வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி மூன்று


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் – அப்துல் கலாம்.
 
நானும் தினமும் அதிகாலையில் எழுந்துவிட நினைத்துக் கொண்டு படுக்கிறேன் – ஆனாலும் காலை எழும்போது நேரமாகிவிடுகிறது – அதுவும் இந்தக் குளிர்காலத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டாமே என்ற எண்ணமே அதிகம் வருகிறது! ஆனாலும் எழுந்து தானே ஆக வேண்டும்!



இந்தப் பயணத் தொடரின் முதல் இரண்டு பகுதிகள்…



வெளியே பனிப்பொழிவு என்பதால் மூடியிருந்த அறைக்குள்ளும் குளிர் அதிகமாகவே தெரிந்தது. கூடவே ரூம் ஹீட்டர்கள் இல்லாத காரணத்தால் குளிருக்கு உடல் பழகும் வரை தூக்கம் வரவில்லை. சில நிமிடங்கள் படுக்கையில் படுத்தபடியே நானும் பத்பநாபன் அண்ணாச்சியும் பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் உடல் சூடு படுக்கைக்கும் பரவ, உறக்கம் வந்தது. காலையில் பொறுமையாக எழுந்திருந்தால் போதும் என்ற முடிவுடன் உறக்கத்தைத் தழுவினோம். காலை எழுந்த போது மணி 07.30 மணி! அறையின் திரைசீலைகளை விலக்கி, கண்ணாடி வழியே வெளியே பார்க்க, சாலையின் ஓரங்களில் நிறுத்தி வைத்திருந்த வண்டிகள் அனைத்திலும் பனி கட்டியாக படர்ந்திருந்தது.  அந்தக் குளிரிலும் சில சுற்றுலா வாசிகள் வெளியே உலாவிக் கொண்டிருந்தார்கள். அப்போதும் பனிப்பொழிவு இருந்ததால் அவர்களுக்கு அதீத உற்சாகம்.  அறையிலேயே தேநீர் தயாரித்துக் கொள்ளும் வசதியும் பொருட்களும் இருந்தாலும் ஏனோ தேநீர் குடிக்கத் தோன்றவில்லை. சரி குளிப்பதற்கு முன்னர் கொஞ்சம் நடந்து வரலாம் என இருவருமாக வெளியே சென்றோம்.



மிகவும் ரம்மியமான காட்சியாக தூரத்தில் மலைப்பகுதியில் பனிபடர்ந்திருக்க நீண்ட தூரம் நடந்து சென்றோம். பல வாகனங்களில் பனி படர்ந்திருக்க, எங்களுக்குள் உறங்கிக் கிடக்கும் குழந்தைமை வெளியே வந்தது! கையுறைகளைக் கழற்றி விட்டு வாகனங்களின் பனிபடர்ந்திருந்த இடத்தில், விரல்களால் பெயர் எழுதினோம், சில வடிவங்களையும் வரைந்தோம். அந்த நேரத்தில்  கிடைத்த மகிழ்ச்சியில் ரொம்பவே திளைத்திருந்தாலும், சில நொடிகளில் எங்களின் அந்த செய்கை தவறு என்பதை விரைவில் புரிந்து கொண்டோம் – கைவிரல்கள் அப்படியே மரத்துப்போனது – சொன்ன சொல் கேட்காத பிள்ளை மாதிரி அசைக்க முடியவில்லை! கூடவே வலியும்! சும்மாவா சொன்னார்கள் – ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாது என்று! கையுறைகளைப் போட்டுக் கொண்டு கைகளை தேய்த்துக் கொண்டே மேலும் நடந்தோம். அழகான காட்சிகளை கண்களால் பருகிய நாங்கள் தேநீர் பருகவில்லை! கிடைத்தால் தானே!

அப்படியே உலா வந்து எங்கள் தங்குமிடம் திரும்பினோம். கீழே எங்கள் ஓட்டுனர் தென்பட, அவரிடம் பேசியதில் ஷிம்லாவை அடுத்த குஃப்ரியில் அதீத அளவில் பனிப்பொழிவு என்றும் ஷிம்லாவிலிருந்து சென்ற பல வாகனங்கள் அங்கே மாட்டிக் கொண்டன என்றும் தெரியவந்தது. ஷிம்லாவிலிருந்து பனியை அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரங்கள் அனுப்பி சாலையைச் சீரமைத்த பிறகு தான் சுற்றுலாப் பயணிகள் திரும்பினார்கள் என்றும் 20 கிலோமீட்டர் தொலைவினைக் கடந்து ஷிம்லா திரும்ப நான்கு மணிநேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்ததாம் என்றும் சொன்னார் எங்கள் ஓட்டுனர்.  அவரும் காலையில் அப்படியே ஒரு நடை சென்று வந்தேன் என்றார்.  பத்தரை மணிக்கு மேல் புறப்படலாம் என அவரிடம் சொல்லி விட்டு அறைக்குத் திரும்பினோம். வென்னீர் வசதிகள் இருந்தாலும் அந்தக் குளிருக்கு அப்படி ஒன்றும் சூடாக இல்லை – வெதுவெதுவெனவே இருந்த வென்னீரில் ஒரு மாதிரியாகக் குளித்துத் தயாரானோம்.  தங்குமிடத்திலேயே காலை உணவும் உண்டு – Bed and Breakfast! காலை எட்டு மணி முதல் பத்து மணி வரை தான் என்றும், நான்காவது மாடியில் Buffet என்றும் சொன்னார் வரவேற்பரையில் இருந்த சிப்பந்தி.



நான்காவது மாடிக்குச் செல்ல, அங்கே வரிசையாக உணவுப் பண்டங்கள் காத்திருந்தன – பழரசம், ஓட்ஸ், சூடான பால், ஆலு பராட்டா, தொட்டுக் கொள்ள தயிர், ஊறுகாய், இட்லி, அவல் உப்புமா, ப்ரெட்-பட்டர், காஃபி/தேநீர் என வரிசையாக இருந்தது.  எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம்! நான் ஒரு பராட்டாவும், கொஞ்சம் அவல் உப்புமாவும் எடுத்துக் கொண்டேன். கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும்! ஆனால் அங்கே இருந்த பலரைப் பார்த்தபோது எனக்கே வயிறு நிரம்பிவிட்டது போன்ற உணர்வு – வளைத்துக் கட்டி அடிக்கிறார்கள். தேனிலவிற்கு வந்த தெலுங்குத் தம்பதி ஒருவரைப் பார்க்க அவர்கள் தட்டைப் பிடித்துக் கொள்ளக் கூட இடம் இல்லை! நிரம்பி வழிந்தது! இருவருமே இப்படி எடுத்துக் கொண்டு உட்கார்ந்து கொள்ள இடம் தேடியபோது தெலுங்கில் பேசியது காதில் கேட்டது – காலையிலேயே நல்ல சாப்பிட்டு விட்டால், மதிய உணவுக்குத் தனியாக செலவு செய்ய வேண்டாம்! என்னா ப்ளானிங்! அதற்காக இப்படி மூக்கு முட்ட உண்டால், எப்படி ஊர் சுற்றுவார்களோ? அங்கே இருந்த சிப்பந்திகள் நக்கலாக சிரித்து ஒருவருக்கொருவர் இஷாராவில் (சங்கேத பாஷையில்) காண்பித்தது பார்த்து எனக்கும் சிரிப்பு வந்தது.

கொஞ்சம் தேநீர் அருந்தி, அறைக்குத் திரும்பிய நாங்கள் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வரவேற்பு அறைக்குத் திரும்பி கொடுக்க வேண்டிய பணம் கொடுத்து, அறையைக் காலி செய்து கொண்டு கீழே இறங்கினோம்.  இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். இந்தத் தங்குமிடத்தில் நிறைய ஓவியங்கள் மாட்டி வைத்திருந்தார்கள். பல ஓவியங்கள் ரொம்பவே அழகாக இருந்தன.  அவற்றை எல்லாம் ரசித்தபடி வெளியே வந்தோம். ஓட்டுனர் தயாராக இருந்தாலும் எங்கள் வாகனம் தயாராக வில்லை – இரவு முழுவதும் பனிப் பொழிவு என்பதால் வாகனத்திற்கும் குளிரடித்துவிட்டது. வாகனத்தினை சூடேற்றும் விதமாக Ignition On செய்து நீண்ட நேரம் Idle-ஆக ஓடவிட்ட பிறகே வண்டியை எடுக்க வேண்டியிருந்தது. சுமார் பதினைந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு வண்டியை நகர்த்தினார் ஓட்டுனர்.  வழியில் எங்கேயும் நிறுத்தாமல் வண்டி தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.  மாலைக்குள் வீடு திரும்பலாம் என்பது தானே எங்கள் திட்டமும்! மதியம் இரண்டரை மணிக்கு மேல் கொஞ்சமாகப் பசி வர, ஓட்டுனரிடம் சொன்னோம்.  அப்போது அம்பாலா அருகே இருந்தோம். கர்னால் பகுதிக்குச் சென்று சாப்பிடலாம் என்று சொல்லி விட அந்தப் பகுதிக்குச் சென்று சேர்ந்த பொழுது மணி மூன்றரை!



நீல்கந்த் ஸ்டார் (ஸ்டார் தாபா) என்ற உணவகத்தில் தந்தூரி ரொட்டி, தால் மக்கனி, மிக்ஸ் வெஜிடபிள், மலாய் கோஃப்தா என கலந்து கட்டிச் சொன்னோம். கூடவே வெங்காயம், வெள்ளரி, முள்ளங்கி சாலட்! பக்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் பச்சை மிளகாய் – கடித்துக் கொள்ள வசதியாக, ஒவ்வொரு பச்சை மிளகாயின் நுனியிலும் ஒரு டூத் பிக்! நல்ல ஐடியா தான்! சிறிது நேரம் காத்திருந்த பின்னர் நாங்கள் சொன்ன உணவுப் பதார்த்தங்கள் வந்து சேர மூவரும் சாப்பிட்டு முடித்தோம்! மூன்று பேருக்கும் சேர்த்து இந்த உணவுக்கான தொகை 971/- (வரி உட்பட!) பொதுவாக உணவகங்களில் சாப்பிட்ட பிறகு பில் கொடுக்கும்போது கல்கண்டு, சோம்பு, அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்த சோம்பு ஆகியவை தருவதுண்டு.  இந்த உணவகத்தில் கூடவே சில வெல்லக் கட்டிகளும் வைத்திருந்தார்கள். குளிர் காலத்தில் இங்கே தினமும் உணவு உண்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது வழக்கம்.  மீண்டும் கேட்டு வாங்கி மூவரும் வெல்லம் சாப்பிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.   உணவும் நன்றாகவே இருந்தது என்பதையும் சொல்லி விடுகிறேன்.

அங்கிருந்து புறப்பட்ட எங்கள் வாகனம் வழியில் வேறெங்கும் நிற்கவில்லை. நேரே தில்லி தான்! என்னை முதலில் வீட்டின் அருகே இறக்கி விட்டு பத்மநாபன் அண்ணாச்சி அவரது வீட்டிற்குச் சென்றார் – வீடு சேர்ந்த போது மாலை 07.30 மணி.  சனிக்கிழமை காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டு ஞாயிறு மாலை 07.30 மணிக்கு தில்லி திரும்பினோம்! இந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.  தொடர்ந்து மூன்று நாட்களாக பகிர்ந்து கொண்ட இந்தப் பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். விரைவில் வேறு ஒரு பயணத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் – அது சற்றே நீண்ட பயணம் என்பதால் பதிவுகள் நிறையவே இருக்கலாம் என்று எச்சரிக்கிறேன்! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

22 கருத்துகள்:

  1. நல்ல பதிவு. பனிப் பொழிவில் உங்களுடன் நடந்துவந்த உணர்வு.

    படங்கள்தாம் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள்தாம் மிஸ்ஸிங்! - அலுவலகப் பயணம் என்பதால் கேமரா எடுத்துச் செல்லவில்லை. என்னிடம் இருக்கும் அலைபேசியின் கேமரா அவ்வளவு நன்றாக இல்லை நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நிறைவான, மகிழ்வான பயணம்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. இங்கு மிதமான பனிப்பொழிவு, எலும்பை ஊடுருவும் குளிர். சரியாக உங்களின் ஷிம்லா பதிவு!! எப்படி இன்று வந்தேன் :-) என்னைப் பற்றி எழுதியிருக்கிறார் பாரென்று பனி இழுத்துவந்துவிட்டது போல. அருமையான பதிவு அண்ணா. முந்தையப் பதிவுகளையும் படிக்கிறேன்.
    பச்சை மிளகாய் பல்குச்சி பிரமாதம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி கிரேஸ்.

      பச்சை மிளகாய் பல்குச்சி - நல்ல ஐடியாவாக இருந்ததால் இங்கேயும் பகிர்ந்து கொண்டேன். சிலருக்கு உதவலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பனியில் கை விரல்கள் மரத்துப் போகும் அனுபவம் எங்களுக்கும் இங்கே ஹூஸ்டன் ஐஸ்லாந்தில் ஏற்பட்டது. இப்போவும் இங்கே இரவுக்குளிர் 2 டிகிரி வரை போய்விடுவதால் கைவிரல்களை எல்லாம் மூடிக் கொண்டு தான் தூங்க வேண்டி இருக்கு. இல்லைனா சுண்டு விரலோ, கட்டை விரலோ மரத்துப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரும் இப்படிச் சில அனுபவங்கள் உண்டு கீதாம்மா... இந்த முறை இன்னும் அதிகம் வலித்ததோ என்று தோன்றியது!

      தூக்கத்தில் போர்த்திக் கொண்டிருக்கும் ரஜாய்/கம்பளி விலகினால் அவ்வளவு தான் - ரொம்பவே சில்லிட்டுப் போகிறது - இங்கேயும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஷிம்லா அனுபவத்தில் உணவு வகைகள் மனதைக் கவர்ந்தன. நல்லதொரு அனுபவம். ஓட்டல் அறையில் ரஜாய் கொடுக்கலையோ? அல்லது ரஜாய்க்குள்ளே சூடு பரவ நேரம் எடுத்ததோ? ஆனாலும் குளிரைத் தாங்கத் தான் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜாய் உண்டு! கம்பளியும் உண்டு! அதனுள் சூடு பரவ நேரம் எடுத்தது கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பனிப்பயணம் இனிமையாக நிறைவு பெற்றது போலும்.  ப்ரீசரில் உள்ள ஐஸ் கட்டிகளையே சிறிது நேரத்துக்குமேல் கைகளால் ஸ்பரிசிக்கமுடியாது.  வலிக்கும். அங்கு எப்படி இருந்திருக்கும் என்று உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இனிமையான பயணமாகவே அமைந்தது ஸ்ரீராம். பனிக்கட்டிகளை நீண்ட நேரம் கையில் வைத்திருப்பது கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. இரசித்துப் படித்தோம்.அந்த வெல்லம் குறித்த தகவல் புதியது..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்லம் குறித்த தகவல் - ஆமாம் ரமணி ஜி. இங்கே குளிர்காலத்தில் சாதாரணமாகவே வெல்லம் அதிகம் பயன்படுத்துவோம். சும்மாவே சாப்பிடுவது உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. குளுமையான பயணம் அருமை.
    படங்கள் அழகு. //ஒவ்வொரு பச்சை மிளகாயின் நுனியிலும் ஒரு டூத் பிக்! நல்ல ஐடியா தான்!//

    கடித்தீர்களா? காரம் இல்லையா?
    வெல்லம் குளிருக்கு சூட்டை தரும் என்பதால் உண்பார்களோ!
    பயணம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டூத் பிக் - ஐடியா நன்றாக இருந்ததால் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன் கோமதிம்மா... காரம் உண்டு! இங்கே சப்பாத்தியுடன் இப்படி பச்சை மிளகாய் கடித்துச் சாப்பிடுவது - குறிப்பாக உணவகங்களுக்குச் செல்லும்போது - எனக்கும் வழக்கமாகி விட்டது!

      வெல்லம் சூடு தரும் என்பதால் தான் குளிர் சமயத்தில் உண்பது வழக்கமாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. ஷிம்லா பயணம் அருமையாக இருந்தது. அருமையான
    பனிப்பொழிவு. இதமான் உணவு வகைகள்.
    நம் ஊரில் என்று மட்டும் இல்லை.

    அமெரிக்க, ஸிவிஸ் இடங்களிலும் இரண்டு மணி நேரம் அங்கேயே உட்கார்ந்து
    மூக்குப் பிடிக்க சாப்பிட்டு டேக் அவே எடுத்துச் செல்லும்
    வழக்கம் உலக்மெங்கும் நடக்கிறது. இண்டோனேசியா ,பாலியில் பெரிய டைனிங்க் ஏரியா.
    ஒரு தடவைக்கு இரு தடவை சென்று சாப்பிடுகிறவர்கள் கூட
    உண்டு வெங்கட். இடையூறில்லாமல் பயணம் பூர்த்தி யானது மகிழ்ச்சி.
    மீண்டும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூக்கு பிடிக்க சாப்பிடும் வழக்கம் பரவி தான் இருக்கிறது - அடுத்த வேளைக்கும் சேர்த்துச் சாப்பிடுவதில் நம்மில் பலருக்கும் உடன்பாடு இல்லை!

      இடையூறில்லாத பயணம் என்பதால் மகிழ்ச்சி தான் வல்லிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. கூடவே வந்தது போன்ற உணர்வு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வெள்ளை பயணம்...பனிப்பொழிவில்..பணிக்காக..


    அடுத்த பயணத்தின் இனிய காட்சிகளை காண வெகு ஆவல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளை பயணம் - :) உண்மை தான் அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....