஆரம்பிக்கும்போது முதல்ல சர்க்கரைப் பாகு செய்யணும் – சர்க்கரைய இரண்டரை கப் தண்ணீர் விட்டு நல்ல கரைச்சுக்கணும் – அதை அடுப்பில் வைத்து பாகு செய்த பிறகு அதில் ஏலக்காய் பொடியும், குங்குமப் பூவையும் போட்டு ஒரு கலக்கு!



உங்க வீட்டுல ராம்ராஜ் காட்டன் வேட்டி புதுசா வாங்கி வைச்சுருந்தா அதிலிருந்து ஒரு பீஸ் சர்ருன்னு கிழிச்சுக்கலாம்.  இல்லே போனா போறார் – அவர் கிட்ட இருக்கறதே ஒரே ஒரு நல்ல வேட்டின்னு கரிசனம் இருந்தா, ஒரு வெள்ளைத் துணில நடுவில் கட்டை விரல் போகற அளவு ஓட்டை போட்டுக்கலாம். இல்லைன்னா, பிளாஸ்டிக்-ல Sqeezer கிடைக்குது. அதுல ஆள்காட்டி விரல் அளவு ஓட்டை இருக்கற ஒண்ணு வாங்கி அதுல ஊறி இருக்க மைதா மாவு கலவையை நிரப்பி வச்சுக்கோங்க!  

ஒரு தட்டையான Pan-ல் நெய் விட்டு அதைச் சூடாக்கிக்கணும். சூடா இருக்கும் நெய்ல – Squeezer-ஐ அழுத்தி ஐந்து அல்லது ஏழு வட்டம் போடணும் – பென்சில்ல போட்டாலே வட்டம் வராது இப்படி காத்துல வட்டம் போடச் சொன்னா எப்படின்னு கேள்வி கேட்கக் கூடாது! இரண்டு பக்கமும் திருப்பி விட்டு நல்ல பொன்னிறமா வெந்த உடனே வெளியே எடுத்து நெய் எல்லாம் சொட்டிய பிறகு கரைச்சு வைச்சு இருக்க சர்க்கரைப் பாகுல ஒரு முக்கு! பத்து பனினைஞ்சு நிமிஷத்துல ஜலேபா தயார்......
யாருக்குங்க இந்த அளவு பொறுமையும் நேரமும் இருக்கு! நம்மால ஆகாது அப்படின்னு நினைக்கறவங்க எல்லாம் கையத் தூக்கிட்டு வரிசையா நில்லுங்க பார்ப்போம்..... தில்லி சாந்த்னி சௌக்-ல இருந்து ஆர்டர் கொடுத்துடலாம்!

என்ன நண்பர்களே....  ஜலேபாவை ருசித்தீர்களா?

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  வரும் வாரங்களில் இப்படி வாரத்திற்கு ஒன்றாக சில வித்தியாசமான உணவு வகைகளை உங்களுக்குச் சொல்ல நினைத்திருக்கிறேன்! ஆணி பிடுங்குவதிலிருந்து கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் பட்சத்தில்!