திங்கள், 3 பிப்ரவரி, 2020

இருந்தும் இல்லாமல்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உன் தவறை மறைக்க பிறரை தீயவராகச் சித்தரிக்காதே… தவறுகள் திருத்தப்படும்போது நீ தனிமரம் ஆவாய்…

பலரும் அடுத்தவர் தவறை மட்டும் தானே சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம் தவறுகள் நமக்குத் தெரிவதே இல்லை – அடுத்தவர் தவறுகளை மட்டுமே சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம்!  இந்தப் பதிவு கூட அப்படியோ?


படம்: www.tnstcblog.in தளத்திலிருந்து...


பயணங்கள் எப்போதும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக  இரவு நேரப் பயணங்கள் என்றைக்குமே பிடித்தமான ஒன்று.... சென்ற வாரத்தில் அப்படி ஒரு பயணம் காலை 3 மணி கோவையிலிருந்து திருச்சிக்கு பேருந்து பயணம். விதம் விதமான மனிதர்கள்... அந்த அதிகாலை நேரத்தில் கூட பேருந்து இருக்கைகள் நிறையும் அளவு மக்கள். ஊர் உறங்குகிறது என்று சொல்ல முடியா வண்ணம் மக்கள் பயணிக்கிறார்கள்.  நிறைய பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் நின்று பயணிகளை இறக்கி விடுவதும், ஏற்றிக் கொள்வதுமாக இருந்த அந்தப் பேருந்தின் முகப்பில் எழுதியிருந்தது – Express! இதற்கே இப்படி என்றால் சாதாரணப் பேருந்து என்றால் கை காட்டும் இடம் எல்லாம் பேருந்து நிற்கும் போல! இருந்தாலும், விரைவாகவே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் அந்த ஓட்டுனர்.  அந்த அதிகாலை நேரத்திலும் பேருந்தில் பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது! சில பாட்டுகள் மிட் நைட் மசாலா ரகம் என்பதால் கொஞ்சம் அல்ல அதிகமாகவே விரசம்! நைட் ட்யூட்டி போட்டு படுத்தி விட்டார்கள் போலும்! 

ஓட்டுனருக்கே பாடல்கள் கொஞ்சம் நேரத்தில் அலுத்து விட்டது போலும். வேறு பாடல்களை ஒலிக்க விட்டார் – 80-90-ஆம் வருட பாடல்களிலிருந்து தடாலடியாக 60-70-ஆம் வருட பாடல்களுக்கு ஒரே தாவாக தாவினார். என்ன பாடல் என்று தானே கேட்கிறீர்கள்? சக்ரவர்த்தி திருமகள் படத்திலிருந்து, ஜி. ராமநாதன் அவர்களது இசையில் ஒரு பாடல். நீங்களும் கேளுங்களேன்!என்ன நண்பர்களே, பாடலைக் கேட்டு ரசித்தீர்களா? உறக்கமில்லா அந்த இரவுப் பயணத்தில் பேருந்தில் ஒலித்த பாடல்களால் என்னால் தூங்க இயலவில்லை. பயணிகள் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் பெரிதாய் வித்தியாசமில்லை. ஓட்டுனர் பேருந்தினை ஓட்டிக் கொண்டு செல்லும் போது தூங்காமல் இருக்க இப்படிப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது நல்லது தான். கூடவே நடத்துனரும் ஓட்டுனரும் பேசிக் கொண்டே இருந்தார்கள்.  சரி தூங்கதான் முடியவில்லை, பேருந்தில் இருக்கும் பயணிகளைப் பார்த்தாவது பொழுதை ஓட்டுவோம் என பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி பயணித்த ஒரு மனிதர் பேருந்தில் ஏறியதிலிருந்து மற்றவர்களால் காட்சிப் பொருளாகப் பார்க்கப் பட்டார். காரணம் அவர் இடது கை விரல்களில் வளர்த்திருந்த நகங்கள்.....


படம்: www.yourstory.com தளத்திலிருந்து...

நகங்களுக்காகவே தனியாக உணவு போட்டு வளர்த்திருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு? ஆண்டவன் இரண்டு கைகளைக் கொடுத்தும் அவரால் இடது கையை பயன்படுத்த முடியவில்லை. எங்கே ஆசையாக வளர்க்கும் நகங்கள் உடைந்து விடுமோ என ரொம்பவே கவனமாக இடது கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். இடது கையால் எந்த விதப் பயனுமே அவருக்கு இல்லை என்றே தோன்றுகிறது! எங்கே நகங்கள் உடைந்து விடுமோ என்பதிலேயே அதிக கவனம் கொண்டிருந்தார் அந்த நபர். நான் உறங்காவிட்டாலும் என்னுள் உறங்கிக் கொண்டிருந்த பதிவரும், நிழற்படக் கலைஞரும் விழித்துக் கொண்டார்கள்! அவரிடம் பேசி, அவரை பேட்டி/நிழற்படம் எடுக்காமல் இப்படிப் பார்த்துக் கொண்டே இருக்கிறாயே என்று எனக்குள் முணுமுணுத்தார்கள்! ஆனாலும் எனக்குள் ஒரு தயக்கம் – ஆசைப்பட்டு வளர்த்த நகம் உடைந்து விடும் என்பதால் என்னை பிரண்டிவிடுவதற்கு வாய்ப்பில்லை! ஆனாலும் அதைப் பற்றிக் கேட்டு அவருக்குக் கோபம் வந்து விடுமோ என சும்மா இருந்தேன்! ஆனால் மனது சும்மா இருக்கவில்லை! மனதில் ஒரு மூலையில் அந்த நபரைப் பற்றிய எண்ணங்களைச் சுமந்து கொண்டிருந்தது.

சுமந்திருந்த எண்ணங்கள் இதோ, இங்கே இந்தப் பதிவில் எழுத்தாய்… பலருக்கு ஆண்டவன் ஒரே கை கொடுத்திருக்க, ஒரு சிலருக்கு விபத்து காரணமாக இடது கை துண்டிக்கப்பட அவர்கள் அனைவருமே ஆண்டவனையும் தன் தலை எழுத்தினையும் நொந்தபடி இருக்க, இங்கே ஒருவரோ ஆண்டவன் கொடுத்திருந்தும்  அந்த இடது கையைப் பயன்படுத்த முடியாமல் இப்படி நகங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறாரே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காங்கேயம் முதல் கரூர் வரை அவரையும் அவரது நகங்களையுமே பார்த்துக் கொண்டிருந்தேன் – நேரமும் போயிற்று – தூக்கமும் போயிற்று! அந்த நகங்களால் அப்படி என்ன பயன் இருந்து விடப் போகிறது? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் – நகம் வளர்ப்பது, மீசையை வளர்ப்பது, நீண்ட நெடுமளவு – தரை தொடுமளவு தாடி வளர்ப்பது என பலரும் இருக்கிறார்கள். அதற்கென்று எவ்வளவு மெனக்கெடல்! இப்படியும் சிலர்! கை இருந்தும் இல்லாமல்! பேருந்தில் அன்றைக்குக் கண்ட பல காட்சிகளில் இந்த நீண்ட நகம் கொண்ட மனிதர் ஏனோ மனதை விட்டு அகலவில்லை! அகற்றுவதற்காகவே இங்கே பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொண்டு விட்டேன்!

பிற்சேர்க்கை: இந்தப் பதிவுக்கான படம் தேடுவதற்காக கூகிளாண்டவரை நாடியபோது இந்த மனிதரை விட இன்னும் நீண்ட நகம் வளர்த்த ஒருவர் பற்றிய செய்தி கண்ணில் பட்டது. நீண்ட நகங்களை வெறி கொண்டு வளர்த்தவர் இடதுகை செயல்படாமலே போய்விட்டது என்று ஒரு செய்தி கிடைத்தது. அந்த செய்தி இந்தச் சுட்டியில் – Ripley’s Believe it or not அருங்காட்சியகத்தில் அவரது நீண்ட நகங்களை வெட்டி வைத்திருக்கிறார்களாம்! அந்த நீண்ட நகங்களை வெட்டுவதை ஒரு விழாவாகவே கொண்டாடினார்களாம்! என்ன சொல்ல! இப்படியும் சிலர்! அந்த மனிதர் பற்றி தெரிந்து கொள்ள மேலே கொடுத்திருக்கும் சுட்டியைச் சொடுக்கலாம்!

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

44 கருத்துகள்:

 1. நல்லதொரு வாசகம்.   நான் பின்பற்றுகிறேன்.   ஆனால் எதிர்மறையிலிதைப் பின்பற்றும் ஒருவர் நன்றாய்த்தான் இருக்கிறார் என்பதும் சோகம்!  தனது தவறுகளுக்கு அவர் எப்போதும் அடுத்தவர்களையே காரணம் சொல்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தனது தவறுகளுக்கு பிறரைக் காரணம் காட்டும் பலர் இங்கே... அப்படியானவர்களுடன் எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நீங்கள் சொல்வதுபோல வீண் பெருமைக்காக ஒரு கையின் பயன்களையே அவர் இழக்கிறார் என்பது சோகம்.  அதை அவர் அறியாதிருக்கிறாரா, பொருட்படுத்தாமல் இருக்கிறாரா...  ம்ஹூம்... இப்படியும் மனிதர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீண் பெருமைக்காக - அதே தான். ஆண்டவன் கொடுத்த கைகளில் ஒன்று அவரது செயலால் பயன்படாமல் போவது எவ்வளவு கொடுமை. ஆனால் இப்படியும் சிலர் - வேறென்ன சொல்ல?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகம் அருமை.
  பொதுவாக தெரிந்தே தவறு செய்கிறவர்கள் கூட அது தவறு எனத் தெரிந்தாலும், அதை எப்போதும் நியாயப்படுத்ததான் முனைகின்றனர். மாறாக உணர்ந்து கொண்டால், தனிமரமாவதை தடுக்கலாம்.

  பஸ் பயணம் பற்றிய பதிவு நன்றாக உள்ளது. பாடல் உண்மையிலேயே நன்றாக இருக்கும். ஆனால் தூங்க முயற்சித்தாலும் இப்படி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தால் உறக்கம் வராது. நமக்குத்தான் இப்படி.. ஆனால்,எந்த சப்தமும் சிலரை ஒன்றும் செய்யாது. பஸ்சில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்தால் இறங்குமிடம் அவரை தானாகவே எழுப்பி விடும். ஹா. ஹா. ஹா.

  நகங்களுக்காக தன் இடது கையை இழந்தவர் பற்றி படித்தேன். இது ஒரு சாதனைதான். (அவரைப்பொறுத்த மட்டில்..) ஆனால் வாழ்நாள் முழுக்க சிரமங்களை தாங்கிக் கொள்ள மனதிலும், உடம்பிலும் சக்தி வேண்டும். பிற (நாய், பூனை போன்றவை) உயிரினங்களை வளர்ப்பது போல் தன்னுடம்பிலும் இந்த வளர்ப்பு செயல்களில் ஈடுபடுகிறவர்கள் பெருமைக்காகத்தான் செய்கிறார்கள் எனத் தோன்றும்.அன்றிலிருந்து, இன்று வரை பல விதங்களில் பல மனிதர்கள் உலகில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். என்ன செய்வது...! ரசிக்கும்படியாக பதிவை தந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   பயணங்களில் பாடல்கள் பல சமயங்களில் பயணிகளுக்குத் தொந்தரவு. ஆனால் ஓட்டுனருக்குத் தூக்கம் வராமல் இருக்க இப்படி ஒலிக்க விடுகிறார்கள் - என்ன கொஞ்சம் மெல்லிய ஒலியில் வைத்துக் கேட்கலாம் - அலற விடுகிறார்கள்.

   பதிவும், நகங்களுக்காக தனது இடது கையை செயலிழக்கச் செய்தவர் தகவலும் படித்து உங்களுடைய கருத்துகளைச் சொன்னதில் மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. சுட்டிக்கு சென்றேன் ஜி
  மீசை வளர்ப்பதைவிட கஷ்டமானதுதான் நமக்கு இடையூறாக இருப்பது அவசியமில்லைதான்.

  பொன்மொழி நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடையூறாக இருக்கும் இந்த நகம் வளர்ப்பு அவசியமில்லை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இருந்தாலும்
  தன்னைத் தன் பிழையைப் புரிந்து கொள்பவர்களும் இங்கே இருக்கின்றார்கள்...

  அவர்களை யாரும் பொருட்படுத்துவது இல்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தன் தவறை புரிந்து கொள்பவர்களை யாரும் பொருட்படுத்துவது இல்லை - உண்மை தான் துரை செல்வராஜூ ஜி. அவர்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பல பேருந்துகளிலும் இப்படித்தான்..
  மட்ட ரகமான பாடல் காட்சிகளை ஒளிபரப்பு செய்வதில் ஆர்வம் மிக்கவர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் - நிறைய ஊர்களில் இப்படித்தான் தேவையில்லாத பாடல்களை ஒலிக்க விடுகிறார்கள். வடக்கிலும் கூட இப்படி நிறைய உண்டு துரை செல்வராஜூ ஜி. - குறிப்பாக போஜ்புரி மொழி பாடல்கள் - நாராசமாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நகம் வளர்த்தவருக்கு வேலை வெட்டி இல்லையா அல்லது அவருடைய (நக)வெட்டி வேலை செய்யவில்லையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலை வெட்டி இல்லையா அல்லது நக வெட்டி வேலை செய்யவில்லையா? ஹாஹா நல்ல கேள்வி கௌதமன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பல பயணங்களில் நானும் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் உண்டா? ஆமாம் இப்படி நிறையவே நடக்கிறது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

   நீக்கு
 9. வாசகம் நன்றாக இருக்கிறது.

  பாடல் கேட்டு இருக்கிறேன்.
  இரண்டு கை இருந்தும் நகத்தை வளர்த்து இப்படி ஒரு கையை பயன்படாமல் செய்து விட்டாரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   ஆமாம் - ஒரு கை இல்லாமல் இருப்பவர்கள் இருக்க, இங்கே இவரே இப்படிச் செய்து கொண்டாரே என்று தான் எனக்கும் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. அளவோடு இருந்தால் தான் அழகு - உண்மை தான் அதிரா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. தவறு செய்தவர்கள் மனதளவில் ஒத்துக் கொள்வார்கள். வாய்விட்டு
  மன்னிப்பு கேட்பதில்லை கடந்துதான் போகிறார்கள்.
  இரவுப் பயணம் சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள்.

  பயணத்தின் போது களைப்பிருந்தால் பாடல்கள் தொல்லைதான். அதுவும் நீங்கள் குறிப்பிட்டது போல வேறு விதமான பாடல்களாக இருந்தால்
  சங்கடமே.
  நாங்கள் ஒரு தடவை பங்களூரிலிருந்து சதாப்தியில் வந்த போது.
  பாடல்களும் ,பேச்சுகளும் ஹை பிட்சில் செய்து கொண்டுவந்தார்கள் சக பயணிகள்.
  வருத்தமாக இருந்தது.

  நக மனிதர் வேண்டாத வேதனையை விலைக்கு வாங்குகிறாரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மா - இரவு நேரப் பயணம் கொஞ்சம் களைப்பானது அதில் இப்படி பாடல்கள் ஒலித்தால் தொல்லை தான் வல்லிம்மா..

   நக மனிதர் - :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. வேதனையான சாதனை - உண்மை தான் தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. இரவு நிம்மதியாக தூங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு மோசமான அனுபவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மோசமான அனுபவம் தான் இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. ஸ்ரீராம் முதல் கருத்தில் சொல்லி இருப்பதை அப்படியே ஆமோதிக்கிறேன். உண்மையில் என்னைப் பொறுத்தவரையிலும் அந்த நபர் பெரிய தியாகியாகத் தன்னைக் காட்டிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். காலம் தான் பதில் சொல்லணும். போகட்டும், நகங்களை வளர்த்துள்ள மனிதருக்கு அதனால் என்ன பிரயோஜனம் என்றே புரியலை! தேவையில்லாமல் செய்யும் அசட்டுத் தனம். பின்னால் புரியவரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகங்களால் அப்படி என்ன பிரயோஜனம் என்பது எனக்கும் புரியவில்லை கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. முன்னெல்லாம் இரவுப் பயணம் பிடிக்கும். இப்போதெல்லாம் பிடிப்பதில்லை இம்மாதிரி இடைஞ்சல்கள் ஏற்படுவதால்! இரவுப் பயணம் எனில் அன்னிக்குத் தூக்கமில்லா நாளாகவே போய்விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் எனக்கு இரவு நேரப் பயணமாகத் தான் அமைகிறது - மாறாக அமைத்துக் கொள்கிறேன் என்றும் சொல்ல வேண்டும் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. கருத்துக் கொடுத்ததும் உங்கள் பதிவு பழைய நிலைக்கு வரச் சில நிமிடங்கள் எடுக்கும். இப்போது உடனே சரியாகி விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... சீக்கிரம் கருத்துகள் வெளியானால் நல்லது தானே கீதாம்மா... சில சமயங்கள் இப்படியும் ஆவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. அறுமையான அனுபவ தொகுப்பு.
  நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ ரமேஷ்... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. பஸ்ஸில் பாடல்களும் வீடியோவும் மண்டையிடிதான் என்ன சொல்ல. சில சமயம் ட்ரைவரும் கண்டக்டரும் விடாமல் பேசி வேறு கொல்கிறார்கள். :)

  நகம் பயமுறுத்தியது. பொழுதுபோக்கா.. பொழுதுக்கும் இதேதானா..அலுப்பாயிருக்காது.:)

  வித்யாசமான தகவல்கள் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலுப்பு தட்டவில்லையே அந்த மனிதருக்கு தேனம்மை சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 19. //பலரும் அடுத்தவர் தவறை மட்டும் தானே சொல்லிக் கொண்டிருக்கிறோம். நம் தவறுகள் நமக்குத் தெரிவதே இல்லை – அடுத்தவர் தவறுகளை மட்டுமே சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கிறோம்!//உண்மைதான். உணர்ந்தவர் திருந்துவார். இரவு நேரப் பயணங்கள் வேறு ரகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி அமையும். இரவு நேரத்தில் பாடல்களை ஒலிக்க விடுவதை நான் விரும்புவதில்லை.

  வலைத்தளம்: https://sigaramclick.blogspot.com/2020/02/sigaram5-fb-what-will-do-with-whatsapp.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வலைப்பூவும் பார்த்தேன் சிகரம் பாரதி. நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 20. பல பயணங்களில் நானும் அனுபவித்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 21. இனிய பயணத்தில் பல அனுபவங்கள்....ஒவ்வொன்றும் ஒரு விதம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொன்றும் ஒரு விதம் - உண்மை அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 22. பலவிதமான மனிதர்கள் .விசித்திரமான ஆசைகள் தங்களை முதன்னிலைபடுத்த.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதம் விதமாக மனிதர்கள் - உண்மை தான் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....