புதன், 4 ஏப்ரல், 2018

குஜராத் போகலாம் வாங்க – தரிசனம் கிடைக்காதா….



இரு மாநில பயணம் – பகுதி – 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


bபேட்t த்வாரகா படகுத்துறையில் இறங்கி கடைவீதிகள் வழியே பொறுமையாக நடந்து சென்று கோவில் வாயிலை அடைந்தோம். ஏற்கனவே முந்தைய பயணத்தில் பார்த்த கோவில்தான். அப்போது வேறு குழு. இப்போது வேறு குழு! பழைய நினைவுகளை மீட்டெடுத்தபடியே நடந்து கோவில் வாயிலை அடைந்தால் – கோவில் வாயிற்கதவு பூட்டி இருந்தது. சரி கொஞ்சம் நேரம் காத்திருக்கலாம் என முடிவு செய்து அங்கே இருந்த மரத்தடியில் சற்றே இளைப்பாறினோம். நாங்கள் இளைப்பாறும் சமயத்தில், இக்கோவில் பற்றிய கதை – சென்ற முறை எழுதிய பதிவிலிருந்து சில வரிகள் இங்கேயும்….


கோவில் அருகே இருக்கும் மரமும் அதன் நிழலில் அமர வசதியும்...


 மரத்தடியில் உட்கார்ந்தா ஞானம் வருமா?


நண்பருடன்.....
ஏம்பா, அந்தக் கேமராவை விடவே மாட்டியா.....

கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் சிலை ருக்மணியால் உருவாக்கப்பட்டது என்றும் தற்போதைய கோவிலை வல்லபாச்சாரியார் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் தான் கிருஷ்ண பரமாத்மாவினை சந்திக்க அவரது நண்பரான சுதாமா வந்தார் என்றும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் தந்தார் என்றும் நம்புகிறார்கள்.  அதனால் இன்றைக்கும் இங்கே வரும் பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து அவலுக்கு பதில் அரிசி கொண்டு வந்து இங்கிருக்கும் பூஜாரிகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி நீங்கள் அரிசியோ, தானியமோ கொண்டு வரவில்லை என்றாலும் கவலையில்லை! பணமாக கொடுத்துவிடலாம். சுதாமா கதை, கிருஷ்ணர்-ருக்மணி கதைகள் என பலவற்றையும் ஹிந்தியில் சொல்லிக் கொண்டே பணம் கொடுக்கும் வசதியையும் அறிவித்து அதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் பணத்தினை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்.


வயசானாலும் உழைச்சாத்தான் சோறு.... 


அடேய்....  என்னையா ஃபோட்டோ புடிக்கற?
கொஞ்சம் நிம்மதியா சாப்பிட உடுடா....

வந்திருக்கும் அனைவருக்கும் சில அரிசி மணிகளை பிரசாதமாகவும் கொடுத்து அனுப்புகிறார்கள்.  கோவில் திறப்பதற்குள் சுற்றுப் பிராகாரத்தில் உள்ள இடங்களில் அமரவைத்து இப்படி கதைகள் சொல்வதையும், அரிசிக்கு காசு வாங்குவதையும் பார்க்க முடிந்தது. நாங்களும் இந்த கதைகளைக் கேட்டு முன்னேறினோம்.  எல்லாப் பக்கங்களிலிருந்தும் மக்கள் முண்டியடிக்க, கூட்டத்தோடு கூட்டமாக முன்னேறினோம்.  எங்களுக்கு முன்னர் சென்ற பூஜாரி கிருஷ்ணரின் கதைகள் சொல்லியபடியே வந்து கொண்டிருந்தார்.

இப்பகுதியில் தான் ஷங்காசுர வதம் நடந்ததாகவும் கதைகள் உண்டு. அந்தக் கதை – “சங்கு வடிவில் இருந்த ஒரு அசுரன் ஷங்காசுரன். மக்களை இம்சித்து அவர்களைக் கொன்று மீண்டும் சங்குக்குள் பிரவேசித்து கடலுக்கடியில் சென்று விடுவானாம் இந்த அசுரன். அவனது கொடுமைகளை அடக்க, கிருஷ்ணரும் அவனைத் தொடர்ந்து கடலுக்குள் சென்று ஷங்காசுரனை வதம் செய்து அந்த சங்கை தனக்கு அணிகலனாக ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.”   இது இங்கே நடந்ததாகச் சொல்கிறார்கள். என்றாலும், தனது குருவான சாண்டீபனின் மகனை ஷங்காசுரன் கடத்திச் சென்று கடலுக்குள் வைத்திருப்பதாக அறிந்த கிருஷ்ணரும் பலராமனும் ஷங்காசுரனை வதம் செய்து குருவின் மகனை மீட்டதாகவும் சில கதைகள் படித்திருக்கிறேன். முழு பதிவும் இங்கே….


உயிர் உள்ள வரை உழைத்துக் கொண்டிரு...


வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு!


பீங்கானில் பசுவும் கன்றும்.... விற்பனைக்கு....

சில மணித்துளிகள் காத்திருந்த பிறகு தான் தெரிந்தது – கோவில் இனிமேல் உச்சிக்கால பூஜைக்கு அதாவது பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் திறப்பார்கள் என! நண்பர்கள் யாருக்குமே அவ்வளவு நேரம் அங்கே காத்திருப்பதில் இஷ்டமில்லை. சரி கடைவீதியில் கொஞ்சம் உலாத்திய பிறகு படகுத்துறைக்குச் செல்லலாம் என முடிவு எடுத்தோம். ஏற்கனவே இந்தக் கோவிலுக்கு நான் வந்திருக்கிறேன் என்பதால் எனக்கும் இந்த முடிவில் வருத்தமில்லை. கடைவீதிக்கு வந்து பராக்கு பார்த்தபடியே நடந்தோம். காலையில் எதுவும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது. இப்பகுதியில் உணவகங்கள் ஒன்றும் சரியாக இருக்காது என்பதால் என்ன செய்யலாம் என யோசிக்கையில் இளநீர் விற்கும் ஒரு இளைஞரைப் பார்க்க முடிந்தது. அவரிடம் இளநீர் வாங்கிக் குடித்தோம்.


வண்டி ஓட்டுனரின் இருக்கையில் அமர்ந்திருக்கலாமோ? 


பேட் த்வாரகா வீதிகளில் உலாத்தியபோது....


பட்டாணியும் சூடா....


சுடச்சுட வேர்க்கடலை...


படகு ரெடி.... நீங்க ரெடியா?

குஜராத் என்றாலே வேர்க்கடலை ரொம்பவே பிரபலம் – அதிக அளவில், பெரிது பெரிதாய் வேர்க்கடலை விளைச்சல் அங்கே உண்டு! அதனால் வேர்க்கடலை, பட்டாணி விற்கும் பெரியவரிடம் கொஞ்சம் வாங்கி அதைச் சாப்பிட்டபடியே நடந்து படகுத்துறைக்கு வந்து சேர்ந்து விட்டோம். எங்களுக்கான படகு காத்திருக்க, மீண்டும் ஒரு படகுப் பயணம். படகில் காட்சிகளை ரசித்தபடியே Okah பகுதியில் இருக்கும் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து, வாகனத்துடன் காத்திருந்த ஓட்டுனர் முகேஷை அழைத்துக் கொண்டு சாலைப் பயணத்தினை மீண்டும் தொடர்ந்தோம். பயணித்துச் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

20 கருத்துகள்:

  1. என்னே அழகான படங்கள்... அதிலும் அந்த குருவி படம் மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. படங்களையும் பதிவையும் ரசித்தேன். குருவி படம் எனக்கும் பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. உங்க ட்ரெஸ்சும், நீங்களும் ஆட்டோ ட்ரைவருக்குண்டான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  4. நீங்க பார்க்க நினைத்தது ருக்மிணி கோவிலா.
    படங்கள் வெய்யிலைக் காட்டுகிறது.
    கடலில் ஸ்கூபா டைவிங்க் நடக்கிறதான்னு தெரிந்து கொள்ள ஆசை.
    காமிரா இல்லாட்ட நாங்க எதைப் பார்க்கிறது. உங்க தோழரிடம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கோவில் பேட் த்வாரகா எனும் இடத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவில் மா. இதுவும் பஞ்ச த்வாரகா கோவில்களில் ஒன்று.

      ஸ்கூபா டைவிங் - அந்தமான் [போர்ட் ப்ளேயர்] -இல் இந்த வசதிகள் உண்டு. இன்னும் சில இடங்களிலும் உண்டு. இப்பகுதியில் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  5. //பயணித்துச் சென்ற இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்…//
    நன்றி ஆவலுடன் படிக்க விரும்பும் பயணிக்க விரும்புறவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் பயணிக்க விரும்புபவரா.... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேகநரி!

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அழகான படங்கள். படங்களுக்கு பொருத்தமாள வாசக வரிகளும் அருமை. கிருஷ்ணரின் சிறு வயது லீலைகளில் அசுரர்களை வதைத்து நண்பர்கள் மற்றும் மக்களை காப்பாற்றும் கதைகள் மிகவும் நன்றாக இருக்கும். அந்த குருவி படம் மிகவும் அழகாக இருக்கிறது..உற்று நோக்கினால் நீங்கள் படத்திற்கு கீழ் எழுதிய வாசகங்களை அது சொல்வதுபோல் ஒரு பாவம் அதன் முகத்தில் தெரிகிறது. ரசித்தேன். தொடருங்கள் நாங்களும் உடன் வருகிறோம் .. பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  7. படங்களும் விளக்கமும் நன்று.
    குஜராத் நிலக்கடலை பெரிதாக இருக்குமென்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
    தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி! பெரிய பெரிய கடலையாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. படங்கள், தகவல்கள் எல்லாமே அருமை ஜி! முன்பே கோவில் பற்றிய உங்கள் தகவல்கள் கதையைப் படித்த நினைவு இருக்கிறது. அடுத்தது என்ன என்று அறிந்து கொள்ளத் தொடர்கிறோம் ஜி.

    கீதா: அக்கருத்துடன் குருவி படம் வெகு அழகு...குருவி ரொம்ப அழகு. பரவால்லையெ ஜி பொதுவா குருவி டக் டக்னு பறந்துரும்...உங்க கேமராவுல சிக்கிருக்கே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. படங்கள் அருமை.

    குருவி அங்குஇருப்பது மகிழ்ச்சி.
    கதைகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  10. சிட்டுக்குருவி நிதானமா பயமே இல்லாமல் போஸ் கொடுத்திருக்கே! பேட் துவாரகா பல முறை சென்றாச்சு. துவாரகையில் சாப்பாடு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயமில்லாமல் தான் இருந்தது. கொஞ்சம் Zoom செய்து எடுத்தது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....