வெள்ளி, 18 மார்ச், 2016

ஃப்ரூட் சாலட் – 162 – She Auto – பெருந்தலைவர் – வெளிநாட்டு வாழ்க்கை


She Auto

பணியில் இருக்கும் பல பெண்கள் தங்களது வேலை முடிந்து வீடு திரும்ப இரவு நேரம் ஆகிவிடும்போது வீட்டில் இருக்கும் அவரது பெற்றோர் அல்லது கணவர் அவர்களது பாதுகாப்பு குறித்த கவலை கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.  கேரளாவின் காவல்துறை இதற்காகவே She Auto  என ஒரு வசதியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த வசதி பற்றிய ஒரு காணொளி கீழே…..




நல்ல வசதி இது.  எல்லா ஊர்களிலும் இப்படி இருந்தால், பெண்களுக்கு வரும் தொல்லைகளை தடுக்க முடியும்.  கேரள காவல் துறைக்கு இந்த வார பூங்கொத்து.


பூந்தொட்டி:

மனதை பூந்தொட்டியாய் வைத்திருங்கள்…..  குப்பைகளே வந்து விழுந்தாலும் அவற்றை உரமாக்கி விடும்….

விளையாட்டு:



ரசித்த விளம்பரம்: காணொளி

கோதுமை மாவு தான் – அதற்கும் விளம்பரம் உண்டு! ஆனால் இந்த விளம்பரம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்….  ஹிந்தி புரிந்தால் நிச்சயம் ரசிக்க முடியும். பாருங்களேன்.



வெளிநாட்டு வாழ்க்கை:

வெளிநாடுகளில் சென்று வேலை செய்யும் ஒருவரைப் பற்றிய கவிதை….  மனதைத் தொட்டது…. அக்கவிதை இதோ உங்களுக்காக…

தொலைந்து போச்சு….

துபாயிலிருந்து அனுப்பிய பணத்தில்
கொட்டகையைப் பிரிச்சு
மச்சு வீடு கட்டியாச்சு.

மலை அடிவாரத்தில்
நஞ்சை ஆறு ஏக்கர்
வாங்கிப் போட்டாச்சு.

வெளிநாட்டுப் பொருளா
வீடு நிறைஞ்சு போச்சு.

எல்லாம் முடிஞ்சு
நரைத்த தலையும்
தங்கப் பல்லுமா
புருஷன் வந்தபோது
இளமையும் தொலைஞ்சு போச்சு!  

ரசித்த கார்ட்டூன்!

இதுவும் ஹிந்தி தான்….  ஹிந்தி படிக்கத் தெரியாதவர்கள் வசதிக்காக கீழே தமிழிலும்…


தேநீரில் துடித்த ஈ:

பெருந்தலைவர் காமராஜ் பற்றிய விஷயம்.  படித்ததில் பிடித்ததாக இதோ….

பெருந்தலைவர் காமராஜ் ஒரு முறை ஒரு கலெக்டரை அழைத்திருந்தார். உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது. ”டீயைக் குடிங்கன்னேன்….” என்றார் காமராஜர். தேநீரைப் பருக சில நொடிகள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.

உடனே காமராஜர் அவரது தேநீர் கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் பெருந்தலைவர்.

பிறகு கலெக்டரிடம், ”டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க, அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே…. உங்களுக்கு டீ தான் பிரச்சனை. அந்த ஈக்கு…? வாழ்வா சாவாங்கறது பிரச்சனை. இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா… மக்களோட சைட்ல இருந்து எப்படி சிந்திப்பீங்க??”

கலெக்டர் தலை குனிந்தார்…

படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜர்.   

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

செவ்வாய், 15 மார்ச், 2016

கோவிந்தா ஜி - மணிப்பூரில்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 5

ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில்

சென்ற பகுதியில் கங்க்லா கோட்டை பற்றி பார்த்தோம். அப்பதிவில் கங்க்லா பகுதியில் சில வழிபாட்டுத் தலங்களும் உண்டு என்பதைச் சொல்லி இருந்தேன். அந்த வழிபாட்டுத் தலம் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.  தொடரினை ஆரம்பிக்கும் போதும் மணிப்பூர் நகர மக்கள் வைஷ்ணத்தை அதிகம் தொடர்பவர்கள் என்பதும் சொல்லி இருந்தேன்.  இந்த ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி கோவில் வைஷ்ணவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலம்.  மிகப் பழமையான கோவிலும் கூட. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் எதிரே இருக்கும் மண்டபம்

கங்க்லா கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மஹாராஜாக்கள் அனைவரும் இங்கே வந்து வழிபாடு நடத்தி இருக்கிறார்கள்.  போர் என்றாலே அழிக்கப்படும் பல விஷயங்களில் வழிபாட்டுத் தலங்களும் உண்டு. பலமுறை இடிக்கப்பட்டும், சூறையாடப் பட்டும் தொடர்ந்து இக்கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது. கோவிலின் இரண்டு கோபுரங்கள் [நம் ஊர் கோபுரம் மாதிரி இருக்காது!] முற்றிலும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டு இருந்ததைக் கூட போர் சமயத்தில் எடுத்துச் சென்று விட மீண்டும் தங்கத் தகடுகள் வேயப்பட்டு இருக்கின்றன.


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் கோபுரம்

கோவிந்தாஜி முக்கிய தெய்வமாகவும், கிருஷ்ணருக்கும் பலராமருக்கும்,  ஜகன்னாத்-க்கும்  சிலைகள் உண்டு.  கோவிலின் வெளியே இருக்கும் தாழ்வாரம் வரை தான் யாருமே செல்ல முடியும். பூஜை செய்பவர்கள் தாழ்வாரத்திற்கு வந்து பக்தர்கள் தரும் காணிக்கைகளை பெற்று இறைவனிடத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.  தினமும் காலை, மாலை, மதியம் ஆகிய வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் மணி


 ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் கொடி மரம்

நம் ஊர் கொடி மரம் போல இங்கேயும் கொடி மரம் உண்டு என்றாலும், இக்கொடிகள் வித்தியாசமாக இருக்கின்றன.  படத்தில் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இங்கே உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இம்மாதிரி நிறைய கொடிமரங்களைக் காண முடிந்தது. நமது பள்ளிக்கூடங்களில் இருக்கும் பெரிய மணி மாதிரி ஒன்றை நிறுத்தி வைத்திருந்தார்கள் – அதை பூஜா சமயங்களில் பயன்படுத்துகிறார்கள்.  பிரம்மாண்டமான மணி – அதைச் செய்ய எவ்வளவு பிரயத்தனம் செய்திருப்பார்கள் என்று பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் - ரீங்காரம் செய்யும் ஓசை இதிலிருந்து தான்....

அதைப் போலவே ஒரு வட்ட வடிவ பித்தளை தட்டும், அதில் ஒலி எழுப்ப ஒரு குச்சியும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.  அதுவும் பிரம்மாண்டம்!  அதிலிருந்து எழுப்பப்படும் ஒலியும் அதன் ரீங்காரமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது…..



ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி!
படம்: இணையத்திலிருந்து....


 கருடன்....
படம்: இணையத்திலிருந்து....

வெளியே நின்றபடியே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.  அவர்களுடைய வழிபாட்டு முறைகள் நம்மிலிருந்து வித்தியாசமாக இருப்பதால் நமக்கு ஒன்றும் புரியவில்லை.  தாழ்வாரத்தினைத் தாண்டிச் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என்பதும் தெரியாததால், படிக்கட்டில் கால் வைக்கப் போக, அங்கிருந்த ஒருவர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதைச் சொன்னார்.  சரி என்று வெளியே நின்றபடியே ஒரு வணக்கம் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம். 


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில்

அடுத்ததாக நாங்கள் சென்றதும் இன்னுமொரு வழிபாட்டுத் தலம் தான்.  ISKCON இங்கேயும் ஒரு கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். அக்கோவிலுக்குச் சென்று பார்க்கலாம் எனச் சொல்ல, அங்கே அனைவரும் சென்றோம்.  ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் என அழைக்கப்படும் இக்கோவில் மூன்று கோபுரங்களோடு மிக அழகாய் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வெளியே புல்வெளியும் தோட்டமும் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வெளியே புகைப்படம் எடுக்க அனுமதித்தாலும், உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு கருடன் சிலை மிக அழகாய் வித்தியாசமாக இருந்தது! புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் கோபுரங்கள்

பல ஆண்டுகளாகவே இக்கோவில் இங்கே இருந்தாலும், 2006-ஆம் ஆண்டு, இங்கே நடந்த குண்டு வெடிப்பின் போது கோவில் கொஞ்சம் சேதமடைந்தது.  ஐந்து பேருக்கு மேல் இறந்து போனார்கள். ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். 


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் - சிங்கத்தின் மேல் தூண்கள்!

கோவிலின் விதானத்தில் வண்ணமயமான ஓவியங்கள் பலவற்றை வரைந்து வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.  நாங்கள் சென்றபோது புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை என்றாலும், இணையத்தில் இக்கோவிலின் உள்ளேயும் படம் எடுத்து சிலர் பகிர்ந்து இருப்பதைக் காண முடிந்தது. அதிலிருந்து சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன் – நீங்களும் பார்த்து ரசிப்பதற்காக.

கோவில் உட்புறத் தோற்றம்....
படம்: இணையத்திலிருந்து....

தினமும் காலை முதல் இரவு வரை இக்கோவில் திறந்திருக்கும்.  இவ்விடத்தில் ஒரு உணவகமும் உண்டு. நாங்களும் அங்கே சென்று தேநீர் அருந்தலாம் என அங்கே செல்ல, உணவகம் மாலைக்கு மேல் தான் திறப்பார்கள் எனச் சொல்லி விட்டார்கள்.  கோவிலைப் பார்த்த பிறகு வெளியே ஓட்டுனர் ஷரத் உடன் சென்று கடைவீதியில் இருந்த உணவகம் ஒன்றில் தேநீர் குடித்தோம்.  லால் சாய் [கட்டஞ்சாய்!] மற்றும் பால் விட்ட தேநீர் எது வேண்டுமானாலும் 10 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது!

மாலை நேரத்தில் தேநீருடன் ஏதாவது கொஞ்சம் கொறிக்கலாம் என்றால் எல்லாமே மணிப்பூரி உணவுகளாக, பெயர் தெரியாத உணவுகளாக இருந்தன! தேநீரை மட்டும் குடித்து விட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தது என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 13 மார்ச், 2016

பொங்கல் கோலங்கள் - 2016


இம்முறை பொங்கலுக்கு முதல் நாள் தான் திருவரங்கத்திற்குச் செல்ல முடிந்தது. பொங்கலன்று காலையிலேயே “பொங்கலோ பொங்கல்” என்று வீட்டில் கொண்டாடிய பிறகு நானும் மகளுமாக பொங்கலுக்காக வீடுகளின் வாசலில் போடப்பட்டிருக்கும் வண்ண வண்ணக் கோலங்களைப் பார்ப்பதற்கும் புகைப்படம் எடுப்பதற்கும் புறப்பட்டோம்.  சென்ற வருடமும் அதற்கு முன்னரும் இப்படி புகைப்படம் எடுத்து அவற்றை எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டதுண்டு.  இம்முறை பொங்கல் முடிந்து இத்தனை நாட்கள் ஆனபிறகு தான் இங்கே பகிர்ந்து கொள்ள சமயம் கிடைத்திருக்கிறது!

நான் பார்த்த கோலங்களை நீங்களும் பார்க்க வேண்டாமா?  பாருங்களேன்!

கோலம் - 1 


கோலம் - 2


கோலம் - 3


கோலம் - 4


கோலம் - 5


கோலம் - 6


கோலம் - 7



கோலம் - 8


கோலம் - 9


கோலம் - 10



கோலம் - 11


கோலம் - 12 



கோலம் - 13


கோலம் - 14


கோலம் - 15

கோலங்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வரிசையில் எந்த கோலம் உங்களுக்குப் பிடித்தது என்பதையும் சொல்லுங்களேன்!

வேறு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

தொடர்புடைய பதிவுகள்:



வெள்ளி, 11 மார்ச், 2016

கங்க்லா – அழிக்கப்பட்ட தலைநகரம்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 4

கங்க்லா - நுழைவாயில்....
படம்: இணையத்திலிருந்து...

தங்கும் அறையிலிருந்து புறப்பட்ட நாங்கள் மணிப்பூரின் மிக முக்கியமான இடத்திற்குச் சென்றோம் – கங்க்லா என அழைக்கப்படும் இந்த இடம் மணிப்பூர் பிராந்தியத்தின் பழமையான தலைநகரப் பகுதி.  கங்க்லா எனும் ஹிந்தி வார்த்தைக்கு ஓட்டாண்டி/பிச்சைக்காரன் எனும் அர்த்தம்! என்றாலும் கங்க்லா கோட்டையில் இருந்து அரசாண்டவர்கள் பல மணிப்பூர் ராஜாக்கள்.  கோட்டை மட்டுமல்லாது, இவ்விடம் மணிப்பூரின் பல பழங்குடி மக்களுக்கு புனிதமான இடமும் கூட. மணிப்பூர் பழங்குடி மக்களின் பல வித புனித வழிபாடுகளை இவ்விடத்தில் தான் செய்தார்கள்.

ஹிஜகாங்க் என அழைக்கப்படும் படகுத்துறையில் படகுகள்
படம்: இணையத்திலிருந்து...

கங்க்லா – மணிப்பூரின் புராதனமான தலைநகரம் – பல நூற்றாண்டுகள் கங்க்லாவை தலைநகராகக் கொண்டு பல ராஜாக்கள் மணிப்பூரை ஆண்டு வந்தார்கள். Khaba, Pakhangba போன்ற பழங்குடி மக்கள் காலத்திலிருந்தே இம்ஃபால் நதிக்கரையின் மேற்குக் கரையில் இருக்கும் கங்க்லா நகரினைத் தலைநகராகக் கொண்டு மிகப் பெரிய பரப்பளவினை ஆண்டு வந்தார்கள்.  மணிப்பூரின் பழங்குடிகளில் ஒரு இனமான Ningthoujaக்கள் இங்கிருந்து தான் தங்களது பெயரையும் புகழையும் பரப்பினார்கள்.

பழங்குடி ராஜாக்களின் சின்னம்

ராஜா Khagemba [1597 – 1652 AD] காலத்தில் தான் கங்க்லா கோட்டை கட்டப்பட்டது என்று சில வரலாற்றுக் குறிப்புகளைப் பார்க்க முடிந்தது.  மணிப்பூருக்கு படையெடுத்து வந்த சீனர்களை முறியடித்து அவர்களில் சிலரை சிறைப்படுத்தி அழைத்து வந்து அவர்களிடம் இருந்து கட்டிடக் கலையைக் கற்று கங்க்லா கோட்டையைக் கட்டியதாகவும் சொல்கிறார்கள்.  அவருக்குப் பிறகு அவருடைய மகன் Khunjaoba [1632 – 1666 AD] கங்க்லா கோட்டையை மேலும் பலப்படுத்தியதாகவும் அழகுற அமைத்ததாகவும் வரலாறு.  இவருடைய காலத்தில் மணிப்பூர்/கங்க்லாவின் பலமும் புகழும் மிக உயர்ந்த நிலையில் இருந்ததாம்.


 கங்க்லா கோட்டை - ஒரு வரைபடம்

எப்போதும் மணிப்பூர் உடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பர்மிய ராஜாக்களும் மணிப்பூர்/கங்க்லா உடன் சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டு, அழகிய மணிப்பூர் ராஜகுமாரிகளை மணம் புரிந்து கொண்டார்களாம்.  ராஜா Khunjaoba வைத் தொடர்ந்து Garibaniwaz என்பவரும் மற்ற ராஜாக்களும் தொடர்ந்து அரசாண்டு கங்க்லாவின் பெயரையும் புகழையும் நிலைநாட்டினார்கள். 

கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம்

மஹாராஜா Bhagyachandra [1762 – 1798 AD] அவர்கள் ஆட்சி புரிந்தபோது பர்மியர்கள் மணிப்பூர் மீது பல முறை படையெடுத்து கங்க்லா கோட்டைக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்கள்.  கங்க்லா கோட்டையை முறியடித்து பர்மிய ராஜாக்கள் சுமார் ஏழாண்டு காலம் மணிப்பூரில் ஆட்சி புரிந்தார்கள்.  பர்மிய ராஜாக்கள் மணிப்பூரை ஆண்ட ஏழு ஆண்டுகளை “Chahi Taret Khuntakpa” அதாவது “ஏழு வருட பேரழிவு” என்று அழைக்கிறார்கள்.



அதன் பிறகு மஹாராஜா கம்பீர் சிங் என்பவர் பர்மியர்களைத் தோற்கடித்து மணிப்பூரை மீட்டாலும், தனது தலைநகரை Lagthabal [தற்போதைய Canchipur] எனும் இடத்திற்கு மாற்றிக் கொண்டாராம்.  பல வருடங்கள் கழித்து  ராஜா நாரா சிங் என்பவரின் ஆட்சிக் காலத்தில் [1844 ஆம் வருடம்] தான் மீண்டும் கங்க்லா மணிப்பூர் பிராந்திய தலைநகராக திரும்பவும் ஏற்கப்பட்டது.

ஆங்கிலேயர்களின் வருகையும் கங்க்லாவின் அழிவும்:

மஹாராஜா சந்த்ரகீர்த்தி என்பவரின் ஆட்சியைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சூர்சந்திரா என்பவர் ராஜா பதவியில் அமர்ந்தார். ராஜா சந்த்ரகீர்த்திக்கும் இரண்டாம், மூன்றாம் ராணிகளுக்குப் பிறந்த மகன்களுக்கும் அவ்வளவு ஒத்துப் போகவில்லை. அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டிருந்தது.  இதைப் பயன்படுத்திக் கொண்ட சேனாபதி Tikendrajit என்பவர் ராஜாவுக்கு எதிராக புரட்சி செய்து தனது தம்பி Yubaraj Kulachandra என்பவரை ராஜாவாக முடிசூட்டி கங்க்லா கோட்டையில் அமர்த்தினார்.

காளான் அல்ல! இளைப்பாற ஒரு இடம்

இந்தப் புரட்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் சமாதானம் செய்து வைப்பதாக முன் வந்தார்கள். சமாதானம் செய்வதாகச் சொன்னாலும் கங்க்லா கோட்டை மீது போர் தொடுக்க, அவர்களுக்குள் போர் மூண்டது. சமாதானத்திற்கென்று அனுப்பப்பட்ட ஆங்கிலேயே வீரர்களை, ராஜா சிறை பிடிக்க சொல்ல, சேனாதிபதி அவர்களை சிரச்சேதம் செய்து விடுகிறார்.  அது ஆங்கிலேயர்களை இன்னும் அதிகமாய் கோபப்படுத்துகிறது. மணிப்பூரை சில்ச்சர், கொஹிமா மற்றும் டாமு [மியான்மார்] ஆகிய மூன்று பக்கங்களிலிருந்தும் தாக்குகிறார்கள். கங்க்லா கோட்டை பலத்த சேதமடைந்து வீழ்கிறது.  சேனாதிபதி, ராஜா, மற்றும் பலர் பொதுமக்களுக்கு முன்பாக தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள்…


சிற்றோடை

பல நூற்றாண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருந்த கங்க்லா இன்றைக்கு அதன் அழிவின் சின்னங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.  சுதந்திரத்திற்குப்  பின்னரும் ராணுவத்தினர் கோட்டையைத் தங்கள் வசமே வைத்திருந்தார்கள். வெகு சில இடங்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி உண்டு. மணிப்பூர் பழங்குடி மக்கள் இன்றைக்கும் அங்கே இருக்கும் சில புனிதமான இடங்களில் தங்களது வழிபாடுகளைச் செய்கிறார்கள். 2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு அழிக்கப்பட்ட சில இடங்கள் மட்டும் புனரமைக்கப்பட்டு இருக்கிறது.

கங்க்லா என்பது கோட்டையாக, மணிப்பூரின் தலைநகராக சுமார் ஒரு சதுர மைல் பரப்பளவில் இருந்தது, இன்றைக்கு பல அழிவுகளுக்குப் பிறகு சுமார் 237 ஏக்கர் மட்டுமே கங்க்லாவுக்குள் இருக்கிறது.  Meitei பழங்குடியினரின் மொழியில் கங்க்லா எனும் சொல்லுக்கு ”வறண்ட நிலம்” எனும் பொருளாம். அதைப் போலவே இன்றைக்கு கங்க்லாவின் பல பகுதிகள் வறண்டு போய் கிடக்கிறது.

இன்றைய நாளில் அங்கே ஒரு சிற்றோடை ஓடிக்கொண்டிருக்கிறது. நிறைய மரங்கள், பூக்கள், ஓரிரு வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை மட்டுமே அங்கே இருக்கின்றன. பார்க்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் எடுத்த புகைப்படங்களை இங்கே தந்திருக்கிறேன்.  சிற்றோடையின் அருகே சில இளைஞர்களும் இளைஞிகளும் கல்லூரியைக் கட்டடித்து வந்திருந்தார்கள்.  அந்த இளைஞர்கள், தங்களுடன் வந்திருந்த பெண்களைக் கவர பலத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!

கங்க்லா ஷா:


கங்க்லா ஷா

இரண்டு பிரம்மாண்டமான ட்ராகனின் சிலைகள் தான் கங்க்லா ஷா.  அவை கங்க்லா கோட்டையை ஆண்ட Meitei பழங்குடி ராஜாக்களின் சின்னங்கள்.  பலமுறை இவை தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர் படையெடுப்பின் போதும் கங்க்லா ஷா தரைமட்டமாக இடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவற்றை புனரமைத்து இருக்கிறார்கள். 

பிரம்மாண்டமான கோட்டை என்பது இல்லாமல் அழிக்கப்பட்டால் எவ்வளவு சோகம். எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும், அவற்றை நிர்மாணிக்க எத்தனை மனிதர்கள் உழைத்திருப்பார்கள், அவர்களின் உழைப்பு முழுவதும் இப்படி அழிக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயமானது என்று சொல்வதிற்கில்லை – போரைக் காரணமாகக் கொண்டு அழிப்பது நிச்சயம் சரியல்ல.  எங்கே போர் என்றாலும் பல கட்டிடங்களும், வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்படுகின்றன.  கங்க்லா கோட்டையும் இப்படி பாழடைந்து கிடக்கிறது……

அடுத்த பதிவில் மணிப்பூரில் இருக்கும் வேறொரு இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.  அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 10 மார்ச், 2016

ஃப்ரூட் சாலட் – 161 – ஆறாது சினம் – காயம் – தமிழகத்தில் தேர்தல்


பெண்கள் தினம்…



The Hindu நாளிதழின் இணைய இதழில் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு வெளியிட்ட கட்டுரை Small farmer, big heart, miracle bike – சந்திரா சுப்ரமணியன் எனும் பெண்மணியைப் பற்றிய கட்டுரை.  மிகச் சிறப்பான இந்தப் பெண்மணி பற்றி படித்துப் பாருங்கள்……


சந்திரா சுப்ரமணியன் அவர்களுக்கு இந்த வாரப் பூங்கொத்து. 

அனைத்து மகளிருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் – சற்றே தாமதமாக!

காயப்படுத்தும் சொல்!:

காயப்படுத்தும் என்று தெரிந்தே பேசும் மனிதர்களின் சொல்லுக்கு உன் ஒரு துளி கண்ணீரைக் கூட வீணாக்கி விடாதே… அதுவே அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி!

Love as weapon!



ரசித்த விளம்பரம்: காணொளி

மனம் தொடும் குறும்படங்கள்/விளம்பரங்கள் எடுப்பதில் தாய்லாந்து காரர்கள் சிறந்தவர்கள்.  அவர்களது பல விளம்பரங்களும் குறும்படங்களும் பார்த்து ரசிப்பதுண்டு.  சமீபத்தில் Haier நிறுவனத்திற்காக அவர்கள் எடுத்த ஒரு விளம்பரத்தினைப் பார்க்க நேர்ந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நீங்களும் பாருங்களேன்!



ரசித்த பாடல்: ஆறாது சினம்…

தனிமையே தனிமையே உனக்கென்ன… சமீப நாட்களில் இந்தப் பாடலை பல முறை கேட்க நேர்ந்தது.  நன்றாக இருக்கிறது. நான் ரசித்த இந்தப் பாடல் ஆறாது சினம் படத்தில் இடம்பெற்ற பாடல்.  பாடலைப் பாடியவரின் குரல், பாடல் படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் பிடித்திருக்கிறது. நான் ரசித்த பாடலை நீங்களும் ரசிக்க இதோ…..



ரசித்த கார்ட்டூன்!

1970-களில் திரு ஆர்.கே. லக்ஷ்மண் அவர்கள் வரைந்த கார்ட்டூன் இது. தமிழகத்தில் தேர்தல் நடக்கப்போகும் இந்த நேரத்திலும் இது பொருந்துகிறது!  தேர்தலுக்கு முன்னர் வாக்காளருக்கு கிடைக்கும் மரியாதை, தேர்தலுக்குப் பின் என்ன ஆகும் என்பதை இதை விட அழகாய்ச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை!


என்ன செய்வாய்?

ஒரு கணவன் தனது மனைவிக்கு Whatsapp-ல் தகவல் அனுப்பினாராம்….. “சாலையில் வேறு ஒரு பெண்ணைத் தழுவியபடி நான் இருப்பதை பார்த்துவிட்டால் நீ என்ன செய்வாய்?”

அதற்கு மனைவி பதில் அனுப்பினாராம் – “ஒரு கண்ணை மூடி, மறு கண்ணைத் திறந்து வைத்துக் கொள்வேன்!”

அட பரவாயில்லையே…  வேறு எதையும் செய்யமாட்டாயா? என்று மீண்டும் பதில் அனுப்பினாராம் கணவர்.  அப்போது மனைவி தன் கணவனுக்கு அனுப்பிய புகைப்படம் இது தான்!



மீண்டும் அடுத்த வாரம் வேறு சில தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி