செவ்வாய், 3 ஏப்ரல், 2018

குடும்பத்தில் பிரச்சனை – கொலை ஒரு முடிவா?




படம்: இணையத்திலிருந்து....

எந்த நாளிதழ் எடுத்தாலும், எந்த செய்தி ஊடகங்களைப் பார்த்தாலும் கொலை பற்றிய செய்தி இல்லாது இருப்பதில்லை. அதனாலேயே நான் தொலைகாட்சி பார்ப்பதில்லை – செய்தித் தாளும் மேலோட்டமாகப் பார்ப்பதோடு சரி. தலைப்பைப் படித்து எனக்குப் பிடித்ததாக இருந்தால், முழுவதும் படிக்க முயற்சிப்பேன். அவ்வளவு தான். ஆனாலும் சில சமயங்களில் இந்த மாதிரி செய்திகள் தலைப்பைப் பார்த்ததுமே அந்தக் குடும்பத்தினர் மீதான எண்ணங்கள் மனதில் மெதுவாக ஓட ஆரம்பிக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினமான விஷயம் தானே!


சமீபத்தில் எங்கள் பகுதியில் ஒரு விழா நடந்தது. அந்த விழாவில் வந்திருந்த பலரும் தங்களது விழாவிற்கான தங்களது பங்களிப்பை அளித்துக் கொண்டிருந்தார்கள் – சிலர் பணத்தாலும், சிலர் உடலுழைப்பாலும். இங்கே அப்படி ஒரு பெண்மணி, விழா ஏற்பாடு செய்தவர்களிடம் ”நான் இந்த வேலை செய்யவா” என்று கேட்டுக் கேட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்படிச் செய்த ஒரு வேலை அனைவருக்கும் உணவு பரிமாறுவது. இந்த உணவு பரிமாறும் வேலை பார்க்கச் சுலபமான ஒன்றாக இருந்தாலும் கொஞ்சம் கடினமானது. குனிந்து நிமிர்ந்து உணவு அளிப்பதில் அப்போது மகிழ்ச்சியாக இருந்தாலும், முடிந்த பிறகு முதுகு வலி தான். இந்தக் கடினமான வேலையையும் செய்து கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.

அன்றைக்கு அந்தப் பெண்மணி விழாவில் வேலை செய்ததைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசவில்லை. விழா முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் செய்த ஒரு வேலை தான் அவரைப் பற்றி பேச வைத்தது! அந்த வேலை.....

கணவன், மனைவி – அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் – ஒரு மகனும், ஒரு மகளும். பார்க்க சந்தோஷமான குடும்பமாகத் தான் எல்லோருக்கும் தெரிந்தது. கணவன், மனைவி இருவருமே பணிபுரிகிறார்கள். நல்ல வேலை, இரண்டு பேருமே சம்பாதிப்பதால் பணப் பிரச்சனை இருக்கக் கூடாது. ஆனாலும் இருந்திருக்கிறது. கணவன் – மனைவிக்குள் தொடர்ந்து பிரச்சனை இருக்க, மனைவி ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கிறார். அந்த முடிவு – தனது கணவரைக் கொலை செய்து விடுவது! அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழியிடம் அழைத்துச் சென்று பணம் கொடுத்து ஏதோ விஷத்தினை விபூதியில் கலந்து கொடுக்க, அந்த விபூதியைப் பாலில் கலந்து கணவரிடம் கொடுத்து விட்டார்.

கணவர் அந்தப் பாலைக் குடித்த பிறகு உடல் நிலை சரியில்லாது போக, தனது வாகனத்திலேயே அவரை ஏற்றிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொண்டு போய், தான் வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ”இந்த நபர் சாலையோரத்தில் மயக்கம்போட்டுக் கிடந்தார்!” என யாரோ மூன்றாவது மனிதர் போலக் காண்பித்து மருத்துவமனையில் விட்டிருக்கிறார். மருத்துவமனையில் ஊழியர்கள், இவரது முகவரி, தொடர்பு எண் கேட்க, தவறான முகவரியும், தொடர்பு எண்ணும் கொடுத்து அங்கிருந்து சென்று விட்டாராம். இரண்டு நாள் கழித்து கணவர் நினைவு வராமலேயே இறந்துவிட, காவல் துறை விசாரிக்கத் துவங்கியிருக்கிறது. இவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது யார் என விவரம் பார்த்தபோது, தவறான முகவரி, மற்றும் தொடர்பு எண் தந்த விவரம் தெரிந்திருக்கிறது!

காவல்துறை தீர விசாரித்து, மருத்துவமனை கண்காணிப்பு கேமராவில் பார்க்க, வாகன எண் கிடைத்திருக்கிறது. அதை வைத்து முகவரி கண்டுபிடித்து வீட்டுக்கு வந்தால், மனைவி தந்த பதில்கள் சரியாக இல்லை. விசாரிக்கும் விதத்தில் விசாரிக்க, தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. இப்போது அவரை கைது செய்து விட்டார்கள். பெண்மணி அரசுப் பணியில் இருந்ததால், அவரை தற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனையினால் இப்போது அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகள் இருவரின் எதிர்காலமும் பெரிய கேள்விக்குறியாக ஆகி இருக்கிறது – தந்தை மீளாத்துயிலில்.... தாயோ ஜெயிலில்!

அந்தப் பெண்மணியின் மகன்/மகள் இருவருடைய முகமும் மனதை விட்டு அகல மறுக்கிறது. என்னதான் பிரச்சனை என்றாலும், பிரச்சனையிலிருந்து விடுபட எத்தனையோ வழிவகைகள் இருக்க, கொலை செய்வதை ஒரு வழியாக ஏன் தேர்ந்தெடுத்தார், அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விகள் இப்போது பலரின் மனதிலும். அக்கம் பக்கத்தில், எங்கள் பகுதியில் இருக்கும் அனைவருடைய பேச்சும் வித்தியாசமாக இருக்கிறது – அவர் குடிகாரர், நிறைய கடன் வைத்திருக்கிறார், அவர்களுக்குள் சண்டை, அந்தப் பெண்மணியின் நடத்தை சரியில்லை - உண்மையோ, பொய்யோ, அந்தக் குடும்பத்தினரைப் பற்றி இப்படி பலதும் பேசுகிறார்கள். ஊர் வாய்க்கு யார் பூட்டு போட முடியும். 

பிரச்சனைக்கு முடிவு என நினைத்து, இன்னும் ஒரு பெரிய பிரச்சனையை இழுத்து விட்டுக் கொண்டிருக்கிறார் – வேறு என்ன சொல்ல! குழந்தைகளை நினைத்தால் தான் மனம் ஆற மறுக்கிறது.....

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

  1. கேட்கவே பயங்கரமாக இருக்கிறது ஜி!

    எப்படி இப்படி எல்லாம் முடிவெடுக்கத் தோன்றுகிறது?! இதுதான் தீர்வா என்ன? அதுவும் ஊர் பேசுவதற்குக் கேட்கவா வேண்டும்...

    நானும் டிவி செய்திகள் பார்ப்பதில்லை....வெரி ரேர். அது போலத்தான் செய்தித்தாள் செய்திகளூம் ஆம் தலைப்பு பார்த்து...பிடித்தால் மட்டுமே...ஏனென்றால் செய்திகள் எதுவுமே நன்றாக இல்லை..நல்ல செய்திகளை முன்னிருத்துவதும் இல்லை ஊடகம்.

    //மனதில் தோன்றும் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினமான விஷயம் தானே!// அதைச் சொல்லுங்கள்...நிச்சயமாக! அது எப்படியேனும் வெளி வந்துவிடுகிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்கவே பயங்கரமாக.... பயங்கரம் தான்.

      மனதில் தோன்றும் எண்ண ஓட்டங்களைக் கற்றுபடுத்துவது என்பது எளிதல்லவே!

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. கொலையும் செய்வாள் பத்தினி!

    கொடுமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இப்படியான செய்திகள் ஏதேனும் ஒன்று வந்து கொண்டேதான் இருக்கின்றன. வேதனையான விஷயம். விளைவைச் சிந்திக்காமல் மனதில் தோன்றியபடி எப்படி இப்படிச் செய்யத் தோன்றுகிறதோ?

    வெங்கட்ஜி நலம்தானே? பணி ஓய்வு பெற்ற காரணத்தால் சென்ற மாதம் முழுவதும் பணிகள். வலைப்பக்கம் வர இயலவில்லை. இதோ மீண்டும். பதிவுகள் எல்லாம் வாசிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  5. கொலை தீர்வாக முடியாது அது புதிய வாழ்க்கையை அனைவருக்கும் கொடுக்கும் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. இவ்வாறான நிகழ்வுகள் குழந்தைகளை அதிகம் பாதித்துவிடும். அவர்களுடைய எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே மனம் ஐயுறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை நினைத்தால் தான் தவிப்பாக இருக்கிறது.....

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    ஒரு சிலர் இப்படித்தான் அசட்டு தைரியத்தில் முடிவுக்கு வந்து விடுகிறார்கள். துன்பகரமான முடிவை எடுப்பதற்கு முன் அது தன்னை மட்டுமில்லாது மற்றவர்களையும் பாதிக்குமே என நினைக்க தோன்றும் போலும். கொடுமைதான் வேறென்ன சொல்வது..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  8. பிழைத் திருத்தம் செய்து வாசிக்க வேண்டுகிறேன். நினைக்க தோன்றாது போலும்... தவறுக்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டச்சுப் பிழை - சில சமயங்களில் இப்படித்தான்! தவறில்லை!

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  9. கொடுமையான நிகழ்வாக இருக்கிறது.. எப்படி அதுபோல் துணிகிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

      நீக்கு
  10. கொலையும், தற்கொலையும் எதுக்குமே தீர்வாகாது.

    மனநலம் கொஞ்சம் கொஞ்சமா எல்லாருக்கும் பாதிக்கப்பட்டு வருவதை காட்டுது. சமூகம், குடும்ப அமைப்பு முறை முன்போல் மாறனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலையோ, தற்கொலையோ தீர்வல்ல! இது புரிந்தால் நல்லது! பலருக்கும் புரிவதில்லை....

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  11. இந்த மாதிரியான முடிவுகள் ஏதோ அவசரத்திலெடுக்கப்படுகின்றன சிந்தித்துசெய்வதல்ல பல கொடூரமான முடிவுகளும் கூட அம்மாதிரிதான் எடுக்கப்படுகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தித்தால் இப்படியான முடிவு எடுப்பார்களா.... ஒரு வேளை சிந்தித்து தான் இப்படி முடிவு எடுத்து விட்டாரோ?

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. இப்படி விபரீதமாக முடிவெடுக்க எத்தனை தைரியம் வேண்டும். உலகம் கெடுகிறது என்றால்
    இப்படியா நடக்கும்.
    இதற்கு விவாக ரத்து செய்திருக்கலாமே. அந்தக் குழந்தைகளின் நிம்மதியும் தொலைந்து வாழ்வும் கெட்டு ,நினைக்கவே சங்கடமாக இருக்கிறது வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தைகளை நினைத்தால் தான் கஷ்டம்....

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. இங்கேயும் அப்படி ஒரு கொலை வடபழனி கோயில் குருக்கள் செய்ததாகச் சொல்கிறார்கள். என்னவோ போங்க! மனசு அப்படி எல்லாமே நினைக்கும்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....