சனி, 31 ஆகஸ்ட், 2013

உறியடி உத்ஸவமும் ஸ்ரீ ஜெயந்தியும்


 
திருவரங்கத்தில் ஸ்ரீஜெயந்தி கொண்டாட்டங்கள் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. 29-ஆம் தேதி மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 10.00-10.30 நடந்து ஸ்ரீ பண்டாரம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து அங்கே திருமஞ்சனம் நடத்தி மாலை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அம்மா மண்டபத்திற்கு மாலை சென்ற போது சில வட இந்திய பெண்கள் ஒரு கிருஷ்ணர் – ராதா சிலை வைத்து பூஜித்து சுற்றிச் சுற்றி கும்மி அடித்தார்கள். நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் பெண்மணிக்கும் அதைப் பார்த்து ஆசை வந்துவிட அவரும் கும்மியில் கலந்து கொண்டார். பிறகு சிலைகளை அம்மா மண்டப காவிரி ஆற்றில் விட, மூன்று சிறுவர்கள் ஆற்றில் பாய்ந்து கிருஷ்ணரைக் காப்பாற்றினார்கள் – “கிருஷ்ணர் கூட இருந்த பொம்பளை சிலையை காப்பாத்த முடியலை, ஆற்றிலே மூழ்கிடுச்சு!” என்று சொன்னபடியே கிருஷ்ணரை ஒரு துண்டு வைத்து துடைத்து அது கொண்டே மூடி எடுத்துக் கொண்டு சென்றார்கள். 


உறியடி மண்டபம்


நேற்று காலை 07.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் உத்ஸவ மூர்த்தி புறப்பட்டு சித்திரை வீதிகளில் எண்ணெய் விளையாட்டு நடத்தி மண்டபம் திரும்பினார். மாலையில் நம்பெருமாள் உபய நாச்சியார்களோடு சித்திரை வீதிகளில் வழியாக உலா வந்து யாதவ உறியடி ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். ராஜ கோபுரத்தினைத் தாண்டி கோவில் இருக்கும் பாதையில் வந்தால் பாதாள கிருஷ்ணர் சன்னதி இருக்கும். இந்த இடத்தில் தான் இந்த மண்டபம் இருக்கிறது. அங்கே உறியடிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

உறியடி உத்ஸவத்தினைக் காண நேற்றிரவு சென்றிருந்தேன். எட்டு மணிக்கு தான் நம்பெருமாள் உபய நாச்சியார்களோடு வீதி உலா கிளம்பினார். தெருவெங்கும் கோலமிட்டு அவருக்காக மக்கள் காத்திருக்க, அவரை வணங்கிவிட்டு உறியடி நடக்கும் பாதாள கிருஷ்ணர் சன்னதி அருகே சென்றோம். வீதி உலா முடிந்து நம்பெருமாள் வரும் வரை காத்திருக்க வேண்டுமே – சித்திரை வீதியில் இருக்கும் தெருவோர வடை – சமோசா – பஜ்ஜி கடையில் ஏகப்பட்ட கூட்டம் – நமக்குத் தான் கையும் வாயும் சும்மா இருக்காதே!

எண்ணைய் சட்டியிலிருந்து எடுத்த சில நிமிடங்களில் சமோசாக்களும் சுடச் சுட வடைகளும் காலியாக அடுத்த ஈடுக்கான தயாரிப்பில் இருந்தார் வண்டிக்காரரும் அவரது உதவியாளரும். நாலு வடை பத்து ரூபாய், நாலு சமோசா பத்து ரூபாய் என சல்லிசான விலையில் மக்கள் அதை கபளீகரம் செய்து கொண்டிருக்க, வெண்ணை உண்ண கிருஷ்ணர் காத்திருந்தார்.


ஸ்ரீ கிருஷ்ணர்…..



தெற்கு சித்திரை வீதியும் ராஜ கோபுரத்திலிருந்து கோவில் செல்லும் வீதியும் சந்திக்குமிடத்தில் மக்கள் திரளாக நின்று கொண்டிருக்க கூட்டத்தில் காமெராவும் கையுமாக நானும் ஐக்கியமானேன். உறி அடி ஆஸ்தான மண்டபத்தில் கட்டி வைத்திருக்கும் மண்பானையையும் அலங்காரத்தினையும் சில புகைப்படங்கள் எடுத்த பின் காமெராக் கண் அங்கேயும் இங்கேயும் அலைய, மண்டபத்தின் அருகே ஒரு கடையில் கிருஷ்ணர் அலங்காரம் செய்து வைத்திருப்பதைக் கண்டேன். அவரையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

மக்கள் கூடும் இடங்களில் எப்போதும் ஏதாவது சுவாரசியமான விஷயங்கள் கேட்கக் கிடைப்பது தானே வழக்கம்.  அதுவும் நமக்கோ ”ராஜா காது கழுதைக் காது” பகுதிக்காக காதைத் தீட்டி வைத்திருப்பது பழக்கம். இத்தனை மக்கள் இருக்கும் போதும், நாலு சக்கர, இரு சக்கர வண்டிகளை சிலர் அந்தப் பக்கம் ஓட்டிக் கொண்டு வர கும்பலாக நின்றிருந்த மக்களிடம் திட்டு வாங்கிக் கொண்டார்கள் பல ஓட்டுனர்கள்.

புது ஜோடி ஒன்று ஹீரோ ஹோண்டாவில் ஹாயாக உலா வர, போண்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் ஹோண்டா ஓட்டிய ஆணைத் திட்டிக் கொண்டிருந்தார் – ”ஏம்ப்பா, உனக்கு பொண்டாட்டிய கூப்பிட்டு வீதி உலா போக வேற இடமே கிடைக்கலையா?”



“நான்….  நான்….” நாளைய மன்னர்….


அருகே கணவன் – மனைவி – குழந்தை என ஒரு சிறு குடும்பமாக நின்று கொண்டிருந்தார்கள். மூவரும் எதோ கோவில் வேண்டுதலுக்காக மொட்டை அடித்துக் கொண்டிருக்க, காமெராவை பார்த்தபடியே இருந்தது குழந்தை. சற்றே சிரிப்புக் காட்டி சில படங்களை எடுத்து குழந்தைக்குக் காண்பிக்க “நான்… நான்…” என்று மகிழ்ச்சியோடு அம்மாவிடம் காண்பித்தது!


வேங்குழலுக்கு அடிதடி….


கூட்டத்தில் திடீரென சலசலப்பு.  பல கைகள் மேலே உயர என்ன நடக்கிறது எனப் பார்க்க யாரோ ஒருவர் பையிலிருந்து குழல் போன்ற ஏதோ ஒன்றை இலவசமாக விநியோகம் செய்து கொண்டிருந்தார். இலவசம் என்றால் அடித்துக் கொள்வது மக்களுக்கு வழக்கமாகிவிட்டது. விநியோகித்தவர் கையிலிருந்து சில நொடிகளில் எல்லா குழல்களும் மாயமானது! கொடுத்தது வேங்குழலோ இல்லை கிருஷ்ணர் படம் போட்ட சுருட்டி வைத்த நாள்காட்டியோ தெரியாது.

காமெராவை மேலே தூக்கிப் பிடித்தபிடி புகைப்படங்கள் எடுத்தபோது பின் பக்க பாக்கெட்டில் பர்சை எடுக்க யாரோ கைவைப்பது போல இருக்க, திரும்பினால் பின்னால் இரண்டு இளைஞர்கள். நான் முறைத்துப் பார்க்க,  ”அட என் பாக்கெட்ல சாவி வைக்கப் போனேன் அண்ணே!” என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்தனர்.

இதற்குள் உறியடி மண்பத்திற்குக் கீழ் மாலையணிந்த ஒருவர் கையில் நீண்ட குச்சியோடு தயாரானார். நம்பெருமாளும் சித்திரை வீதியில் உலா முடிந்து வந்து கொண்டிருந்தார். மண்டபத்திற்கு அருகே வந்து சில பல பூஜைகள் முடிந்தபிறகு உறியடி ஆரம்பமாகும் என நினைத்திருந்தபோது சரியாக மின்சாரம் துண்டிக்கப்பட “ஹோ…..”வென்று ஒரு கூச்சல். இருட்டில் சுத்தமாக ஒன்றும் தெரியவில்லை.


இருட்டிலேயே உறியடி முடிந்து விட ஒன்பது மணிக்குப் பிறகு வீடு திரும்பினோம்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை……

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து……

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. சுவையான படங்களுடன் சுவாரஸ்யமான பல தகவல்கள். உங்களுடன் கூடவே வந்தது போன்ற உணர்வு.அந்த மொட்டைத்தலைக்குழந்தையும் அழகோ அழகு. பாராட்டுக்கள் வெங்கட், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. கிருஷ்ணர் படத்தை எல்லாம் பார்த்த பாழும் மனித மனம் வடையின் படத்தைத் தேடும் அல்ப ஆசையை எப்படிச் சொல்வேன்? 10 ரூபாய்க்கு நாலா? இங்கே 6 ரூபாய், 7 ரூபாய்!

    மற்றபடி ஸ்ரீஜெயந்தி, உரியடி உற்சவத்தை ரசித்தேன் என்று சொல்லவும் வேண்டுமோ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      வடை படம் எடுக்க நினைத்தேன். கும்பலில் இதை எடுத்தால் நன்றாக இருக்காது என எடுக்கவில்லை! :)

      நீக்கு
  4. ஸ்ரீரங்கம் உறியடித் திருவிழாவில் உங்கள் மனதில் பதிந்த காட்சிகளை படங்களாகவும் பதிவாகவும் பகிர்ந்தமைக்கு நன்றி! கடைசியில் மின்சார கண்ணா என்று பாட வைத்து இருட்டில் உறியடி நடத்தி விட்டார்கள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  5. மனம் கவர்கிறது படங்களும் பதிவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  6. விழா வர்ணனை அருமை! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  7. குழந்தைப் போட்டோ அருமை...
    பகிர்வும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  8. சுவாமிக்குத் தலைமுடி தியகம் செய்த பாப்பாவின் சிரிப்பு அருமை.
    நீங்கள் வர்ணனை கொடுத்து இருக்கும் அழகு அதைவிட நன்றாக இருந்தது.
    மின்வெட்டு இன்னும் இருக்கிறதா .:(நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்கள் இல்லாத மின்வெட்டு மீண்டும் ஆரம்பித்து விட்டது...... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  9. விழாவை நேராக கண்டோம் வெங்கட்.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  11. நாளைய மன்னர் - முடிசூடா மன்னர் - அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. srirangam vandhu neril paarthadhu pola irukku unga padhivu. very nice.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லதா முரளி. தொடர்ந்து வலையில் சந்திப்போம்.....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....