புதன், 26 டிசம்பர், 2018

பீஹார் டைரி – உழைப்பாளி – தேநீர் தந்த தேவன்




தேநீர் தந்த தேவன்
பீஹார் டைரி...

பீஹார் டைரி என எழுதியதில் இதுவரை ஒன்பது பதிவுகள் எழுதியாயிற்று. இன்னும் எழுத செய்திகளும் பார்த்த இடங்களும் உண்டு. முடிந்தபோது எழுதுகிறேன். முந்தைய பயணங்கள் பற்றிய பகிர்வுகளை தொடராக எழுதிய போது, பலராலும் தொடர்ந்து படிக்க இயலவில்லை – தொடர்ச்சி விடுபட்டால் படிக்க முடியவில்லை என்று சொன்னார்கள். நண்பர் ஒருவர் ஒரு பயணம் போனா, நீங்க பாட்டுக்கு இருபது முப்பது பதிவு எழுதறீங்க, எல்லாத்தையும் தொடர்ந்து படிக்க முடியல, நடுவில் விடுபட்டால் அப்புறம் படிக்கத் தோன்றுவதில்லை என்றும் சொல்லி இருந்தார். அவர் சொன்னது மட்டுமல்ல, எனது பதிவுகளைப் படிப்பதையே விட்டுவிட்டார் எனத் தோன்றுகிறது! பதிவுகள் அனைத்தையும் படிப்பதென்பது கொஞ்சம் கடினமான வேலை தான்! நானும் எல்லோருடைய பதிவுகளையும் இடைவெளி விட்டுதான் படிக்க முடிகிறது!

உழைப்பாளி பற்றி சொல்ல வந்து விட்டு, வேறு எதையோ பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பீஹார் டைரி பதிவில் இந்த உழைப்பாளி பற்றி பிறகு சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். அதை நினைவூட்டலாம் என ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டது பதிவின் ஆரம்பம்! பீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம் பதிவு எழுதிய போது, தேநீர் கடையைத் தேடிப் போனபோது பார்த்த ஒரு கடை ஒன்றில் கண்ணாடி ஜாடியில் தின்பண்டங்கள் இருப்பதைப் பார்த்தது பற்றிச் சொல்லி இருந்தேன். அப்பதிவில் தேநீர் கடை பற்றி பிறகு எழுதுகிறேன் எனவும் சொல்லி இருந்தேன். இதோ அந்த தேநீர் தந்த தேவன் பற்றிய பகிர்வு இன்றைய பதிவாக….

நாங்கள் தங்கி இருந்த ஹாலிடே ஹோமில் உணவகம் நடத்துபவர்கள் பயங்கர உழைப்பாளிகள் – காலையில் எழுந்திருப்பதே ஏழு மணிக்கு மேல் தான்! எங்களுக்கோ காலையில் சீக்கிரம் புறப்பட வேண்டும். சரி வெளியே சென்று தேநீர் கிடைக்கிறதா பார்க்கலாம் என வெளியே சென்றோம். ஆசியானா – தீகா சாலையில் தான் எங்கள் ஹாலிடே ஹோம் இருந்தது. காலை நேரம் என்பதால் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கவில்லை. ஒரே ஒரு கடையில் மட்டும் இந்த மனிதர் – எங்களுக்குத் தேநீர் தந்த தேவன் – இருந்தார். குர்தா – பைஜாமா, குளிருக்கு இதமாக ஒரு பெரிய ஜாக்கெட், தலையில் கம்பளிக் குல்லாய் சகிதம், கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வரப் போகும் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தார். 




ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் – நான்கு அல்லது ஐந்து கிலோ அளவுள்ள சிலிண்டர் – அதன் மேலேயே ஒரு பர்னர் பொருத்திய அடுப்பு இங்கெல்லாம் கிடைக்கிறது. பெட்ரமாக்ஸ் லைட்டுக்கு பதிலாக, இந்த மாதிரி சிலிண்டர்களில் லைட் பொருத்தியது கிடைக்கும் வட இந்தியாவில். அதே சிலிண்டரில் ஒற்றை அடுப்பும் இணைக்கலாம். அப்படி ஒரு அடுப்பில் தேநீர் தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கிறார். சுடச் சுட ஒரு கப்பில் – அந்த சிறிய கப்பில் 75 எம்.எல். அளவு தான் பிடிக்கும்! – தேநீர் – ஐந்து ரூபாய் தான் விலை. என் கேரள நண்பருக்கு காலையில் தேநீர் குடிக்காவிட்டால் கஷ்டம்! அதுவும் நல்ல பெரிய குடுவையில் கொடுத்தாலும் குடிப்பவர்! இந்த கப் பார்த்த உடனேயே “சிறிய கப், வலிது கிட்டுமோ” என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். கடைக்காரர் சிறியதில் கொடுத்துவிட்டதால், கவலைப்படாதே, எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என சொன்னேன்!


இந்தப் படத்திலிருந்து கப் அளவு உங்களுக்குப் புரியும்...

தேநீர் அருந்தியபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். காலை நான்கு மணிக்கே எழுந்து கடையைத் திறந்து விடுவாராம். கங்காஜியின் [கங்கை நதி] அப்புறத்தில் அவருடைய வீடு. மனைவி, மக்கள் அங்கேயே இருக்க, இவர் மட்டும் இங்கே இந்த சாலையோரக் கடை நடத்துகிறார். காலை நான்கு மணிக்குக் கடை திறந்தால் இரவு பதினொன்று மணி வரை கடை திறந்து வைத்திருப்பாராம். தேநீர், பிஸ்கெட், குட்கா, பான்மசாலா, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்கிறார். கடை என்றால் பெரிய கடை ஒன்றும் இல்லை. நான்கு குச்சிகள் நட்டு ஒரு சிறு கொட்டகை. மரச் சட்டங்களை வைத்து அதன் மேல் பொருட்களை வைத்திருக்கிறார். இரவு அங்கேயே தங்கி விடுவாராம்.

அச்சாலை பிரதான சாலை என்பதால் கொஞ்சம் போக்குவரத்து இருக்கும். சாலையில் போவோர் வருவோர் தேநீர் குடிக்க வருகிறார்களோ இல்லையோ, பான், குட்கா, சிகரெட்/பீடி போன்றவற்றிற்காக நிச்சயம் வருவார்கள் என்கிறார். கூடவே தேநீர் பிஸ்கெட் இருந்தால் விற்பனை ஆகிறது என்கிறார். ஐந்து ரூபாய் ஒரு கப் – இவ்வளவு சிறிய கப்-பில் தருகிறீர்களே, இது போதுமா? எனக் கேட்க, இங்கே இப்படித்தான், ஐந்து ரூபாய்க்கு மேலே விலை என்றால் வாங்க மாட்டார்கள். அதனால் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கிறேன். ஐந்து ரூபாயில் பெரிய கப்பில் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்று சொல்ல, எங்களுக்கு மீண்டும் இரண்டாம் முறையாக கப்பில் தரச் சொன்னோம். இன்னுமொரு சிறிய கப்பில் அளந்து எங்களுக்கு ஊற்றினார்!

சின்ன கப்பில் தேநீர் – எனக்கும் நண்பருக்கும் போதவில்லை. அதனால் இரண்டு முறையாக வாங்கிக் குடித்த பிறகும் நண்பருக்கு திருப்தி இல்லை! மூன்றாம் முறையாக இன்னுமொரு கப் தேநீர் வாங்கிக் குடித்தார் – அந்தச் சிறிய கப் தேநீர் தொண்டை நனைவதற்குள் தீர்ந்து போன மாதிரி இருந்தது! குஜராத் அர்தி சாய், மஹாராஷ்ட்ரா கட்டிங் சாய் மாதிரி இங்கே சின்னக் கப் சாய்! எப்படியோ, காலை நேரத்தில் கடை திறந்து, அதுவும் குளிர் நேரத்தில் காலையிலேயே எழுந்து கடை திறந்து வைத்து உழைக்கும் அந்த உழைப்பாளிக்கு நன்றி சொல்லி, அவரது வியாபாரம் நன்கு நடக்க வாழ்த்தும் சொல்லி, குடித்த தேநீருக்கான காசு – 25 ரூபாய் [ஐந்து சிறிய கப்] கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம். அந்த உழைப்பாளிக்கு எங்கள் சார்பிலும் உங்கள் சார்பிலும் ஒரு பூங்கொத்து!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி


40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

    காஃபி வித் கிட்டு!!!!! இந்தப் பதிவிற்கு இன்று காஃபி/சாயுடன் போஸ் கொடுக்கிறார்!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... கப் தெரிய வேண்டும் என எடுக்கப்பட்ட படம் இது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. பதிவுகள் விடுபட்டால் எல்லாருடைய பதிவுகளையும் படிக்க முடிவதில்லைதான்....ஆனால் உங்கள் சிம்லா - சமீபத்திய பதிவுகள்- பயணப் பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கேன் அங்கு கருத்து எழுதவில்லை...வேர்டில் அடித்து வைத்துக் கொண்டிருக்கேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... சிம்லா பதிவுகள் படித்துக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. ஆமாம் ஜி நினைவிருக்கு நீங்க தேநீர் எங்கு கிடைக்கும் என்று நடந்தது பற்றி சொல்லிருந்தீங்க...கடையில் பாட்டில்கள், தின்பண்டங்கள் படமும் அழகா இருந்தது ...

    இந்தச் சிறிய சிலிண்டர் அடுப்பு இங்கும் பலரும் வைத்திருக்கிறார்க்ள் குறிப்பாக நலிந்த மக்கள் விறகு அடுப்பு மற்றும் இந்த ஒற்றை சிலிண்டர் அடுப்பு வைச்சுருக்காங்க...இந்த கேஸ் கடைகளும் நிறைய இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன சிலிண்டர் இப்போது நிறைய இடங்களில் கிடைக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  4. ஐந்து ரூபாய்க்கு மேலே விலை என்றால் வாங்க மாட்டார்கள். அதனால் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கிறேன். ஐந்து ரூபாயில் பெரிய கப்பில் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்று சொல்ல,//

    இது ஒரு பொருளாதார வகைதான் இல்லையா ஜி. மக்களின் மனப்பாங்கு....நான் பார்க்கிறேன் சென்னையிலும் சரி இங்கும் சரி சந்தையில் கூட காய்களைச் சின்ன சின்னக் கூறு போட்டு ரூ10 என்று விற்கிறார்கள்...ஏன் பொரி கூட பேக்கட்டில்... மக்கள் மனதில் அந்த 10 ரூபாய்தான் பதியும் டக்கென்று...ஏன் எனக்குமே கூட அட! என்று தோன்றி அளவைப் பார்ப்பேன்...கூட்டு, உசிலி செய்யலாம் என்றால் போதுமே என்று வாங்கிவிடுவதுண்டு...வின் வின் சிச்சுவேஷன் என்றும் சொல்லலாம்...என்றே எனக்குத் தோன்றும்...

    டீக்கடைக்காரர் சொல்லியிருப்பது மிகவும் சரி...ஆனால் காஃபி மட்டும் நமக்கு அந்தக் கப் பத்தாது ஹா ஹா ஹா ஹா ஆனால் அவருக்கு அது கொஞ்சமேனும் பணம் ஈட்டித் தரும் சிலர் இப்படி இரு கப் வாங்குவதால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூறுகட்டி விற்பது திருச்சியிலும் உண்டு கீதாஜி. இங்கே அப்படி கிடைப்பது இல்லை. அது ஒரு வசதி - என்னைப் போல ஒற்றை ஆட்களுக்கு வசதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  5. ஆமாம் தேவன் தான் நமக்கு வேண்டும் என்ற சமயத்தில் கிடைக்கிறதே!! உங்களுக்கும் கிடைத்ததே...நல்ல உழைப்பாளி. இங்கும் காலை 6 மணிக்கு அருகில் இருக்கும் பலசரக்குக் கடையில் சூடாகச் சாய் விற்கிறார்கள் இதே கப் அளவு ரு 10...எப்போதும் விற்கிறார்கள் சூடாகக் கெட்டிலில் வைத்துக் கொண்டு. இப்படியான உழைப்பாளிகள் இருப்பது எவ்வளவு சுகம்!

    வெங்கட்ஜி நல்ல நடைப்பயிற்சியோ!! ஃபோட்டோவில் மெலிந்திருப்பது போல் தெரியுதே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைப்பயிற்சி இல்லை. Pollution காரணமாக நடையை நிறுத்தி இருக்கிறோம். இன்னமும் அதே எடை தான்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  6. குட்மார்னிங் வெங்கட். எனக்கு தேநீர் பிடிக்கும் என்றாலும் காலை முதல் டோஸ் காஃபிதான்! தேநீர் இடைவேளைகளில் வேண்டுமானால் குடிபோப்பேன்! காலை மற்றும் மாலையில் காஃபி இல்லாமல் முடியாது. ஒரு சிட்டிகை சர்க்கரை போட்ட (நான் இனியவன் இல்லை!) காஃபி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் 🙏 ஸ்ரீராம். எனக்கு காபி டீ வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. இருந்தால் ஓகே. இல்லீ என்றாலும் பரவாயில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆனால் நான் காஃபி அந்த ஐந்து ரூபாய் கப்பை விட குறைவாகவே குடிப்பேன். தேநீரும் அதே போலதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காபி அளவாக, 'காலுக்கு மேலே அரைக்குக் கீழே' என ஒரு உறவினர் அளவு சொல்வார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. காலை ஏழு மணி வரை காஃபியோ தேநீரோ குடிக்காமல் இருப்பது கடினம். வெளியூரில் சீக்கிரம் எழுந்து விடுவோமா... கட்டிகளை நாடிச் செல்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அந்த வகையில் அந்த நேரத்துக்கு நமக்கு சாய் காஃபி அருளும் இவர்கள் தேவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அவசியம் இல்லை என்றாலும், நண்பருக்கு கட்டாயத் தேவை! அதனால் வெளியே சென்றோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. //ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் – நான்கு அல்லது ஐந்து கிலோ அளவுள்ள சிலிண்டர் – அதன் மேலேயே ஒரு பர்னர் பொருத்திய அடுப்பு இங்கெல்லாம் கிடைக்கிறது.//இது சென்னையிலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே கிடைத்தது. என் அண்ணா, தம்பி வீடுகளில் வீட்டு விசேஷங்களுக்கு அதிகப்படி சிலிண்டர் கிடைக்காத சமயங்களில் இதை வாங்கிப்பாங்க. வாடகைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. சொந்தமாகவும் வாங்கி வைச்சுக்கலாம். எரிவாயு தீர்ந்து போனால் பின்னர் போய் அதை மட்டும் நிரப்பிக் கொண்டு வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தில்லியில் பல வருடங்களாக உண்டு. நெய்வேலி நகரில் இருந்த வரை பார்த்தது இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. குஜராத்தி அர்தி சாய் தொண்டை கூட நனையாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.... சாசரில் ஊற்றிக் கொடுப்பார்கள். அது எந்த மூலைக்கு?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. உழைப்பு எங்கிருந்தாலும் போற்றப்படவேண்டும்
    தாங்கள் போற்றியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. ​​
    உங்கள் கேரளா நண்பரிடம் சொல்லுங்கள். இங்கு திருவனந்தபுரத்தில் வடக்கட என்ற பெயரில் சாயக்கடைகள் உண்டு. அவற்றில் சாயா வடை இலை அப்பம் சமோசா காரா போண்டா உள்ளி வடை பஜ்ஜி எல்லாம் 5 ரூபாய் தான். சாயா 150 மில்லி இருக்கும். வடை எல்லாம் IRCTC சைசில் இருக்கும்.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில இடங்களில் சின்ன கப் தேநீர் தமிழகத்தில் கூட உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. //ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் – நான்கு அல்லது ஐந்து கிலோ அளவுள்ள சிலிண்டர் – அதன் மேலேயே ஒரு பர்னர் பொருத்திய அடுப்பு இங்கெல்லாம் கிடைக்கிறது. //

    இந்த அடுப்பை நாங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போகும் போது எடுத்து போவோம்.
    வெளியில் பொங்கல் வைக்க மூன்று கல் அடுப்பு. உள்ளே அம்மன் முன் பாயசம் செய்ய இந்த அடுப்பு பயன்படுத்துவோம்.

    காலை நேரம் அதுவும் குளிர் நேரம் சூடான பானம் கொடுப்பவர் தேவன் தான் நமக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  14. இப்படியும் கப் செய்து விற்கிறானே... அவனை சொல்லணும்..

    கடைகாரின் நிலையை சொல்லி விட்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... விற்பனை செய்பவர் தேவை இருப்பதால் விற்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  15. எங்கும் உழைப்பாளர்கள். நமக்கு இந்த காஃபி சாயா தேவையில்லை. அதனால் கவலையும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. கப் அளவை கண்டவுடன் சிரிப்பு வந்து விட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  17. பீகாரில் காலை தேனீர் கிடைத்ததே பெரிய விசயம்.கப் அளவை பார்த்ததும் அதிர்ச்சி ஆக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  18. உழைப்பாளி....

    5 ரூபாய்ல டீயா?! ஆச்சர்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  19. கெரள நண்பர்களுக்கு பெரிய டம்ப்லரில் காப்பியோ சாயோ வேண்டும் டிஃப்ஃபின் சாப்பிடும்போதே காப்பியோ சாயோ குடிப்பார்கள் கேரள சுற்றுலாவின் போது காலையில் காப்பியோ சாயோ கிடைப்பது அரிதாய் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  20. ஜெய்ப்பூரில் இதை விட சின்ன பிளாஸ்டிக் கப்பில் தேநீர் கொடுப்பார்கள். கொஞ்சம் சூடு ஆறவிட்டால் ஒரே கல்ப்பாக அடிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே கல்ப்பாக ! சரி சரி.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....