வியாழன், 13 பிப்ரவரி, 2020

அத்தி மலைத் தேவன் – பகுதி ஒன்று – காலச்சக்கரம் நரசிம்மா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும் – எண்ணம் போல் வாழ்க்கை.




எண்ணிக்கை பற்றிய இந்த வாசகம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சரி வாசகத்திலிருந்து விட்டு வெளியேறி இன்றைய பதிவுக்குச் செல்லலாம் வாருங்கள்!

அத்திமலைத் தேவன் பகுதி - 1 - வாசிப்பனுபவம்!!



தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்ட அத்திமலைத் தேவனுக்கும், தேவ உடும்பர மரத்திற்கும் சரித்திரத்தில் பெரும்பங்கு உண்டு..

அத்தியூர் என்னும் காஞ்சிவனத்தில் காஞ்சன குப்தருக்கும், சானேஷ்வரிக்கும் பிறந்த மகனான விஷ்ணுகுப்தன் தான் பிற்காலத்தில் பெரும் ராஜதந்திரியான கவுடில்யனாகவும், சாணக்கியனாகவும் போற்றப்படுகிறார். தன் மதியாலும், அத்திமலையானின் அருளாலும் மவுரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறார்.

பெண் மோகமும், பதவி வெறியும் பல சாம்ராஜ்யங்களை வீழ்த்துகிறது.

மவுரிய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னனான அசோகரைப் பற்றி பள்ளி நாட்களில் "அசோகர் சாலையோரங்களில் மரங்களை வளர்த்தார்! புத்த மதத்தை ஆதரித்தார்!" என்று தான் வாசித்திருப்போம் இல்லையா? ஆனால் சரித்திரத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களும், மர்மங்களும் ஏராளமாக உள்ளன.

சில வருடங்களுக்கு முன் மகாபலிபுரம் செல்லும் வழியில் "புலிக்குகை" என்ற இடத்திற்கு சென்ற போது எதுவும் தெரியவில்லை. ஆனால் இப்போது வாசித்த போது பல்லவ மன்னர்களான புலி சோமன், புலிவேமு, புலி வர்மனுக்கும் அந்த குகைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று தோன்றுகிறது. இப்படி நம் வரலாறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு சிறப்புமிக்க அத்திவரதனை தரிசிக்காமல் போய்விட்டேனே என்று வருத்தப்படுகிறேன். அவர் 40 வருடங்கள் துயிலில் இருப்பதன் காரணமும் யூகிக்க முடிகிறது. பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆன்மீகம், அரசியல், காதல், மர்மம், வரலாறு என்று பக்கத்திற்கு பக்கம் விறுவிறுப்பும், ஆச்சரியங்களும் கொட்டிக் கிடக்கின்றன இப்புத்தகத்தில். தொய்வில்லாத நடை. 584 பக்கங்களைக் கொண்ட இந்த புத்தகத்தை வாசிக்க மிக எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் உள்ளது. இவ்வளவு தகவல்கள் பொதிந்துள்ள இந்த பெட்டகத்தின் மதிப்பை எண்ணும் போது விலை ஒன்றும் அதிகமில்லை. “அத்திமலைத் தேவன்” மொத்தம் ஐந்து பகுதிகள். வானதி பதிப்பகத்தின் வெளியீடு – மொத்தத் தொகுப்பும் சேர்த்து சுமார் 2500/- ரூபாய்.  முதல் பகுதி ரூபாய் 450/-.  இணையம் வழியே சில தளங்களில் விற்பனை செய்கிறார்கள்.  சென்னையில் இருப்பவர்கள் வானதி பதிப்பகத்தில் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம்!

ஆசிரியர் திரு. 'காலச்சக்கரம் நரசிம்மா' அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும், நன்றியும். மிகப்பெரும் சரித்திரத்தின் ஒரு பகுதியை வாசித்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகளும் என்னோடு போட்டி போட்டுக் கொண்டு வாசித்தாள். அவளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. அத்திமலையானின் அருளால் விரைவில் அடுத்த பகுதியையும் வாசித்து என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த நேரத்தில் ஐந்து தொகுதிகளையும் சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி, ஆசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் கையொப்பமும் பெற்று அனுப்பி வைத்த திரு பாலகணேஷ் அவர்களுக்கும் எனது நன்றியை மீண்டுமொரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளின் வாசிப்பனுபவம் பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன்

ஆதி வெங்கட்

10 கருத்துகள்:

  1. வழக்கம்போலவாசகம் சிறப்பு.
    சுருக்கமான விமர்சனம்.   கதைச்சுருக்கத்தைத் தொட்டுச் செண்டிருக்கிறீர்கள்.  அதுவே ஒரு அவுட்லைனைக் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. விமர்சனம் இரசிக்கும்படி இருந்தது சகோ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. சமூக வலைதளங்களில் புத்தகத்தின் ஆசிரியர் இல்லை. இவருக்கு விளம்பரம் என்பது யாரும் செய்வதில்லை. ஆனால் இவர் புத்தகத்திற்கு முன் பதிவு செய்து ஒரே சமயத்தில் இரண்டு மூன்று பதிவுகள் வரைக்கும் புது திரைப்படம் வெளியீடு போல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சென்று கொண்டு இருக்கிறது. வாசக பெருமக்களின் பயங்கர ஆதரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் முகநூலில் இருக்கிறார் ஜோதிஜி. அவருக்கு இருக்கும் ஆதரவு பிரமிக்கத் தக்கது. அவரது சில புத்தகங்களை நான் படித்து என் பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன் முன்னரே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. அன்பு ஆதி. வாழ்ததுகள். வாசிப்பனுபவம் மிக நன்றாக இருக்கிறது. புலிக்குகை பற்றிய அவுட்லைன் ஆவலைத் தூண்டிகிறது. இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் புரட்சியை உருவாக்கப் போகிறது. அடுத்த பாகம் படித்து முடித்தவுடன் எழுதுங்கள. மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா.. மொத்தம் ஐந்து பகுதிகள். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள் மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....