எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, March 20, 2017

ஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….


ஹனிமூன் தேசம் – பகுதி 4

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பியாஸ் நதியில் ராஃப்டிங்.....


குலூ மணாலி என்றதுமே அங்கே சென்று வந்தவர்களுக்கு நினைவுக்கு வரும் விஷயம் பனி படர்ந்த மலைகள், அங்கே இருக்கும் கடும் குளிர், கிடைக்கும் பழங்கள் – முக்கியமாக ஆப்பிள்கள்… இதை எல்லாவற்றையும் விட இன்னும் அதிகமாக நினைவுக்கு வரும் விஷயமாக ஒன்று அங்கே உண்டு! அங்கே இருக்கும் Adventure Sports வாய்ப்புகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள். பாறைகள் நிறைந்த பியாஸ் நதியில், தண்ணீர் வேகமாக அடித்துக் கொண்டு நதியில் ரப்பர் போட்டுகளில் ராஃப்டிங் செய்வது மிகவும் த்ரில்லான அனுபவம்.  அப்படி ஒரு த்ரில் அனுபவம் வேண்டி நாங்களும் அதற்கான இடத்திற்குச் சென்றோம்.

கற்கள் நிறைந்த பியாஸ் நதி.....

எங்கள் குழுவில் பெரும்பாலும் பெரியவர்கள் தான் - அதாவது என்னைவிட பெரியவர்கள்! J என்னையும் நண்பர்களின் இரண்டு பெண்களையும் தவிர அனைவரும் பெரியவர்கள் என்றாலும், ராஃப்டிங் செல்ல தயக்கம் இல்லை – ஒன்றிரண்டு பேர் தவிர! அவர்கள் வரமாட்டேன் என மறுத்தாலும், அவர்களையும் வம்புக்கிழுத்து ராஃப்டிங் செய்தே ஆகவேண்டும் என சொல்லி இரண்டு படகுகளை அமர்த்திக் கொண்டோம். இந்த ராஃப்டிங் செய்யப்போவது காற்றடைத்த ரப்பர் படகுகளில். படகுகளை நாமே செலுத்தலாம் என்றாலும் போதிய அனுபவம் இல்லாமல் பியாஸ் நதியில் ராஃப்டிங் செய்வது ஆபத்தானது.

மேடு பள்ளத்தில் பயணிக்கும் காற்றடைத்த படகு.....

பல இடங்களில் பாறைகளும், பள்ளங்களும் நிறைந்திருப்பதால் படகுகளைச் செலுத்த பயிற்சி பெற்ற ஆட்களுடன் செல்வது நல்லது. குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.


ஏலேலோ ஐலேசா........

Small, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும்.  14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.


இப்படி ஒரு படகில் தான் பயணம்..........
படம் எடுக்கும் பெண் இப்படத்தில் வந்தது தற்செயலே! 

சீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம்.  பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.


நதிக்கரையில் மாலையுடன் தியானம்............

ராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா? இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது.


படகோரத்தில் இருக்கும் கயிற்றை கெட்டியா பிடிச்சுக்கோங்க... பள்ளத்தில் விழுந்தால் கம்பெனி பொறுப்பல்ல!............

படகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார்.  பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம்.  நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்!


பள்ளம் டா பள்ளம்...  இதோ நனையப் போறோம்............

சில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி.  எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த ”கர்மா எனும் 23 வயது இளைஞர்.  எங்களுடன் சேர்ந்து “ஐலேசா பாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார். ஒரு பள்ளம் வரும்போது, எங்களில் சிலரை படகில் முட்டி போட்டு அமர வைக்க, அப்படி அமர்ந்தவர்கள் முழுவதுமாய் நனைந்தார்கள்!


சில்லென்ற தண்ணீரில் முழுக்க நனைஞ்சாச்சு! 
கொஞ்சமா நடுங்க ஆரம்பிக்குமே............

எப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, அலைபேசி, பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது. பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது.  நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு.  படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள்.  நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள். குறுந்தகடு/சேமித்து வைத்த காணொளியை அவ்வப்போது பார்த்து ரசித்துக் கொள்ளலாம்!

மீண்டும் ஒரு பள்ளம்!
மீண்டும் குளிர் நீரில் நனைய, குளிர் விட்டுப்போச்சு!............

உற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங்.  இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.


பயத்தில் எழுந்து நிற்கும் ஒரு பயணி!
விழுந்தால் அவ்வளவு தான்!............

இரண்டு குழுவாக பயணித்ததில் எங்கள் குழுவில் இருந்த அனைவருமே உற்சாகமாகப் பயணிக்க, மற்ற குழுவில் இருந்தவர்கள் கொஞ்சம் பயத்தோடு பயணித்தார்கள்! அந்த படகில் இருந்த சிறுமிகளுக்கு அதில் கொஞ்சம் வருத்தமுண்டு! அவர்களுக்காவே மீண்டும் ஒரு முறை ராஃப்டிங்க் போகலாம் என நினைத்தாலும் செல்லவில்லை! இரண்டு படகுகளுக்கும்/படகோட்டிகளுக்கும் போட்டி வைத்துப் பயணிக்க ரொம்பவே உற்சாகமா இருந்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது! குலூ-மணாலி சென்றால் நிச்சயம் பெற வேண்டிய அனுபவம் இந்த ராஃப்டிங்க்! சென்றால் நிச்சயம் இந்த அனுபவத்தினை அடையுங்கள்…

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

டிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை....

28 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திமணி ஜி!

   Delete
 2. த்ரில்லான அனுபவம். படமெடுத்து சிடி போட 500 ரூபாய் அதிகம் இல்லையோ!

  ReplyDelete
  Replies
  1. அங்கே அவரது உழைப்புக்கான கூலி அது! படகு புறப்பட்டவுடன் அவர் சாலைக்கு ஓடி, பைக்கில் பயணித்து முன்னே சென்று ஆங்காங்கே நிறுத்தி படம்/காணொளி எடுக்க வேண்டும். இப்படி நிறைய முறை ஓட்டம்! சற்றே அதிகம் என்றாலும், நாம் படம் எடுக்க முடியாத நிலையில் இந்த வசதி நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. உண்மையில் திகிலான அனுபவம்தான் நான் இது வரை முயற்சி செய்து கூட பார்க்கவில்லை......

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊரில் இப்படி நிறைய இடங்கள் உண்டே. ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. பியாஜ் நதியில் ராஃப்டிங்க்.. சில்லென்றிருக்கின்றது - பதிவு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
  2. ரிஷிகேஷில் இந்த அனுபவத்தைப் பெற நினைத்தேன் ,என் இல்லாள் அனுமதிக்கவில்லை !கொடுத்து வைத்தவர் நீங்கள் :)

   Delete
  3. கொடுத்து வைத்தவர்! :) பயம் இருந்தால் இப்படி பயணம் செய்யும் அனுபவம் கிடைக்காது. உங்கள் மீது இருக்கும் அன்பின் வெளிப்பாடு காரணமாக தடுத்துவிட்டார் போலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. உங்க ராஃப்டிங்க் அனுபவத்தை படிக்ககும் போது...எங்களுக்கும் இதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆவல் வருகிறது...

  அருமையான அனுபவங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். நல்லதோர் அனுபவம் இது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 6. இதற்குச் செல்லவேண்டும் என்று ரொம்ப வருடங்களாகவே எண்ணமுண்டு. உங்கள் அனுபவம் நல்லா எழுதியிருக்கீங்க. அவ்வளவு தூரம் செல்லும்போது, 500ரூ ஒன்றுமேயில்லை. முடிந்தால் பையனைக் கூட்டிச் செல்லவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள். நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. மிதவைப் பயணம் பற்றி படிக்கும்போதே மயிர்க்கூச்சல் ஏற்படுகிறது. அப்படியென்றால் உண்மையில் பயணிக்கும்போது கேட்கவே வேண்டாம். பயணத்தை வெகு நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. நல்லதொரு பயணம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. தங்களுடன் உலா வரும்போது திகில், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு என்ற அனைததும சேர்ந்துவிடுகிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. அருமையான திகிலான பயணம்.
  படங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. அட! ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படாமல் ராஃப்டிங் போய் வந்த மாதிரி இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 11. பியாஸ் நதி பற்றி பூகோளத்தில் படித்ததோடு சரி . புத்தகத்தில் கருப்பு வெள்ளையாக காவிரிக்கும் பியாசுக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி ஒரு படம் சைடில் இருக்கும் . நிஜ பியாஸின் அழகு வியக்க வைக்கிறது

  ReplyDelete
  Replies
  1. பூகோளப் புத்தகத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 12. பயங்கர திரில்லர் போல இருக்கே...இது வரை இப்படியான இடங்களுக்குச் சென்றதில்லையாதலால் அனுபவம் இல்லை. ஆனால் உங்கள் அனுபவம் வாசித்து நான் செய்வேனா என்ற ஐயமும் வந்துவிட்டது ஹஹ்ஹ்..

  கீதா: நாங்கள் புக்கிங்க் வேறு செய்து சென்றோம் ஆகஸ்ட் இறுதியாக இருந்தாலும் உண்டு என்று ஆன்லைனில் புக் செய்திருந்தோம் ஆனால் நாங்கள் சென்ற அன்று ஆற்றின் போக்கு தன்ணீர் வரத்தினால் சரியில்லை என்று கேன்சல்ட்....

  ஆனால் ராஃப்டிங்க் அனுபவம் உண்டு..சிறிய ராஃப்டிங்க் 8 கிலோமீட்டர் தூரம் பீமேஷ்வரி ராஃப்டிங்க் காவேரியின் மண்ட்யா, கர்நாடகாவில்..நல்ல த்ரில்லிங்க் அனுபவம் இதுவும்....பாதுகாப்பு முறைகள். இங்கு அட்வென்சர் ஆக்டிவிட்டிஸ் இருக்கிறது முன்னதாகவே புக் செய்து கொள்ளலாம்......அதே போன்று ஹோக்கேனக்கல் பரிசல் அனுபவம் இரு முறைகள்...நல்ல அனுபவம்...

  உங்கள் அனுபவம் வாசித்ததும் அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது....நீங்களும் மிகவும் எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது...ஆம் நீங்கள் சொல்லுவது போல் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டும். இப்போது கூட ஜூனில் ஹரித்வார் ரிஷிகேஷ் பயணம் மற்றும் ரிஷிகேஷ் ராஃப்டிங்க் ப்ளான், குர்காவ்னில் இருக்கும் என் தங்கை ப்ளான் செய்கிறாள். அவள் வீட்டில் குடும்ப விழா வருவதால் அங்கு கூடும் குடும்பத்தினர் அனைவரும் செல்லலாம் என்று... என்னையும் கேட்டிருக்கிறாள். தீர்மானிக்கவில்லை...

  ரசித்து வாசித்தேன் ஜி!!! தொடர்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ரிஷிகேஷ் பயணம் வரப் போகிறீர்களா? அங்கேயும் ராஃப்டிங் செய்ய நல்ல வசதிகள் உண்டு. கங்கையில் ராஃப்டிங் நன்றாகவே இருக்கும் கீதா ஜி!.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. /
  டிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை..../ அதானே பார்த்தேன் முன்பே படித்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....