புதன், 9 செப்டம்பர், 2020

ஏகாந்தத்தின் காதல் கதை – நிர்மலா ரங்கராஜன்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.


எல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் – பணத்தாசை!

 

*****

 

சற்றே இடைவெளிக்குப் பிறகு இன்று திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு கதை மாந்தரின் கதை!  பணத்தின் மீது ஆசை கொண்டவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதை மீண்டும் நிரூபிக்கும் ஒரு நிகழ்வு!  ஓவர் டு திருமதி நிர்மலா ரங்கராஜன்.


*****


ஏகாந்தத்தின் காதல் கதை:





"ஏகாந்தம் வந்தாச்சு, ஏகாந்தம் வந்தாச்சு" கத்திக் கொண்டே ஓடும் குழந்தைகள், அவர்களை அதட்டி உள்ளே செல்லும்படிச் சொல்லும் அம்மாக்கள், "டேய் ஏகாந்தம் வந்துட்டான் வாடா போவோம்" என்று நண்பர்களை திரட்டிச் செல்லும், அம்மாவுக்கு அடங்காத, சற்றே பெரிய பிள்ளைகள், "அந்த பைத்தியக்காரப்பய வந்துட்டான்டி" என்று கழனி வேலைக்கு செல்லும் பெண்கள், போகிற போக்கில் சொல்லிக் கொண்டே செல்வது என காலையிலேயே அந்த தெரு ஒரே அமர்க்களமாக இருக்கும்.


"ஏகாந்தம்" அவர் தாங்க நம்ம கதையோட நாயகன். கொஞ்சம் நாளாகவே தினமும் காலையில் ஏகாந்தம் அங்கு வருவதும் போவதும் தொடர்ந்து நடக்கிறது. ஏகாந்தம் வந்து விட்டால் போதும் பெரியவர் சிறியவர் என்று ஒரு கூட்டமே கூடி விடும். சிலர் பயந்தாலும் ஒரு சிலர் தைரியமாக பேசுவர். ஆனால் ஏகாந்தம் எவரிடமும் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. பாட்டு பாட மட்டுமே வாய் திறப்பார். ஆஹா! ஏகாந்தம் பாடினால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமையாக பாடுவார். எல்லாம் பழைய பாடல்கள். பாடல் பாடும் போது அவரது உடல் மொழி, அந்த பாடலின் கதாநாயகன் கூட அப்படி உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்க முடியாது. அவ்வளவு அருமையாக இருக்கும். சுற்றி நிர்ப்பவர்கள் ஏகாந்தம் ஒரு பைத்தியம் என்பதை கூட மறந்து விட்டு அவரது பாடலை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.


பைத்தியத்தால் எப்படி இவ்வளவு அருமையாக பாட்டு பாட முடிகிறது என்று எவரேனும் சந்தேகப்பட்டு 'பாட்டெல்லாம் நல்லா பாடற ஆனா வாய் திறந்து பேச மாட்டேங்கறியே ஏன்' என்று கேட்டால் ஒரு முறைப்பு தான் பதிலாக வரும். பரிதாபப்பட்டு யாராவது சாப்பாடு கொடுத்தால் வாங்குவது கிடையாது. அங்கிருந்து சென்று விடுவார்.


ஏகாந்தம் சாப்பிடுவது டீச்சர் வீட்டில் மட்டும் தான். தெருவிலிருந்து கொஞ்சம் தள்ளி தனிமையில் இருக்கிறது டீச்சரின் வீடு. பாட்டெல்லாம் பாடி முடித்ததும் நேராக டீச்சர் வீட்டிற்கு போய் விடுவார் ஏகாந்தம்.


ஏகாந்தம் பேசுவது டீச்சரோடும், டீச்சரின் மகன் மோகனோடும் மட்டும் தான். அந்த வீட்டில் இருக்கும் மற்றவர்களோடு பேச மாட்டார். ஏங்க அப்படி!?


ஒரு நாள் டீச்சர் வேலை பார்க்கும் பள்ளியின் நுழை வாயிலில் ஒரே கூச்சல். டீச்சர் சென்று பார்த்தால் மாணவர்கள் கும்பலாக நின்று கத்தி ஆரவாரம் செய்து கொண்டு இருந்தனர். அவர்களை அதட்டி வகுப்புக்குச் செல்ல சொல்லி விட்டு பார்த்தால் அங்கே ஒரு ஆள் மிகவும் பரிதாபமாக களைத்த முகத்துடன் உட்கார்ந்து இருந்தார். பார்க்க பைத்தியம் போல் தோற்றம் இருந்தாலும் வாடிய முகம் அவர் பசியோடு இருப்பதை உணர்த்தியது. மதிய உணவு நேரம் என்பதால் சமைக்கும் ஆயாவிடம் சொல்லி கொஞ்சம் சாப்பாடு கொடுக்க சொன்னார்கள்.


சாப்பிட்ட பிறகு போதுமா என்றதற்கு திருப்தியாக தலையசைத்தார் ஏகாந்தம். அன்று முதல் டீச்சர் மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. எப்படியோ டீச்சரின் வீட்டை கண்டு பிடித்து அங்கு வந்து விட்டார். அதோடு நில்லாமல் அங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் தெருவுக்குள்ளேயும் சென்று வருவார். இப்படி தான் அந்த பகுதியில் பிரபலமானார் ஏகாந்தம். டீச்சரின் மகன் ஏகாந்தத்தை மிகவும் மரியாதையாக நடத்துவார்.


ஒரு நாள் ஏகாந்தத்திடம் 'மிஸ்டர் ஏகாந்தம் உங்கள் பெயர் இதுதானா அல்லது வேறு பெயர் இருக்கிறதா' என்று கேட்டபோது தான் ஏகாந்தம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை பற்றிய உண்மைகளை சொல்ல ஆரம்பித்தார். பிறகு மனம்விட்டு மோகனிடம்   தனது வேதனைகளை கொட்டி தீர்த்தார்.


ஏகாந்தத்தின் பெயர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ், பெற்றோருக்கு ஒரே பிள்ளை. படிப்பு சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கிலம் எம்.ஏ. எம்ஃபில்.


இவரின் அப்பா அரசாங்க உத்யோகம் பார்த்தாலும், விவசாயம் வியாபாரம் என்று ஓடி ஓடி உழைத்து தன் ஒரே பிள்ளைக்கு ஏகப்பட்ட சொத்து சேர்த்து வைத்தார். அப்படிச் சேர்த்து வைத்த சொத்து தான் ஏகாந்தத்துக்கு எதிரியாக மாறியது.


பங்காளிகள் இவரது சொத்தினை பங்கு போட்டுக் கொள்ள திட்டமிட்டனர். இவரின் தந்தையோடு மிகவும் நெருக்கமாக உறவாடினர். பாசத்தை பொழிந்தனர். இவையெல்லாம் வேஷம் என்பதை அறியாத ஏகாந்தத்தின் தந்தை அவர்களை முழுமையாக நம்பினார்.


ஜார்ஜ் (ஏகாந்தம்) அனைவருக்கும் செல்லப் பிள்ளை. கல்லூரி விடுமுறை நாட்களில் கிராமத்திற்கு வந்து விடுவார். உல்லாசப் பறவையாக ஊரெல்லாம் சுற்றி வருவார். பள்ளித் தோழி தென்றலோடு ஜார்ஜ்-க்கு நட்பு தொடர்ந்து கொண்டிருந்து. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சந்தித்து பேசிக் கொள்வார்கள். அவர்களின் பேச்சு எல்லா விஷயங்களுடனும் தொடர்புடையதாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது.  ஒரு காலகட்டத்தில் அவர்களின் இந்த நட்பு காதலாக கனிந்தது. அதன் பிறகு ஜார்ஜுக்கு உலகமே தென்றல் என்றானது. ஊரை பற்றியோ உறவினர்கள் பற்றியோ எந்தவிதமான பயமோ கவலையோ கிடையாது. 


இந்த விஷயம் ஊருக்கும் உறவினருக்கும் தெரிய வந்தது. இருவரும் வேறு வேறு மதத்தினர். ஒரே மதத்தில் இருக்கும் இரண்டு ஜாதிக்குள்ளேயே வேற்றுமை பார்த்து வெறுப்பை கொட்டி வாழ வேண்டிய காதலர்களை வெட்டி வீழ்த்தி நாசம் செய்யும் இந்த கேடுகெட்ட மானிடர்கள் வேற்று மதத்தினரை ஏற்றுக் கொள்வார்களா என்ன? ஆரம்பமானது பிரச்சினை. ஜார்ஜின் பெற்றோர் எந்த பிரச்சனையும் செய்ய வில்லை. தன் ஒரே மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என்று நினைத்தனர். ஆனால் சுற்றத்தார் ஜார்ஜ்-ன் பெற்றோரை வசைபாடினர். இந்த காதலை வளர விடக்கூடாது, இது கௌரவ பிரச்சனை என்று சொல்லி ஜார்ஜின் பெற்றோரை மிரட்ட ஆரம்பித்தனர். பெற்றோர் எதற்கும் பயப்படவில்லை. தன் பிள்ளையை வெறுக்கும் உறவினர் தனக்கும் தேவையில்லை என்று அவர்களை வெறுத்து ஒதுக்கினார் ஜார்ஜின் தந்தை.


ஆனால் பங்காளிகள் அவரை விட்டு பிரியவில்லை. ஜார்ஜ் குடும்பத்தார் மீது அக்கறை காட்டுவது போல நாடகமாடி ஜார்ஜின் பெற்றோரை விஷம் வைத்து கொன்றனர். அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கதை கட்டினர். ஊர் நம்பியது ஆனால் ஜார்ஜ் நம்பவில்லை. தன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த தனது பெற்றோர் இப்படி ஒரு காரியம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றார். ஆனால் தனியாளாக அவரால் போராட முடியவில்லை. ஜார்ஜுக்கு சொத்தின் மீது மோகம் கிடையாது. அவரின் தேவையெல்லாம் தென்றல் மட்டுமே. ஆனால் இந்த சம்பவங்களுக்கு பிறகு தென்றலை பார்க்க முடியாமல் போனது.  இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே தென்றல் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன?


ஒரு நாள் நண்பர்கள் மூலம் கிடைத்தது செய்தி - தென்றல் தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்தி தான் அது. ஜார்ஜுக்கு அழுகை வரவில்லை. கால் போனபோக்கில் நடந்தார். இலக்கின்றி நடந்து கொண்டே இருந்தார்.  கண் இருட்டி மயங்கி விழும் வரை நடந்தார். அதன் பிறகு அந்த ஊர் பக்கமே செல்லவில்லை. அதன் பிறகு ஏகாந்தமாக திரிந்து கொண்டிருந்த நம் கதாநாயகன் தனது வரலாறு மொத்தத்தையும் மோகனிடம் கொட்டி தீர்த்தார். கேட்டுக் கொண்டிருந்த டீச்சரின் குடும்பம் கண்ணீர் விட்டது.


அன்று தெளிவாக பேசிவிட்டு சென்ற ஏகாந்தம் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. அந்த ஊரில் எல்லோருமே ஏகாந்தம் ஏன் வரவில்லை என்று காரணம் புரியாமல் தவித்தனர். நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு பக்கத்து ஊரில் ஒருவர் மூலம் தெரிய வந்த செய்தி ஏகாந்தத்தின் பங்காளிகள் அவரை தேடி பிடித்து அழைத்து சென்று விட்டனர் என்று. சொத்துக்காக இவ்வளவு செய்த அந்த கருங்காலிகள் ஏகாந்தத்தை எங்கே வாழ விட்டிருப்பர்? நிலையில்லாத பொருளுக்கும் சொத்துக்கும் ஆசைப் பட்டு இரண்டு கொலைகளை செய்தவர்கள், மதம் பிடித்த மத வெறியர்கள் நிச்சயமாக ஏகாந்தத்தின் கதையையும் முடித்திருப்பர்.


தினமும் ஏகாந்தம் வந்து கொண்டு இருந்த போது அவரை பைத்தியமாக பார்த்த அந்த ஊர், அவர் வராத போது அவரை நாயகனாக பேசியது. என்றைக்காவது ஒரு நாள் ஏகாந்தம் வரமாட்டாரா என்று ஊர்காரர்கள் அனைவருமே ஏங்கினர். மனிதர்கள் தலைவர்களாக, கவிஞர்களாக, தியாகிகளாக நடிகர்களாக மக்கள் மனதில் இடம் பெறுவர். ஏகாந்தமோ பைத்தியமாக இருந்து அந்த ஊர் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.


ஏகாந்தம் அடிக்கடி பாடும் பாடல் எது தெரியுமா? "நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்..." என்ற பாடல் தான். அர்த்தம் புரியாமல் அவர் இப்பாடலை பாடவில்லை என்பது அவர் இல்லாது போனபிறகு தான் அனைவருக்கும் புரிந்தது.


- நிர்மலா ரங்கராஜன்.

*****


நண்பர்களே, இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி. 

26 கருத்துகள்:

  1. ஏகாந்தத்தின் கதையினால் மனம் கனக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் கனக்கச் செய்த கதை தான் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் ஐய்யா.
    நிர்மலா அம்மையாரின் கதையும் அதற்கு பொருத்தமான ஆரம்ப வாசகமும் அருமை.
    பணம் முக்கியம் ெனினும் அதையும் கடந்த பல அரிய விலைமதிக்கத்தக்க உறவுகள் உலகில் உள்ளதை இந்த தீதுண்ணி காலத்தில் தெளிவாக காண முடிகிறது. அணைவரும் அதை உணர்ந்தால் மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அரவிந்த்.

      வாசகமும் இன்றைய பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பணத்தினைக் காட்டிலும் விலைமதிக்கத்தக்க உறவுகள் உண்டு என்பதை உணர்ந்தால் நல்லதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அருமையான கதை..பகிர்ந்து அறியத்தந்தமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. மனம் கனத்து விட்டது.
    இப்படி நிறைய மனிதர்கள் வாழ்கிறார்கள். ஊருக்குதான் பைத்தியம் ஏகாந்தத்திற்கு அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் கனக்கச் செய்யும் நிகழ்வுகள் தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பணம் ஒன்றே பிரதானமாகிவிட்டது இக்காலத்தில். ஏகாந்தம் எங்காவது இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இக்கதையைப் படித்தபோது சேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகம் மனதிற்கு வந்து சென்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பணம் ஒன்றே பிரதானமாகி விட்டது// உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பணம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி - உண்மை தான் நெல்லைத் தமிழன். ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் சேதாரம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. பண காந்தம் - சரியாகச் சொன்னீர்கள் தனபாலன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    கதை மனதை நெகிழச் செய்து விட்டது. பணத்தினால் அவரை பைத்தியமாக்கிப் பார்த்த உறவுகளும் ஒரு வகையில் பணப் பைத்தியங்கள்தான்.. இது கதையா? உண்மை சம்பவமா..எனத் தெரியவில்லை. ஆனால் உண்மையாக இருக்குமென்று மனதுக்குள் தோன்றுகிறது. ஏனென்றால், இவ்வுலகில் இதுபோல் நிஜ சம்பவங்களும் நடைப் பெறுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காலம் அவர்களுக்கு தகுந்த பதில் சொல்லும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பணம் எதையும் செய்ய வைக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வும் ஒரு உதாரணம். உண்மையான நிகழ்வு தான் இது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நல்ல மனம் பணத்தை நாடவில்லை.
    கெட்டவர்கள் ஏகாந்தத்தை விடவில்லை.
    என்ன உலகு.:(
    மிக வருத்தமாகி விட்டது இந்தக் கதையைப்
    படித்து. எழுதிய நிர்மலா ரங்கராஜனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திருக்கும் உலகம் தான் இது வல்லிம்மா...

      வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. பணம் படுத்தும் பாடே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. மனதை ஏதோ செய்யும் கதை தான் பானும்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மனம் வருந்தச் செய்த கதை! இப்படியும் மனிதர்கள் இருப்பதை நம்பத்தான் வேண்டும். பிறர் சொத்துக்காக அலையும் மக்கள் கூட்டம். சமீபத்தில் ஒரு நாள் இலவசமாக டீ ஷர்ட் கொடுக்கிறாங்கனு தெரிஞ்சதும் திருவல்லிக்கேணியில் ஒரு கடை முன்னர் கூடிய கூட்டம்! கொரோனாவாவது!ஒன்றாவது! இலவசம் எங்களுக்குப் போதும் என்கிற மக்கள்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இலவசம் எங்களுக்குப் போதும் என்கிற மக்கள்!// வேதனை தான் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....