வெள்ளி, 18 செப்டம்பர், 2020

சாப்பிட வாங்க – கச்சே கேலே கி சப்ஜி

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உங்களை கீழே தள்ளி விடுவதில் மற்றவர்கள் வலிமையானவர்கள் என நிரூபித்தால், கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பதில் நீங்கள் வலிமையுள்ளவர்கள் என நிரூபியுங்கள்! 

***** 



பொதுவாக வாழைக்காயில் வறுவல், சிப்ஸ் செய்வது தவிர, ரோஸ்ட், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் மிளகூட்டல் என சில வகைகளில் சமையலில் பயன்படுத்துவது உண்டு நம் ஊரில். வடக்கில் இந்த வகை பயன்பாடுகள் குறைவே. வாழைக்காய் வைத்து வேறு சில வகை சப்ஜி செய்வதுண்டு – குறிப்பாக கோஃப்தா! (விரைவில் கோஃப்தா ஆதியின் அடுக்களையில் வரலாம்!) மேலும் ஒரு வகை Gravy-யுடன் ஒரு சப்ஜி. ஹிந்தியில் Gravy இருக்கும் விதமான சப்ஜியை தர்ரி வாலி சப்ஜி என்றும், Gravy இல்லாத சப்ஜியை ஸூக்கா சப்ஜி என்றும் சொல்வதுண்டு! பெரும்பாலும் சப்பாத்தி, பூரி, பராட்டா என கோதுமை மாவில் தயாரிக்கும் அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள தர்ரி வாலி சப்ஜியையே அதிகம் செய்வார்கள். ஸூக்கா சப்ஜி இரண்டாம் பட்சம் தான். நிச்சயம் கூடவே ராய்தா இருக்கும் – பூந்தி வாலி ராய்தா, மிக்ஸ் வெஜ் ராய்தா என ஏதேனும் இருக்கும்! பச்சையாக வெங்காயம், தக்காளி, கீரா, பச்சை மிளகாய் என சில காய்கறிகளை நறுக்கி, காலா நமக் சேர்த்து, கூடவே கொஞ்சம் எலுமிச்சை சாறும் சேர்த்து சலாட் கூடவே இருக்கும்! 

நானும் சமைக்கும் போது விஸ்தாரமாகவே சமைக்க விரும்பினாலும், ஒரே ஆளுக்கு அனைத்தும் செய்வது மீதம் ஆகி விடும் என்பதால் அனைத்தும் செய்வதில்லை. சமீபத்தில் ஒரு நாள் வாழைக்காய் வைத்து Gravy சப்ஜி செய்தேன். அந்த சப்ஜி எப்படிச் செய்வது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தால் இதோ பதிவுடன் வந்து விட்டேன்! வாழைக்காய் Gravy சப்ஜி எப்படிச் செய்வது என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கும் ஆசை தானே! முதலில் என்னென்ன தேவை என்பதைப் பார்த்து விடலாம் – வாழைக்காய் தர்ரி வாலி சப்ஜி செய்ய நிச்சயம் வாழைக்காய் தேவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா! 

தேவையான பொருட்கள்: 




வாழைக்காய் – இரண்டு அல்லது மூன்று 

எண்ணெய் – பொரிக்கவும், வதக்கவும் 

வெங்காயம் – 2 பெரியது 

தக்காளி – 1 

பச்சை மிளகாய் – 2 அல்லது 3 

இஞ்சி பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன் 

மிளகாய்த் தூள் – ½ ஸ்பூன் 

மல்லித் தூள் – 1 ஸ்பூன் 

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன் 

கரம் மசாலா – ½ ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு. 

கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு (அலங்கரிக்க!) அம்புட்டுதேன்! 

எப்படிச் செய்யணும் மாமு? 

”விஷமம் பண்ண, தோலை உரிச்சுடுவேன்” - பெரும்பாலான அப்பா/அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடன் சொன்ன வார்த்தைகள் – இப்போது சொல்ல முடியாது/சொல்வதும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்! அப்படி வாழைக்காயின் தோலை சீவி எடுத்து விடுங்கள். வட்ட வடிவ துண்டுகளாக – சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

வெங்காயம், தக்காளி போன்றவற்றையும் நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

இஞ்சி பூண்டு விழுது-ஆக இருந்தால் ஓகே. இல்லை என்றால் சிறு துண்டுகளாகவும் சேர்த்துக் கொள்ளலாம்! நான் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கியே சேர்த்திருக்கிறேன் (பார்க்க படம்!) 

நறுக்-சுறுக் வேலையெல்லாம் முடிந்த பிறகு, அடுப்பில் ஒரு வாணலி வைத்து, எண்ணெய் சேர்த்து (வாழைக்காய் துண்டுகள் பொரிக்கும் அளவு), கொஞ்சம் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய்களை அதில் போட்டு நன்கு பொரித்து, எண்ணையை வடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மீதி இருக்கும் எண்ணையில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். கொஞ்சம் சிவக்க வறுத்துக் கொள்ளலாம்! பிறகு இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்குங்கள்! 

பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை மிளகாயையும் நீட்டு வாக்கில் நறுக்கிச் சேர்த்துக் கொள்ளுங்கள். கொடுத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு அனைத்தும் சேர்த்து வதக்குங்கள். இரண்டு நிமிடம் வதங்கிய பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி, மூடி போட்டு ஐந்து நிமிடம் வரை வேக வைக்கலாம்! எண்ணை பிரிந்து வந்த பிறகு மூடியைத் திறந்து இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, பொரித்து வைத்திருக்கும் வாழைக்காய் துண்டங்களைச் சேருங்கள். 

நன்கு கலக்கி, நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி தழையில் பாதியைச் சேர்த்து கலக்கி, மூடி போட்டு ஐந்திலிருந்து எட்டு நிமிடம் வரை வேக விடுங்கள். மூடியை எடுத்து, கொஞ்சம் வதக்கி, மீதமிருக்கும் கொத்தமல்லி தழைகளை மேலாக தூவி விட்டால் வேலை முடிந்தது! வாணலியிலிருந்து வேறு பாத்திரத்தில் மாற்றிய பிறகு கூட கொத்தமல்லி தழைகளை தூவிக்கொள்ளலாம்! அது உங்கள் இஷ்டம்! பெரும்பாலும் ஒரே வேளையில் காலி செய்யும் அளவே நான் செய்வேன் என்பதால் இன்னுமொரு பாத்திரம் எடுத்து அதில் வைத்து, அதையும் தேய்க்க வேண்டும் என்பதால் இப்படி மாற்றுவதில்லை! சுவையான தர்ரி வாலி கச்சே கேலே கி சப்ஜி தயார்! ரொட்டி, பூரி என இரண்டுடனும் சுவையான தொட்டுக்கை இந்த சப்ஜி! 

நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்க்கத்தானே போகிறீர்கள்! செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்! பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை… 

நட்புடன், 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

28 கருத்துகள்:

  1. சப்ஜி என்பது ஊருக்கு ஊர் மாற்றமாகத்தான் செய்கிறார்கள்.

    //நறுக்-சுறுக் வேலையெல்லாம் முடிந்த பிறகு//

    ஹா.. ஹா.. ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் மிக அருமை. சிறந்த தன்னம்பிக்கை வரிகள்.

    வாழைக்காயை வைத்து சிறந்த முறையில் சப்ஜி செய்திருப்பதற்கு பாராட்டுக்கள். படமும் அருமை. விபரங்கள் குறித்துக் கொண்டேன். நேற்றுதான் அமாவாசைக்கு வாழைக்காய் ரோஸ்ட் செய்தேன். இரு தினங்கள் கழித்து தங்கள் சமையல் ரெசிபியை செய்துப் பார்க்கிறேன். (ஆனால் அதற்கு நீங்கள் கூறியது போல், சப்பாத்திகளும் இட வேண்டும்:))

    விதவிதமாக சமையல் செய்து அசத்துவதுடன் அதை நீங்கள் எழுதும் முறையும் நன்றாக உள்ளது.

    கோஃப்தாவை சகோதரியின் கைவண்ணத்தில் எதிர்பார்க்கிறேன்.

    "குழந்தைகள் விஷமம் பண்ணினால் கண்டிப்பது" நகைச்சுவையை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      கோஃப்தா செய்முறை - சஹானா இணைய இதழில் வந்திருக்கிறது. காணொளியாக விரைவில் வெளிவரும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நல்லதொரு வாசகம்...வாழைக்காயை ஒரே மாதிரி கறியாகவே சமைத்துப் பழகிய என்போன்றோருக்கு இது வரப்பிரசாதம்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களூக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      இந்த முறையில் முயற்சித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாவ் .வாழைக்காய்.
    சப்ஜியா
    அடடே வெங்கட் உங்கள் சமையல் திறன் அதனைப்
    பதிவில் எழுதும் இதம் பதம் பார்த்து பிரமிக்கிறேன்.
    வாழைக்காயை வறுத்து மசாலாவுடன் சேர்த்தால் எப்படி இருக்கும் என்று செய்து பார்க்க வேண்டும்.
    உங்கள் படங்களும் சூப்பர்.

    இத்ற்காகவே நீங்கள் ஸ்ரீரங்கம் சென்று ரோஷ்ணியையை அசத்த வேண்டும்.
    புது ரெசிப்பிக்கு மிக நன்றி மா.
    இன்னும் நிறைய எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டியமைக்கு நன்றி வல்லிம்மா.

      இன்னும் நிறைய எழுதுங்கள் - எழுத வேண்டும் என நினைத்தாலும் சமயங்களில் முடிவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வெங்காயத்தையும் தக்காளியையும் நறுக்கி சேர்ப்பதற்கு பதில் மிக்ஸியில் அரைத்து சேர்த்தால் சாஹி பனீர் மாதிரி சாஹி வாழைக்காய் (केला ?) என்று பெயர் வைக்கலாம்.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷாஹி என்றால், வெறும் வெங்காயம் தக்காளி அரைத்துச் சேர்த்து விடுவதல்ல! இன்னும் நிறைய விஷயங்கள் அதில் சேர்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  6. Bachellor சமையல் மாதிரி டக்குனு சொல்லிட்டீங்க. நானும் தேவையில்லாமல் பாத்திரங்களை அதிகரித்து, தேய்க்கும் வேலையை வச்சுக்க மாட்டேன். கரண்டிக்குப் பதில் பெரிய ஸ்பூன்கள் உபயோகிப்பேன்.

    சப்ஜி நல்லா இருக்கு. வாழைக்காயைப் பொரிக்கணுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைக்காயைப் பொரிக்கணுமே! ஆமாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  7. எளிதாக இருக்கிறது... செய்து ருசிக்கிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிது தான். செய்து ருசித்துப் பாருங்கள் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாழைக்காய் கோப்தா சாப்பிட்டிருக்கேன். இப்படிப் பண்ணினதில்லை. ஒரு முறை ஒரே ஒரு வாழைக்காயில் பண்ணிப் பார்க்கணும். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே ஒரு வாழைக்காயில் - செய்து பார்த்துச் சொல்லுங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ரொம்ப நல்லா இருக்கு ...

    இதுவரை வாழைக்காய் வறுவல், பொடிமாஸ் தான் செஞ்சு இருக்கேன் ..இது ரொம்ப புதுசா இருக்கு சார் ..அடுத்த முறை செய்து பார்க்கிறேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாழைக்காய் தர்ரி வாலி சப்ஜி செய்முறை அருமை. படங்களும் அழகு.
    செய்து பார்க்கிறேன்.
    ஒரு வாழைக்காய் இருக்கிறது,மற்றும் தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாமும் இருக்கிறது.
    செய்து பார்த்து விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறையில் செய்து பார்த்து விட்டுச் சொல்லுங்கள் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. தர்ரி வாலி சப்ஜி படங்களும் மற்றும் செய்முறையும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  13. வாழைக்காய் சிறந்த உணவு - அதனை
    இத்தனை வகையில் பயன்படுத்தலாமென
    இன்றுதானறிந்தேன்
    சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவாணன் ஜி.

      நீக்கு
  14. செய்து சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து, சுவைத்துப் பாருங்கள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....