எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, March 25, 2017

ஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர விடாத பைரவர்


ஹனிமூன் தேசம் – பகுதி 6

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


பெண்களுக்கான தொப்பிகள் - மஃப்ளருடன் சேர்ந்து....
 
குலூ-மணாலி சாலையில் மணாலி நோக்கிச் செல்லுகிற போது நிறைய கடைகள் உண்டு. பெரும்பாலான கடைகள் கம்பளி, ஸ்வெட்டர் போன்ற குளிர் கால உடைகள் விற்கும் கடைகள் தான். சாலையோரங்களில் இப்படி நிறைய கடைகள் உண்டு! எல்லா கடைகளிலும் ஒரிஜினல் கம்பளி உடைகள் மட்டுமே கிடைக்கும் என்ற விளம்பரம் இருக்கும். ஷால் என ஹிந்தியில் அழைக்கப்படும் சால்வை, ஸ்வெட்டர், குளிருக்கான ஜாக்கெட் [ஆண்களுக்கும் உண்டு!], தொப்பி, கையுறைகள், மஃப்ளர் என எல்லாம் இங்கே கிடைக்கும்.  பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கே செல்லும்போது இப்படி ஏதாவது ஒரு கடைக்குள் நுழையாமல் திரும்புவதில்லை.

கூடவே உங்களை அழைத்துச் செல்லும் வாகன ஓட்டியும் இப்படி ஏதாவது ஒரு கடைக்கு அழைத்துப் போய் விடாமல் இருக்க மாட்டார்கள் – அவர்களுக்கும் கடைக்காரர்களுக்குமான டீல் அது! எங்கள் வாகன ஓட்டியான ஜோதியிடம் ஏதாவது ஒரு கடையில் நிறுத்தச் சொல்ல, அவர் அவருக்குத் தெரிந்த கடை வாசலில் நிறுத்தினார் – மற்ற ஓட்டுனர்களைப் போல அல்லாது இந்தக் கடைக்காரர் தனக்கு அவ்வப்போது கம்பளி இலவசமாக தருவார் என்று சொன்னார். பெரும்பாலும் சுற்றுலா செல்லும்போது எந்த வித Purchase-உம் நான் செய்வதில்லை. தூக்கிக் கொண்டு வர சோம்பல் ஒரு காரணம்! மற்றொன்று, பல சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றுவதுண்டு என்பது!


மெத்து மெத்தன்ற கைப்பைகள் - பெண் குழந்தைகளுக்கு....

இருந்தாலும், குழுவினருக்கு இந்தக் கடைகளில் ஏதாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதால், வண்டியை அப்படி ஒரு கடையில் நிறுத்தி அனைவரும் உள்ளே நுழைந்தோம். பெரிய கடை – எங்கு பார்த்தாலும் குளிர்கால உடைகள், கம்பளி, போர்வை, Carpet என நிறைந்து இருந்தது. நிறைய சிப்பந்திகள் – சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைந்ததும் வாங்க வாங்க என அழைத்து விற்பனையை துவக்க வழி வகுக்கிறார்கள். எதைப் பார்த்தாலும் நன்றாகவே இருக்கிறது. ஜோதி தேநீர் சொல்ல, எங்களுக்குத் தேநீர் வந்தது. மற்றவர்கள் கடைக்குள் இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, நானும் ஜோதியும் வெளியே வந்துவிட்டோம்.

தேநீர் குடித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்த போது ஒரு கருப்பு வண்ண பைரவர் எங்கள் அருகில் வந்தார். ஜோதி அந்த பைரவரைப் பார்த்த உடன், “இப்போது பாருங்கள், அந்த நாய், நம் பாதம் மீது பாதம் வைத்து நகர விடாது” என்று சொல்ல, அதே மாதிரி செய்தது! வண்டிக்குள் இருந்த பைகளில் பிஸ்கெட் இருப்பது நினைவுக்கு வர, வண்டியிலிருந்து ஒரு பாக்கெட் பிஸ்கெட் எடுத்து வந்தேன்.  நான் அமர்ந்திருக்க, என் பாதம் மீது அந்த பைரவரின் பாதம்! பிஸ்கெட் கொடுக்க, கருக் மொறுக் என்று சாப்பிடுகிறார்! இருக்கும் அத்தனை பிஸ்கெட் கொடுத்த பிறகும் காலை எடுக்க மறுக்கிறார் பைரவர்!


நகர்ந்தே மவனே.... அப்புறம் பார்த்துக்க....
என் பாதம் மீது பாதம் வைத்து அமர்ந்திருக்கும் பைரவர்!

ஓரிடத்தில் நின்றாலும், எங்காவது அமர்ந்து விட்டாலும், நம்மை நகர விடாமல் கால்களில் தனது ஒரு காலை வைத்து விடுகிறார் அந்த பைரவர். சிறிது நேரம் நகராமல் இருந்து சில புகைப்படங்கள் எடுத்த பிறகு, ஒரு பாக்கெட் பிஸ்கெட் கொடுத்த பின்னும் நகர விடாமல் இருக்க, “எலே, எவ்வளவு நேரம் உன் காலைப் பிடிச்சு கெஞ்சறது, இன்னும் கொடுக்கிறயா, இல்லைக் கடிக்கவா?” என்று ஒரு பார்வை பார்க்க, ஒழுங்கு மரியாதையா, அந்த இடத்தினை விட்டு நகர்ந்து, நடக்க ஆரம்பித்தேன்! குலூ சென்று நாய்க்கடி வாங்க நான் தயாராக இல்லை!

கடைக்குள் நுழைந்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என மீண்டும் கடைக்குள் செல்ல, பெரும்பாலானவர்கள் எதையாவது வாங்கிக் கொண்டிருந்தார்கள்! வாங்கியவற்றைப் பார்த்து, நல்லா இருக்கு என்று சொல்வதோடு நிறுத்திக் கொண்டேன். விதம் விதமான உடைகள், எத்தனை எத்தனை வண்ணங்களில்! பார்த்தால் நிச்சயம் எதை வாங்குவது என்ற குழப்பம் வந்து விடும்! மிகவும் மெலிதான, ஆனால் குளிருக்கு இதமான ஷால்கள் அதிக விலையில் கிடைக்கின்றன அங்கே!

பஷ்மினா ஷால் – பஷ்மினா என்பது ஹிமாலய மலைப்பிரதேசங்களில் உலவும் ஒரு ஆட்டின் முடியில் இருந்து செய்யப்படும் குளிர்கால உடை. அதுவும் அந்த ஆட்டின் கழுத்துப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் முடிகள் தான் ரொம்பவே மென்மையாக, மெல்லியதாக இருக்கும். அந்த முடிகளைத் தான் இந்த ஷால்கள் செய்யப் பயன்படுத்துகிறார்கள். ரொம்பவே மெலிதான முடி இது – 12 மைக்ரான்கள் மட்டுமே இருக்குமாம்! மெலிது என நாம் நினைக்கும் நமது தலை முடி கிட்டத்தட்ட 200 மைக்ரான்கள் அளவு கொண்டவை என்று சொன்னால், நமது முடியை விட எத்தனை மெலிதாக இருக்கும் இந்த பஷ்மினா என்பது புரியும்!

இப்படி மெலிதான முடிகளில் இருந்து செய்யப்படும் அந்த ஷால்கள் எத்தனை மென்மையாக இருக்கும்! இவ்வளவு மென்மையாக இருந்தாலும், எப்படி அந்த ஹிமாலய மலை ஆடுகள் குளிரைத் தாங்க ஏதுவாய் இருந்த முடிகள் உடைகளாக ஆகும்போது குளிர் தாங்கும் விதமாக இருக்கும். பஷ்மினா, கனி, கஷ்மோரா என நிறைய வகை ஷால்கள், குளிர்கால உடைகள் இங்கே உண்டு. எல்லாவற்றையும் பார்த்து, மற்றவர்கள் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்து வண்டியில் அமர எங்கள் பயணம் தொடர்ந்தது. 

மதியம் கொஞ்சம் நொறுக்குத் தீனி மட்டும் சாப்பிட்டது. இரவு வரை நிச்சயம் தாங்க முடியாது! குளிர் காலங்களில் அதிகமாகவே பசி எடுக்கும்! அதனால் வழியில் எங்காவது சாப்பிடலாம் என முடிவு செய்து ஒரு சாலையோர உணவகத்தில் வண்டியை நிறுத்தினோம்.  எங்கே, என்ன சாப்பிட்டோம், அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்….

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 comments:

 1. கருப்பு பைரவர் கவர்கிறார். என்ன ஒரு அப்ரோச்!

  ReplyDelete
  Replies
  1. இந்த பயணத்தில் இரண்டு பைரவர்கள் பாடம் கற்பித்தார்கள்... இன்று இந்த கருப்பு பைரவர்.... மற்றொன்று Brown பைரவர்... அந்த பாடம் வருகின்ற ஏதாவது ஒரு பதிவில்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. மணாலி நான் நிச்சயமாக போக நினைத்திருக்கும் இடம். அங்கிருந்து பஞ்ச நாத் கோவில்களுக்கும் நடந்து செல்ல உடல் உறுதி, ப்ராப்தம் இருக்குமா தெரியலை.

  ஷால் விலைலாம் சொல்லலியே. அதைவிட விலை குறைவாக எங்கே கிடைக்கும்? (விலை அதிகம்னு எழுதியிருக்கறதுனால கேட்டேன்)

  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மணாலி சென்று வாருங்கள். நல்ல இடம்.

   ஷால் விலை - அதன் தரத்தினைப் பொறுத்து என்று சொல்வார்கள். தரம் நல்லதா கெட்டதா என்பது நமக்குப் பார்க்கத் தெரிவதில்லை. நண்பர் 4500 ரூபாய் கொடுத்து ஒரு ஷால் வாங்கினார். பஷ்மினா ஷால் தான்! சரியான விலையா என்பது தெரியாது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. கம்பிளியின் மென்மையைச்
  சொன்னவிதம் அருமை
  பைரவரின் சாமர்த்தியம்மனம் கவர்ந்தது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. தொடர்கின்றோம் ஜி!

  கீதா: பஷ்மினா எம்ப்ராய்டரி என்று தையல்வெலைப்பாடும் அவர்களது ஸ்பெஷாலிட்டி. அந்த வேலைப்பாட்டுடன் ஷால்கல், சூட்கள் எல்லாம் கிடைக்கும். விலை அதிகம்..நான் பார்த்ததோடு சரி. வாங்கவில்லை. நானும் எங்கு சென்றாலும் அந்த ஊருக்கு என்று ஏதேனும் ஸ்பெஷல் இருந்தால் சிறியதாக பட்ஜெட்டுக்குள் வருவதாக இருந்தால் மட்டுமெவாங்குவேன்....பொதுவாக வானும் பழக்கம் இல்லை...

  ஆனால் மிகவும் அழகாக இருக்கும்...பைரவர் அங்கும்...அங்குள்ள பைரவர்கள் நல்ல முடியுடன் கஷ்க் முஷ்க் என்று இருப்பார்கள். ஸ்வாரஸ்யமான பதிவு..

  ..தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. பட்ஜெட்டுக்குள் வருவதாக இருந்தால் மட்டும் வாங்குவது நல்லது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. Replies
  1. இந்த பைரவர் தான். அவர் கால் என் கால் மீது வைத்திருக்கிறார்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. காஞ்சி புரத்திலும் இந்தப் பழக்கம் அதாவது பயணிகளை பட்டு நெசவு செய்து விற்கும் கடைகளுக்கு வாகன ஓட்டிகள் அழைத்துச் செல்வது. அவர்களுக்கும் கமிஷன் உண்டாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 7. அந்த தொப்பிகளை ஆர் கே நகருக்கு கொண்டு வந்தால் செமையா விற்கலாம் :)

  ReplyDelete
  Replies
  1. தொப்பி.... தொப்பி.... :)


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. black mail bairavar ...ha ha ha

  ReplyDelete
  Replies
  1. And his colour is black too! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 9. கைப்பைகள் ...அழகாக இருக்கு


  black dog
  black mail ....!

  ReplyDelete
  Replies
  1. கைப்பைகள் பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 10. பைரவரின் செயல் விந்தைதான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா. மனிதர்களின் கால் மீது தன் கால் வைத்து முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. தொடர்கிறேன் உணவகத்தில் கிடைத்த அனுபவம் பற்றிய அறிய!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. பைரவரைப் பார்த்தால் எங்க மோதி தான் நினைவில் வருது. பாஷ்மினா ஷால் என்னிடமும் ஒன்று உள்ளது! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....