புதன், 2 செப்டம்பர், 2020

தில்லி திருநங்கைகள் – ஒரு திருமணமும் கட்டாய வசூலும்

 

அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை கவிதா சுதாகர் என்றவர் எழுதிய ஒரு கவிதையுடன் துவங்கலாம் வாருங்கள்.

 

அன்பிற்கு ஏங்குகிறோம்

ஆண்மையின்றி தவிக்கிறோம்

இச்சை சோற்றுக்கு

ஈனப் பிழைப்பு பிழைக்கின்றோம்

உறவும் நேசிக்கவில்லை

ஊரும் ஏற்றுக்கவில்லை

எள்ளி நகைக்கும் மனிதர்கள்

ஏளனமாய் பார்க்குதிங்கு உலகம்

ஐம்பாலிலும் இடம் இல்லை

ஒன்பது என்றே அழைக்கப்படுகிறோம்

ஓடி ஒளியத்தான் முடியவில்லை

ஔவியம் பேசுவதை நிறுத்திவிட்டு

அஃறிணை போலாவது நடத்துங்கள்!

 

*****

 

சமீபத்தில் தில்லி நண்பர் ஒருவரின் மகனுக்கு பெங்களூரில் திருமணம் நடந்தது. இந்தத் தீதுண்மி காலத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக, தில்லியிலிருந்து பெங்களூர் சென்று திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் அனைத்து நண்பர்களுக்குமே இருந்தது.  தில்லியிலும் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வும் நடத்த முடியவில்லை.  இதற்கிடையே நண்பர் குடும்பம் தில்லிக்கு வந்து சேர்ந்த பிறகு ஒரு நாள் காலையில் சிறு விழா ஒன்றினை வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதற்குச் சென்ற போது நடந்த ஒரு நிகழ்வுபற்றி தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகிறோம்.

 

பொதுவாகவே வட இந்தியாவில் திருநங்கைகள் மீது ஒரு வித மரியாதை உண்டு – அவர்கள் ஆசீர்வதித்தால் நல்லது நடக்கும் என்பது ஒரு வித நம்பிக்கை. குழந்தை பிறந்தாலோ, வீட்டில் திருமணம் நடந்தாலோ இவர்கள் வந்து விடுவார்கள் – டோலக், பாட்டு, நடனம் என ஒரே அமர்க்களம் தான். திருமண நிகழ்வு அன்றே வந்து, இரு வீட்டாரிடமும் (மணமகன் வீடு, மணமகள் வீடு) நிறைய வசூல் செய்து விடுவார்கள்.  குழந்தை பிறந்தாலும் அதே போலவே வீட்டுக்கு வந்து வாழ்த்துவதோடு பண வசூலும் நடக்கும்.  என்னதான் இவர்களை மதித்து, பணம் கொடுத்தாலும் இவர்களது நடவடிக்கைகள் பல சமயங்களில் அதீதமானதாகவே இருக்கும்!  பொதுவாக நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்க முடியும் என்பதெல்லாம் இங்கே கணக்கே இல்லை! அவர்கள் கேட்பது ஆயிரங்களில் என்பதையும் சொல்லி விடுகிறேன்.

 

விழாவிற்குச் சென்றிருந்த போது அங்கே ஐந்து பேர் வந்தார்கள். உங்கள் வீட்டில் திருமணம் – மகனுக்கு திருமணம் – எங்களது ஆசீர்வாதம் மணமக்களை நன்றாக வைத்திருக்கும். காசு கொடுங்கள் என்று கேட்டு டோலக்-அடித்தபடி நடனத்தினை ஆரம்பித்து விட்டார்கள்.  மணமகனின் தந்தை பேசிய பிறகு 1100 ரூபாய் கொடுக்க, “இதென்ன, உங்கள் மகனையும் மருமகளையும் நாங்கள் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்! அதற்கு இவ்வளவு தான் கொடுப்பீர்களா?” இதையெல்லாம் நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம்! நாங்கள் என்ன பிச்சையா எடுக்கிறோம்?” என்று பேச ஆரம்பித்து, அவர்கள் கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா நண்பர்களே – “குறைந்த பட்சம் 31000/- - ஆமாம் நண்பர்களே ரூபாய் முப்பத்தி ஒன்றாயிரம்!”

 

நண்பர் அவர்களிடம் என்ன பேசினாலும் கேட்கவில்லை.  நடனம் ஆட ஆரம்பித்து விட்டார்கள்! வேறு வழியில்லை! நானும் மற்றுமொரு நண்பரின் மனைவியும் களத்தில் இறங்கினோம் – பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தான்.  இவர்களிடம் என்ன பேசினாலும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் – நாம் முறைத்துக் கொண்டால் ரசாபாசம் ஆகிவிடுவது இங்கே வழக்கமான ஒன்று! அவர்கள் அளவு நாம் கீழேயிறங்கி பேச முடியாது – ஆபாச செய்கைகளும் தகாத வார்த்தைகள் பேசுவதும் ஆரம்பித்து விட்டால் நமக்குத்தான் கஷ்டம், அசிங்கம். மிகவும் மரியாதையுடன் தான் நானும் நண்பரின் மனைவியும் பேசினோம்.  நீண்ட நேரம் பேசிய பிறகு 5100 ரூபாய் தவிர, அவர்கள் கேட்டபடி ஒரு புடவை, கொஞ்சம் அரிசி, சர்க்கரை என கொடுக்க, அதையும் வாங்கிக் கொள்ள மாட்டேன் என மறுத்து விட்டார்கள் – சரி கண்டுகொள்ளாமல் வீட்டிற்குள் சென்று விடலாம் என்றால் முடியாது!  காவல் துறையினரை அழைத்தாலும் அவர்கள் இது போன்ற விஷயங்களைக் கண்டு கொள்வதில்லை!

 

நிறைய பேச வேண்டியிருந்தது!  கிட்டத்தட்ட அரை மணி நேர உரையாடலுக்குப் பிறகு ரூபாய் பதினொன்றாயிரம், ஒரு புடவை, அரிசி, சர்க்கரை என முடிவு செய்தார்கள் – ஏற்றுக்கொள்ள மனமே இல்லை அவர்களுக்கு – 31000/- ரூபாய்க்கும் குறைவாக நாங்கள் வாங்கிக் கொள்வதில்லை!  உங்கள் மகனும், மருமகளும் நன்றாக இருக்க வேண்டாமா? எத்தனையோ செலவு செய்கிறீர்கள், எங்களுக்காக, எங்கள் சமூகத்தினருக்காக 31000 ரூபாய் கூடவா உங்களால் செலவு செய்ய முடியாது, எங்களை மாதிரியா நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என பலவித வாதங்கள்!  பேசிப் பேசி அவர்கள் கேட்கும் தொகையைக் குறைப்பதற்கு நிறையவே பேச வேண்டியிருந்தது – அதுவும் கோபத்தினை கட்டுக்குள் வைத்து, மரியாதை குறைக்காமல் பேச வேண்டியிருந்தது!

 

இவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் உதவி செய்வதை நான் என்றைக்குமே விரும்புகிறவன் தான்.  என்னால் முடிந்தவரை உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டிருப்பவன் தான்! நண்பரும் அப்படியே!  ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்வது என்பது நம் சக்திக்கு மீறியதாக இருக்கக் கூடாது அல்லவா?  அதே போலவே நாம் எவ்வளவு கொடுக்க வேண்டும் – இனாமாகவோ, உதவியாகவோ எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் தானே! இவர்கள் ஆனால் தனக்கு இவ்வளவு உதவி செய்ய வேண்டும் என்று கேட்பதை, அதுவும் அடாவடியாக கேட்பதையும், நடந்து கொள்வதையும் சரியென்று ஒப்புக்கொள்ள இயலவில்லை!  அரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வழியாக பதினொன்றாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்ட பிறகு கொடுத்த அரிசியிலிருந்து சிலவற்றை எங்கள் தலையில் தூவி, வீட்டிற்குள்ளேயும் தூவி (வெளியிலிருந்தே!) கொஞ்சம் அரிசியை சேலைத் தலைப்பில் போட்டு அதனை தனியாகத் துணியில் கட்டி, மணப்பெண்ணை அவரது கைப்பையில் வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்றெல்லாம் சொல்லி நகர்ந்தார்கள்!

 

இவை அத்தனையும் அவர்களின் தலைவி செய்ய, நடனம் ஆடிய பெண் தனியாக தன்னைக் கவனிக்கவில்லை என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு மாதா ராணி கோவிலுக்குத் தரவேண்டும் எனச் சொல்லி தனியாக 1100/- பெற்றுக் கொண்டார் – அதற்கும் குறைவாக வாங்கினால் மாதாராணியின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமாம்! ஆக மொத்தமாக கிட்டத்தட்ட 13000/- - புடவையின் விலையும் சேர்த்து! இங்கே இத்தனை விஷயங்கள் நடந்து கொண்டிருக்க, அந்தப் பகுதியிலிருந்த வீடுகளிலிருந்து வெளியே வந்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்! ஒருவரும் பேசவே இல்லை! இவையெல்லாம் முடிந்து அவர்கள் புறப்பட்ட நேரத்தில், எதிர் வீட்டுக் கதவு திறந்து வந்த பெண்மணி ஒருவர் (நீண்ட வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அவருக்கு குழந்தை பிறந்திருக்கிறது) இவர்களை அழைத்து பணம் கொடுத்து அனுப்பினார்! எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியாது!

 

பொதுவாக தங்கும் பகுதியில் இருக்கும் வீட்டு வேலை செய்பவர்கள், பகுதியில் இருக்கும் Iron செய்பவர்கள், காவலுக்கு வைத்திருக்கும் செக்யூரிட்டி நபர்கள் போன்றவர்களிடமிருந்து யார் வீட்டில் திருமணம், யார் வீட்டில் குழந்தைகள் பிறந்திருக்கிறது போன்ற தகவல்களை இவர்கள் பெற்றுக் கொண்டு விடுகிறார்கள்.  எல்லாம் நடந்து முடிந்த பிறகு, என்னிடம் பேசிய வட இந்திய நபர் ஒருவர்”பரவயில்லையே, இதோடு விட்டார்களே! நாங்கள் இதை விட அதிகம் கொடுத்தோம்!” என்று புலம்பினார்!  கூடவே, நல்லவேளை சரியான விதத்தில் முடிந்தது இந்த விஷயம் – கொஞ்சம் பிசகினாலும் அசிங்கமாக நடந்து கொள்வார்கள் என்று சொல்ல அதனை வேதனையுடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது நிஜம். ஒரு முறை இரயிலில் பார்த்திருக்கிறேன் அப்படியான ஒரு நிகழ்வினை!  அதைப் பற்றி பேசாமல் இருப்பது உத்தமம்!

 

எத்தனை தான் நாம் மரியாதையாக நடத்தினாலும், இது போன்ற சிலரால் மொத்தமாக திருநங்கைகள் எல்லோரையும் தவறாகவே பார்க்கும்படி செய்து விடுகிறார்கள். இப்படியான சமூகத்தில், முதலில் அவர்களது பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்! அவர்களை வெளியில் துரத்தாமல், அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தினை உணர வைக்க வேண்டும்! இதெல்லாம் நடந்தால் நன்றாகவே இருக்கும்! ஆனால் நடக்குமா என்பது தான் பெரிய கேள்விக்குறி!

 

என்ன நண்பர்களே, இன்றைய பதிவில் சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை…

 

நட்புடன்,

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

34 கருத்துகள்:

  1. வணக்கம் ஐய்யா.
    நிறைய சிந்திக்கச் செய்த பதிவு.
    நம்மால் நம் சக்திக்கு மீரி எதுவும் செய்ய முடியாது.
    இவர்களை இப்படி மாற்றும் சமூகத்தையும் முழுமையாக திருத்திவிடவும் முடியாது.
    நம் அளவில், அணைவரையும் மதித்து மேலும் இது போன்று வஞ்சிக்கப்பட்டவர்களை உருவாக்காமல் இருப்பதே செய்யக்கூடியது என தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அரவிந்த்.

      சில விஷயங்களை மாற்ற முடிவதில்லை! என்னதான் யோசித்தாலும்! அதில் இந்த மாதிரி விஷயங்களும் அடக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆத்திச்சூடி கவிதை அருமை.

    நல்லவர்களும், கெட்டவர்களும் எல்லா பாலினத்திலும் உண்டு.

    காவல்துறை கண்டு கொள்வதில்லை ஒருவேளை இவர்களுக்கு பங்கு இருக்கலாம். இல்லையெனில் இவ்வளவு அடாவடியாக நடக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்களும் கெட்டவர்களும் - எல்லா இடங்களிலும் என்பது உண்மை தான் கில்லர்ஜி.

      காவல்துறைக்கும் பங்கு - தெரியவில்லை! தெரிந்து கொள்ளும் ஆவலும் இல்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அடாவடி பிச்சை கேட்க ஆரம்பித்தால் இவர்களைப் பற்றி என்ன மரியாதை வரும்? 75 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கயா ச்ராத்தம் செய்யப் போனவர் அங்குள்ள பண்டாக்களிடம் பட்ட கஷ்டத்தை நாமக்கல் கவிஞர் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

    கொடும் சாபமோ இல்லை அறச்சொல்லோ சொல்லிடுவாங்களோ என்றுதான் பயப்பட வேண்டியிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாவடி வசூல் - யாராக இருந்தாலும் அது சரியல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. கொடுமை...
    தாங்கள் சொல்வது போல இவர்கள் சிலர் செய்யும் மோசமான செயல்களே எல்லாரையும் தவறாக நினைக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை தான் பரிவை சே. குமார்.

      சிலர் செய்யும் தவறு மொத்தமாக இவ்வாறானவர்களை தவறாக நினைக்க வைத்து விடுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கொடுமை தான் தனபாலன். ஒன்றும் செய்வதற்கில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. கவிதை மிக மிக அருமை...அதைத் தொடர்ந்து தாங்கள் எழுதியுள்ள உண்மை நிகழ்வு கவிதை ஏற்படுத்திய தாக்கத்தை நீர்த்துப் போகச் செய்துவிட்டது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்த்துப் போகச் சென்ன நிகழ்வு - உண்மை தான் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பொதுவாக மக்கள்ஏன் அவர்களிடம் அன்பு பாராட்டுவதில்லைமாறாக வெறுக்கிறார்கள் என்பது புரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் செய்வதால் மொத்த சமுதாயத்திற்கும் கெட்ட பெயர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. பெற்றோர் புரிந்து கொண்டு இவர்களை அரவணைத்துப் படிப்புக் கொடுத்து உணவு கொடுத்துத் துணிமணிகளும் வாங்கிக் கொடுத்து இப்படி எல்லாம் நடக்கக் கூடாது என்றும் சொன்னால் ஒரு வேளை திருந்தலாம். பெற்றோரால் புறக்கணிக்கப்படுவதே இவர்களின் கடுமையான/கொடுமையான பண வசூலுக்குக் காரணம். அதோடு தங்களால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது என்பதாலும் இப்படி எல்லாம் நடந்து கொள்ளலாம். அரசாங்கங்கள் இப்போதெல்லாம் இவர்களுக்கு வாழ்வு கொடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு திருநங்கை காவல்துறையில் அதிகாரியாகச் சேர்ந்திருக்கிறார். இம்மாதிரி எல்லோருக்கும் மறுவாழ்வு கிடைத்தால் இவர்கள் இப்படி எல்லாம் போக மாட்டார்கள். இவர்களில் வயதானவர்களே இப்படி எல்லாம் செய்யலாம். வயது குறைந்தவர்கள் இப்படிப் போக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயது குறைந்தவர்கள் - அன்றைக்கு வந்தவர்கள் அப்படி ஒன்றும் வயதானவர்கள் அல்ல! முப்பதுகளிலும் நாற்பதுகளிலிமே இருக்கலாம் அவர்கள் வயது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. அவர்களை கண்டாலே பரிதாப நினைவுடன் உள்ளூர ஓர் பயம் வந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிதாபமும் உள்ளூர ஒரு பயமும் - உண்மை தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நாங்களும் பேரன் பிறந்த போது இவர்களிடம் மாட்டிக் கொண்டு விழித்தோம்.

    அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து பணத்தைப் பெற்றுக் கொண்ட பின் தான் கிளம்பி போனார்கள்.
    குழந்தை துணி வெளியில் காய்ந்தால் பார்த்து வந்து விடுவார்களாம்.
    கவிதை அவர்களின் கஷ்டத்தை கூறுகிறது.
    அவர்களை அப்படி வாங்கச்சொல்லி யார் யார் எல்லாம் பயன் அடைக்கிறார்களோ!


    //அவர்களது பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்! அவர்களை வெளியில் துரத்தாமல், அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தினை உணர வைக்க வேண்டும்! இதெல்லாம் நடந்தால் நன்றாகவே இருக்கும்! ஆனால் நடக்குமா என்பது தான் பெரிய கேள்விக்குறி!//

    அவர்கள் உறவுகள், சுற்றம், அக்கம் பக்கம் சமூகம் அவர்களை நன்றாக நடத்தினால் இந்த நிலை வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிம்மா. ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் கேட்கும் தொகை அதிகமாகவே இருக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வட இந்தியாவில் தான் இந்த சம்பவம் நடக்கின்றது. தென் இந்தியாவில் அவர்கள் நடத்தை யாரையும் துன்புறத்துவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் இப்படி நடப்பது அதிகம் தான். நம் ஊரில் இரயில்கள், சாலை சந்திப்புகளோடு சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு
  12. பொதுவாகவே பெரும்பாலான திருநங்கைகள் தங்கள் குடும்பத்தான் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
    மக்களிடமும் இவர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இல்லை, சில சமயங்களில் அவர்களும் தங்களது நடத்தைகளால், தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பது சரி தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. ஆச்சரியமான அதிசயமான தகவல் இது எனக்கு... இப்படி வலிய வந்து பணம் கேட்கிறார்களோ.. பொலீசும் கண்டுகொள்ளாதெனில் மக்கள் நிலைமை என்னாகும்...

    அங்குதான் இப்படி திருநங்கைகள் என ஒதுக்கி வைக்கிறது சமூகம், அதனாலதான் அவர்களும் உழைப்பின்றிக் கஸ்டப்படுவதால் இப்படி எல்லாம் வசூலிக்கின்றனர் போலும்.

    இங்கெல்லாம் இருக்கிறார்கள்தான், இவர்களின் உடையில் மாற்றம் இருக்காது அதனால் , சொன்னால்தான் புரியும். இப்படி இருப்பதால் சாதாரண மக்களைப்போலவே உழைத்து வாழ்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒதுக்கி வைக்கப்படும் சமூகம் - வெளிநாடுகளில் இப்படி இல்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  14. அன்பு வெங்கட்,
    மிக யதார்த்தமான பதிவு.
    எனக்கு இவர்களில் சிலரால் துன்பமே கிடைத்திருக்கிறது.
    அதுவும் மின்சார ரயிலில்.
    பதிவிட்டிருக்கும் கவிதை மிக உண்மை.
    சிலர் முன்னேறி இருந்தாலும் பலர்
    இந்தமாதிரி நடந்து கொள்வதால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

    பேரன் வண்டியில் அமர்ந்திருந்த போது
    கார்க்கதவைத் திறக்க முயன்று அவன்
    பயந்தே விட்டான்.
    அலறித் துடித்தது இன்னும் நினைவில்.

    நன்றிமா வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      உங்களுக்குக் கிடைத்த அனுபவமும் வேதனை தான். ஒன்றும் சொல்ல முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. மிகச் சரியாக கூறியுள்ளீர்.
    வட மாநிலங்களில் தான் இதைப் போன்ற செயல்கள் அதிகமாக உள்ளது. தென்மாநிலங்களில் குறைவாக த் தான் உள்ளது. தாங்கள் கூறியது போல ரயில்களிலும், சென்னை போன்ற பெருநகரங்களில் தான் அவர்களது தொந்தரவுகள் உள்ளது. சிறிய நகரங்களில் நாம் கொடுப்பதை வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்.
    இல்லை என்றாலும் அமைதியாக போய்விடுகிறார்கள். மற்றபடி தாங்கள் கூறியுள்ளது போன்று திருமணம் போன்ற நிகழ்வுகளில் தொந்தரவுகள் கொடுப்பதில்லை.

    ஸ்ரீதரன்
    கோவைப்புதூர்
    கோயம்புத்தூர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ ஸ்ரீதரன்? வட மாநிலங்களில் தொந்தரவு சற்றே அதிகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இதுவரை திருநங்கைகளில் நல்லவர் யாரும் என் கண்ணில் படவே இல்லை. அவர்களை மக்கள் ஏன் ஒதுக்குகிறார்கள் என்றால் இதுபோன்ற செயல்களினால்தான். நான் ஒதிஷாவில் பணிபுரிந்தபோது இரயிலில் பயணிக்கும்போதெல்லாம் இவர்களின் அடாவடியைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்களும் உண்டு. ஆனால் எண்ணிக்கையில் குறைவே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் ஜி.

      நீக்கு
  17. என்ன தான் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டாலும், 31000 என்று தாமாகவே ஒரு தொகையை நிர்ணயம் செய்வது என்ற செய்தியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே அதிகமான தொகை தான்! அதுவும் அதற்குக் குறைவாக வாங்கிக் கொள்ள மறுப்பதும், அடாவடித்தனம் செய்வதும் சற்றே அதிகம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார் ராஜசேகர் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....