செவ்வாய், 28 ஜூன், 2022

மெயின் கார்ட் கேட்…! - சிறுகதை - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம். ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண் வேண்டும் - ஹோமர்.


******



 

எங்க சார் போகணும்?

 

மெயின் கார்ட் கேட்டுங்க..!

 

தோ வரேன்…! வெளிய வந்து நில்லுங்க.

 

வெளியே தான் நிக்கறோம்! வாங்க!

 

கதிரவன் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்கிறான். நாளும் பொழுதும் ஆட்டோ ஓட்டுவதும் தொழில் நிமித்தமாக ஊரைச் சுற்றி வருவதே அவனது தொழில்..! அந்த வருவாய் தான் அவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் ஜீவநாடி.

 

எரிபொருளின் விலை உயர்வுக்கு ஏற்ப பயணக் கட்டணத்தை நிர்ணயிப்பதும், கஸ்டமர் சொல்லும் இடத்துக்கு வழி தெரிந்து வைத்திருப்பதும் அவனது தொழிலுக்கு அவசியமாகும். 

 

கதிரவனின் மனைவி கலா இல்லத்தரசியாக அவர்களின் இரு குழந்தைகளை கவனித்துக் கொள்கிறாள். 

 

“சார்! காலையிலேர்ந்து இந்த இடத்துக்கே ஏழு தடவ போயிட்டேன்!  எல்லாரும் வேற எங்கயாவது போகக் கூடாதா! எல்லாரும் சாரதாஸு, போத்தீஸ், மங்கள் & மங்கள்னு அங்க தான் போறாங்க சார்” என்று கஸ்டமரிடம் சொல்லிக் கொண்டே ஓட்டி வந்தான். அவரும் ம்ம்ம்..ம்ம்ம் என்று கேட்டுக் கொண்டார். அவரால் மட்டும் என்ன சொல்லி விட முடியும்..! 

 

அவரைப் பொறுத்த வரை தான் நினைக்கும் இடத்துக்கு சரியான  நேரத்திற்குச் சென்று விட வேண்டும்! இறங்கினதும் இந்த ஓட்டுனர் பேசின தொகையை விட கூடுதலாக எவ்வளவு கேட்பாரோ! என்ற யோசனைகள் தான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

 

கதிரவனுக்கு அப்போது அவரிடம் புலம்பிக் கொண்டு வந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 

இப்படியே இரவு வரை தொடர்ந்து சவாரிகள் இருந்தன.

 

நாளின் முடிவில் வீட்டுக்குச் சென்றதும் கலா அன்றைய நாள் எப்படி இருந்தது! சவாரி எங்கெல்லாம் போன மச்சான்? என்று வரிசையாக கேட்டுக் கொண்டே வந்தாள்.

 

இடுப்பெல்லாம் வலிக்குது புள்ள! அப்பாடான்னு வீட்டுல இருக்க மாட்டோமான்னு இருக்கு! 

 

ஒரே இடத்துக்கு போய் போரடிக்குது! 

 

என்று வரிசையாக புலம்பிக் கொண்டிருந்தான்.

 

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள் பின்பு அவனிடம் பேசத் துவங்கினாள்.

 

இதான் உன் தொழில் மச்சான். உன் உழைப்பில தான் நம்ம நாலு பேரும் வாழறோம். சோறு போடற தொழில்ல சுணக்கம் வரலாமான்னு சொல்லு! 

 

ஆட்டோவுக்கு ட்யூ கட்டணும். அண்ணாச்சி கிட்ட வாங்குன கடனுக்கு வட்டி கட்டணும்! 

 

வீட்டு செலவுல கொஞ்சம் கொஞ்சமா மிச்சம் பிடிச்சு காசு சேர்த்துட்டு வரேன். அசல திருப்பிக் கொடுக்க வேணாமா? 

 

நம்ம புள்ளைங்க நல்லா இருக்க வேணாமா சொல்லு! வயிறார சோறு போட்டு படிக்க வெச்சு ஆளாக்கணும். அது தானே அதுகள பெத்ததுக்கு அர்த்தம்! 

 

உனக்கு முடியலண்ணா விடு மச்சான்! எங்கிட்ட தான் லைசன்ஸ் இருக்குல்ல! நாளையிலிருந்து நான் வண்டிய எடுக்கறேன்! 

 

வண்டிய ஓட்டறதோட குடும்பத்தயும் ஓட்டறேன்.

 

அவள் பேசியதை கேட்ட கதிரவன்…

 

வேணாம் புள்ள! என் களைப்பெல்லாம் போயிடுச்சு. உன்ன கஷ்டப்பட வுட்டுட்டு நான் எப்படி நிம்மதியா இருக்கறது சொல்லு! 

 

என்னோட நிலைமை என்னங்கிறது எனக்கு புரிஞ்சிருச்சு! 

 

இனி நான் தெம்பா வண்டி ஓட்டுவேன்.

 

கதிரவனின் உற்சாகப் பேச்சை கேட்ட கலா..

 

சரி! வர ஞாயித்துக்கிழமை புள்ளகள கூட்டிட்டு மெயின் கார்டு கேட் வரைக்கும் போலாமா? நீ திரும்பத் திரும்ப போன இடம் தான்! 

 

நம்ம பையனுக்கு பொறந்த நாளு வருதுல்ல! அங்க ரோட்டுக் கடைல துணி எடுத்துட்டு ஒரு ஜிகிர்தண்டா குடிச்சிட்டு வருவோமா சொல்லு!

 

நிச்சயமா போலாம் புள்ள! அங்க நீயும் நம்ம கண்ணால நாளுக்கு ஒரு சீல எடுத்துக்கோ!

 

வேணாம் மச்சான்! அங்க நீ எனக்கு ஒரு மொழம் பூ வாங்கிக் குடுத்தா அதுவே போதும் மச்சான். அத விட வேற என்ன வேணும் சொல்லு! 

 

அது தான் எனக்கு எல்லாத்தையும் விட ஒசத்தி!

 

புன்னகையுடன் தன் மச்சான் தோளில் சாய்ந்து கொண்டாள் கலா.

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

10 கருத்துகள்:

  1. மனமொத்த தம்பதி. வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  2. அம்பானி வீட்டில்கூட இந்த மகிழ்ச்சி கிடைக்காது.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. கதையும் நன்றாக உள்ளது. இந்த சந்தோஷந்தான் வாழ்க்கையில் உயர்வதற்கு வழிகாட்டி. அந்த ஒருமித்த மனதோடு தன்னம்பிக்கை உடைய தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் .பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய இல்லறம். அழகான நேர்மறைக் கதை, ஆதி! பாராட்டுகள், வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய மனம் ஒத்த தம்பதியர். 'போதும் என்ற மனம்' இருந்தால் வாழ்க்கை சொர்க்கம்தான்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை. முகநூலில் படித்தேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....