புதன், 26 பிப்ரவரி, 2020

உண்மையான காதல் எது – மிர்சா காலிப்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பைப் பெறுவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்!


உண்மையான காதல் எது? உண்மையான காதல் எது என்பதைச் சொல்லும் ஒரு கதை உண்டு... நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்! 

அவன் ஒரு வேலைக்காரன் – மலை உடைப்பது அவனது வேலை. கைகளில் மலை உடைப்பதற்கான ஆயுதத்துடன் நடந்து செல்லும் அவன் செல்லும் வழியில் ஒரு மாளிகை! அந்த மாளிகையின் உப்பரிகையில் ஒரு பெண். அவளைப் பார்த்த நாளிலிருந்தே வேலைக்காரனுக்கு அவள் மீது தீராத காதல்! எப்படியாவது அவளை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவனது ஆசை. மாளிகை உப்பரிகையில் பார்த்த பெண்ணுக்கும் வேலைக்காரன் மீது ஒரு வித ஈர்ப்பு. அவ்வப்போது பார்ப்பதும், புன்னகை புரிவதுமாக வேலைக்காரனின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.  சில நாட்களில் மாளிகையிலிருந்து அப்பெண்ணின் தகப்பனும் வேலைக்காரனின் செய்கைகளைக் கவனித்து விட, கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான் அந்த பணக்காரன்.  


ஒரு நாள் அவனை அந்த பணக்காரன் அழைத்து விசாரித்தான் – “நான் ஏழை தான் ஆனால் காதல் எனும் பெரும் சொத்தை எனது மனதில் வைத்திருக்கிறேன். உங்கள் மகள் மீது காதல் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு உங்கள் மகளை மணம் முடித்துத் தந்தால்  மனம் மகிழ்வேன். உங்கள் மகளையும் சந்தோஷமாக வைத்திருப்பேன்… இல்லையெனில் இப்படியே வாழ்ந்து சாவேன்” என்று சொல்ல, பணக்காரன் அந்த வேலைக்காரனிடம் இப்படிச் சொன்னான்…

“ஆஹா… என் மகள் மீது உனக்குக் காதலா? சரி என் மகளை உனக்கு மணமுடித்து வைக்க வேண்டுமெனில் ஒரு வேலை நீ செய்ய வேண்டும். அதோ தெரிகிறது பார் ஒரு மலை. அந்த மலையிலிருந்து என் மாளிகையின் வாயில் வரை ஒரு கால்வாய் வெட்ட வேண்டும். ”

“அட இவ்வளவு தானா… மலைகளை வெட்டி வீழ்த்துவது எனக்கு பெரிய விஷயமில்லை. இதோ வேலையை ஆரம்பிக்கிறேன்” என அங்கிருந்து நகர, பணக்காரன் – “அடே கொஞ்சம் பொறுப்பா… அந்த கால்வாயில் நீ கொண்டு வர வேண்டியது என்ன என்பதையும் சொல்லி விடுகிறேன் – அந்தக் கால்வாயில் நீ தண்ணீர் வர வைக்க வேண்டாம் – கால்வாய் வழி மாளிகையின் வாசல் வரை கொண்டு வரவேண்டியது பால்!”

அப்போதும் அந்த ஏழை பணக்காரனுக்கு பணக்காரன் தன்னை ஏமாற்றுவது தெரியவில்லை. மலையை வெட்டி வாய்க்கால் அமைக்க தன்னுடைய ஆயுதத்துடன் புறப்பட்டு விட்டான். பணக்காரன் எப்படியும் இவனால் முடியாது – அதனால் நம் மகளும் தப்பித்தாள் என்ற எண்ணம்.  மேலே உப்பரிகையில் இருந்த பெண்ணுக்கு தனது தந்தை வேலைக்காரனை ஏமாற்றுகிறாரே என்ற வருத்தம்! வருத்தத்தில் அந்தப் பெண் சில நாட்களில் உயிரை விட்டு விடுகிறார். தன் தந்தையை விட தன் மீது காதல் கொண்ட அந்த வேலைக்காரன் எவ்வளவோ மேல் என எண்ணத்துடன் அவள் மரிக்க, இந்த விஷயத்தினை அறியாத வேலைக்காரன் கால்வாய் வெட்டிக் கொண்டிருக்கிறான்.

“அடேய் முட்டாள் வேலைக்காரா, நீ இங்கே கால்வாய் வெட்டிக் கொண்டிருக்கிறாய் – உன் காதலியை அடைவதற்காக! ஆனால் அந்தக் காதலி அங்கே இறந்து விட்டாள். அது கூட உனக்குத் தெரியவில்லையே?” என்று அவனிடம் சென்று சொல்கிறார் ஒரு கிராமவாசி.

”அடடா என் காதலி இறந்து விட்டாளா…  நான் என்ன செய்வேன்? இனிமேல் நான் உயிர் வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்? என் காதலி சென்ற இடத்திற்கே நானும் செல்வேன்!” என்று சொல்லிக் கொண்டு தன் ஆயுதத்தால் தலையில் கொத்திக் கொள்ள அவன் வெட்டிய கால்வாயில் தண்ணீரும் ஓடவில்லை… பணக்காரன் கேட்ட பாலும் ஓடவில்லை!  அந்த கால்வாயை வெட்டிக் கொண்டிருந்த வேலைக்காரனின் ரத்தம் ஓடியது. வேலைக்காரனும் மடிந்தான்…

இந்த கதை நடந்தது பல வருடங்களுக்கு முன்னர்! இப்படி அந்த வேலைக்காரன் கொண்ட காதலைப் பற்றி மிர்சா Gகாலிப்b சொல்லும்போது, “அடடா இந்தக் காதல் அப்படி ஒன்றும் புனிதமானது அல்ல! காதலன் தனது ஆயுதத்தால் குத்திக் கொண்டு தானே இறந்தான் – காதலி இறந்தாள் என்று கேட்ட நொடியிலேயே அவன் உயிர் பிரிந்திருந்தால் அவன் கொண்ட காதலை உண்மையான காதல் என்று சொல்லலாமே தவிர இந்தக் காதல் அப்படியொன்றும் சிறந்த காதல் அல்ல! என்ற அர்த்தம் கொண்ட இந்த இரண்டு வரிகளைச் சொன்னார்.

teshe baġhair mar na sakā kohkan 'asad'
sargashta-e-humār-e-rusūm-o-quyūd thā

ஜக்ஜீத் சிங் மற்றும் சித்ரா சிங் குரலில் மிர்சா Gகாலிப்b அவர்களின் ஒரு Ghazal.மிர்சா Gகாலிப்b – மிர்சா அசத்துல்லா பெய்க் கான் என்ற இயற்பெயர் கொண்ட மிர்சா Gகாலிப்b – பிறந்தது 27 டிசம்பர் 1797. 15 ஃபிப்ரவரி 1869 அன்று மரணம் அவரைத் தழுவிக் கொண்டது.  ஆக்ராவில் பிறந்த Gகாலிப்b கடைசியில் இருந்தது தலைநகர் தில்லியில்! அவரது மாளிகை (ஹவேலி) தலைநகரின் Bபல்லிமரான் பகுதியில் இருக்கிறது. சென்ற ஞாயிறன்று, ஒரு நண்பருடன் அவரது மாளிகைக்குச் சென்று வந்தேன்.  உருது மொழியில் அவர் எழுதியிருக்கும் கவிதைகள், Ghazal-கள் நிறையவே.  ஜக்ஜீத் சிங் அவர்களின் குரலில் இனிமையான மிர்சா Gகாலிப்b Ghazal-கள் யூவில் கேட்கக் கிடைக்கின்றன.  முடிந்த போது கேட்டுப் பாருங்கள்.  தனது பதினோறாம் வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்த மிர்சா Gகாலிப்b தனது பதிமூன்றாம் வயதில் உம்ரா பேகம் அவர்களை மணம் முடித்தார். அவர்களுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் பிறந்தன. ஆனால் அதில் ஒரு சோகம் – எந்தக் குழந்தையும் சில மாதங்கள் தாண்டி உயிருடன் இல்லை. அவர் தத்து எடுத்துக் கொண்ட பிள்ளையும் பதினெட்டு வயதில் மரணிக்க, மிர்சா Gகாலிப்b மனமுடைந்து போனார். ஆனால் உம்ரா பேகம் தனது கணவன் மீது கொண்டிருந்த காதல் அவரை உயிருடன் இருக்க வைத்தது. உம்ரா பேகம் மத நம்பிக்கையுடன் இருக்க, மிர்சா Gகாலிப்b அத்தனை ஈடுபாடு இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர். நிறைய கவிதைகளை இயற்றியவர் வாழ்க்கையில் பெரும்பாலும் கஷ்டத்திலேயே உழன்று வந்தார். அவரது மனைவி தான் வீட்டினை நிர்வாகம் செய்து வந்தார் – ஆனாலும் தனது கணவன் கவிதை எழுதுவதில் எந்தத் தடையும் வந்து விடக்கூடாது என ரொம்பவே கவனமாகப் பார்த்துக் கொண்டவர் உம்ரா பேகம்.  இன்றைக்கு மிர்சா Gகாலிப்b கவிதைகள் சிறப்பாகப் பேசப் படுவதற்கு முக்கிய காரணம் அவரது மனைவி உம்ரா பேகம் என்பதை மறந்து விடக்கூடாது.அவரது மாளிகையைக் கூட விட்டு வைக்கவில்லை. பலரும் அதனை கையகப்படுத்திக் கொண்டு அங்கே மாற்றங்கள் செய்து வியாபாரத் தலங்களும், தங்குமிடங்களும் கட்டிவிட, சில வருடங்களுக்கு முன்னர் தில்லி அரசாங்கம் ஒரு சிறு பகுதியை மட்டும் மீட்டெடுத்து அங்கே ஒரு அருங்காட்சியகத்தினை அமைத்திருக்கிறார்கள்.  மிர்சா Gகாலிப்b பயன்படுத்திய உடை, அவரது புத்தகம் என சில பொருட்கள் அங்கே கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  சில கவிதைகளும் ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மிர்சா Gகாலிப்b கவிதைகள் அனைத்துமே உருது மொழியில் இருந்தாலும் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து இருப்பது நல்ல விஷயம்.  தமிழில் மிர்சா Gகாலிப்b கவிதைகள் எதுவும் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பது சோகம். யாராவது முன்வந்தால் நல்லது!  மிர்சா Gகாலிப்b பற்றிய தகவல்களையும், அவரது மாளிகை சென்று வந்தபோது எடுத்த நிழற்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

28 கருத்துகள்:

 1. பெயர் மற்றும் கேள்விப்பட்டிருந்த ஒருவர் பற்றி மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் அறிந்தேன்.  கஜல் பின்னர்தான் கேட்கவேண்டும். முன்னர் சில வருடங்களுக்குமுன் ஹரிஹரன், ஜெகஜீத்சிங் கஜல் கொஞ்ச காலம் கேட்டதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹரிஹரனை விட ஜக்ஜீத் சிங் கேட்பது நல்லது! அவரது சில கஜல்கள் என்றும் மறக்க முடியாதவை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. மிர்சா Gகாலிப்b பற்றிய தகவல்களை அறிந்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. இப்பதிவின் வழி உங்களுக்கும் சில தகவல்கள் தர முடிந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. டில்லியில் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு இன்றைய பதிவிற்கும் சமபந்தம் ஏதேனும் உண்டோ? Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சம்பந்தமும் இல்லை ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா. உங்களுக்கு அப்படித் தோன்றினால் நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இதுவரை நான் அறிந்திராத ஒரு கவிஞர் பற்றிய ஒரு செய்தியை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் புதிய செய்தியைத் தர முடிந்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. மிர்சா காலிப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அவரது மனைவி உம்ரா பேகம் கொடுத்த ஒத்துழைப்பு தான் அவரை புகழ் பெற்ற கவிஞராக ஆக்கியது என்பதை அறிந்துகொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு இந்தப் பதிவின் வழி சில தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. கதையில் காதல் என்பதை விட முட்டாள்தனம்தான் தெரிவதுபோல உணர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முட்டாள்தனம் - பல சமயங்களில் காதல் பலரை முட்டாள் ஆக்கிவிடுகிறது அதிரா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது. சிறந்த கவிஞர் எனப்படும் இவரைப்பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். குழந்தைகள் பிறந்தும் அவர்களை அன்பு செலுத்தி வளர்க்கும் பாககியத்தையும், நல்ல வாழ்க்கையையும் கொடுக்கத்தவறிய இறைவன் சிறப்பாக கவிதை இயற்றும் சக்தியை தந்துள்ளார்.

  முதலில் கூறிய காதல் கதையும் மனதை வருத்தியது. ஏழையாய் இருந்தது மட்டுமின்றி அவன் ஒரு அப்பாவியாயும் இருந்ததினால், சுலபமாக ஏமாற்றபட்டுள்ளான். இது பணத்தினால் உண்டாகும் மனித நியதிகளில் ஒன்றாயினும், காதலர் இருவருமே மரணத்தை தழுவியது வருத்தந்தான்.
  அறியாத பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மிக அருமையான வாசகம்.
  ஏமாந்த காதலர்கள் கதை வருத்தம் தருகிறது.
  காதல் என்று வரும்போது அறிவு
  விடைபெற்றுச் சென்று விடும் போல.
  Mirza Galib கவிதைகளை ஜக்ஜித் சிங், அவர்கள் குரலில் முன்பு கேட்டு
  இருக்கிறோம்.
  மாலை நேரங்களுக்கு உகந்த பாடல்கள்.

  பழைய தில்லியின் படங்கள் இன்னும் வரும் என்று நம்புகிறேன்.
  கவிஞரின் வீடு கொஞ்சமாவது மீட்கப்பட்டது
  மகிழ்ச்சி.
  அவரது மனைவியின் தியாகத்தால் அவரது கவிதைகள் நம்மை வந்தடைந்திருக்கின்றன,
  இந்தச் செய்திகளை அறியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   ஏமாந்த காதலன் - வருத்தம் தந்த கதை.

   பழைய தில்லியின் படங்கள் - இன்னும் சில உண்டும்மா. முடிந்தபோது பகிர்வேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. தண்ணீரும் ஓடவில்லை..பாலும் ஓடவில்லை..மனதை நெருடிய வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை நெருடிய வரிகள் - உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. புதிய தகவல்கள். கஜல்கள் என்றால் குலாம் அலிதான் முதலிடம் இல்லையா?  என் கணவருக்கு ஜகஜித் சிங், சித்ரா சிங் கஜல்கள் மிகவும் பிடிக்கும். எனக்கென்னவோஅவ்வளவாக பிடிக்காது. தூக்கம் வந்து விடும். Music should be stimulative என்பது என் விருப்பம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஜல் பாடகர்கள் நிறையவே இருக்கிறார்கள் - குலாம் அலி, பங்கஜ் உதாஸ் என பலரும் உண்டு.

   தூக்கம் வரும் பாடல்கள் - ஹாஹா... உண்மை தான். எப்போதும் இப்படியான பாடல்கள் கேட்க முடியாது பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. Mirza Galib பற்றிய விரிவான தகவல்கள், அவரது மாளிகையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டப் பட்ட பகுதி, அவர் கவிதைகளை உலகுக்கு அளித்த மனைவி உம்ரா பேகம் என பகிர்ந்த செய்திகள் அனைத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்பதிவின் வழி உங்களுக்கும் சில செய்திகள் தர முடிந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு புதிய தகவல்கள் தர முடிந்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....