புதன், 5 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி ஒன்றுஅனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.

உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் அப்படிச் சுலபம் இல்லை! வெகு சிலருக்கே இது சாத்தியம்!படம்: பனிப்பொழிவு...

சமீபத்தில் அலுவலகப் பணி சம்பந்தமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் என்ற இடம் வரை செல்ல வேண்டும். அதுவும் விடுமுறை நாட்களான சனி-ஞாயிறில்! பத்மநாபன் அண்ணாச்சிக்கான வேலை – கூடவே என்னையும் அவ்வேலையில் கோர்த்து விட நானும் அவருடன் பயணித்தேன். வேலை என்னமோ சில மணி நேரங்களுக்கான வேலை தான் – இங்கிருந்த படியே செய்து முடிக்க முடியாத வேலை என்பதால் தில்லியிலிருந்து சோலன் நோக்கி பயணிக்க வேண்டும் – தலைநகர் தில்லியிலேயே அதீத குளிர் எனும்போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலைநகர் ஷிம்லா அருகே இருக்கும் சோலன் பகுதியில் குளிர் இன்னும் அதிகம் இருக்கும் – அதுவும் கூடவே மழையும், மழையால் வந்த பனிப்பொழிவும் இருக்கும் என்று Accuweather தளம் சொல்ல, எப்படிப் போகப் போகிறோம் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும். கடைசி நேரத்தில் முடிவு செய்யப்பட்ட பயணம் என்பதால் கல்கா வரை ஷதாப்தி இரயிலில் இடம் இல்லை!

சரி பேருந்தில் செல்லலாம் என்றால் சனி-ஞாயிறு இரண்டு நாட்களில் வேலை முடித்து திரும்ப முடியாது – கொஞ்சம் பரபரப்பாகி விடும் என்று யோசித்தபோது காரிலேயே சென்று வரலாம் என்று முடிவானது – அலுவலகக் காரில் தான்! காலையில் ஓட்டுனருடன் பத்மநாபன் அவரது இல்லத்திலிருந்து வந்து என்னையும் அழைத்துக் கொண்டு சோலன் நோக்கிய பயணம் ஆரம்பமானது. அதிகாலைப் பனிமூட்டத்தில் வாகனம் செலுத்துவது என்பது கொஞ்சம் கடினமான வேலை – அதுவும் தலைநகரம் தாண்டிய பிறகு தேசிய நெடுஞ்சாலை தொடும்போது, இரண்டு பக்கங்களிலும் வயல்வெளிகள் – திறந்த வெளி என்பதால் பனிமூட்டம் ரொம்பவே அதிகமாக இருக்கும். செல்லும் வாகனங்கள் அனைத்துமே இண்டிகேட்டர் விளக்குகளை Blinker Mode-ல் வைத்து தான் செல்ல முடியும்! தோராயமாகவே சாலையில் பயணிப்பது போன்ற உணர்வு பின் இருக்கையில் இருக்கும் எங்களுக்கு! நிதானமான வேகத்தில் செல்லச் சொல்லி ஓட்டுனருக்குச் சொல்லி எங்கள் அரட்டையில் ஆழ்ந்தோம் நானும் பத்மநாபன் அண்ணாச்சியும்.

தில்லியிலிருந்து சண்டிகர் செல்லும் பாதையில் இருக்கும் மூர்த்தல் என்ற இடம் தலைநகர்வாசிகளுக்கு மிகவும் பிடித்த இடம் – வரிசையாக நிறைய உணவகங்கள் உண்டு. தலைநகரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு உண்பதற்காகவே செல்லும் சிலர் உண்டு! அந்த இடத்தில் இருக்கும் ஹோட்டல் ஷிவா மாமா யாதவ் என்ற உணவகத்தில் வாகனத்தினை நிறுத்தும்போது காலை  எட்டு மணி! அடிக்கும் குளிருக்கு பசி எடுத்தது – கூடவே கொஞ்சம் சூடாக தேநீரும் தேவையாக இருந்தது. ஆனியன் பராட்டா/ப்யாஜ் பராட்டா கூடவே வெண்ணெய், இனிப்பு எலுமிச்சை ஊறுகாய், மிக்ஸ் வெஜ் ஊறுகாய், தொட்டுக்கொள்ள கெட்டித் தயிர் என சுவையான உணவு. சாப்பிட்டு முடித்து குளிருக்கு இதமாய் எருமைப் பாலில் அதிக சர்க்கரை சேர்த்த ஒரு தேநீர்! ஹரியானா காரர்களுக்கு இனிப்பு ரொம்பவே பிடிக்கும் – நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மாதத்திற்கு 20 கிலோ சர்க்கரை பயன்படுத்தும் நண்பர் ஒருவரை அறிவேன்! இப்படி காலை உணவை முடித்துக் கொண்டு புறப்பட்ட எங்கள் வண்டி அடுத்ததாய் நின்றது சோலன் நகரில் தான்!


படம்: சோலன் உணவகத்தின் ஒரு காட்சி...

சோலன் நகர் சென்று சேர்ந்ததும் நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல எங்களுக்காகக் காத்திருக்கும் ஒருவரை அழைக்க அவர் காத்திருக்கும் இடத்தினைச் சொன்னார் – அது ஹோட்டல் பாரகன் மௌண்ட்! அப்போது நேரம் மதியம் ஒன்றரை.  மதிய உணவை முடித்துக் கொண்டு பிறகு அலுவல் வேலையைக் கவனிக்கலாம் என முடிவானது. அங்கே இருக்கும் திறந்தவெளி உணவகத்திலேயே சாப்பிடலாம் எனச் சொல்ல தந்தூரி ரொட்டி, தால், கடாய் பனீர் மற்றும் மிக்ஸ் வெஜ் சப்ஜி, சாதம், தயிர் என ஆர்டர் செய்து இயற்கையை ரசித்தபடி காத்திருந்தோம். மேக மூட்டம், சில்லென்ற காற்று, எப்போது வேண்டுமானாலும் மழை வரக்கூடும் என்ற சூழல் – ரொம்பவே ரம்மியமான மதியப் பொழுது. திறந்தவெளி உணவகம் என்பதால் அங்கிருந்து மலைத் தொடர்களையும், கீழே அதலபாதாளத்தில் தெரியும் வளைந்து நெளிந்த சாலைகளையும் அதில் பயணிக்கும் வாகனங்களையும், மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்றே அதிக நேரம் தான் காத்திருக்க வேண்டியிருந்தது. 

காத்திருந்த நேரத்தில் இருட்டிக் கொண்டு வர மழை வருவதற்குள் சாப்பிட முடியுமா? இல்லை உள்ளே செல்ல வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் இருந்தோம். அந்தச் சூழல் ரொம்பவே பிடித்திருக்க, பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து அங்கேயே இருக்க, நாங்கள் சொல்லி இருந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தார் ஒரு நாகரீக மங்கை. நின்று நிதானித்து, சுவைத்துக் கொண்டிருக்க, அவ்வப்போது ஒன்றிரண்டு மழைத்துளி எங்கள் மீது விழுந்தது. மழை வலுக்காது என்ற எண்ணத்துடன் உணவை உண்டு முடித்தோம். மழைத் துளிகள் எங்கள் மீது விழுந்த படி இருக்க, சாப்பிட்ட உணவும் நல்ல சுவையோடு இருக்க, ரொம்பவே ரசித்துச் சாப்பிட்டோம் நாங்கள் அனைவருமே. பிறகு அங்கிருந்து புறப்பட்டு எங்களுக்கான வேலையை முடிக்கச் சென்றோம். அங்கே அந்த வேலை முடிய இரண்டு மணி நேரம் ஆனது.  வேலையை முடித்துக் கொண்டு தில்லி திரும்பினால் நடு இரவு ஆகிவிடும் என்பதால் அன்றைய இரவு சோலனிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஷிம்லாவில் இரவு தங்குவது எங்கள் திட்டமாக இருந்தது.


படம்: ஷிம்லாவில் தங்கிய இடத்தின் ஒரு அறை...

ஒன்றரை மணி நேரப் பயணத்தில் ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான ஷிம்லா சென்றடைந்தோம். அன்றைய இரவு தங்குவதற்கு ஹோட்டல் பல்ஜீஸ் ரீஜன்ஸி என்ற இடத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அறைக்குச் சென்று எங்களது உடைமைகளை வைத்து விட்டு ஓட்டுனர் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொஞ்சம் சுற்றி வரலாம் என முடிவு செய்தோம். இதற்கு முன்னரும் ஷிம்லா நகருக்குச் சென்றிருப்பதால் பார்க்க வேண்டிய இடங்கள் என பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் மாலை நேரத்தில் ஷிம்லாவின் பிரபல மால் ரோட் சென்று நேரத்தைக் கழிக்கலாம் என பேசியபடி அறைக்குச் சென்றோம். சாலையைப் பார்த்தபடியான அறை – அங்கிருந்து பனிப்பொழி மூடிய சிகரங்களும் தெரியும் அறை. ரொம்பவே அழகாக இருந்தது. ஷிம்லா நகரத்திற்கு வரும் தேனிலவு தம்பதிகள் அதிகம் விரும்பும் அறை என்று எங்களுடன் வந்த பணியாளர் சொல்ல, “என்னைப் பார்த்து இப்படி ஏண்டா சொன்ன?” என்று கேட்ட கவுண்டமணி நினைவுக்கு வந்தார். பணியாளர் கதவை மூடிச் சென்ற பின் கதவின் உள்பக்கக் கைப்பிடியில் தொங்கிய “Do Not Disturb” Tag ஆடியது எங்களைப் பார்த்து நக்கலாக சிரிப்பதைப் போல தெரிந்தது.  

அதன் பிறகு என்ன செய்தோம் என்று அடுத்த பகுதியில் சொல்கிறேனே! கொஞ்சம் நீண்ட பதிவாக இருப்பதால், மற்ற விஷயங்கள் வரும் பகுதியில் வெளியாகும்! நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


டிஸ்கி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...

30 கருத்துகள்:

 1. //உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.// உணர்ச்சிகளை எதற்காக அடக்க வேண்டும்? பிறப்பது ஒருமுறை. அதற்கு எதற்கு தடை?

  நல்ல பதிவு. இலங்கையில் இருந்தே சோலன் பயணித்த உணர்வு. நானும் கவுண்டமணி மாதிரி ஒன்னு கேட்கிறேன். அது எப்படி உங்களுக்கு மட்டும் பயணமாகவே வாய்க்கிறது?

  அருமையான எழுத்து நடை. தொடருங்கள், தொடர்வோம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிறப்பது ஒரு முறை - எதற்கு தடை! நல்லது சிகரம் பாரதி!

   சில சமயங்களில் பயணங்கள் தானாக அமைந்து விடுகிறது! சில சமயம் நானாகவே அமைத்துக் கொள்கிறேன். அதை பகிரவும் செய்கிறேன்! எனக்கான ஒரு சேமிப்பாகவும் மற்றவர்களுக்கு ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்றும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமையான பயணமாக இருந்திருக்கிறது. உணவகங்களும் உணவு வகைகளின் பட்டியலும் சாப்பிடும் ஆர்வத்தைத் தூண்டி விட்டது. தொடரக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிடும் ஆர்வம் - ஹாஹா... இவற்றில் பல நீங்களே செய்து சாப்பிடலாம் கீதாம்மா... உங்களுக்குத் தெரிந்த சமையல் தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. உணர்ச்சிகளை அடக்குவது ஆபத்து.   ஸ்ட்ரெஸ், ரத்தக் கொதிப்புக்கு சான்ஸ்!  கோபம் மனதாலும் இல்லாதிருத்தல் நலம்.  அதேபோல் துக்கம் போன்றவையும்.  மகிழ்ச்சி வெளிப்படுத்தலே நன்று.    

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்வுகளை அடக்குவது ஆபத்து - சிலருக்கு இப்படியும் ஆகலாம் தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பயணங்களே வரம்.   அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.  அதிலும் இதுபோன்ற இடங்கள்...    அதிலும் அலுவலக வேலையாக, அவர்கள் செலவில், அவர்கள் வாகனத்தில்...    வரமோ வரம்!  சோலன் உணவகக்காட்சி மற்றும் அனுபவம் பிரமாதமாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கைப் பயணம் என்று வெங்கட் விஷயத்தில் சொல்ல முடியாது.
   பயணம் தான் அவர் வாழ்க்கை.
   எனக்கு பிடித்த பராந்தா ,சப்பாத்தி,வெண்ணெய், தயிர் என்று அடுக்கிக் கொண்டே போகிறீர்கள். அனுபவி ராஜா அனுபவி:)
   தேன் நிலவுத் தம்பதிகள் நீங்கள் சென்றீர்களா. நல்ல தமாஷ்.
   மிக மிக நன்றி வெங்கட். எங்களாய்யும் மகிழ வைக்கிறீர்கள்.

   நீக்கு
  2. பயணங்கள் வரம் - சில சமயங்களில் தேவையில்லாததாகவும் அமைந்துவிடுவது உண்டு - As they say, exceptions are always there! ஆனாலும் நீங்கள் சொல்வது போல எனக்கு நிறைய பயணங்கள் வாய்த்து விடுகிறது ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. //பயணம் தான் வாழ்க்கை// ஹாஹா... வாழ்க்கையே ஒரு பயணம் தானே வல்லிம்மா...

   அனுபவி ராஜா அனுபவி - ஹாஹா... ஹரியானாவின் வெண்ணெய் ரொம்பவே நன்றாக இருக்கும் என்பதால் கூடுதலாக இரண்டு கட்டிகள் உள்ளே சென்றது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. பயணம் பற்றிய இந்தப் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. செய்திதாள்களில் சிம்லாவில் பணி படந்திருப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். நீங்கள் நேரில் பார்த்த அனுபவம் அருமையாக இருந்தது. உங்கள் வர்ணனை எங்களை சிம்லாவிற்கே அழைத்து சென்றுவிட்டத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... ஒருவர் பின் ஒருவராக உங்கள் இருவரிடமும் இருந்து கருத்துரை! மிக்க மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அருமை
  பயணமே வாழ்க்கையாய் வாழும் தாங்கள் போற்றுதலுக்கு உரியவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பயணமே வாழ்க்கையாய்!// ஹாஹா... என்றும் பயணித்தால் நன்றாகத் தான் இருக்கும்! ஆனால் அப்படி அமைவது சுலபமாக இல்லையே!

   பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. படம் பார்க்க எங்களுக்கு இங்கேயே குளிர்வது போல உள்ளது..ஆவலுடன் அடுத்த பதிவைத் தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் பார்த்தே குளிர்கிறதா? ஹாஹா... நேரில் குளிர் என்றாலும் பிடித்தால் நன்றாக அனுபவிக்கலாம்! ரசிக்கலாம் ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. படங்கள் இந்தப் பதிவில் மிகத் தெளிவாக அழகாக வந்துள்ளது. என் கனவுகளை நீங்கள் உங்கள் பயணத்தின் மூலம் மீண்டும்மீண்டும்நினைவு படுத்திக் கொண்டே இருக்குறீங்க. நிச்சயம் செல்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்துமே இணையத்திலிருந்து தான் ஜோதிஜி. நான் கேமரா எடுத்துச் செல்லவில்லை.

   உங்கள் கனவுகள் விரைவில் நிறைவேறட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. படங்கள் நன்றாக இருக்கிறது.
  பயணம் குளுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 13. படம் அழகோ அழகு! எனக்குக் கொடைக்கானல் நினைவு வந்தது.. குளுமையான சூழல் எப்போதும் எங்களூரை நினைவுபடுத்தும்.
  உணவு வகைகளைப் பட்டியலிட்டுப் பசியைத் தூண்டிவிட்டீர்கள். :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குளுமையான சூழல் உங்களூரை நினைவுபடுத்தும்! :) மகிழ்ச்சி கிரேஸ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. பனிப்பொழிவு...பார்க்க ஆசைப்படும் நிகழ்வும், இடமும்..


  இனிய காட்சிகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது ஷிம்லா சென்று வாருங்கள் அனுப்ரேம் ஜி. பனிப்பொழிவு சமயத்தில் சென்றால் நன்றாகவே இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....