சனி, 29 டிசம்பர், 2018

காஃபி வித் கிட்டு – பீட்ரூட்/கேரட் ஹல்வா – சென்னை புத்தகக் காட்சி – அழகி - கார்ட்டூன் ப்ரியர்




காஃபி வித் கிட்டு – பகுதி – 16


தலைநகரின் கடும் குளிர்:

தலைநகரில் நல்ல குளிர். பத்து நாட்களாக தொடர்ந்து குறைந்த அளவு 6 டிகிரிக்குள் இருக்கிறது – பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு இப்படித் தொடர்ந்து பத்து நாட்களாக இவ்வளவு குறைந்த அளவு! வீட்டிற்குள் கூடக் குளிர் அடிக்கிறது. அரசாங்கம், நடைபாதை வாசிகள் இரவு தங்குவதற்கு சில இரவு நேர தங்கும் விடுதிகளை அமைத்திருக்கிறது என்றாலும் அதைப் பயன்படுத்துபவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். அரசாங்கம் விளம்பரம் வெளியிடும் அளவுக்கு பயன்படுத்துவோர் குறைவு! காரணம் என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  நடைபாதை வாசிகளுக்கு கம்பளிகள் இலவசமாகத் தர வேண்டாம் – அவர்களை இரவு நேர தங்கும்விடுதிக்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் தர நினைப்பதை அந்தத் தங்கும்விடுதிகளுக்கு அனுப்பி வையுங்கள் என விளம்பரம் வந்திருக்கிறது. என்ன சொல்ல… இங்கே எதுவும் புரிவதில்லை.

சாப்பிட வாங்க – பீட்ரூட்/கேரட் ஹல்வா:



குளிர் காலம் என்றாலே பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி, காலிஃப்ளவர் என பல காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆகக் கிடைக்கும். அதிலும் இங்கே கிடைக்கும் கேரட் நல்ல இனிப்பாக இருக்கும் என்பதால் இந்தச் சமயத்தில் கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். கடைகளிலும் கேரட் ஹல்வா நிறையவே கிடைக்கும். கடையில் சாப்பிடுவதை விட வீட்டிலேயே கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவது நல்லது. ஒரு ஆளுக்காகச் செய்ய வேண்டுமா என்ற சோம்பேறித்தனம் எனக்கு இருந்ததால் செய்யவில்லை.

இங்கே இருக்கும் ஒரு நண்பருக்கு கேரட் ஹல்வா செய்வது பிடித்தமானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரட், பீட்ரூட் இரண்டையும் நிறைய வாங்கி கேரட் ஹல்வா மற்றும் பீட்ரூட் ஹல்வா செய்தார். அவர்களுக்கு மட்டுமல்லாது இங்கே குழுவில் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்து அனுப்பினார்! எனக்கும் இரண்டு கிண்ணங்களில் கேரட் மற்றும் பீட்ரூட் ஹல்வா வந்தது! ஆஹா… நம்ம செய்வதற்கு சோம்பேறித்தனம் பட்டது நண்பருக்குத் தெரிஞ்சுடுச்சே… நல்லது என கிடைத்த பீட்ரூட் ஹல்வா மற்றும் கேரட் ஹல்வாவினை – தினம் ஒன்றாக கபளீகரம் செய்தேன்! இந்த இரண்டுமே செய்வது பெரிய வேலையல்ல. சீசன் முடிவதற்குள் நானும் செய்தால் உங்களுக்கும் சொல்கிறேன்! மானசீகமாக சாப்பிடலாம்! :)

இந்த வாரத்தில்… – முகநூலில் இருந்து:

விட்டுக் கொடுத்துப் போகிறவனை தைரியமில்லாதவன் என்றும், வைராக்கியமாய் இருப்பவனை ஈகோ அதிகமானவன் என்றும் பட்டம் கொடுக்கும் இவ்வுலகம். எப்படி வாழ்ந்தாலும், இங்கே விமர்சனம்தான். பிடித்த மாதிரியாவது வாழ்வோம். நம் மகிழ்ச்சி நம் கையில்!

ரசித்த காணொளி:

சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரம் – விளம்பரம் மலையாளத்தில் தான் என்றாலும் சுலபமாக புரியும். காணொளியில் வரும் மூப்பனும் முத்தச்சியும் வாவ்! முத்தச்சியின் சிரிப்பு எத்தனை அழகு.



படித்ததில் பிடித்தது – ஒரு கவிதை:

பயத்தில் வியர்த்ததோ…



பனி போர்திய
ஆடையை

குறும்பாய் சூரிய
காதலன்

மெல்ல விலக்கிப்
பார்க்க

பயத்தில் வியர்த்ததோ

இந்த தனித்த
மலருக்கு!

புத்தகங்கள் நம் தோழன் – சென்னை புத்தகக் காட்சி 2019:



வரும் ஜனவரி 4 முதல் 20-ஆம் வரை சென்னை நகரில் புத்தகக் காட்சி. நந்தனம் YMCA Grounds-ல் தான் புத்தகக் காட்சி. புத்தகக் காட்சி சமயங்களில் தமிழகத்தில் இருக்க முடியாமல் இருப்பது ஒரு வேதனை. ஒவ்வொரு முறை நெய்வேலியில் புத்தகக் காட்சி நடக்கும்போதும் அந்த வேதனை அதிகரிக்கும் – எங்கள் ஊரில் நடக்கும் புத்தகக் காட்சியாயிற்றே! இந்த முறையும் தமிழகம் வரும் வாய்ப்பு இது வரை இல்லை. நண்பர் பால கணேஷ் அவர்களின் கைவண்ணத்தில் சில புத்தகங்கள் வெளிவருகின்றன. அவரது நினைவுகளிலிருந்து தொகுத்த “டரங்க் பொட்டி” புத்தகமும் வெளி வர இருக்கிறது. தங்கத் தாமரை பதிப்பகத்தின் வெளியீடு – ஸ்டால் எண் 348-ல்!

சென்னையில் இருக்கும் நண்பர்கள் புத்தக விழாவிற்குச் சென்று வரலாம்! புத்தகக் காட்சிக்குச் சென்று அங்கே வாங்கிய புத்தகங்களின் பட்டியலைப் பகிர்ந்து என் காதில் புகை வர வைக்கப்போகும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! :)

கார்ட்டூன் கார்னர்:



குஜராத்தி நண்பர் ஒருவர் உண்டு. அவருக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெளியாகும் கார்ட்டூன்களைப் பார்க்கவும், படிக்கவும் பிடிக்கும். தினம் தினம் பல பத்திரிகைகளில் வெளியாகும் கார்ட்டூன்களைத் தொகுப்பதும் அவரது வாடிக்கை. வேற்று மொழி கார்ட்டூன் என்றால் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதை படம் வைத்தே கண்டுபிடிக்க முயல்வார். சில சமயங்களில் அந்த மொழி பேசும் நண்பருக்கு அனுப்பியும் விஷயத்தினைத் தெரிந்து கொள்வார். சில சமயங்களில் தமிழில் வெளிவந்த கார்ட்டூன்களை என்னிடம் காண்பித்து அதைப் பற்றித் தெரிந்து கொள்வதுண்டு. அவர் ரசித்த கார்ட்டூன்களை என்னிடமும் காண்பித்து ஸ்லாகிப்பது அவரது வழக்கம். கார்ட்டூன்களை ரசிப்பதை ஒரு பொழுது போக்காக வைத்திருப்பவர் அவர்! சமீபத்தில் நான் ரசித்த கார்ட்டூன் ஒன்று மேலே!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!!

    காஃபியோடு வாந்தாச்சு!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      எஸ்... காஃபியுடன் வந்தாச்சு நானும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  2. இங்கு அத்தனை குளிரே இல்லை ஜி. 15 வருடங்களுக்கு முன்பான பங்களூரா என்று கேட்க வைக்கிறது..

    இந்த வரும் திங்களில் இருந்து அந்த வாரம் 5 நாட்கள் தொடர்ந்து இரவு 13 டிகிரி செல்லும்னு அக்யூ வெதர் சொல்லுது..பார்ப்போம்...இங்கு வந்த அக்டோபர் மாதம் நவம்பர் மாதத்தில் கூட கொஞ்சம் குளிர் இருந்தது 14 வரை போச்சு பகலிலும் சிலு சிலு என்று இருந்தது. ஆனால் நவம்பர் கடைசி வர வர குளிர் குறைந்து பகல் கூட இப்ப கொஞ்சம் வார்மாகத்தான் இருக்கு...இரவு கொஞ்ச நேரம் ஃபேன் தேவையா இருக்கு...வந்த புதிதில் ஃபேன் போடவே இல்லை..ஊட்டி போல இருந்தது...இப்ப..எனக்கு குளிர் இல்லையேன்னு வருத்தமா இருக்கு ஹா ஹா ஹா ஹா

    -1 வரை அனுபவம் உண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில வருடங்களாக இங்கேயும் குறைவாகத் தான் இருந்தது கீதா ஜி!. இந்த வருடம் அதிகமாக இருக்கிறது. பொதுவாக குளிர் காலங்களில் Humidity குறைந்து விடும். ஆனால் இந்த வருடம் அதுவும் அதிகமாக இருக்கிறது - அதனால் தான் குளிர் அதிகம் தெரிகிறது என்கிறார்கள்.

      குளிர் அதிகம் என்றாலும் கோடையை விட அதிகம் பிடித்தது இந்த குளிர் மாதங்கள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. தில்லி காரட் நன்றாக இருக்கும் ஜி கலரும் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். இங்கும் நன்றாகக் கிடைக்கிறாது...(இங்கு ஊட்டியிலிருந்து வருதுன்னும் சொன்னாங்க...பார்க்கவே அத்தனை அழகா இருக்கு. கிலோ 15 ரூ...அல்லது 20.சந்தையில்..கேரட் பீட்ரூட் மிக்ஸ் செய்து ஹல்வாவும் நல்லாருக்கும் ஜி...பீட்ரூட் தனியா செஞ்சாலும் நல்லாருக்கும்...பார்க்கவே அழகா இருக்கே..மானசீகமா எடுத்து டேஸ்ட் செஞ்சாச்சு நல்லாருக்கு ஜி!! ஹா ஹாஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. இங்கே கிடைக்கும் கேரட் நல்ல சிகப்பு - நம் ஊரில் ஒரு வித வெளிர் மஞ்சள் நிறத்தில் கிடைப்பதில் ஹல்வா செய்தால் நன்றாக இருக்காது. இங்கே இனிப்பும் அதிகம்!

      பீட்ரூட், கேரட் இரண்டும் சேர்த்து ஹல்வா - ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே. அப்படிச் செய்து பார்க்கலாம்! நாளைக்கு முயற்சி செய்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங்.கேரட் அல்வா சாப்பிடுவதற்கு முன் காஃபி சாப்பிட்டு விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஆமாம். அல்வா சாப்பிடுவதற்கு முன்னர் காஃபி சாப்பிடுவது நல்லது - இல்லையெனில் காஃபியின் சுவை கெடும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. விட்டுக் கொடுத்துப் போகிறவனை தைரியமில்லாதவன் என்றும், வைராக்கியமாய் இருப்பவனை ஈகோ அதிகமானவன் என்றும் பட்டம் கொடுக்கும் இவ்வுலகம். எப்படி வாழ்ந்தாலும், இங்கே விமர்சனம்தான். பிடித்த மாதிரியாவது வாழ்வோம். நம் மகிழ்ச்சி நம் கையில்!//

    ஆஹா இதை சில நாட்களுக்கு முன்னர்தான் நானும் மகனும் பேசிக் கொண்டிருந்தோம் இதே கருத்தை..விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிப் போனா....முடிவு எடுக்கத் தெரியாது...முட்டாள், அறிவு கெட்டவர்...பயந்தாங்கொள்ளி தைரியம் இல்ல ன்னு சொல்லுவாங்க, சுயமரியாதையக் காப்பாத்திக்க வைராக்கியமா இருந்தா ஆணவம்...ஈகோன்னு சொல்லுறாங்கடா அப்படினு மகனிடம் புலம்பிக் கொண்டிருந்தேன்...

    ரொம்பச் சரியான வரிகள்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு. அதனால் தான் எனக்கும் பிடித்தது இந்த வரிகள்.

      ஒவ்வொரு நாளும் பார்க்கும் மனிதர்களிடம் இப்படி பல விஷயங்கள் பார்க்கிறோம் - சில சமயங்களில் வெறுப்பாகவும் இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. கவிதை அருமை!!! ரொம்ப நல்லாருக்கு..

    பாலகணேஷ் அவரைப் பற்றிய பா ராகவன் அவர்களின் வரிகள் அருமை...பொருத்தம்...புத்தகம் பற்றிய வரிகளும் நல்லாருக்கு.

    புகை வரவைக்கப் போகும்/ ஹா ஹா ஹா எனக்கு ஒவ்வொரு வருஷமும் அல்லது யாராவது புத்தகம் பத்தி சொன்னாலே எனக்குப் புகை வருதே ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பா. ரா. அவர்கள் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

      புகை - ஆஹா உங்களுக்கும் புகையா! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. குளிர் வாட்டுகிறதா? ஏப்ரல் வெயிலில் இந்தக் குளிரை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது இல்லையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குளிர் அதிகம் என்றாலும், கோடையை விட குளிர் காலம் தான் எனக்குப் பிடித்தது.

      பொதுவாகச் சொல்வதில்லையா - இக்கரைக்கு அக்கரைப் பச்சை! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. வெங்கட்ஜி எனக்கும் குளிர்தான் மிகவும் பிடிக்கும்....எப்பவுமே...பகலில் வரும் கொஞ்சம் வெயில் போதுமே...

      கீதா

      நீக்கு
    3. பகலில் வரும் கொஞ்சம் வெயில் போதுமே... அதானே...

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. கார்ட்டூன் ஹா ஹா ஹா ரசித்தேன்...

    உங்கள் நண்பரின் ரசனை சூப்பர் ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரிடம் மிகப் பெரிய கார்ட்டூன் கலெக்‌ஷன் உண்டு. அவரிடமிருந்து சுட வேண்டும்! :) பல மொழிகளிலும் கார்ட்டூன்கள் கலெக்‌ஷன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  9. காணொளி மட்டும் அப்புறமா பார்க்கிறேன் ஜி...ஹெட் செட் இல்லை அதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி முடிந்த போது பாருங்கள் - தவறாமல்! காணொளியில் வரும் முத்தச்சிக்காக!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  10. காணொளி ரசித்துச் சிரிக்க வைத்தது. தாத்தாவின் சிரிப்பையா, பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்பையா, எதை அதிகம் ரசிப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இரண்டுமே ரசிக்க முடிந்தது - பாட்டியின் பொக்கை வாய்ச் சிரிப்பை அதிகம் ரசித்தேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. கவிதை பரவாயில்லை. பாலகணேஷ் புத்தகங்கள் வெல்லட்டும். இந்தமுறை புத்தகக் கண்காட்சி போகவேண்டாம் என்று பார்க்கிறேன். அதிக நாட்கள் வைத்து ஈர்க்கிறார்கள். கட்டுப்படுத்திக் கொண்டு பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிக நாட்கள் வைத்து ஈர்க்கிறார்கள் - ஹாஹா... கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினம் தான் இல்லையா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. கார்ட்டூன் ரசனை. முன்னர் தினமணியில் மதி கார்ட்டூன் மிக ரசனையாய் இருந்தது. அவர் தினமணியை விட்டுச் சென்று விட்டபின் அவை வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதி அவர்களின் கார்ட்டூன்களை நானும் ரசித்திருக்கிறேன். தினமணியை விட்டுச் சென்றது அறிந்திராத செய்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. //விட்டுக் கொடுத்துப் போகிறவனை தைரியமில்லாதவன் என்றும், வைராக்கியமாய் இருப்பவனை ஈகோ அதிகமானவன் என்றும் பட்டம் கொடுக்கும் இவ்வுலகம். எப்படி வாழ்ந்தாலும், இங்கே விமர்சனம்தான்//

    வருத்தமான விசயம் ஜி ஆனால் இதுதான் நிதர்சனமான உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தரும் உண்மை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  14. அருமையான மற்றும் அற்புதமான பதிவு, தாத்தா பாட்டி தேர்வு எழுதுவது கண்டு பலமுறை பார்த்து ரசித்தேன்.
    ரங்கராஜன் நிர்மலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஆஹா.... தன்யநனானேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் நிர்மலா ஜி.

      நீக்கு
  15. காணொளி ரசித்தேன். உண்மையும்கூட.. என் பாட்டி இறக்கும்போது வயசு 82. ஆனா கண்ணாடி போடாம டிவி பார்க்கும். இறக்கும் அன்னிக்குக்கூட பட்டாணி, வெள்ளைக்கரும்பு சாப்பிட்டது. ஆனா நான் 19 வயசில் கண்ணாடி போட்டேன். இப்பவே நாலு பல் காலி :-(

    கேரட் அல்வாவை எனக்கு பார்சல் செய்யவும். ஐ லைக் அல்வா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரட் ஹல்வா பார்ச்லில் அனுப்பிவிட்டேன்.,..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  16. தளத்தின் முகப்பில் இருக்கும் காஃபி கப் விளம்பரம்போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளம்பரம் இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    காஃபி வித் கிட்டு அருமையாக இருக்கிறது. இந்த தடவை தலைநகர் குளிர் அதிகம் போலிருக்கிறது. இந்த குளிரில் என் இளைய மகன், மருமகள், அவர்கள் வீட்டு சொந்தங்கள் என அனைவரும் டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் என சுற்றுலா சென்றிருக்கிறார்கள். நாளை இரவு வந்த பின்தான் குளிர் எப்படி இருந்தது என கேட்க வேண்டும்.

    சென்னையில் புயல் மழையுமாக இருந்த போது இங்கு குளிர் இருந்தது. ஆனால் இப்போது சற்று குறைந்துள்ளது.தறசமயம் மதியம் மின் விசிறி காற்று அவசியமாக உள்ளது. பின் இரவில் குளிர் நிலவுகிறது.

    கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா ருசித்தேன். தாங்களும் அல்வாக்களை செய்து பதிவிடுங்கள. படித்துப் பார்த்து ரசிக்கலாம்.

    கார்டூன், கவிதை இரண்டுமே மிக அருமை.
    காணொளி மிகவும் அருமை. தாத்தா, பாட்டியின் மலர்ந்த சிரிப்புக்கள் மனதை கவர்ந்தன. அவர்கள் இருவரின் கண்களிலும் சிரிப்புகள் அலை மோதுகின்றனவே.! விளம்பர படமா? நடிப்பாயினும் இயல்பாய் உள்ளது.அருமை.

    புத்தக கண்காட்சி பார்க்க ஆவல். எப்போது சமயம் வாய்க்குமோ தெரியவில்லை. கண்காட்சியை பார்த்து விட்டு யாரேனும் பகிரும் போது ரசிக்கலாம். தொகுப்பு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.,. உங்கள் மகன் குடும்பத்துடன் தில்லி வந்திருக்கிறாரா? மகிழ்ச்சி. முன்னரே தெரிந்து இருந்தால் சந்தித்து இருக்கலாம். குளிர் கொஞ்சம் அதிகம்தான்.

      காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
    2. நான் அவர்கள் தில்லி பயணம் என்றதும், உங்களைத்தான் நினைவு கூர்ந்தேன். அவர்கள் குடும்பமாக வருவதால், (மருமகளின் அண்ணா குடும்பம் அமெரிக்காவிலிருந்தும் , அவர்கள் உறவு என வேறு சில இடங்களிலிருந்தும்...இப்படி சேர்ந்து வருவதால்) பிறிதொரு சமயம் நாங்கள் மட்டும் வரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால், தங்களுக்கு தெரிவிக்கலாம் என சொல்லவில்லை. முன்னரே தெரிந்திருந்தால் சந்தித்து இருக்கலாம் என்ற தங்களின் நட்பு உள்ளம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி..

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. பரவாயில்லை ஜி. நீங்கள் வரும்போது சொல்லுங்கள். வாய்ப்பு அமைந்தால் சந்திப்போம்.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. காணொளி பார்த்தேன் நல்லாருக்கு ஜி...இந்த பையனூர் மலையாளத்து மலபார் பையனூரோ?!! காணொளி பார்த்தா அப்படித்தான் தெரியுது...அந்த முத்தச்சி!!! க்யூட்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கேரளத்துப் பையனூர் தான். அங்கே இருக்கும் கண் ஆஸ்பத்திரிக்கான விளம்பரம். முத்தச்சி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  19. பயத்தில் வியர்த்தது, கவிதை உட்பட அனைத்தும் அருமை ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  20. கேரட் ஹல்வா டெல்லி குளிருக்கு நன்றாக இருக்கும்.காணொலி அருமை.சென்னை புத்தகக் கண்காட்சி பார்த்ததில்லை.பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்கள் பதிவை படித்ததும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....