திங்கள், 7 செப்டம்பர், 2020

கடனுக்கு ஒரு கடன்…

 

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

 


*****

 

இந்த தீதுண்மி நாட்கள் பலரையும் கஷ்டத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருக்கப் போகிறது என்பதை அறிந்தவர் யாருமில்லை! ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்கள் பலரும் தங்களது கஷ்டங்களை, நான் கேட்காமலேயே பகிர்வதுண்டு – ஏனோ என் முகத்திற்கு அப்படி ஒரு ராசி! – தானாகவே வந்து என்னிடம் எதையாவது கஷ்டங்களைச் சொல்லி புலம்பிச் செல்வது பலமுறை நான் பார்த்திருக்கிறேன் – எத்தனை வேலைகள் இருந்தாலும், நானும் கவனமாக அவர்கள் சொல்வதைக் கேட்டு, முடிந்த வரை தீர்வுகளைச் சொல்லுவதுண்டு! “எவ்வளவு சொன்னாலும் இவன் கேட்கிறாண்டா!” என்று பலரும் நினைக்க, “நான் சொல்லி நீங்க என்னிக்குக் கேட்டு இருக்கீங்க!” என்று எங்கிருந்தோ ஒரு குரலும் கேட்கிறது! அது ஒரு புறம் இருக்கட்டும்! விஷயத்திற்கு வருகிறேன்.

 

மூன்று மாதங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் இருக்கும் ஒரு வாகன ஓட்டுனர் தன்னுடைய குறைகளைச் சொல்லி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு முடிந்த வரை தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன். தற்காலிக ஊழியர் என்பதால் மாத சம்பளமாக 15000 ரூபாய் தான் அவருக்குக் கிடைக்கும், சில பல தில்லுமுல்லுகள் (பெட்ரோல்/டீசல் விற்பது) மூலம் ஒன்றிரண்டு ஆயிரம் ரூபாய் கிடைக்கலாம். தவிர Overtime பார்ப்பதில் சில ஆயிரங்கள் வருமானம் வரும்! மொத்தத்தில் இருபது இருபத்திரண்டு ஆயிரம் சம்பாதித்து விடுவார்.  ஆனாலும் அந்த வருமானம் அவருக்குப் போதவில்லை – திருமணம் ஆகாதவர் – வீடு வாடகை கிடையாது – அண்ணனுடன் தங்கி இருப்பதால்! ஆனால் பழக்க வழக்கங்கள் அப்படி இப்படி என்று இருப்பதால் இந்த மாதாந்திர வருமானம் போதவில்லை என்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தேவையில்லாத பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

பேசிச் சென்ற சில நாட்களில் மாதக் கடைசி! அலைபேசியில் அழைத்து உடனடியாக 1000/- ரூபாய் Google Pay வழியே அனுப்பித் தாருங்கள் – அண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வேண்டும் என்று கேட்க, சரி என அனுப்பி வைத்தேன் – ஏதோ ஒரு உதவியாக இருக்கட்டுமே என! மூன்றாவது நாள் அலுவலகத்திற்கு நான் செல்லவில்லை. அலைபேசியில் அழைத்து, பணம் தருவதற்காகக் கேட்க, நான் அலுவலகத்தில் இல்லை என்று சொல்லி, சக ஊழியரிடம் கொடுத்து விடச் சொன்னேன்.  அவரிடம் கொடுத்த போது, “என்ன அவசரம், நாளைக்கு அவரைப் பார்க்கும்போது கொடுக்கலாமே என்று சொல்ல, “இல்லை இல்லை, இருக்கும்போது கொடுத்து விடவேண்டும், இல்லையெனில் மறந்து விடலாம், கூடவே அடுத்த முறை பணம் கேட்டால் அவர் கொடுக்க வேண்டுமே” என்றெல்லாம் சொல்லிச் சென்றிருக்கிறார்.  நண்பரும் வாங்கிக் கொண்டு எனக்கு Google Pay வழி அனுப்பினார்.

 

பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து மீண்டும் ஒரு அழைப்பு – அதே ஓட்டுனரிடமிருந்து.  “சாப் ஜி, எனக்கு உடனடியாக ஆறாயிரம் ரூபாய் வேண்டும் - Google Pay மூலம் அனுப்பி வையுங்கள். ஊரில் உறவினர் இறந்து விட்டார் என்பதால் ஊருக்குச் செல்ல வேண்டும், இரண்டு நாட்களில் தலைநகர் திரும்பியதும் உங்களுக்குத் தந்துவிடுகிறேன்” என்றார். எனக்கு ஏதோ சரியாகத் தோன்றவில்லை! உதவி செய்வது நல்லது தான் என்றாலும், இப்படி அடிக்கடி பணம் கேட்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை.  தன்னிடம் பணம் இல்லாதபோது ஊருக்குச் செல்வது அவசியமாகவும் தோன்றவில்லை.  “என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே! நீ வேறு ஏற்பாடு செய்து கொள்!” என்று சொல்லி இணைப்பினைத் துண்டித்து விட்டேன். சில நிமிடங்களில் மீண்டும் அழைப்பு அவரிடமிருந்து.  ”பாதி பணம் தாருங்கள், மீதி வேறொருவரிடம் ஏற்பாடு செய்து விட்டேன்” என்றார். சரி உறவினர் இறந்து விட்டாரே, என்ற எண்ணத்துடன் பணம் அனுப்பி வைத்தேன்.  அது ஆயிற்று இரண்டு மாதங்களுக்கும் மேல்!


இன்று வரை அந்தப் பணம் வரவே இல்லை! வழியில் பார்க்கும்போது தலையைத் திருப்பிக் கொண்டு வேகவேகமாக கடந்து விடுவார், அலைபேசியில் அழைத்துக் கேட்டால் இதோ இன்றைக்கு அனுப்பி விடுகிறேன் என்பார் ஆனால் இதுவரை பணம் வரவில்லை! இந்த வாரத்தில் ஒரு நாள் எதிரேயே பார்த்துவிட, அவருக்கும் வேறு வழியில்லை, என்னாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை!  அந்தப் பணம் என்னைப் பொறுத்த வரை மிகவும் அதிகம் இல்லை! கடனாகக் கேட்டிருந்தவருக்கு கடன் கொடுத்திருக்கிறேன் – அதனால் கேட்காமல் இருக்க முடியவில்லை! அண்ணனுக்கு விபத்து, உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய் வந்தேன் என்று ஏதேதோ காரணங்கள் சொல்கிறாரே தவிர தருவதாக இல்லை. அவர் உங்கள் பணத்தினை என்னால் முடியவில்லை என்று சொல்லி விட்டால் விட்டு விடுவேன் என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்! முதல் முதலில் ரொம்பவே நல்லவர் போல ”வாங்கினால் கொடுக்க வேண்டும்” என்றெல்லாம் பேசிவிட்டு இப்படிச் செய்வது நன்றாக இல்லையே! அதையே அவரிடம் “கொடுக்க முடியலைன்னா சொல்லி விடு” என்று சொன்ன போது, “இல்லை நிச்சயம் தருவேன். அப்படித் தந்தால் தானே அடுத்த முறை உங்களிடம் பணம் கேட்க முடியும்!” என்கிறார்! 

 

ஏதோ உதவி கேட்கிறாரே என பணம் கொடுத்தால், இவர்களைப் போன்றவர்களால் யாருக்குமே கொடுக்க நமக்கு மனம் வராமல் போய் விடுகிறது! பணக் கஷ்டங்கள் எல்லோருக்கும் வருவது தான் என்றாலும், “சொன்ன சொல்லை காப்பாற்றாமல் இருப்பது நல்லதல்ல! இது வரை நான் அப்படி நடந்து கொண்டதில்லை. யாரிடமாவது வாங்கினால் அதனைக் கொடுக்கும் வரை மனதிற்குள் ஒரு சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கும்! கொடுத்த பிறகு தான் நிம்மதியாக இருக்கும்! எல்லோரும் இப்படியே இருப்பார்கள் என நினைப்பது தவறு தான்! என்றாலும் இந்த விஷயத்தினை இங்கே பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை!  சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு விஷயத்தினை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் – இந்த ஓட்டுனரும் தான் – யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் – திரும்ப வராது என்ற எண்ணத்துடன் கொடுக்க முடிந்ததை மட்டுமே கொடுப்பது தான் நல்லது என்று புரிய வைத்திருக்கிறார்!

 

நண்பர்களே, இன்று உங்களுடன் பகிர்ந்து கொண்ட பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

26 கருத்துகள்:

  1. நலம் வாழ்க...

    இப்படியும் பலபேர்... காலம் போகிற போக்கில் என்னத்தைச் சொல்வது?...

    நாம் தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனமாக இருக்க வேண்டும் என்பதே சரி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
    இது என்ன அனியாயமாய் இருக்கிறதே.

    அவர் சொன்னதெல்லாம் பொய்யாய் இருக்கும் பாருங்கள்.
    அவருக்கு இருக்கும் பழக்கங்கள் பொய் சொல்ல
    வைக்கின்றன.
    உங்களை நியைத்து வருத்தமாக இருக்கிறது.
    எனக்குத் தெரிந்த ஒரு மிகப் பெரிய பணம் படைத்தவர்,
    வாழ்வு முழுவதும்
    Neither lend nor Borrow கொள்கையைக் கடைப்பிடித்தார்.
    தானம் நிறையச் செய்வார்,
    அந்த வசதியும் மனதும் இருந்ததால்.
    இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம் - நல்லதொரு கொள்கை.

      சில சமயங்களில் நாம் நல்லது நினைக்க,அதனை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. என் அப்பா, நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சொல்லியிருக்கார். வரு ரூபாய் கடன் கேட்டால் கொடு. பெரும்பாலும் திரும்ப வராது. அப்புறம் கடன் கொடுக்கவும் தோணாது என்று.

    எப்படியோ.. மூவாயிரத்தோடு போச்சு. நானும் இரக்கப்பட்டு 250 தினார் ஆபீசில் வேலை பார்ப்பவனுக்குக் கொடுத்துவிட்டு திரும்ப வாங்க கஷ்டப்பட்டேன். கசப்புதான் மிஞ்சியது, நட்பும் போச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 250 தினார் - அதிகம் தான்.

      பெரும்பாலும் திரும்ப வராது - உண்மை. வாங்குவதற்கு பழகி விடுகிறார்கள் - கொடுப்பதற்கு பழகுவதே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. வல்லிசிம்ஹன் (amma thavaruthalaai en pakkathil pottuttangannu ninaikirean - unga pathivu innum naan vasikkalai )
    அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம். இது என்ன அனியாயமாய் இருக்கிறதே. அவர் சொன்னதெல்லாம் பொய்யாய் இருக்கும் பாருங்கள். அவருக்கு இருக்கும் பழக்கங்கள் பொய் சொல்ல வைக்கின்றன. உங்களை நியைத்து வருத்தமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு மிகப் பெரிய பணம் படைத்தவர், வாழ்வு முழுவதும் Neither lend nor Borrow கொள்கையைக் கடைப்பிடித்தார். தானம் நிறையச் செய்வார், அந்த வசதியும் மனதும் இருந்ததால். இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் அதே கருத்துரை வந்திருக்கிறது குமார். நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இனிய காலை வணக்கம் ஐய்யா.
    நிறந்தர மாத ஊதியம் வாங்கும் எனது சில அரசு ஊழிய நன்பர்களும் இப்படி இருப்பதுண்டு என்ன செய்ய.
    ஆரம்பத்தில் சிறிய அளவில் வாங்கி திருப்பி செலுத்திவிட்டு பின் பெரிதாக கேட்டு வாங்கி மாட்டிவிட்டுவிடுவார்கள்.
    கொஞ்சம் விட்டா லச்சங்களிலும் கேட்பார்கள்.
    அடிபட்டு நான் திரும்ப வராவிட்டாலும் என்னால் சமாளிக்க முடிகிற அளவு மட்டுமே இப்போது குடுக்கிறேன்.
    பேருக்கு தான் நான் வங்கியில் இருக்கிறேன். எனக்கு கண்டிப்புடன் திருப்பி கேட்கவும் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      கொஞ்சம் விட்டால் லக்ஷங்களிலும் கேட்பார்கள் - உண்மை. சிலர் அப்படிக் கேட்டதுண்டு - என்னிடமும்! கொடுத்ததில்லை.

      //கண்டிப்புடன் திருப்பி கேட்கவும் வராது// - :) அதே தான் இங்கேயும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பெரும்பாலும் கடனாகத் தருவதில்லை. தவிர்த்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரும்பாலும் கடனாகத் தருவதில்லை. தவிர்த்து விடுகிறேன்// நல்ல கொள்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. கிட்டத்தட்ட 15 வருடம் பழகிய நபர்... அவரே "இதோ அதோ..." என்று இரண்டு வருடத்திற்கு மேல் சொல்லிக் கொண்டிருக்கிறார்... ம்... இனிமேல் கேட்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்... வேறு வழி தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 15 வருடம் பழகிய நபர் - இரண்டு வருடமாக இழுத்தடிக்கிறார். இப்படியும் சிலர்.

      கேட்பதில்லை என்று முடிவு செய்ததும் நல்லதே. கேட்டு கஷ்டப்படுவதை விட, வராது என விட்டுவிடுவதே மேல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. எனது அப்பா 35 வருடங்களுக்கு முன் சொன்னது (இறந்து விட்டார்) கடன் கொடுத்து பகை வருவதைவிட கடன் கொடுக்காமல் பகையாகு செலவு மிச்சம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடன் கொடுக்காமல் பகையாகு! செலவு மிச்சம்// உண்மை. நல்ல அறிவுரை சொல்லி இருக்கிறார் உங்கள் தந்தை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. 'கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை' என்பார்கள் பெரியவர்கள். அப்படித்தான் இருக்கிறது.
    நாங்களும் கொடுத்து விட்டு வாங்க முடியவில்லை சிலரிடம்.

    இப்பொழுது கோரானா காலத்தில் கேட்கிறார்கள் வளாகத்தில் வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொடுத்து விட்டு திருப்பித்தரவேண்டாம் என்று சொல்லி விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை// நல்லதொரு சொல்லாடல். சிலருக்கு கொடுத்து திரும்பித் தரவேண்டாம் என்று நானும் சொல்லி இருக்கிறேன் கோமதிம்மா. அவர்கள் கஷ்டப்படுபவர்கள். உழைப்பாளிகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. சில நபர்கள் நடத்தையால் நமக்கு பல நபர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலரால் பலரையும் நம்ப முடிவதில்லை என்பது உண்மை தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. திரும்ப வராது என்ற எண்ணத்துடன் கொடுக்க முடிந்ததை மட்டுமே கொடுப்பது தான் நல்லது

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. திருப்பித் தருவார்கள் என எதிர்பார்க்காமல்தான் கொடுக்க வேண்டும். அனுபவங்களே அதை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. கடனைக் கேட்க கதை கட்டுவதில் பலர் வியக்க வைக்கும் அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்கள் தான் நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன என்பது உண்மை தான் ராமலக்ஷ்மி.

      வியக்க வைக்கும் திறமைசாலிகள் - அதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ஏமாறுவது என்பதற்கெனத் தனியான முகம் வேண்டுமோனு நினைக்கிறேன். நானும் ஏமாந்திருக்கேன் என்றாலும் அது நெருங்கிய உறவினர்களிடம்! ரொம்ப உருக்கமாகப் பேசி வாங்கிக் கொண்டு போயிட்டு மறுநாளே நம்மைப் பார்த்தாலே ஏதோ பகைவரைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு பேசவே மறுப்பார்கள். அதிலும் யாருக்கெல்லாம் கஷ்டத்தில் புடைவை, துணி,புத்தகம்னு உதவி இருக்கேனோ அவங்கல்லாம் அவதூறாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர். பழகிப் போச்சு! நான் அதிகம் கடன் வாங்கமாட்டேன். தேவை எனில் நாங்க இருவரும் கலந்து ஆலோசித்துக் கொண்டு முதலில் அலுவலகத்தில் நம்ம சொந்தப் பணமான ப்ராவிடென்ட் ஃபன்டில் முயற்சி செய்துவிட்டுப் பின்னர் அங்கே கிடைக்கலைனா அலுவலகத்திலேயே சொசைட்டி மூலம் வாங்கிப்போம். வெளி ஆட்களிடம் வாங்குவதைப் பழக்கத்தில் வைச்சுக்கலை. வேலை செய்யும் ஆட்களுக்குக் கொடுப்பது தனி! அதை எப்போதுமே காந்தி கணக்கில் எழுதிப்போம். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாறுவதற்கென்றே தனி முகம்! :)

      காந்தி கணக்கு! கொடுக்கும்போதே வராது என்ற நினைப்புடன் கொடுப்பதும் உண்டு கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....