திங்கள், 10 பிப்ரவரி, 2020

என் சீட்டு கிடைக்கலையே அவனுக்கு…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

மரணத்தைப் பற்றி கவலைப்படாதே… நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை… பிறகு எதற்கு கவலை?
படம்: இணையத்திலிருந்து...

”என் சீட்டு அவன் கைக்கு ஆம்பட மாட்டேங்குதேடி… என் சீட்டு மட்டும் அவன் கைக்கு ஆம்பட மாட்டேங்குதேடி…” புலம்பிக் கொண்டிருந்தாள் சுப்பிப் பாட்டி! என்ன சீட்டு, யார் கைக்கு ஆம்படமாட்டேங்குது? அதாவது கிடைக்க மாட்டேங்குது அந்த சீட்டு?

சுப்பிப் பாட்டிக்கு வயது எண்பதுக்கு மேல்! நாள் முழுவதும் சமையல் வேலைக்கே நேரம் போதாது – சும்மாவா வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் எந்த நேரம் என்ன வேண்டும் என்பது சுப்பிப் பாட்டிக்கு மட்டுமே தெரிந்த விஷயம் – அதுவும் யாருக்கு என்ன சுவை பிடிக்கும் என்பது வரை அவருக்கு அத்துப்படி! இப்போது மாதிரி இரண்டு மூன்று பேர் கொண்ட குடும்பம் அல்லவே! வீட்டில் எப்போதும் பத்துப் பதினைந்து பேருக்குச் சமைக்க வேண்டும் – அதைத் தவிர விருந்தாளிகள் இல்லாத நாளே இருக்காது! அதனால் கூடவே சமைத்து வைக்க வேண்டும். வருடம் முழுவதற்குமான அப்பளம் இட்டு வைக்க வேண்டும். அதுவும் ஆயிரக் கணக்கில் அப்பளம் இடுவார்கள்! அத்தனைக்கும் மாவு இடித்து, சலித்து என அது ஒரு பெரிய ப்ராசஸ். வருடாந்திரத்திற்குத் தேவையான வடாம், வத்தல், சாம்பார் பொடி என பலதும் செய்து வைக்க வேண்டும். கூடவே வயலிலிருந்து வரும் நெல், தானியங்கள் ஆகியவற்றையும் பாதுகாக்க வேண்டும்! எத்தனையோ வேலைகள்.

சுப்பிப் பாட்டி இல்லாவிட்டால் அந்த வீட்டில் இத்தனை வேலைகள் நடந்து விடாது என்று வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஆனாலும், சுப்பிப் பாட்டியிடம் அவ்வப்போது சொல்லிக் காட்டாமல் இருந்ததில்லை – “உன்னை விட சின்னவங்க எல்லாரும் போய்ட்டாங்க… நீ மட்டும் இன்னும் முளைக்குச்சி அடிச்சு கட்டினமாதிரி இருக்க!” என்று பெற்ற மகளே கூட கேட்ட நாட்கள் உண்டு! அப்படியான நாட்களில்தான் சுப்பிப் பாட்டி “என் சீட்டு அவன் கைக்கு அம்படமாட்டேங்குதே… நான் என்ன பண்ணட்டும்! ஊர்ல இருக்கற பல இளவட்டங்களோட சீட்டு மட்டும் அவன் கண்ணுக்குப் பட்டு அவங்களை அழைச்சுக்கறானே! என் சீட்டு கிடைச்சா நானும் நிம்மதியா போய்ச் சேர்ந்துடுவேன்” என்று சொல்வது சுப்பிப்பாட்டிக்கு வழக்கம்.  வயது எண்பதுக்கு மேல் ஆனபோதும் தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். 

வீட்டு நபர்களுக்கு மட்டுமல்ல அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்குமே சுப்பிப் பாட்டி என்றால் ரொம்பவே பிடிக்கும். சும்மாவா? அவர்களது வயலில் வேலை செய்யும் குடியானவர்களிலிருந்து வீட்டுக்கு வரும் தபால் துறை ஊழியர் வரை எல்லோருக்குமே எதாவது உதவி செய்து கொண்டே இருப்பார். யாருக்குக் குழந்தை பிறந்தாலும் பிள்ளை பெற்றவளுக்கு மருந்து செய்து கொடுப்பது, குழந்தை வளர்ப்பில் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது என பலதும் செய்தவள் சுப்பிப்பாட்டி. கிராமத்தில் ஒருவர் விடாது அத்தனை பேருக்குமே நல்லது செய்பவள் என்பதால் தெரு வழியே யார் வந்தாலும் திண்ணையில் அமர்ந்து பாட்டியிடம் பேசாமல் போனதில்லை. வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் கூட பாட்டி வீட்டு திண்ணைக்குச் சென்றால் குடிக்க நீர் மோர் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் வந்து கொஞ்சம் ஆஸ்வாஸப்படுத்திக் கொண்டு ஊர்க் கதைகளைப் பேசி, நீர் மோர் குடித்து போவது வழக்கம்.  யாரையுமே வேற்று மனிதராக பார்க்காதவர் சுப்பிப் பாட்டி.

பேத்தி ஆந்திர மாநிலத்தில் இருந்த கணவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும், உள்ளூரில் இருக்கும் பேத்திக்கும் கொடுத்து விட வேண்டும் என 1500 அப்பளங்கள் இட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கட்டுக்கட்டாக கட்டி எடுத்து வைத்து இரவு படுத்த போது மணி 10க்கு மேல்! காலையில் ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது என தனது விதவைப் பெண்ணிடம் “கொஞ்சமா காப்பி கொண்டு வாடி செல்லம்… என்னவோ பண்றது” என்று கேட்க செல்லம்மா “காலைல வேலை சொல்ல ஆரம்பிச்சுட்டியா? என்னவோ! இன்னும் எத்தனை நாளைக்கு தான் உனக்கு வேலை செய்யணும்னு இருக்கோ?” என்று கேட்டபடியே சமையலறைக்குச் சென்றார். செல்லம்மா காஃபியுடன் வந்து “இந்தாம்மா காஃபி என்று நீட்ட, சுப்பிப் பாட்டி கையை நீட்டவே இல்லை! “அம்மா, அம்மா… காஃபி கேட்டியே இந்தா…” என்று மீண்டும் சொல்லியபடியே அம்மாவை செல்லம்மா தொட, தலை சாய்ந்தது…

அம்மா என்ற அலறலோடு அம்மாவை செல்லம்மாக் கட்டி கொள்ள, அவர் கையிலிருந்து காஃபி டம்ளர் எகிற கடைசியில் காஃபி கூடக் குடிக்க நேரம் கொடுக்கவில்லை சித்ரகுப்தன். சுப்பிப் பாட்டியின் சீட்டு அவன் கைக்கு ஆம்பட்டு விட்டது! சீட்டு கையில் கிடைத்த உடனேயே அழைத்துக் கொண்டான் போலும்..

நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. .மரண தத்துவம் மாஸ்!

  //“உன்னை விட சின்னவங்க எல்லாரும் போய்ட்டாங்க… நீ மட்டும் இன்னும் முளைக்குச்சி அடிச்சு கட்டினமாதிரி இருக்க!” என்று பெற்ற மகளே கூட //

  மகளே தாயிடம் அப்படிக் கேட்பாரா?  உறுத்துகிறது.   மனதை வருத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுமாதிரி பலர் கேட்பாங்க.. சொல்வாங்க... ஆனா மனசால இல்லை. வேலை செய்யும் அலுப்பில்.

   நீக்கு
  2. இப்படிக் கேட்கும் சில மகள்களைப் பார்த்ததுண்டு ஸ்ரீராம். ஆதங்கம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. உண்மை தான் - வேலை செய்ய வேண்டியிருக்கிறதே என்ற அலுப்பில் கூட கேட்டிருக்கலாம் நெல்லைத் தமிழன். சிலர் கோபமாகக் கேட்டும் பார்த்ததுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சுப்பிப்பாட்டி போன்ற நல்லவர்களுக்கு இறைவன் அதிக சிரமம் கொடுப்பதில்லை.  மனதில்நிறைந்து விட்டார் பாட்டி. இயல்பான ஏராளமான தன் வேலைகளுக்கு நடுவே ஊருக்கும் உதவியாய் இருந்த இது போன்ற ஆத்மாக்களை பார்ப்பது அரிதினும் அரிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் அதிக சிரமம் கொடுப்பதில்லை - உண்மை தான் ஸ்ரீராம். சட்டென்று விட்டு விலக முடிந்தால் எத்தனை இன்பம்! சுப்பிப் பாட்டி போன்ற ஆன்மாக்கள் வெகுசிலரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. கதை மனதை கனக்க வைத்து விட்டது ஜி
  தத்துவமும் பொருத்தமானதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையும் தத்துவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. எல்லோருக்கும் உழைத்த பாட்டி கடைசி வரை யாருடைய உழைப்பையும் ஏற்காமல் சென்றது நல்லதே. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் - பல விதங்களில் நல்லது தான் ஜெயகுமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. சீட்டு இப்படி எல்லாருக்கும் சட்னு அகப்படுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீட்டு சட்டென்று அகப்பட்டு விட்டால் தானே! பலருக்கும் அகப்பட்டு விடுவதில்லையே நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. சுப்பிப்பாட்டி எல்லோருக்கும் உதவியவர். அவருக்கு ஒருவாய் காப்பி மனதார கிடைக்கவில்லையே! அதையும் ஏற்றுக் கொள்ள விடமால் அழைத்து சென்று விட்டார் தர்மராஜா.

  தனக்கு யாரும் பாடுபடவிடவில்லையே அதுவே நல்ல சாவுதான்.

  சுப்பி பாட்டி மனதில் நிறைந்து விட்டார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்பி பாட்டி மனதில் நிறைந்து விட்டார்- ஆமாம் கோமதிம்மா - அவரைத் தெரிந்தவர்கள் அனைவருடைய மனதிலும் அவர் இருப்பார். இப்போது இப்பதிவை படித்தவர்கள் மனதிலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. போனாளோ பொழைச்சாளோ என்று சொல்வதுண்டு. மனசால்
  மிகவும் கஷ்டப்படாமல், பிறரை எதிர்பார்க்காமல் நல்ல சாவு கிடைத்தது.
  சுப்பிப் பாட்டி ,அவள் உதவி செய்த மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பாள்.

  இப்படிக்கூட ஒரு மகள் இருப்பாளா!!.கசப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி சில மகள்கள் உண்டு! ஆயிரங்களில் ஒருத்தியம்மா நீ என்று கூட சொல்லலாம் வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. தலைப்பு வரிகள் மிக அருமை.உண்மை நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்பும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மனதை வருத்தும்...
  வாசகத்திற்கு ஏற்ற நிகழ்வு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

   நீக்கு
 12. வயதானால் மரண நினைவை தடுக்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஜி.எம்.பி. ஐயா. அவ்வப்போது வந்து போகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. Touched so deeply. She converted all her struggles into positive way. She died without suffering. The reward for her helpful action.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 14. இருக்கிறவரைக்கும் கசக்கிப் பிழியும் மகள்களைப் பார்த்திருக்கேன். இங்கேயும் அப்படி ஒரு மகள். ஒரு வாய்க் காஃபிக்குக் கூடக் கெஞ்ச வைக்கும் மகள்! பாட்டி மனதில் நிறைந்து விட்டார். எப்படியோ கிடந்து அதுக்கும் பேச்சு வாங்கிக்காமல் போய்ச் சேர்ந்தாரே! மனம் கனத்தாலும் ஒரு வகையில் இது ஓர் நிம்மதியும் கூட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் கனத்தாலும் இப்படி சட்டென்று போனதும் ஒரு விதத்தில் நல்லதே கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. ஆயிரத்துக்கும் மேல் அப்பளம் இடுவதும் வத்தல், வடகம் போடுவதும் வயல்வெளியில் இருந்து வரும் தானியங்களும் என் புக்ககத்தை எனக்கு நினைவூட்டியது. ஊரில் இருந்தால் இப்படித் தான் ஒரே அமர்க்களமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். இப்படி சில வீடுகளை நானும் பார்த்ததுண்டு - எப்போதும் உறவினர் கூட்டம் கூட்டமாக இருப்பார்கள், ஏதோ வேலைகள் நடந்து கொண்டே இருக்கும் - எப்போதும் கல்யாண கோலம் தான்! அதுவும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியான நாட்களே இல்லையா கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆமாம், வாசலிலேயே தச்சுப் பட்டறை போட்டு மாட்டு வண்டி மற்றும் கூண்டு வண்டிக்கான வேலைகள் ஒரு பக்கம் நடக்கும். இன்னொரு பக்கம் மொட்டை வண்டிகளில் காணத்துக்கான தேங்காய்கள் வரிசை கட்டி வரும்!ஆட்கள் அங்கும் இங்கும் போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். அறுவடை சமயம்னா வீட்டிலேயே கொல்லையில் கோட்டை அடுப்பில் ஆட்களுக்குச் சாப்பாடு தயார் ஆகும். அந்த சாம்பார் வாசனை தான் மூக்கைத் துளைக்கும். :)))) அதெல்லாம் எண்பதுகளுடன் மறைந்து விட்டன. எல்லோரும் ந"ர"கவாசிகளாகி விட்டோம். :)

   நீக்கு
  3. எங்கள் பாட்டி வீட்டில் கூட இப்படி மாட்டு வண்டிகள் - விதம் விதமாக இருந்தது உண்டு. எங்களுக்கு நினைவு தெரிந்து அந்த வீட்டிற்குச் சென்றதில்லை! நிறைய இழப்புகள் அம்மா வழி சொந்தங்களில் - இல்லை என்றே ஆகிவிட்டது கீதாம்மா...

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. தங்களுடைய வழமையான பயணப் பதிவுகளில் இருந்து விலகி ஒரு அருமையான பதிவு. நன்றாக இருக்கிறது. மனதைக் கனக்க வைத்தது. சுப்பிப் பாட்டி போன்றவர்கள் இப்போது பெரும்பாலும் இல்லை.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழமையான பயணப் பதிவுகளில் இருந்து விலகி - ஹாஹா... அவ்வப்போது இப்படியும் எழுதுவது உண்டு சிகரம் பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. மனசு கனமாகிப் போச்சு. தள்ளாத வயதில் தாங்கிக்கொள்ள ஆதரவான கரங்களும் ஆறுதல் வார்த்தைகளும் கிடைக்கப்பெறாத எத்தனையோ முதியவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம்மால் என்ன செய்யமுடிகிறது? ஆதங்கமாகத்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதரவான கரங்களும், ஆறுதல் வார்த்தைகளும் கிடைக்கப் பெறாத முதியவர்கள் - ரொம்பவே பாவம் தான். ஆதங்கமும் தான் கீதமஞ்சரி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....