புதன், 29 மார்ச், 2017

சாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with everything!


 ஆலு-குந்த்ரு சப்ஜி!
லாலு பிரசாத் யாதவ் – இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் அவசியமில்லை – பீஹார் மாநிலத்தின் முதல்வராகவும், இந்திய அரசின் ரயில்வே துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் பேசும் போது உதிர்க்கும் பொன்மொழிகள் பல உண்டு! எதைச் சொல்ல, எதை விட…. இருந்தாலும் இங்கே ஒன்றே ஒன்று மட்டும் - “Jab tak samosa mein rahega aalu, Bihar mein rahega Lalu” – இதன் அர்த்தம் “சமோசாவில் உருளைக்கிழங்கு இருக்கும் வரை, பீஹாரில் லாலு இருப்பான்!” பீஹார் மக்கள் மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள அனைவராலும் மறக்கமுடியாத ஒரு அரசியல்வாதி லாலு! இப்பதிவில் பார்க்கப் போவது லாலுவைப் பற்றி அல்ல!



லாலு மாதிரியே ஆலுவும் – அதாங்க நம்ம உருளைக்கிழங்கும் ஆல்ரவுண்டர் – எதனுடன் வேண்டுமானாலும் கூட்டணி சேர்ந்து கொள்ளும் திறன் நம்ம ஆலுவுக்கு உண்டு! வடக்கே முக்கியமான உணவு சப்பாத்தி என்றால் அதற்கு இணையாக ஆலுவுக்கும் இடம் உண்டு! எந்த சப்ஜி செய்தாலும் இரண்டு ஆலுவ வெட்டிப் போட்டுடலாம்னு சொல்லும் வடக்கத்திய நண்பர்கள் உண்டு! இன்று சாப்பிட வாங்க பதிவில் பார்க்கப் போகும் ஆலு-குந்த்ரு சப்ஜியிலும் ஆலு உண்டு! Alu goes with everything!


கட்டிங்! கட்டிங்!!

தேவையான பொருட்கள்: ஆலு [மூன்று [அ] நான்கு], குந்த்ரு என ஹிந்தியில் அழைக்கப்படும் கோவைக்காய் – ¼ கிலோ, வெங்காயம் – 1, கொஞ்சம் இஞ்சி, தாளிக்க – கடுகு, ஜீரகம், தேவைப்பட்டால் சோம்பு, கரம் மசாலா, தனியா பொடி, மிளகாய் பொடி, பெருங்காயப் பொடி – எனக்கு ஒரு பழக்கம், பக்கத்துல எந்தப் பொடி இருந்தாலும் போட்டு விடுவேன் [அதுக்காக மூக்குப் பொடி போடுவியா என்று கேட்கக் கூடாது!]

எப்படிச் செய்யணும் மாமு?


ஃபுல்கா சப்பாத்தி - ஆலு-குந்த்ரு சப்ஜியுடன்!

குந்த்ருவை, நீளமாவோ, ரவுண்டாவோ, பொடிப்பொடியாவோ எப்படி உங்களுக்குப் பிடிக்குமோ அப்படி நறுக்கி வைங்க! சோம்பேறிகள் நீட்டு நீட்டா நறுக்கலாம் [இப்ப போட்டிருக்கும் படம், சோம்பேறி வெங்கட் நறுக்கியது! பொடிப்பொடியாவும் சில சமயங்களில் நறுக்குவேன்!] ஆலுவை தோல் சீவி சின்னச் சின்னத் துண்டுகளாகவும், இஞ்சி தோல் நீக்கி பொடிப்பொடியாவும், வெங்காயம் சின்னச் சின்னத் துண்டுகளாகவும் [தோலை நீக்கிட்டுதான்!] நறுக்கணும்!

வாணலிய அடுப்புல வச்சு, கொஞ்சமா எண்ணை விட்டு, அது காய்ந்ததும், கடுகு போடணும். அது வெடிச்சப்புறம், ஜீரகம், சோம்பு போட்டு, இஞ்சி, வெங்காயம் போட்டு வதக்கணும். கொஞ்சமா மஞ்சப்பொடி, பெருங்காயம் போட்டு ஒரு கலக்கு… வெங்காயம் பொன்னிறமா மாறினதும், உருளைக்கிழங்கு போட்டு கொஞ்சம் வதக்..  அப்புறமா குந்த்ரு எனும் கோவக்காய் போட்டுக்கலாம்! இந்தக் கோவக்காய் நெய்வேலில இருந்தவரை சாப்பிட்டதில்லை! ஸ்லேட் தேய்க்க மட்டுமே பயன்படுத்தி இருக்கேன்! உப்பு, மிளகாய் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலா, என எல்லாம் போட்டு ஒரு கலக்கு!

கொஞ்சமா தண்ணீர் விட்டு மூடி வைக்கலாம்! அப்பப்ப மூடி திறந்து ஒரு கலக்கு! கொஞ்சம் அங்கே இங்கே எட்டிப் பார்த்துட்டு வந்து மீண்டும் கொஞ்சம் கலக்கு! நல்ல வெந்த பிறகு அடுப்பை அணைத்து, வாணலியை இறக்கி விட வேண்டியது தான். மேலே தேவைப்பட்டால் தனியா தழைகளை சின்னச் சின்னதா நறுக்கி மேலே தூவலாம்! பெரும்பாலும் வட இந்திய சப்ஜிகளில் கருவேப்பிலை சேர்ப்பதில்லை! கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம்! வேண்டுமென்றால், கிடைத்தால் சேர்த்தா, குந்த்ரு ஒண்ணும் கோச்சுக்காது!

சரியா, இப்படி செய்த ஆலு-குந்த்ரு சப்ஜி ஃபுல்கா என அழைக்கப்படும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன்! செய்து பாருங்களேன்!

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

22 கருத்துகள்:

  1. உருளையையும், கோவையையும் இதுவரை ஜோடி சேர்த்ததில்லை. செய்து பார்த்துடுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோடி சேர்த்துப் பாருங்கள்... பார்த்து விட்டு சொல்லுங்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் இந்த ஆலு!மக்களுக்கு காம்பினேஷனா இல்லையே லாலு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களா... அப்படின்னா - லாலு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  3. இதெல்லாம் நான் எங்க பண்ணறது... யாரேனும் பண்ணித்தந்தால் சாப்பிடலாம். எனக்கென்ன 'ஹேமா ஆன்டி' போன்று பக்கத்து வீடுகளில் யாரேனும் இருந்து செய்தவைகளை சாம்பிள் கொடுக்க இருக்கிறார்களா..

    பயணத்தோட, தில்லில நீங்கள் இதுமாதிரி நிறைய சப்ஜிக்களையும் முயற்சிக்கிறீங்க போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்து வீட்டில் ஹேமா ஆன்டி - அது யார்? நீங்களே பண்ணி சாப்பிடலாம்!

      புதுசா முயற்சிக்கல! இங்கே வடக்கத்தியர்கள் செய்வதுண்டு. நானும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. கோவக்காய் மாதிரியே உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கினால் லுக்ஸ் சூப்பராக இருக்கும். சோம்பலாக இருந்தால் வெங்காயத்தை நீக்கிடலாம். அனாவசியமாய் ஆபீஸ் போகுமுன் அழ வேண்டாம். நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயமும் உருளைக்கிழங்கும் நீள வாக்கில் - அப்படியும் செய்வதுண்டு! வெங்காயம் - அழுகை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா...

      நீக்கு
  6. ஆஹா வாயில் நுழையாத பெயர் ஆனா சமையல் சூப்பர், சப்பாத்தி எப்படி பூரிபோல வந்திருக்கு?:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்ஜி வாயில் நுழைந்தால் போதும்... பெயர் நுழையத் தேவையில்லை! :)

      இது ஃபுல்கா என அழைக்கப்படும் சப்பாத்தி - தவாவில் போட்டு இரண்டு மூன்று முறை திருப்பிய பிறகு நேரடியாக தணலில் காட்டி செய்வது. அதான் இப்படி! எடுத்த உடன் உப்பலாக இருக்கும். கொஞ்சம் நேரத்தில் தட்டையாகிவிடும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  7. அடிக்கடி செய்திருக்கேன். குஜராத், ராஜஸ்தானில் கோவைக்காயை டின்டோரா என அழைப்பார்கள்! :) இப்போல்லாம் கோவைக்காய் சாப்பிடுவதில்லை. முதல் முதல் கோவைக்காயைச் சமைக்கலாம் என்று தெரிந்து கொண்டதே என் சித்தி வீட்டில் தான்! (அசோகமித்திரன்) அவங்க தொண்டங்காய் என அழைப்பார்கள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆந்த்ராவில் இதற்குப் பெயர் தொண்டக்காய்! அது தான் உங்கள் சித்தி தொண்டங்காய் என்று சொல்வாரோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  8. சாப்பாட்டுப் பதிவுன்னா தவறாம வந்துடுவேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டுப் பதிவுன்னா.... :) அப்படியாவது வந்தீங்களே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

      நீக்கு

  9. ///வாணலிய அடுப்புல வச்சு, கொஞ்சமா எண்ணை விட்டு, அது காய்ந்ததும், கடுகு போடணும்.///


    ஹீஹீஹீ எனக்கொரு சந்தேகம் எண்ணெய் காய்ஞ்சு போச்சுன்னா வாணலி வெறுமனதானே இருக்கும் அதில் கடுகு போடுவதற்கு பதிலாக எண்ணெய் இல்லாத வாணலியில் கடுகு போட்டா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல டவுட்டு உங்களுக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  10. வெங்கட்ஜி இதுவரை கோவைக்காயுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்ததில்லை. உங்கள் ரெசிப்பி சூப்பராக இருக்கிறது...செய்துவிட வேண்டியதுதான். நானும் சோம்பேறிதான் நீள நீளமாகத்தான் கோவைக்காயைக் கட் செய்வேன்...சரி வெங்கட்ஜி தாளித்த பிறகு முதலில் கோவைக்காயைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு கொஞ்சமாக வெந்ததும் உருளையைச் சேர்க்கலாம் இல்லையா...ஏனென்றால் கோவைக்காய் வேக நேரமெடுக்குமே உருளை சீக்கிரம் வெந்துவிடுமே...பொடு தூவுவதிலும் உங்களைப் போல்தான் ஜி. அருகில் என்ன பொடி இருக்கிறதோ அதையும் சேர்த்து விடுவேன்..ஹிஹிஹி...இங்கு தனியா சேர்த்து ஒரு கறி பௌடர் செய்து வைத்துக் கொள்வது உண்டு இல்லையா அது வீட்டில் எப்போதுமே இருக்கும்...அதையும் கூட சில சமயம் கண்ணில் பட்டது என்றால் சேர்த்துவிடுவேன்...

    மிக்க நன்றி ஜி!! ஆலு இருக்கிறது. இதோ கோவைக்காய் வாங்கச் செல்கின்றேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  11. ஜி ஆலு குந்த்ரு சப்ஜி செய்து சாப்பிட்டாச்சு சூப்பர்!!! நல்ல காம்பினேஷன் என்று சாப்பிட்டவர்களும் சொன்னார்கள். மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... செய்து பார்த்தாச்சா.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....