திங்கள், 29 ஆகஸ்ட், 2011

மே அன்னா ஹு[ன்]:



                                                                                                                                                                                                                                         
திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம், 28 ஆகஸ்ட் 2011 அன்றோடு முடிந்திருக்கிறது. இந்த கட்டுரை அவரது “ஜன் லோக் பால்” பற்றியோ, அரசாங்கத்தின் தடுமாற்றங்கள் பற்றியோ, இந்த விஷயத்தினை நல்லது-கெட்டது என்ற கோணத்தில் விவாதிக்கும் இருவேறு தரப்பினர்களைப் பற்றியோ அல்ல.  ஒரு சாதாரண பொது ஜனமாக இந்த நாட்களில் தலைநகர் தில்லியில் நடந்த சில விஷயங்களைப் பற்றியது மட்டுமே.

கடந்த பதிமூன்று நாட்களில் பாதிக்கும் மேல், உண்ணாவிரதம் இருந்த ராம்லீலா மைதான் வழியாகத் தான் என்னுடைய காலை மாலை பயணங்கள் அமைந்தன.  மக்கள் கூட்டம் அலைமோதியது என்பதைக் காண முடிந்தது.  வரலாறு காணாத கூட்டம், எண்ணிக்கையில் பல சாதனைகள் என ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அங்கிருந்து செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

எப்போதுமே ஒரு மனிதன் தனியனாய் இருக்கும் போது நடந்து கொள்ளும் முறைக்கும் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது நடந்து கொள்ளும் முறைக்கும் நிச்சயம் வித்தியாசம் உண்டு என்பதை கண்கூடாக இந்த நாட்களில் என்னால் காண முடிந்தது. 

  • கடற்கரை போன்ற பொழுதுபோக்கிற்கு வழியில்லாத பெரும்பாலான தில்லி மக்கள் இந்த நாட்களை நல்ல விதமாய்   பயன்படுத்திக் கொண்டனர்.

  • லோக் பால் – பாலா அது எருமைப் பாலா, பசும்பாலா என்று கேட்கும் அளவுக்கே விஷயம் தெரிந்த மக்கள் கூட “மே அன்னா ஹு[ன்]” எழுதிய தொப்பிகளையும், சட்டைகளையும் அணிந்து கொண்டு பல விதமான கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

  • நிறைய இளைஞர்கள் தத்தமது மோட்டார் பைக்குகளில் இரண்டு மூன்று பேர்களாய், தலைக்கு பாதுகாப்பு கவசம் [ஹெல்மெட்] இல்லாமல் வெறும் ஐந்து ரூபாய் அன்னா தொப்பியை அணிந்து கொண்டு மணிக்கு 80-100 கிலோ மீட்டர் வேகத்தில் தங்களுக்கும், சக சாலை உபயோகிப்பவர்களுக்கும் விபத்து நடக்க ஏதுவாய் ஆர்பாட்டங்கள் செய்து கொண்டு இருந்தனர்.
  • பாதையில் போகும் எல்லா பயணிகளையும் இவர்கள் தொந்தரவு செய்ததையும் யாராலும் மறுக்க இயலாது.
  • தில்லி மெட்ரோவில் பயணம் செய்யும் அன்னா ஆதரவாளர்கள் மெட்ரோவினுள்ளேயே கோஷங்கள் எழுப்பியபடி பயணம் செய்தனர்.  கோஷம் எழுப்பாத மற்ற பயணிகளை துவேஷித்து, ”கோஷம் செய்யப் போகிறாயா இல்லையா?” என்று மிரட்டி கூட கோஷம் போட வைத்துள்ளனர். அப்படி மிரட்டப்பட்ட, வெளியூரிலிருந்து வந்திருந்த எனது நண்பர் ஒருவர், எதற்கு வம்பு என தன் பங்குக்கு கோஷமிட்டிருக்கிறார்.
  • ஒரு பெரிய கூட்டத்தினைச் சமாளிப்பது எந்த ஒரு காவல்துறைக்கும் கஷ்டமே.  நீங்கள் எல்லோரும் இரண்டு காவலர்கள் வாங்கிய அடிகளை ஊடகங்களில் பார்த்திருக்கலாம். 
  • எந்த நேரமும் வன்முறை வெடிக்கக் காத்திருந்தது.  உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரே அவர்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் இந்தக் கூட்டத்தினையும் அவர்களது செயல்களையும் நிச்சயம் கட்டுப்படுத்தியிருக்க முடியாது.
  • சதர் பஜார் பகுதி வியாபாரிகளுக்கு நல்ல லாபம்.   உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளிலிருந்தே நமது மூவர்ண கொடிகளும், அன்னா தொப்பிகளும், சட்டைகளும் நல்ல விற்பனை.
  • ஒவ்வொரு சாலை சந்திப்புகளிலும், அதுவும் ராம்லீலா மைதானம் செல்லும் வழியில் இருந்த அனைத்து சாலை சந்திப்புகளிலும் இவைகளை விற்கும் நிறைய நபர்களைப்  பார்க்க முடிந்தது. 
  • தொப்பி 5-10 ரூபாய்க்கும், கொடிகள், அளவினைப் பொருத்து 1000 ரூபாய் வரை கூட விற்கப்பட்டது.
  • பஞ்சாபிலிருந்து வந்திருந்த ஒரு சர்தார்ஜி ஒரு லாரி முழுவதும் வாழைப்பழங்களும், உணவுப் பொட்டலங்களும் கொண்டு வந்து விநியோகம் செய்து கொண்டிருந்தார். 
  • அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழுது போக்கினர்.     


பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு தன்னுடைய உண்ணாவிரதத்தினைக் கைவிட்டார் அன்னா. பலருக்கு இந்த ஜன் லோக் பால் சட்டத்தினால் என்ன பயன் வரப்போகிறது என்பது இன்னும் புரியாத நிலை தான்.  ”இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும்/வாங்கும் நிலை இப்போதிலிருந்து மாறிவிடுமா” என்பது போகப்போகத்தான் தெரியும்.  பொறுத்திருந்து பார்ப்போம்.

மீண்டும் சந்திப்போம்…..

வெங்கட்.