வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காதலர் தினம்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள் – அது விண்ணிலிருந்து வந்தாலும் சரி… கண்ணிலிருந்து வந்தாலும் சரி!கண்ணிலிருந்து கண்ணீர் வராமல் இருப்பதே நல்லது! நம்மால் யாருடைய கண்ணிலிருந்தும் கண்ணீர் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் கொள்வோம்!


படம்: இணையத்திலிருந்து...

இன்றைக்கு காதலர் தினம் – முன்பெல்லாம் இந்த அளவு கொண்டாட்டங்கள் இருந்ததா என்பது நினைவில்லை – கொண்டாட்டங்களை விடுங்கள், இந்த 14 ஃபிப்ரவரி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டதா என்பது கூட சந்தேகம் தான் – நான் கல்லூரியில் படித்த நாட்களில் இந்த மாதிரி கொண்டாட்டங்கள் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.  அப்போது ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகள் கூட இல்லை! தலைநகர் தில்லி வந்த பிறகு தான் இந்த ஆர்ச்சீஸ் வாழ்த்து அட்டைகளையே பார்த்தேன்! ஆனால் இப்போதெல்லாம் நிறையவே கொண்டாட்டங்கள் – என்னென்னவோ சிறப்பு நாட்களைக் கொண்டாடுகிறார்கள் – ஒவ்வொரு நாளுக்கும் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது – நேற்று கூட வானொலி தினம் என்று பார்த்தேன்! இந்த காதலர் தினம் என்பது மிகப் பெரிய வியாபார விஷயமாகி விட்டது – இது ஒரு மிகப் பெரிய மார்க்கெட் – இந்தியாவிலும் கூட! ஒரே ஒரு ரோஜாப் பூ கூட நூறு ரூபாய் வரை தலைநகரில் விற்பனையாகிறது இந்த நாளில்!

எங்கே பார்த்தாலும் ரோஜாக்கள் – அதற்கும் ஏதேதோ விதிமுறைகள் உண்டாம் – வெள்ளை ரோஜா, சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விஷயத்தினைச் சொல்கிறார்கள் – பல முறை கேட்டாலும் என் மர மண்டைக்குள் அதன் மகத்துவம் ஏறவில்லை!  இந்த காதலர் தினத்தில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவோம்! இந்த நாளில் நான் ரசித்த சில காதலர் தின விளம்பரங்களை உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன். மொத்தமாக மூன்று காணொளிகள் தான் – அதிகமில்லை! இந்த காணொளிகளை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும்! ஆனாலும் மீண்டும் பார்ப்பதில் தவறில்லை! பார்க்கலாமே!

முதலாவது விளம்பரம்:

தூரம் ஒரு பெரிய விஷயமே இல்லை – காதலர்களுக்கிடையே எதற்காக இத்தனை தூரம்! அனைத்துமே தொட்டு விடும் தூரம் தான்! பாருங்களேன்!
இரண்டாம் விளம்பரம்:

ஒரு பெண்ணின் மனதைத் தொட உணவும் வழி செய்யும்! பாருங்களேன். ஆங்கில சப்டைட்டில் உடன் கிடைக்குமா எனத் தேடிப் பார்த்தேன் – கிடைக்கவில்லை! ஹிந்தியில் இருந்தாலும் உங்களுக்கும் புரியும் வகையில் தான் இருக்கிறது என நம்புகிறேன். பாருங்களேன்!மூன்றாம் விளம்பரம்:

எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத அன்பு! எதிர்பார்த்தது கிடைக்காதெனினும் தொடர்ந்து அன்பு செலுத்துவதே நன்று! பாருங்களேன் இந்த விளம்பரம் என்ன சொல்கிறது என!  இந்த விளம்பரம் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து!இந்த நாளின் காணொளிகள் பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் பின்னூட்டம் வழியே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்
புது தில்லியிலிருந்து…

28 கருத்துகள்:

 1. வழக்கம்போல அருயான வாசகம்.  அந்நாட்களில் இந்நாள் அறியப்பட்டதே இல்லை!  ஏன், அம்மா தினம், அப்பா தினம், சகோதரி தினம் என்றெல்லாம் கூட அறிந்ததில்லை.  இப்போது உலகம் விரிந்து, அயல்நாட்டு வழக்கங்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம். அப்பொழுது இப்படி ஒரு தினமும் இருந்ததில்லை - முட்டாள்கள் தினம் தவிர! :))))

   பல அயல்நாட்டு வழக்கங்கள் இங்கே வந்த வண்ணமே இருக்க, அவையே நம் வழக்கம் என நினைக்க ஆரம்பித்து விட்டனர் குழந்தைகளும் பெரியவர்களும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. முதல் இரண்டு காணொளிகளும் அருமை.  மூன்றாவது இன்னும் பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்றாவது காணொளியும் முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம் - அது தான் இருப்பதிலேயே எனக்கு அதிகம் பிடித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இரண்டாவது அழகுக் காதல் மனம் தொட்டது
  மூன்றாவது மனம் தொட்டக் காதல் அழகு

  பகிர்விற்கு நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய வாசகம் எப்போதும் போல் அருமை. இப்போதுதான் நீங்கள் சொல்வது போல் இந்த தினங்கள் கொண்டாட்ங்கள் நிறைய வந்து விட்டது. முன்பு நம் அம்மா காலங்களில் பிறந்ததின கொண்டாட்டம் மட்டுமே ஒவ்வொரு குடும்பங்களுக்கும் முக்கியத்துவமாக இருந்தது. அதன் பின் திருமணநாள் கொண்டாட்டம் இடம் பிடித்தது.

  இப்போது பொதுவாக அன்னை, தந்தை, என பல குடும்ப உறவுகளின் நினைவாக அன்றைய தினங்களை குறிப்பிட்டு கொண்டாடுகின்றனர். வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர். தினம், தினம் ஒரு தினமாக குறிப்பிடுகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமான விஷயந்தான் எனவும் சமயத்தில் தோன்றுகிறது. அன்பு பகிரப்படும் போது எங்கும் சந்தோஷங்களும் சமாதானங்களும் எழுந்தால் திருப்தியே..! இதனால் எப்போதும் மகிழ்வாக நம்மை வைத்திருக்க இது ஒரு காரணமாகவும் இருக்கிறது.

  வாழ்த்து அட்டைகளை பரிமாறி மகிழ்வடைவது ஒருபக்கம் இருப்பினும், கைப்பேசி மூலமாக புதுமைகளை புகுத்தியபடி காலம் நிறையவே முன்னேறிக் கொண்டுள்ளது. நாமும் அதனுடன் சேர்ந்து முன்னேற ஒரு வாய்ப்பு என்றுதான் தோன்றுகிறது.

  முதல் காணொளி கண்டேன் நன்றாக உள்ளது. மீதி இரண்டும் பிறகு காண்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான பின்னூட்டம். மகிழ்ச்சி கமலா ஹரிஹரன் ஜி. ஆமாம் வாழ்த்து அட்டைகளை இப்போது கைபேசி வழி அனுப்பும் தகவல்கள் பிடித்துக் கொண்டன! ஆனாலும் வாழ்த்து அட்டைகளிலும் ஒரு வித ஈர்ப்பு இருக்கத் தான் செய்தது!

   முதல் காணொளி கண்டதில் மகிழ்ச்சி. மற்ற இரண்டும் நேரம் கிடைக்கும்போது பார்த்து ரசியுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாசகம் அருமை ஜி
  காணொளிகள் மூன்றும கண்டேன்.

  இன்று காதல் படுத்தும் பாட்டைவிட காதலை செல்போன் படுத்தும்பாடு கஷ்டம்தான்.

  இனி நானும் எப்படித்தான் காதலித்து கரை சேரப்போகிறேனோ ?
  "ஜெய் ஆஞ்சனேயா"

  காதல் என்றால் அன்பு என்று அர்த்தம் கொள்ளவும் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதல் படுத்தும் பாட்டைவிட காதலை செல்போன் படுத்தும்பாடு கஷ்டம் - உண்மை கில்லர்ஜி.

   காதல் என்றால் அன்பு - அதே தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 7. காதலர் தினத்தில் யாரிடமாவது காதலை சொல்லியே தீர வேண்டும் என திரிகிறார்கள் இளைஞர்கள். காதலன் - காதலி இல்லாவிட்டால் அது ஒரு பெரிய குறையாக நோக்கப்படுகிறது. அதற்கு சினிமாவும் ஒரு காரணம். என்ன செய்ய... அன்பும் பணத்துக்கு அடிமையாகிவிட்டதே?

  //ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள் – அது விண்ணிலிருந்து வந்தாலும் சரி… கண்ணிலிருந்து வந்தாலும் சரி!// - மிக அருமை...

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரிடமாவது சொல்லியே தீர வேண்டும் என திரியும் இளைஞர்கள் - ஹாஹா... இப்படியும் சிலர்.

   பணத்திற்கு அடிமையான அன்பு - :(

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. காதல் இவர்களைப் படுத்தவில்லை...

  இவர்கள் தான் காதலைப் பாடாய்ப் படுத்துகின்றார்கள்..

  காதலால் காணமல் போன உயிர்கள் தான் எத்தனை எத்தனை?...

  காணொளிகள் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவர்கள் தான் காதலைப் பாடாய்ப் படுத்துகின்றார்கள் - இப்படியும் சொல்லலாம் துரை செல்வராஜூ ஜி.

   காதலால் காணாமல் போன உயிர்கள் - சோகம்.

   காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. விளம்பரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. அன்பர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்.. மூன்று காணொளிகளும் அருமை. Zamato மிக அழகு. கல்யாணத்தில் முடிவில்லாத அன்புக்கும் வாழ்ததுகள். ஸ்கூட்டி லவ் சூப்பர். வெங்கட் அண்ட் ஆதிக்கு இனிய காதலர் தின வாழ்ததுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பர் தின வாழ்த்துகள் - வாழ்த்திய உங்களுக்கு எங்கள் நன்றி வல்லிம்மா...

   காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கானொளியுடன் காதலை சொன்ன விதம் அழகு. அந்தக் காலத்தில் இது எல்லாம் இருந்ததில்லை. இருக்கும் போது அன்பு ஒன்றே. எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. ஆடி அமாவாசை, சித்திரா பௌர்ணமி மாத்திரமே இருந்தன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த எதிர்பார்ப்புகளும் இல்லா அன்பு - அது மட்டுமே நிரந்தரம்.

   காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌசி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. "காதலர் தினம்" என இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் அதீதமான கொண்டாட்டங்கள். இங்கெல்லாம் அன்பைத் தெரிவிக்கும் நாள். சின்னக் குழந்தைகளுக்குக் கூட அன்பைத் தெரிவிக்கும் விதமான பொம்மைகள் வாங்கிக் கொடுப்பார்கள். பள்ளிக்குழந்தைகளும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்தோ, வாழ்த்து அட்டைகள் கொடுத்தோ தங்கள் சிநேகிதத்தைப் புதுப்பிப்பார்கள். பள்ளி ஆசிரிய, ஆசிரியர்களுக்குக் குழந்தைகள் வாழ்த்துகளும், பரிசுகளும் கொடுப்பார்கள். இது எல்லாம் தான் இந்த நாளின் அடிப்படை. கணவன்,மனைவிக்குள் மட்டுமில்லாமல் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கும், சகோதர சகோதரிகள் இடையேயும் அன்பு பரிமாறப்படும். ஆனால் நம்மவர்கள் தான் எல்லாவற்றையும் அவங்க கண்ணோட்டத்தில் தானே பார்ப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். பல விஷயங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து அதையே நம் வழக்கமாக மாற்றிக் கொண்டு விட்டோம் கீதாம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. ஆஹா உங்கள் வருகை மகிழ்ச்சி தந்தது மது - நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. கானொளிகள் அருமை. மூன்றாவது மிகவும் பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....