செவ்வாய், 9 செப்டம்பர், 2025

கதம்பம் - ஆதி வெங்கட்

 



கறிவேப்பிலை வாசம்!


ஏம்மா! எந்தக் காலத்துல இருக்கீங்க? சும்மா கொஞ்சம் கறிவேப்பிலை குடுன்னா! நான் மட்டும் என்ன மார்க்கெட்ல சும்மாவா எடுக்கறேன்!


எங்க வீட்டுலேயே கறிவேப்பிலை மரம் இருக்கு! உங்க கிட்ட இருக்கிற கறிவேப்பிலை வாசமா இருக்கும் அதேன் கேட்டேன்!!


இந்தாம்மா வெச்சுக்க!! என்று சிறிது எடுத்து கொடுத்ததும் தான் அந்த பெண்மணி நகர்ந்தார்!


அண்ணே! பத்து ரூபாக்கு கறிவேப்பிலையும், பத்து ரூபாக்கு கொத்தமல்லியும் குடுத்துடுங்க! என்று நான் கேட்டதும் அதை எடுத்துக் கொண்டே, இங்க பாரும்மா! வாசமா இருக்குன்னு சொல்லி ஓசில கேட்குது அந்தம்மா! என்று புலம்பினார் அந்தக் காய்க்காரர்!


என்ன சொல்வது! எத்தனையோ வீணாக செலவுகளை செய்யும் நாம் இவரைப் போன்ற சிறு வியாபாரிகளிடம் தான் நம் சாமர்த்தியத்தையும், வீரத்தையும் காண்பிக்கிறோம்!


_____________


நகர் உலா!


மாதம் பிறந்ததும் மளிகைச் சாமான்கள் மருந்து மாத்திரைகள் என்று தேவையானவற்றை வாங்க வெளியே சென்றிருந்த போது ஒரு ATM வாசலில் இரு பெண்மணிகள் வலுத்த வாய்த் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்! அவர்களுக்கு அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!


சற்று தூரத்தில் இரு ஆட்டோக்காரர்கள் இடையே வாய்த் தகராறு! சாலையின் முக்கிய பகுதியில் இந்த சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது! அதை வேடிக்கை பார்க்கும் மக்கள்!


என்னடா இது! எங்க போனாலும் சண்டை போட்டுட்டு இருக்காங்க! இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்ததில் எனக்குள் ஒரு புரிதல்! ஒருவேளை எல்லா நேரத்திலும் அமைதியாகவே இருப்பதை விடுத்து பேச வேண்டிய இடத்தில் நம் தரப்பு நியாயத்தை பேசவும் வேண்டுமோ!! என்று தான் தோன்றியது!


_____________


கஸ்தூரி மேத்தி!!?


ம்மா! கசூரி மேத்தி உள்ள ரேக்ல எல்லாம் தேடினேன்! ஸ்டாக் இல்லையா??


இருக்குக்கா! எவ்வளவு வேணும் உங்களுக்கு! இதோ எடுத்துட்டு வரச் சொல்றேன்! 


இந்தாங்க! Everest கஸ்தூரி மேத்தி! என்று சொல்லிக் கொடுத்தார் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணிபுரியும் ஒரு பெண்! வாய் வரை அது ‘கசூரி மேத்தி’ப்பா கஸ்தூரி இல்ல!! என்று சொல்லலாம் எனத் தோன்றியது!! சொல்லவில்லை..:)


வெந்தயக்கீரை கிடைக்கும் போது அதை காயவைத்து நாமே கூட கசூரி மேத்தி செய்து கொள்ளலாம்! ஆலு மேத்தியாக உருளைக்கிழங்கோடு வெந்தயக்கீரை சேர்த்து dry sabji ஆகவும் பண்ணலாம்! மேத்தி பராட்டா கூடப் பண்ணலாம்! நான் இப்போது செய்வதெல்லாம் சப்பாத்திக்கு எந்த சப்ஜி செய்தாலும் இறக்கியதும் கசூரி மேத்தியை சேர்த்து விடுவது ஒன்றே!


வீட்டிற்கு வந்ததும் எவரெஸ்ட் டப்பாவை எடுத்துப் பார்த்தால் எழுத்துப்பிழை தான் முதலில் கண்ணில் தெரிந்தது! अ க்கு மேலே கொம்பு வராதே! துணைக்கால் போட்டு கொம்பு வைத்தால்ओ (ஓ) என்றல்லவா மாறிவிடும்! அல்லது இரண்டு கொம்பு போட்டால்औ(ஒள) என்று தான் ஆகும்! இது ஏன் இப்படி போட்டுருக்கிறார்கள் என்று தெரியவில்லை!! உண்மையில் एवरेस्ट् என்று தான் வந்திருக்க வேண்டும்!


______________


கடமைப் பாதை!


மாலைநேர நடைப்பயிற்சியில்…


என்ன! ஆஃபீஸ்ல இருந்து கிளம்பியாச்சா??


இன்னும் இல்ல! கொஞ்சம் வேலை இருக்கு! இங்க ஒண்ணும் ஸ்பெஷலா இல்ல! அங்க என்ன??


இங்கேயும் ஸ்பெஷலா ஒண்ணும் இல்ல! கிளாஸ் அட்டெண்ட் பண்ணேன்! இன்னிக்கு grammar தான் எடுத்தாங்க! அதுல ‘நானா விதானி’ன்னு ஒரு வார்த்தை வந்ததும், சட்டுனு பூஜைல நாம சொல்லுவோமே, நாநா வித பரிமள பத்ர புஷ்பானி சமர்ப்பயாமி! அதுதான் ஞாபகம் வந்தது!


நீயெல்லாம் யாரு!! பெரிய ஆளாச்சே!


அப்படி இல்ல! நாநா விதானின்னா பலவிதமானன்னு அர்த்தம்! அப்புறம் இலைகளையும், மலர்களையும் சமர்ப்பிக்கிறேன்னு அர்த்தம்! முன்னாடி பொதுவா கேட்ட மந்திரங்கள் எல்லாம் இப்போ அர்த்தத்தோட புரியறது! அதோட grammarஉம்..! அவ்வளவு தான்!


அன்னிக்கு ராஜ்பத்னு இருந்த பேரை இப்போ kartavya pathன்னு மாத்தியிருக்கிறதா சொன்னீங்க இல்லையா?


ஆமா! பில்டிங் கூட kartavya bhavanன்னு இப்போ புதுசா கட்டியிருக்காங்க! 


ம்ம்ம்! Kartavyaன்னா கடமை! அங்கே அந்த ரோட்டுல கடமையைச் செய்யற அரசு அலுவலகங்கள் தான வரிசையா இருக்கு! அதுதான் ‘கடமைப் பாதை’! அப்புறம் bhavanam னா கட்டிடம்!


ம்ம்ம்…ம்ம்ம்… நடத்து…நடத்து…:)


______________


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்.

9/9/25

9 கருத்துகள்:

  1. பேச வேண்டிய நேரத்தில் மரியாதை நிமித்தம் அமைதியாக இருந்தால் மேலே மேலே குட்டிக் கொண்டிருப்பார்கள்...
    விஜி.

    பதிலளிநீக்கு
  2. பெரிய கடைகளில் நாம் பேரம் பேச முடியுமா? இல்லை, நான் இத்தனை ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன், கொத்தமல்லியை சும்மா கொடு என்று கேட்கத்தான் முடியுமா?

    இப்படியானவர்களிடம் தான் கொத்தமல்லி கறிவேப்பிலையை சில சமயம் இஞ்சியைக் கூடக் கேட்பதுண்டு.

    பாவம் அவங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஒருவேளை எல்லா நேரத்திலும் அமைதியாகவே இருப்பதை விடுத்து பேச வேண்டிய இடத்தில் நம் தரப்பு நியாயத்தை பேசவும் வேண்டுமோ!!//

    கண்டிப்பாக, ஆதி. பேச வேண்டிய நேரத்தில் நம் தரப்பு நியாயத்தை நிதானமாகவேனும் பேச வேண்டும். ஆனால் எதிராளி புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இல்லை என்றால் அமைதியாகக் கடந்துவிடுவது நல்லது என்றே தோன்றும் புரிந்துகொள்ளாதவர்களிடம் நாம் எதற்கு நம் எனர்ஜியை நேரத்தை வீணாக்க வேண்டும்? இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அது ஏனோ, ஆதி, பல சமையல் யுட்யூப்களிலும் எல்லாருமே கஸ்தூரி மேத்தி என்றே சொல்கிறார்கள். என்ன சொல்ல?

    நானும் எவரெஸ்ட் டப்பாக்களில் ஹிந்தியில் எ வுக்குப் பதிலாக ஹிந்தியில் நீங்க சொல்லியிருப்பது போல் போட்டிருப்பதைப் பார்க்கிறேன், ஆதி. ஏன் அப்படிப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. வெங்கட்ஜி க்குத் தெரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. வெங்கட்ஜிக்கே பாடமா!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சென்னையில் காய்கறி வாங்கினால் கறிவேப்பிலை இலவசமாகத்தான் ஒடித்துப் போடுவார்கள்.  சாதாரணமாக 200 அல்லது 300 ரூபாய்க்கு வாங்கினாலே நிறைய தருவார்கள்.
      
    ஆனால் காய் எதுவுமே வாங்காமல் கறிவேப்பிலை மட்டும் ஓசி கேட்டால் கஷ்டம்தான்!

    பதிலளிநீக்கு
  7. பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேசவேண்டும்.  ஆனால் சண்டையின்றி மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் அளவு இல்லாமல் அமைதியாக நம் கருத்தை எடுத்து வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. ஹிந்தி எழுத்தில் 'எ' என்கிற குறுக்கெழுத்து இல்லை போலும். 

    நான் கசூரி மேத்தி எல்லாம் உபயோகிப்பதே இல்லை.  விரோதம் ஒன்றும் இல்லை.  பழகவில்லை, அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  9. சமஸ்கிருதம் இங்கும் எங்கள் வீட்டிலும் சிலர் கற்றுக் கொள்கிறார்கள்.  கற்றுக் கொடுப்பவர் இன்னொரு உறவினர்.  பரீட்சையும் எழுதி பாஸ் ஆகிறார்கள்.  அவர்களும் ஸ்லோகங்களுடன் தாங்கள் படிப்பதை கம்பேர் செய்து சொல்வார்கள்.  கர்த்தவ்ய போன்ற வார்த்தைகள் எல்லாம் ஹிந்தியிலும் அதே பொருள் என்பதால் அது புரிந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....