வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி இரண்டுஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உயர உயரத்தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என்பது புரியும். உயர்ந்து விட்டோம் என்று ஒரு போதும் மமதை கூடாது.
 
பலருக்கு மமதை ரொம்பவே அதிகம். கொஞ்சம் உயர்ந்து விட்டாலே தன்னை விட கீழே இருப்பவர்களை ரொம்பவே மட்டமாக நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் உயர்ந்த நிலையில் நீண்ட நாட்கள் இருப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்!
எங்களுக்கான தங்குமிடமான ஷிம்லாவின் Bபல்ஜீஸ் ரீஜன்சியிலிருந்து மால் ரோட் செல்ல சில படிக்கட்டுகள், வளைந்து நெளிந்த மலைப்பாதைகள் என கடக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பனிப்பொழிவு என்பதால் நடக்கும்போது கொஞ்சம் கால்கள் வலிக்க ஆரம்பித்து இருந்தது. எங்கள் அனுமதியின்றியே மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெண்மையான புகை வெளிவர ஆரம்பித்தது. பனிப்பொழிவில் எங்கள் உடை நனையவில்லை என்றாலும் சில துளிகள் தொப்பிக்கும் சட்டைக்கும் இருந்த இடைவெளி வழி முதுகில் சென்று அடைக்கலம் கொள்ள முதுகு மட்டுமல்ல உடம்பே சிலிர்த்தது! அந்த நேரத்தில் அது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாலும் இரவு ரொம்பவே குளிர வழி செய்தது என்பதை அறைக்குத் திரும்பிய பிறகே உணர்ந்தோம். கையுறை அணிந்த கைகளில் பனிப்பொழிவினை பிடித்து  எறிந்து விளையாடியபடியே மால் ரோட் சென்றடைந்தோம். அத்தனை பனிப்பொழிவிலும் தலைநகரிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் சுற்றுலா வந்திருந்த பயணிகள் பனிப்பொழிவினை ரசித்தபடியே செல்ஃபி ராஜாக்களாகவும், ராணிகளாகவும் மாறியிருந்தார்கள்.

அலைபேசியில் படம் அல்லது காணொளி எடுக்கலாம் என்றால் கையுறை அணிந்திருந்த கைகளால் அலைபேசியின் தொடுதிரையை இயக்கவே முடியவில்லை. எத்தனை முறை தொட்டாலும் ஒன்றும் அசைந்து கொடுக்கவில்லை – பனியில் நனைந்த எங்கள் கைகளுக்கு உணர்வே இல்லாதது போல அலைபேசியின் தொடுதிரைக்கும் உணர்வே இல்லை என்று தோன்றியது. சரி வந்தது வரட்டும் என கையுறை ஒன்றைக் கழற்றி சில படங்கள்/காணொளிகள் எடுத்தோம்! அத்தனை சிறப்பாக வரவில்லை என்பது மட்டுமல்லாது காணொளிகளும் அத்தனை தெளிவில்லை! கூடவே கையுறை இல்லாமல் கைகள் மரத்துப் போக ஆரம்பித்திருந்தது. சரி எதற்கு இந்த வீண் வம்பு, பனிப்பொழிவு எனும் இந்த இயற்கையின் அற்புதத்தை ரசிக்க மட்டும் செய்வோம் என ரசித்தோம்.  அந்த மால் ரோட் பகுதியில் நாங்கள் மட்டுமே தமிழில் பேசியபடி ரொம்பவே ரசித்தபடி எந்த வித கவலைகளும் இன்றி நடந்து கொண்டிருந்தோம். 

பனிப்பொழிவு பற்றி பெரிதாக எழுதிவிட முடியாது – எப்போதோ படித்த ஒரு கவிதை/வாசகம் நினைவுக்கு வருகிறது – அற்புதங்கள் அனைத்தையும் அழகான கவிதையாக்க முடியாது – அதில் ஒன்று பனிப்பொழிவு… இன்னொன்று காதல்! ரசிக்க மட்டுமே செய்வோம் என நானும் நண்பர் பத்மநாபனும் இயற்கையை ரசித்தபடி உலா வந்தோம். பனிப்பொழிவு தொடர்ந்து கொண்டிருக்க உடல் சூடு தா என்றது – சரி தேநீர் அருந்தலாம் என கடைகளைப் பார்த்தால் அங்கே மின்சாரம் இல்லை என்பதால் எந்தக் கடைகளிலும் தேநீர் இல்லை என்று தான் சொல்கிறார்கள்.  India Coffee House தென்பட, அங்கே சென்றால் மக்கள் வெள்ளம். உட்கார்ந்து கொள்ள இருக்கைகளைத் தேட வேண்டியிருந்தது. காஃபி அதுவும் Expresso மட்டுமே இருக்கிறது என்ற பதாகை பார்த்து, அதைக் குடிப்பதற்குக் குடிக்காமலேயே இருக்கலாம் என்று தோன்ற, அங்கேயிருந்து வெளியேறினோம். குளிர் என்பதால் அங்கே நிறைய கூட்டம் போலும்.

இன்னும் சிறிது நேரம் உலாவ எங்கள் கண்களில் பட்ட ஒரு கடையில் பெண்மணி ஒருவர் அமர்ந்து தேநீர் கிடைக்கும் என்று சொல்ல எங்களுக்கு அப்படி ஒரு திருப்தி.  25 ரூபாய் ஒரு தேநீர் – அதுவும் ஏலக்காய் Flavour! ஆனால் மெஷின் தேநீர் – பாலுக்கு பதில் பால் பவுடர் என்பதால் காமோ சோமா ரகம் தான்! ஆனாலும் அங்கே இருந்த குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது அந்தத் தேநீர்.   நின்று நிதானித்து அந்தத் தேநீரை அருந்திய பிறகு அங்கிருந்து எங்கள் தங்குமிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பனிப்பொழிவு அவ்வப்போது தொடர்ந்து கொண்டிருந்தது. சாலை ஓரங்கள் முழுவதுமே பனிக் கட்டிகள் உருவாகி இருக்க, அந்த இரவில் ஷிம்லாவில் இருந்த அத்தனை பேருமே மகிழ்ச்சியாக இருப்பது போலத் தோன்றியது எனக்கு! ஆனால் அந்த எண்ணம் தவறென்பதை உணர்த்திய ஒரு காட்சி – அரைகுறை உடையில் குளிரில் நடுங்கியபடி சென்று கொண்டிருந்த ஒரு முதியவர். பாவம் குளிர் தாங்கமுடியாமல் கைகளை குறுக்கே வைத்து இருக்கிக் கொண்ட படி நகர்ந்து கொண்டிருந்தார் – எலும்புகளை உறையவைக்கும் பனியில் இருப்பது ரொம்பவே கடினமான விஷயம் என்று அவரைப் பார்த்து புரிந்தது.இயற்கையின் லீலைகள் அனைவருக்குமே சாதகமாக இருப்பதில்லை என்பதை அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியது. சுற்றுலா பயணிகளுக்குச் சுகமாக இருக்கும் பனிப்பொழிவும் குளிரும் அதே ஊரில் இருக்கும் ஏழைகளுக்கும், மற்றவர்களுக்கும் கூட கொடுமையானது தான். எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த ஒருவர், வேறு துறையில் வேலை கிடைத்த போது அவருக்கு இங்கே தான் வேலை அமைந்தது – ஷிம்லா நகரில் இருந்த போது அவரைத் தொடர்பு கொள்ள, குளிர் பற்றிய பேச்சும் வந்தது. ரொம்பவே கடினமாக இருக்கிறது – பனிப்பொழிவு நாட்களில் ரொம்பவே பிரச்சனைகள் என புலம்பிக் கொண்டிருந்தார் – முதல் சில நாட்கள் நன்றாகவே இருந்தாலும் தொடரும் பனிப்பொழிவும் குளிரும் ரொம்பவே பாதிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  ஷிம்லாவிலிருந்து அவர் தங்கியிருக்கும் பகுதி சற்றே தொலைவு என்றும், வழியெங்கும் பனிப்பொழிவு என்பதால் பாதைகளில் நிறைய வாகனங்கள் சிக்கி இருப்பதால் வந்து சந்திக்க இயலாது என்றும் சொன்னவரை பரவாயில்லை வீட்டில் இருங்கள் என்று சொல்லி விட்டோம். 

அறைக்குத் திரும்பி சில நிமிடங்கள் உடலை சாதாரண நிலைக்குக் கொண்டு வந்தோம் – அதற்குள் அழைக்க வேண்டியவர்களை அழைத்து பேசினோம் – வேறு யாரை? அவரவர் இல்லத்தரசியை தான்! வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலருக்கும் தினம் தினம் இப்படி அழைத்துப் பேசுவது ஒன்று தானே வழி. அன்றைய தினம் நடந்தவைகளைச் சொல்லி, கேட்டுக் கொள்வதில் ஒரு திருப்தி.  அதன் பிறகு எங்கள் ஓட்டுனரை அழைத்து அவரையும் இரவு உணவு உண்ண அழைத்தோம். தங்கிய இடத்திலேயே முதல் மாடியில் உணவகம். கூடவே சரக்கு அடிக்க பாரும் உண்டு! நமக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் உணவை மட்டும் ஆர்டர் செய்தோம் – சிம்பிளாக dhதால், thதவா ரொட்டி, ராய்த்தா, அவரையும் உருளையும் சேர்த்த ஆலு சேம், சலாட் – சொல்லி அவற்றைக் கொண்டுவர காத்திருந்தோம். நாங்கள் காத்திருந்த வேளையில் அங்கே வந்த இரண்டு குடும்பத்தினர் தமிழர்கள் – ஒன்றாக தத்தமது குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருக்கிறார்கள். அவர்களுடன் வந்த குழந்தைகள் குளிர்கால உடையில் புசுபுசுவென இருக்க அவர்களைக் கொஞ்சம் வம்புக்கு இழுத்தேன்!

அதீதமான பனிப்பொழிவு பார்க்க ரம்யமாக இருந்தாலும் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது! இருந்த போதிலும் சின்னஞ்சிறு குழந்தைகள் – கைக்குழந்தைகளுடன் வந்திருந்த சிலரைப் பார்த்தபோது “அடடா இப்படி வந்திருக்கிறார்களே”, என்று தோன்றியது.  சற்றே அஜாக்கிரதையாக இருந்தாலும் குழந்தைக்கு அந்தக் குளிர் ஒத்துக் கொள்ளாது என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.  தங்குமிடத்தின் உணவகத்தில் பார்த்த குழந்தைகளை குளிர்கால உடையில் பொதிந்து வைத்தது போன்று இருப்பதைப் பார்க்க அழகாக இருந்தாலும் உடல் நலம் கெட்டுவிடுமே ஒரு வித கலக்கமும் இருந்தது உண்மை.  இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குத் திரும்ப, நல்ல குளிர்! படுக்கைகள், விரிப்புகள், ரஜாய் என அனைத்துமே ஜில்லென்று இருந்தது! அதனைச் சூடாக்கவே சிறிது நேரம் பிடித்தது! ரூம் ஹீட்டர்கள் அந்த அறையில் இல்லாதது ஒரு குறையாகவே தோன்றியது. பெரும்பாலும் ஷிம்லாவின் தங்குமிடங்களில் ரூம் ஹீட்டர்கள் உண்டு! அந்தக் குளிர் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் வரை புரண்டு புரண்டு படுத்து ஒரு வழியாக உடல் அந்தச் சூழலுக்கு வந்த பிறகு உறக்கம் வந்தது! அடுத்த நாள் ஞாயிறு! பொறுமையாக எழுந்து – காலை உணவை தங்குமிடத்திலேயே முடித்துக் கொண்டு புறப்படலாம் என எங்களுக்குள் முடிவு எடுத்து, ஓட்டுனருக்கும் சொல்லி உறக்கத்தைத் தழுவினோம்! அடுத்த நாள் காலை  என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியாக வெளியிடுகிறேன்! அதுவே இந்த ஷிம்லா பயணத்தின் கடைசி பகுதியாக இருக்கும்! பயப்பட வேண்டாம்!

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


டிஸ்கி: படங்கள் இணையத்திலிருந்து....

26 கருத்துகள்:

 1. போகவேண்டும் என்கிற எண்ணம் இருப்பதால் தங்கள் பதிவுகள் நல்ல வழிகிட்டியாக உள்ளது..நான் டில்லிகுளிருக்கே கதிகலங்கிப் போனவன். ஆகையால் நல்ல சீசனில்தான் போகவேண்டும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவுகளுக்கு முன்னரும் எனது பக்கத்தில் ஷிம்லா-குஃப்ரி-நார்க்கண்டா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தது பற்றிய பயணத் தொடர் உண்டு ஐயா. உங்களுக்கு அவையும் பயன்படும். செல்ல வாய்ப்பு கிடைக்கும்போது சென்று வாருங்கள். மேலதிகத் தகவல்கள் தேவை எனில் நிச்சயம் என்னை தொடர்பு கொள்ளலாம் ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. உயராமலேயே உயர்ந்து விட்டதாய் நினைத்துக்கொண்டு சிலபேர் மமதையுடன் சுற்றி வருகிறார்கள். அவர்களை என்ன செய்ய?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உனக்கும் மேலே உள்ளவர் கோடி
   அடக்கி வாசி ஆணவம் வேண்டாம்

   என்று அவங்களைப் பார்த்துப் பாட வேண்டியதுதான். நீங்க எழுதினதைப் படித்தபோது ஒபாமாவைச் சந்திக்க டாட்டா, அம்பானி என்று பெரிய தலைகள் கியூவில் ஒபாமா அறைக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த படம் நினைவுக்கு வந்தது

   நீக்கு
  2. உயராமலேயே உயர்ந்து விட்டதாய் நினைத்துக் கொண்டு - இப்படியும் சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள் ஸ்ரீராம். அவர்களுக்காக புரிந்தால் தான் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. அடக்கி வாசி ஆணவம் வேண்டாம் - நன்றாகச் சொன்னீர்கள் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. சில தளங்களில் ரைட் க்ளிக் டிசேபிள் செய்து வைத்திருப்பது போல இயற்கை தன்னைப் படமெடுக்க விடாமல்செய்து வைத்திருக்கிறது போலும். சரியான கற்பு அதற்கு!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை தன்னைப் படம் எடுக்க விடாமல் செய்து வைத்திருக்கிறது! ஹாஹா இருக்கலாம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இதுபோன்ற அழகான இடங்களை அவ்வப்போது சென்று பார்த்து ரசிக்கலாம்.  அங்கேயே இருந்து விடலாம் போல இருந்தது என்போம்.  ஆனால் முடியாது. நமக்கெல்லாம் போர் அடித்து விடும்.  இதெல்லாம் அவசரக் காதல் போல!!  சில நாட்களிலேயே நெகட்டிவ் சமாச்சாரங்களைவிஸ்வரூபம் எடுத்துவிடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரக் காதல் போல! ஹாஹா... சில நாட்களில் போர் அடித்து விடலாம்! வேறு வழியில்லாமல் இருக்க நேரிட்டால் பழகிக் கொள்கிறோமே தவிர பிடித்து அங்கே இருப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. சிம்லா... பனிப்பொழிவு... சூடான உணவு... ஆஹா... நல்ல அனுபவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சிறப்பான அனுபவங்களாகவே இப்பயணத்தில் எங்களுக்குக் கிடைத்தது நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. யப்பா...! நினைத்தாலே ஜில்... படங்களைப் பார்த்தால் ஜில்ஜில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜில்லோ ஜில் தான் தனபாலன். ஆனால் ஒரு முறை இந்த மாதிரி இடங்களுக்குச் சென்று வரலாம் - அந்த அனுபவமும் கிடைக்குமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. Shimla travel write-up beautiful. This year Delhi experienced severe(long also) intense cold in 100 yrs. Bracing the cold weather in Shimla is not easy or comfort zone. An experience to remember. Mall road extremely beautiful. Looking forward,3rd round.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். கடுமையான குளிர் சமயத்தில் இப்பகுதிகளில் இருப்பது கடினமான ஒன்று தான் கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. படங்கள் அருமை.
  பனிபொழிவு பார்க்க அழகு, துன்பம் அதிகம்.
  குளிரில் சூடான உணவு கிடைப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
  வைஷ்ணவதேவி கோவில் விடுதியில் எத்தனை கம்பிளிகள் கொடுத்தும் எல்லாம் தண்ணீரில் நனைந்து இருப்பது போல் இருந்தது.

  சிம்லாவிலும் ரூம் ஹீட்டர்கள் இல்லை என்றால் கஷ்டம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தண்ணீரில் நனைத்தது போல! - சரியான உதாரணம் கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அருமையான பதிவு. எல்லோருக்கும் இந்த அரிய வாய்ப்பு கிடைக்காது. ஆம் ஏழைகளுக்கு குளிர் காலம் ஒரு சாபம் என்றே கூறலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏழைகளுக்கு குளிர் காலம் ஒரு சாபம் - 100% உண்மை இராமசாமி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. ரசனையான விடயங்கள் பொன்மொழி அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. படங்களைப் பார்த்தாலே உடல் சில்லிட்டுப்போகிறது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் இணையத்திலிருந்து...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 12. அற்புதங்கள் அனைத்தையும் அழகான கவிதையாக்க முடியாது – அதில் ஒன்று பனிப்பொழிவு… இன்னொன்று காதல்!

  உண்மையான வரிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....