வெள்ளி, 27 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – புனித பால் தேவாலயம், தியு


இரு மாநில பயணம் – பகுதி – 31

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!



நாய்தா குகைகளைப் பார்த்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் சென்று சேர்ந்த இடம் St. Paul’s Church, Diu! கிட்டத்தட்ட 408 வருடங்கள் பழமையான தேவாலயம். போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் இன்றைக்கும் வழிபாட்டுத் தலமாக இருக்கிறது. அவர்கள் காலத்தில் தியுவில் கட்டப்பட்ட பல கிறிஸ்துவ வழிபாட்டுத் தலங்கள் சிதிலமடைந்துவிட்டாலும் இன்றைக்கும் நிலைத்து நின்று கொண்டிருக்கும் இந்த St. Paul’s Church ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 1601-ஆம் வருடம் கட்ட ஆரம்பித்து 1610-ஆம் ஆண்டு கட்டி முடித்திருக்கிறார்கள்.  இதே சமயத்தில் தான் போர்த்துகீசியர்கள் ஆண்ட மற்றொரு இந்திய மாநிலமான கோவாவிலும் இதே போன்று ஒரு வழிபாட்டுத் தலத்தினை [Bom Jesus Basilica, Goa] கட்டி இருப்பதாகத் தெரிகிறது.





இவ்வளவு பழமையான தேவாலயமாக இருந்தாலும் நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. போர்த்துகீசியர்கள் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்தியாவில் இணைந்த பிறகு போர்த்துகீசியர்கள் இங்கிருந்து அவர்கள் நாட்டுக்குச் சென்று விட்டார்கள். என்றாலும் சுமார் 450 போர்த்துகீசிய குடும்பங்கள் மட்டும் இங்கேயே தங்கி விட்டார்களாம். அவர்கள் இந்த தேவாலயத்தில் வழிபட்டு வருகிறார்கள். சில இந்தியர்களும் வழிபடுகிறார்கள். இப்போது வழிபாட்டுக்கென குறிப்பிட்ட நேரங்கள் உண்டு. மற்ற சமயங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளே இருக்கும் மரச்சிற்பங்களையும் கலைநுணுக்கத்தினையும் பார்த்து ரசித்துச் செல்கிறார்கள்.


தேவாலயத்தின் உள்ளே....
படம்: இணையத்திலிருந்து....



தேவாலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. மரத்தினால் ஆன சிற்பங்களும், வடிவங்களும் மிகவும் அழகு. மேரி மாதாவின் சிலை ஒரே ஒரு பெரிய பர்மா தேக்கு மரத்தில் செய்யப்பட்ட சிலையாம். மிகவும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருக்கும் இந்தச் சிலை. தவிர அழகான ஓவியங்களும் இங்கே நிறைய உண்டு.  ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே செல்ல முடிந்தாலும் புகைப்படம் எடுத்துக் கொள்ள இயலவில்லை என்ற எண்ணம் வந்தவண்ணமே இருந்தது. சிலர் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சிப்பது பார்த்து அங்கே பணியில் இருந்தவர்கள் மறுத்தார்கள். ”எவ்வளவு சொன்னாலும் நாங்க கேட்க மாட்டோம்ல!” என்றபடி வெளியே வந்தார்கள் சிலர்.


மேரி மாதா....
படம்: இணையத்திலிருந்து....


மரத்தினால் ஆன சிற்பங்கள் தவிர யானைத் தந்தங்களில் செய்யப்பட்ட சில சிலைகளும் இங்கே உண்டு. சில நிமிடங்கள் உள்ளே அமர்ந்து இந்த அழகையெல்லாம் ரசித்த பிறகு வெளியே வந்தோம். சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இங்கே வந்த வண்ணம் இருக்கிறார்கள். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கே செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. தேவாலயத்திலிருந்து வெளியே சாலைக்கு வந்து ஓட்டுனர் முகேஷைத் தேடினால் காணவில்லை. அவருக்கு அலைபேசியில் அழைத்தால் இணைப்பு கிடைக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ள, சற்று தள்ளி இருக்கும் இடத்தில் நிறுத்தி இருந்தாராம். அழைக்க அங்கிருந்து வந்தார். 



அனைவரும் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு வேறு ஒரு இடத்திற்குச் சென்றோம். அந்த இடம் என்ன, அங்கெ என்ன பார்த்தோம் என்பதை வருகின்ற பதிவில் சொல்கிறேன்.  தியுவில் நாங்கள் கடைசியாக பார்த்த இடம் அந்த இடம் தான்! அதற்குப் பிறகு மீண்டும் குஜராத்!

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

16 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட். தேவாலயத்துக்கு முன் புல்வெளி... அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம். புல்வெளி புல்வெளி என்று பாடத் தோன்றியதோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுமார் ஒன்பது வருடமாக கட்டப்பட்ட தேவாலயம் ஆச்சர்யமான தகவல் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய தேவாலயம் - கட்ட நிறைய நாட்கள் ஆகுமே - அதுவும் அப்போதைய கட்டுமான டெக்னிக இப்போது போல அல்லவே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. வேளாங்கண்ணியில் நான் படம் எடுத்தபோது அங்கிருந்த ஊழியர் எடுக்கக் கூடாது, எடுக்காதீர்கள்' என்று மென்மையாகக் கண்டித்தார். செல்லை உள்ளே வைத்துவிட்டேன். ஆனால் அதற்குள் இரண்டு படங்கள் எடுத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் எழுதியே வைத்திருப்பார்கள். அப்படி எழுதி இருந்தால் எடுப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பெரிய தேவாலயம் என்று தெரிகிறது. ஆனால் தஞ்சையில் நான் படித்த பள்ளியில் இருந்த தேவாலயமே பெரிதாக இருந்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் பிரம்மானட தேவாலயங்கள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. தேவாலயம் கண்டோம். அடுத்த பயணத்திற்காகக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. தேவாலயம் மிக அழகு. போர்த்துக்கீசியர்களைப் பார்த்தீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர்த்துக்கீசியர்களைப் பார்த்தீர்களோ - இல்லை! நாங்கள் சென்ற நேரம் வழிபாடு இல்லை. அதனால் யாருமே இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    தேவாலயங்கள் படங்கள் மிக அழகாக இருந்தது. ஆலயங்கள் பற்றிய தகவல்களையும் அறிந்து கொண்டேன். மேரி அன்னையின் சிலையை சுற்றி மரத்தினால் சிற்பங்கள் அழகு. அடுத்து சென்றவிடத்தை பற்றிய பதிவை காண ஆவலோடு இருக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் திங்களன்று தொடரின் அடுத்த பதிவு திங்கள், புதன் மற்றும் வெள்ளி அன்று பயணத்தொடரின் பதிவுகள் வரும்.... தொடர்ந்து வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  8. வெங்கட்ஜி தேவாலயமும் தகவல்களும் அருமை புகப்படம் அழகாக இருக்கிறது.

    கீதா: பச்சையும் வெள்ளையும் என்று தேவாலயமும் முன்புறமிருக்கும் காம்பினேஷன் அழகாக இருக்கு ஜி…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....