திங்கள், 24 பிப்ரவரி, 2020

இறந்து போனவன்… - கதை மாந்தர்கள்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?


வாழ்க்கை மரணத்திடம் கேட்கிறது… ஏன் மக்கள் என்னை விரும்புகிறார்கள், உன்னை வெறுக்கிறார்கள்?

மரணம் சொன்னது… ஏனென்றால், நீ அழகான பொய். நான் வலிக்கின்ற உண்மை.
 
இரவு பன்னிரெண்டு மணி. அப்போது தான் பேசி வைத்த அலைபேசி மீண்டும் டிங்க் டிங்க் என்றது. தினம் தினம் இரவுகளில் நீண்ட நேரம் அலைபேசியில் மேய்வது வழக்கமாகி இருக்கிறது சுமனுக்கு! இந்த நேரத்தில் என்ன செய்தி வந்திருக்கிறது என அலைபேசியின் தொடுதிரையை உயிர்ப்பித்து பார்க்க வாட்ஸப் வழி செய்தி வந்திருந்தது. அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சுரேந்தரிடமிருந்து வந்த செய்தி இப்படி இருந்தது.“நான் இறந்து விட்டேன். இனிமேல் என்னால் யாருக்கும் தொந்தரவு இருக்காது!” கூடவே சுரேந்தரின் நிழற்படம் ஒன்றும் – இறந்து போனவர்களின் படத்தில் மாலையிட்டு வைத்திருப்பது போலவே அவனது நிழற்படத்திற்கு மாலையிட்டு செய்தியும் அனுப்பி இருந்தான் – அதுவும் அவனது அலைபேசியிலிருந்தே! அனுப்பிய நேரம் சரியாக பன்னிரெண்டு மணி.

என்னதான் சுரேந்தரும் சுமனும் ஒரே அலுவலகத்தில் ஒரே பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தாலும் பெரிதாக பேச்சு வார்த்தை கிடையாது. ஹலோ ஹலோ மட்டுமே! அலைபேசி வழி எப்போதும் தொடர்பு கொண்டதில்லை.  அப்பிரிவில் இருப்பவர்களுக்கான வாட்ஸப் குழுமத்தில் அவனும் உண்டு என்றாலும் பெரும்பாலும் அலுவலக சம்பந்தமான விஷயங்களே குழுமத்தில் இருக்கும். இப்போது இப்படி ஒரு தகவல் – அதுவும் சுரேந்தரிடமிருந்தே வந்ததில் சுமனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி, நிறையவே குழப்பம்! என்ன செய்ய முடியும் – மரணம் எப்படி வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் இப்படி இறந்து விட்டேன் என செய்தி அனுப்பும் அளவுக்கு இருக்குமா? பிரிவில் இருக்கும் சகாக்களை அழைத்து விசாரிக்கலாம் என்றால் இந்த இரவு நேரம் யாரையும் தொந்தரவு செய்வது சரியாகப் படவில்லை. எதுவானாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என அலைபேசியை அப்புறம் வைத்து விட்டு தொலைந்து போன உறக்கத்தைத் தேடத் துவங்கினான் சுமன்!

அடுத்த நாள் காலை – அலுவலகத்திற்குச் செல்லும் வரை சுரேந்தருக்கு என்ன ஆகியிருக்கும், எதற்காக இந்த மாதிரி ஒரு தகவலை அனுப்பி வைத்திருக்கிறான் என்று சுமனுக்கு, புரியாமலேயே இருந்தது. அலுவலகத்திற்குச் சென்று சக அலுவலக நண்பர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என சற்றே சீக்கிரமாகவே அலுவலகத்தினை அடைந்தான். அலுவலகத்தில் அவனைப் போலவே மற்ற அலுவலர்களும் சற்று சீக்கிரமாகவே வந்திருந்தார்கள். அனைவரும் ஏதோ எதிர்பார்த்து வந்தது போல உணர்வு! ஒவ்வொருவராக தங்களுக்கு நள்ளிரவு வந்த செய்தி பற்றி சொல்ல, அந்தப் பிரிவில் இருக்கும் (சுரேந்தர் தவிர) மற்றஆறு பேருக்குமே மாலையிட்ட படமும் செய்தியும் வந்திருக்கிறது – பெண் அலுவலர்கள் உட்பட! அனைவருமே குழப்பத்தில் இருந்தது பேச்சில் நன்கு தெரிந்தது. சுரேந்தர் வீட்டிற்கு அழைத்துப் பேசலாம் என நினைத்தால் யாருக்குமே அவர் வீட்டினரிடம் பேசியதில்லை என்பது புரிய, என்ன செய்வது எனக் குழப்பம். 

ஒவ்வொருவராக சுரேந்தர் பற்றிய செய்திகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். சுரேந்தர் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி, நிறைய முறை பணம் கடன் வாங்கி இருப்பது அப்போது தான் அனைவருக்குமே தெரிந்தது – ஒருவரிடம் முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார் சுரேந்தர். வாங்கிய கடனை என்ன செய்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது – சரக்கடிக்கும் பழக்கம் உண்டு என ஒருவர் சொல்ல, அவர் வைத்திருக்கும் தகாத உறவு, அதனால் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் என மற்றவர் சொல்ல கொஞ்சம் கொஞ்சமாக சுமனுக்கு சுரேந்தர் பற்றிய விவரங்கள் புரிந்தது – நல்ல வேளை தான் சுரேந்தரிடம் அவ்வளவாக பழகாமல் இல்லாமல் இருந்தது நல்லதாகப் போயிற்று என்ற எண்ணத்துடன் விஷயங்களை, கேட்டுக் கொண்டிருந்தான் சுமன்.  தனது மனைவியின் தம்பி இறந்து விட, அவருடைய மனைவிக்கு சுரேந்தர் உதவி செய்ய ஆரம்பித்து அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மனைவியின் தம்பி மனைவியை இவரது மனைவி போலவே ஆக்கிக் கொண்டாராம் சுரேந்தர்!

இரண்டு குடும்பங்களையும் காப்பாற்றுவது – அதுவும் ஒரே ஆள் சம்பளத்தில் ரொம்பவே கடினம் இல்லையா? அதனால் தான் பலரிடம் கடன் வாங்கி சமாளித்துக் கொண்டிருக்கிறார் – தகாத உறவு சரக்கடிக்கும் பழக்கத்தினை உருவாக்க, அதிலும் செலவு.  குடும்பத்தினருக்கும் விஷயங்கள் தெரியவர, தினம் தினம் ரகளை! சுரேந்தரின் அப்பா எவ்வளவு கண்டித்தும் திருந்தவில்லை. மனைவி சொல்லியும் கேட்கவில்லை – இத்தனைக்கும் சுரேந்தருக்கு, குழந்தைகளும் உண்டு – மனைவியின் தம்பி-மனைவிக்கும் குழந்தைகள் உண்டு! தகாத உறவும் தகாத பழக்கங்களும் அதிகமாக அதிகமாக பிரச்சனைகளும் அதிகரித்துக் கொண்டே போய் அவரை மன நோயாளி போல ஆக்கிவிட்டது என ஒருவர் சொன்னார்.  இப்படி பேசிக் கொண்டிருந்ததில் எவ்வளவு நேரம் போனது என எவருக்கும் தெரியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு பிரிவின் நுழைவாசல் கதவு திறக்க உள்ளே வந்தது – வேறு யார் – சுரேந்தர் தான்!

தான் இறந்து விட்டேன் என்று செய்தி அனுப்பிய சுரேந்தர் தான்! கலைந்த தலை – தோய்க்கப்படாத உடை, ஏதோ இழந்த மாதிரி ஒரு கவலை தோய்ந்த முகம் – உள்ளே நுழைந்து நேரே தனது இருக்கைக்குச் சென்றவர் அலைபேசியினை எடுத்து யாரிடமோ பேசினார் – “நான் இறந்து விட்டேன்! இனிமேல் உங்களுக்கு என்னால் தொந்தரவு இருக்காது!”  அவரைத் தவிர பிரிவில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம் – சிரிப்பதா, அவரை ஏதாவது கேட்பதா என்பது புரியாமல் நிமிடங்கள் நகர்ந்தன.  ஒருவர் மட்டும் கொஞ்சம் தைரியத்தினை வரவைத்துக் கொண்டு அவரிடம் சென்று, “எனக்கு நீ தர வேண்டிய கடனை சீக்கிரம் கொடு! எனக்கு அவசரத் தேவை இருக்கிறது” என்று கேட்க, சுரேந்தர் சொன்னார் – “நான் இறந்து விட்டேன்! என்னால் உங்கள் பணத்தினை தர முடியாது! வேண்டுமானால் என் வீட்டினரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்!”  என் மனைவியிடமோ அல்லது என் அப்பாவிடமோ வாங்கிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி அலுவலகத்தினை விட்டுச் சென்று விட்டார்.

சில நாட்கள் வரை வரவே இல்லை! ஒரு நாள் சுரேந்தரின் தந்தை எங்கள் பிரிவிற்கு வந்து மகனைப் பற்றி நிறைய வருத்தப்பட்டு, மகன் யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கி இருக்கிறான் என்று கேட்டு, கூடிய விரைவில் உங்கள் பணத்தினை நான் திருப்பித் தருகிறேன் – ஒரே ஒரு வேண்டுகோள் – இனிமேல் யாரும் அவனுக்கு பணம் தராதீர்கள், இனிமேலும் தந்தால் என்னால் திருப்பித் தர முடியாது என்று கண்ணீர் சிந்தாத குறையாக வேண்டிக் கொண்டு சென்றார். சுமன் தப்பித்தாலும், அலுவலகத்தின் மற்ற நண்பர்கள் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் – அதுவும் முப்பதாயிரம் கொடுத்தவர் ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறாராம் – தேவை எனக் கேட்டவருக்கு உதவி செய்தது குற்றமா என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்!

எத்தனை எத்தனை விதமான மனிதர்கள். நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

 1. இப்படியும் மனிதர்கள்...    அடுத்தவர் பணத்தில் மஞ்சள் குளிப்பவர்கள்!  இவர்களை என்ன சொல்ல?  சுரேந்தர் உண்மையிலேயே மனநோயாளி ஆகிப்போனாரா, அல்லது கடன்களுக்காக நடிக்கிறாரா..   அவருக்கே வெளிச்சம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்தவர் பணத்தில் மஞ்சள் குளிப்பவர்கள்... அதே தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பொன்மொழி அற்புதமானது ஜி

  இப்படி வழிகளும் இருக்கிறதா கடன்களை சமாளிக்க ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாழ்க்கை மரணம் பற்றிய பொன்மொழி சிந்திக்க வைக்கிறது. காயமே இது பொய்யடா.
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காயமே இது பொய்யடா... உண்மை ஜெயக்குமார் சந்திரசேகரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நன்றாக நடித்து ஏமாற்றி உள்ளதாக எனது தோன்றுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாற்றி உள்ளதாகவே தோன்றுகிறது - எனக்கும் அப்படி தான் தோன்றியது தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கரந்தை ஜெயக்குமார் ஐயா. இப்படி நிறையவே இருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. விதம் விதமாய் மனிதர்கள்... உண்மை தான் ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. ஸ்ரீராம் சொன்னதைத்தான் நினைத்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   நீக்கு
 8. எதிர்பாராத பதிவு. அருமை. நானும் பலரிடம் கடன் கொடுத்து ஏமாந்திருக்கிறேன். கேட்க வழியின்றி தடுமாறிக் னொண்டிருக்கிறேன். என்ன செய்வது? நடக்கட்டும்....

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது இறந்து போனவன்… – கதை மாந்தர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

  உங்கள் வலைத்தளம் எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா... நீங்களும் இப்படி ஏமாந்து போனது அறிந்து வருத்தம் சிகரம் பாரதி. நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.

   வலை ஓலை - மனம் நிறைந்த வாழ்த்துகள். என்னை/வலைப்பூவைப் பற்றிய குறிப்பு - விரைவில் அனுப்புகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. கடன் பெறுபவர்கள் ஒரு காரணம் வைத்திருப்பார்கள். இந்த கதாபாத்திரமும் அப்படித்தான். எவ்வளவு தைரியம் நான் இறந்து விட்டேன் என்று சொல்லி பின் அவர்களே வந்து பார்த்து தைரியமாக வீட்டில் உள்ளவர்கள் பணம் தருவார்கள் என்று சொல்வது உண்மையில் இவர் இறந்தவர்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எல்லாம் மனிதர்களா.! அயோக்கியனாக இருக்கணும் இல்லையானால் மன நோயாளியாகி இருக்க வேண்டும். தான் சுகத்தை. அனுபவித்து , தந்தையை கஷ்டத்தில் மூழ்கடித்திருக்கிறாரே. இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை தரமுடியும்?

   நீக்கு
  2. உண்மையில் இவர் இறந்தவர் தான் - நன்றாகச் சொன்னீர்கள் கௌசி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. அயோக்கியனாக இருக்கணும் - அதே தான் வல்லிம்மா... தனது சுகத்திற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் இவர்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. தவறான வழியில் சென்று....ஏமாற்றி ..என....

  என்ன வாழ்வு இது..☹️

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மோசமான வாழ்வு தான் அனு ப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. இப்படியும் மனிதர்கள். குடி குடியை கெடுக்கும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடி குடியைக் கெடுக்கும் - புரிந்து கொள்ள வேண்டிய எவரும் புரிந்து கொள்வதில்லை என்பதே சோகம் கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. போக்கிரித்தனம் என்பது இதுதானோ? தவறான ஆசையால் தூண்டப்பட்டு, செய்யக் கூடாத செயல்களை செய்து, அதிலிருந்து தப்பிக்க தான் இறந்து விட்டதாக கூறி... அடுக்கடுக்காக எத்தனை தவறுகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போக்கிரித்தனமே தான். தவறுகளின் மொத்த உருவமே அவர் தானோ என்று தோன்றுகிறது எனக்கு பானும்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. குடி பழக்கம் குடும்பத்தை கெடுக்கும் என்பதற்கு சரியான எடுத்துகாட்டு இந்த நபர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 14. தவறுகளை உணராது நடப்பதும் அளவுக்கு மீறி குடிப்பதும் ஒருவித மனநோயே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன நோய் மற்றவர்களையும் பாதிக்கும்போது தான் கொடுமை மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....