செவ்வாய், 29 நவம்பர், 2016

அலுவலகத் தொல்லைகளில் இருந்து விடுபட….



கடந்த சில வாரங்களாகவே அலுவலகத்தில் அதிகமான பணிச்சுமை – பதிவுகள் கூட ஒரு வாரம் எழுதவில்லை – மற்ற நண்பர்களின் பதிவுகளும் படிக்கவில்லை. சில நாட்கள் காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்குச் சென்றால் வீடு திரும்பும்போது இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிடும். ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் மற்ற வேலைகள் – சமைப்பது, வீட்டு வேலைகள் ஆகிய அனைத்துமே தடைபட்டு விடுகின்றன.  ஒன்பதரை மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து சமைத்து சாப்பிட்டு படுக்க நள்ளிரவு ஆகிவிடுகிறது!

இப்படி எல்லாம் வேலை செய்து கொண்டிருந்தபோது அலுவலகத்தில் ஒரு நாள் இது பற்றி பேச்சு வந்தது. தொடர்ந்து தொல்லைகள் இருந்தால் எப்படி சமாளிப்பது, ஏதாவது செய்ய முடியுமா என்ற பேச்சு வந்தபோது பழைய அனுபவங்கள், நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன.  அவற்றை இங்கேயும் பார்க்கலாம்….

நிகழ்வு-1: எனக்குத் தெரிந்த நபர் வேலை பார்த்துக் கொண்டிருந்த அலுவலகத்தில் [அரசு அலுவலகம் தான்] அவருடைய மேலதிகாரி ரொம்பவே படுத்திக் கொண்டிருந்தார்.  தினம் தினம் இரவு வெகு நேரம் வரை உட்கார வைப்பது, செய்யும் வேலைகளில் குறை சொல்வது, தட்டச்சு செய்து கொடுக்கும் கோப்புகளில் மீண்டும், மீண்டும் மாற்றங்கள் செய்வது என ரொம்பவே படுத்தல். ஒவ்வொரு நாளும் பகல் நேரங்களில் பல்வேறு நபர்களுடனான Meetings வைத்துக் கொண்டு, அவருக்கு வரும் கோப்புகள் அனைத்தையுமே மாலை 06.00 மணிக்கு மேல் தான் கையில் எடுப்பார். அதன் பிறகு அந்த கோப்புகள் சம்பந்தமான வேலைகள் முடிய இரவு ஒன்பது மணியாகிவிடும்.  ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தது. 

சனிக்கிழமைகள்/அலுவலக விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்து உட்கார்ந்து கொண்டு, நண்பரை ரொம்பவே படுத்துவார்.  எத்தனையோ முறை மேலதிகாரிகளிடம் முறையீடு செய்தாலும் எந்த மாற்று ஏற்பாடுகளோ, இவரது பணியிடம் மாற்றவோ இல்லை.  ஆறேழு மாதம் இப்படியே தொல்லைகள் தொடர, நண்பர் ஒரு முடிவு செய்தார். இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது, ஏதாவது செய்து இவரை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  அவருக்கு ஒரு யோசனை தோன்ற உடனே செயல்படுத்திவிட்டார். அந்த யோசனை – அதிகாரி வீட்டின் அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசியில் அழைத்து, இந்த வீட்டில் இருக்கும் அதிகாரி இறந்து விட்டார், உடனே பிரேத ஊர்தி அனுப்பி வையுங்கள் எனச் சொல்லி முகவரியும் கொடுத்துவிட்டார் – தான் யார் என்பதைச் சொல்லவில்லை.

அப்போதெல்லாம் தொலைபேசி தான் – அலைபேசி கிடையாது. யார் அழைத்தார் என்பதெல்லாம் கண்டுபிடிக்க வசதி இல்லை! சிறிது நேரத்தில், அந்த அதிகாரி வீட்டுக்கு பிரேத ஊர்தி ஊளையிட்ட படியே விரைந்து சென்றது. ஓட்டுனரும் வண்டியை நிறுத்திவிட்டு, அந்த முகவரியில் உள்ள வீட்டுக்குச் சென்றால் வெளியே ஆள் நடமாட்டமே இல்லை. அவருக்குச் சந்தேகம் வந்தாலும் கேட்டுவிடுவோம் என, கதவைத் தட்டி “வண்டி வந்தாச்சு….” என்று சொல்ல, கதவைத் திறந்த அதிகாரி கேட்டிருக்கிறார் – “என்ன வண்டி, நான் சொல்லவே இல்லையே?” 

பிரேத ஊர்தியின் ஓட்டுனரும், அதிகாரியின் பெயரைச் சொல்லி, அவர் இறந்து விட்டார் என தொலைபேசி மூலம் அழைப்பு வந்தது, அதனால் தான் வந்தேன், இந்த முகவரி தானே தந்தார்கள்” எனச் சொல்ல, அந்த அதிகாரிக்கு பயங்கர குழப்பம். ஓட்டுனரிடம் ”இறந்ததாகச் சொன்னது என்னைத் தான், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று சொல்லி, அவரை திருப்பி அனுப்ப, ஓட்டுனரோ, ”நான் பிரேதம் எடுக்க வந்துவிட்டேனே, எனக்கு காசு யார் கொடுப்பார்?” எனக் கேட்க, அவருக்கு அதிகாரியே கொஞ்சம் காசு கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்.  அந்த அதிகாரிக்கு பயங்கரக் கோபம், தன்னை யாரோ இப்படி இறந்தவனாக ஆக்கிவிட்டார்களே என்று! அடுத்த நாள் அலுவலகம் வரும்போது சுரத்தில்லாமல் வந்திருக்கிறார்.  அவரைப் பார்த்து நண்பருக்கு பயங்கர சிரிப்பு – ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வணக்கம் சொல்லி இருக்கிறார். நாள் முழுவதும் தொல்லையே தரவில்லை. மாலையிலும் வீட்டுக்கு சீக்கிரமே திரும்பி விட்டாராம்.  தொடர்ந்து இப்படி ஒரு வாரம் நடந்திருக்கிறது.  கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களைத் தொந்தரவு செய்வது குறைந்து விட்டதாம் இந்த அதிர்ச்சி வைத்தியத்தில்!

நிகழ்வு-2: இதே மாதிரி ஒரு நபரை அலுவலகத்தில் படுத்திக் கொண்டிருக்க, அவர், தன்னை வேறு அரசு அலுவலகத்திற்கு மாற்றி விடும்படி பலமுறை எழுதிக் கொடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு உயர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் படுத்துவது தொடர்ந்து கொண்டிருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த நபர் ஒரு நாள் நள்ளிரவு சமயத்தில், அந்த அலுவலகத்தின் மூத்த அதிகாரி – அவர் தான் அலுவலகத்திலேயே பெரிய அதிகாரி – வீட்டு தொலைபேசிக்கு அழைத்து, தான் இன்னார் பேசுகிறேன் என்றும், தனது அதிகாரியின் தொலைபேசி எண் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். எதற்கு என அந்த பெரிய அதிகாரி கேட்க, நாளைக்கு நான் வரமாட்டேன், எனக்கு லீவு சொல்லணும், நெட்ல தேடினா, உங்க வீட்டு எண் தான் கிடைத்தது, சரி உங்க கிட்ட எல்லா தொலைபேசி எண்களும் இருக்குமே என உங்களை அழைத்தேன் என்று சொல்லி இருக்கிறார் அந்த நபர். 

அடுத்த நாள் நல்ல ஜாலி மூடில் அலுவலகம் செல்ல, அவருக்கு மாற்றல் உத்தரவு மதியத்திற்குள் கிடைத்தது! அந்த அலுவலகத்திலிருந்து வேறு கட்டிடத்தில் இருக்கும் வேறு ஒரு அரசு அலுவலத்திற்கு!

இந்த நிகழ்வுகள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது இந்த இரண்டில் எது எனக்கு ஒத்து வரும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்! இரண்டுமே சரி வராது – இன்றைய சூழலில்!  முதல் நிகழ்வு கொஞ்சம் ஓவர்.  இரண்டாவது நிகழ்வுப் படி செய்தால் அது பாதகமாகவும் முடியலாம்!

வேறு ஏதாவது வழி இருக்கிறதா என யோசிக்கிறேன் – நீங்களும் யோசித்து ஒரு வழி சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

திங்கள், 28 நவம்பர், 2016

மேகாலயா - எங்கெங்கும் நீர்வீழ்ச்சி….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 70

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

பிஷப் நீர்வீழ்ச்சி

சென்ற பகுதியில் ஷில்லாங்க் நகரின் அருகே உள்ள உமியம் ஏரியைப் பற்றிப் பார்த்தோம்.  அதன் பிறகு வலைப்பதிவுகளில் சற்றே இடைவெளி! இப்போது மீண்டும் பயணத்தினைத் தொடர்வோம்.  இந்தப் பகுதியில் மேகாலயா மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர்வீழ்ச்சிகளைப் பற்றிப் பார்க்கலாம்.  அதிகமான மழை பெய்யும் சீரபுஞ்சி இருக்கும் மாநிலம் என்பதாலோ என்னவோ, இம்மாநிலத்தில் எங்கெங்கு பார்த்தாலும் நீர்வீழ்ச்சிகள் – பத்துக்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் இங்கே இருக்கின்றன.  அதில் நாங்கள் பார்த்த நீர்வீழ்ச்சிகள் வெகு சில மட்டுமே.  காரணம் நாங்கள் சென்றபோது இந்த நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து இல்லை! – இங்கே தான் நீர்வீழ்ச்சி இருக்கிறது என்பதை மட்டுமே பார்க்க முடிந்தது.  அப்படிப் பார்த்த, பார்க்காத நீர்வீழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள் இப்பகுதியிலும் வரும் பகுதிகளிலும் பார்க்கலாம்!


பேடன் நீர்வீழ்ச்சி

Bishop and Beadon Falls: இந்த நீர்வீழ்ச்சிகள் இரண்டுமே ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள் – பக்கத்துப் பக்கத்திலே இருப்பதால் இவற்றை Twin Waterfalls என்றும் அழைக்கிறார்கள்.  கிழக்கு khகாசி மலைப்பகுதிகளில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சிகள் இரண்டுமே கிட்டத்தட்ட 135 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது.  அதாவது சுமார் 443 அடி உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சிகள். இவை இருக்கும் பகுதி மேகாலயாவின் மாப்ரேம் எனும் பகுதி.  நாங்கள் சென்றபோது இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளிலிருந்து மெலிதாக தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது.  இவை இரண்டையுமே ஒரு இடத்திலிருந்து பார்க்கும்படி மேடை அமைத்து வைத்திருக்கிறார்கள். தண்ணீர் முழுதாகக் கொட்டும்போது எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் பார்த்து விட்டு அடுத்த நீர்வீழ்ச்சியை நோக்கி முன்னேறினோம். 


யானை நீர்வீழ்ச்சி


யானை நீர்வீழ்ச்சி பெயர்க்காரணப் பலகையும் நாங்களும்

Elephant Falls: இந்த யானை நீர்வீழ்ச்சி Upper Shillong என அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கிறது.  இப்பகுதியில் வசிக்கும் khகாசி மக்கள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வைத்த பெயர் KA KSHAID LAI PATENG KHOHSIEW அதாவது THREE STEPS WATER FALS – இது ஒரு காரணப் பெயர். இந்த நீர்வீழ்ச்சி மூன்று நிலைகளில் வீழ்ந்து ஓடுவதால் இப்படி பெயர் வைத்திருந்தார்கள்.  ஆனாலும் இந்தப் பெயர் அழிந்து யானை நீர்வீழ்ச்சி ஆகிவிட்டது! ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது, இந்த நீர்வீழ்ச்சிக்கு வந்து பார்க்கையில், அங்கே யானை உருவில் ஒரு பாறை இருக்க, இந்த நீர்வீழ்ச்சிக்கு Elephant Falls என பெயர் வைத்துவிட்டார்கள்.  இப்போது அந்த யானை வடிவ பாறையும் இல்லை – 1897-ஆம் ஆண்டு வந்த நிலநடுக்கத்தில் அந்த யானை வடிவப் பாறை அழிந்து விட்டது!  இப்போது பெயரில் மட்டுமே யானை!


ஃபோட்டோ-ல நாம அழகா வந்துருக்கோமா……


நீர்வீழ்ச்சியில் இருந்து வீழ்ந்த நீர் தேங்கி இருக்கும் இடம்

மூன்று நிலைகளில் விழும் நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க கொஞ்சம் படிகளில் இறங்கி நடக்க வேண்டும்! உள்ளே செல்ல கட்டணமும் உண்டு என்பதை சொல்லி விடுகிறேன்.  பல ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. டிஜிட்டல் கேமரா கொண்டு செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஜோடி படும் கஷ்டம் பார்த்து நான் அவர்களது கேமராவில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொடுத்தேன்! என்னுடைய காமிராவிலும் அவர்களது படம் எடுத்திருக்கிறேன் – Long Shot! – நான் அவர்கள் காமிராவில் எடுத்த படத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தபோது!


ஃபோட்டோ செஷன்…..

Wah Kaba Falls:

Shillong – Sohra பாதையில் இருக்கும் இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஒரு மேடை அமைத்திருக்கிறார்கள்.  அங்கிருந்து தான் நாங்கள் பார்த்தோம்.  இங்கே அருகில் சென்று பார்க்க வேண்டுமெனில் கொஞ்சம் ட்ரெக் செய்ய வேண்டும். தண்ணீர் வரத்து அதிகம் இருந்திருந்தால் ஒரு வேளை சென்றிருக்கலாம்.  அத்தனை தண்ணீர் வரத்து இல்லாதபோது மேடையிலிருந்தே பார்த்து – தண்ணீர் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையிலேயே அதை ரசித்து முடித்தோம்.  அங்கே கொஞ்சம் நேரம் இருந்து அந்த இயற்கைக்காட்சிகளையும், மலைகளையும் பார்த்து ரசித்தோம். 


தயாராகும் மில்க்மெய்ட் டீ!

எதிரே ஒன்றிரண்டு கடைகள் – அங்கே சுடச்சுட தேநீரும் மேகியும் விற்பனை நடந்து கொண்டிருந்தது. சரி தேநீர் குடிக்கலாமே என அங்கே சென்றோம். ஒரு குடும்பமே அந்த கடையை நிர்வாகம் செய்து கொண்டிருந்தது. பதினைந்து, பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார்.  எங்கள் தேவையைச் சொல்ல – அதாவது இரண்டு ப்ளாக் டீ, மூன்று பால் டீ எனச் சொல்ல, ஐந்து ப்ளாக் டீ தயாரித்தார் அப்பெண்.  இரண்டு ப்ளாக் டீ கொடுத்த பிறகு, மீதி இருந்ததில் இரண்டு மூன்று ஸ்பூன் மில்க் மெய்ட் விட்டு ஒரு கலக்கு – அது தான் பால் டீ!  பாலுக்கு பதிலாக மில்க் மெய்ட் – அதுவும் ஏதோ ஒரு லோக்கல் சரக்கு! மில்க் மெயிட் இனிப்பும், ஏற்கனவே போட்ட சர்க்கரை இனிப்பும் சேர்ந்து அதீத இனிப்பில் இருந்தது அந்த பால் டீ எனும் திரவம்!  அதற்கு ப்ளாக் டீயே குடித்திருக்கலாம் என பிறகு தான் தோன்றியது – எப்போதுமே கண் கெட்ட பிறகு தானே சூர்ய நமஸ்காரம்!

அந்த டீயை வேண்டா வெறுப்பாகக் குடித்து முடித்தோம்! அதற்குப் பிறகு மேகாலயாவில் எங்கே தேநீர் குடித்தாலும், மில்க் மெய்ட் சேர்க்காமல், பால் சேர்த்தால் தான் எங்களுக்கு வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கையாக சொல்லி விடுவது வழக்கமாகி இருந்தது. இப்படியாக தேநீர் குடித்து அங்கிருந்து புறப்பட்டோம் – காலை நேர உணவுக்காக வயிறு கதற ஆரம்பித்திருந்தது.  அடுத்ததாக உணவு சாப்பிட்ட பிறகு தான் மற்ற வேலைகள் என்ற முடிவோடு அங்கிருந்து புறப்பட்டோம்.  அந்த அனுபவம் அடுத்த பகுதியில்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

சனி, 19 நவம்பர், 2016

Sorry for the break! – பிசியோ பிசி!


அன்பின் நண்பர்களுக்கு,



நலம் தானே…..  நான் இங்கே நலம். நாடு முழுவதும் 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது பற்றிய பேச்சு மட்டுமே இருக்கும் வேளையில் அதை விடுத்து வேறு விஷயங்கள் பேச யாருமே இல்லை. எங்கே திரும்பினாலும் இந்தப் பேச்சு தான். அரசின் இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள்….  அது சரியா தவறா என்று சொல்லும் அளவுக்கு நான் பொருளாதார நிபுணன் அல்ல! அதனால் இவ்விஷயம் பற்றி இங்கே எழுதப் போவதில்லை. 

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே வலைப்பூவில் உலவுவது, குறிப்பாக நான் தொடரும் நண்பர்களின் பதிவுகளைப் படித்து கருத்து இடுவது குறைந்திருக்கிறது. எனது பதிவுகளுக்கு வரும் கருத்துகளுக்கும் பதில் எழுத முடியவில்லை.  கடந்த ஒரு வாரமாக வலையுலகப் பக்கமே எட்டிப்பார்க்காமல் வேலை.  முன்னரே எழுதி வைத்திருந்த சில பதிவுகளை தினம் தோறும், தானாகவே வெளி வரும் வகையில் சேமித்து வைத்திருந்தது தான் வந்தது. அப்பதிவுகளுக்கு வந்த கருத்துகளை மட்டும் நேற்றைய முன் தினம் வெளியிட முடிந்தது. 

மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படிக்கவோ, அப்பதிவுகளுக்கு தமிழ்மணம் வாக்களிக்கவோ, கருத்துகளை எழுதவோ இயலவில்லை. எங்கே அடுத்த பயணம் சென்றுவிட்டேனோ என்று கூட உங்களில் சிலர் நினைத்திருக்கலாம்! :) சில சமயங்களில் இப்படித்தான் நினைத்தபடி இருக்க முடிவதில்லை.  மற்றவர்களின் விடுபட்ட பதிவுகளைப் படிக்கவே பத்து நாட்களாவது வேண்டும் என நினைக்கிறேன். எப்படியும் நேரம் எடுத்துப் படிக்க வேண்டும்.  படித்து விடுவேன்….. 

எனது பதிவுகளும் எழுத வேண்டும், மற்றவர்களின் பதிவுகளையும் படிக்க வேண்டும் – அலுவலக வேலைகளுக்கு நடுவே, வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு பதிவுலகில் சுற்றுவது தற்போது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. விரைவில் அனைவருடைய விடுபட்ட பதிவுகளையும் படித்து விடுவேன்! “என்னுடைய பதிவுகளைப் படிக்கவோ, கருத்து இடவோ உங்களுக்கு நேரமில்லையா?” என்று யாரும் கேட்பதற்கு முன்னராகவே பதில் சொல்லும் நோக்கத்துடன் நானே முன் ஜாக்கிரதையாக இப்பதிவினை வெளியிட்டு இருக்கிறேன். 

எனது அலுவல்களும் விரைவில் முடிந்து சகஜ நிலை திரும்ப வேண்டும் என்ற ஆசை உண்டு – ரூபாய் நோட்டு பிரச்சனைகளும் விரைவில் தீரும் என்ற நம்பிக்கையும் உண்டு! 

தொடர்ந்து பதிவுகளில் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

வெள்ளி, 18 நவம்பர், 2016

ஃப்ரூட் சாலட் 184 – காசு, பணம், துட்டு, மணி மணி!



இந்த வார செய்தி:



நெல்லை : ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மாட்டோம். ஆனா காசில்லாம சாப்பிடலாம். முடிஞ்சா அப்புறம் பணம் கொடுங்க. இல்லைன்னாலும் பரவாயில்லை," என அறிவித்து சேவையாற்றி வருகிறது நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று.

நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் பணம் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அத்துடன், நேற்று ஒருநாள் வங்கிகள் மூடப்பட்டதுடன், ஏ.டி.எம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினார்கள். கையில் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் கரன்சிகள் இருந்தபோதிலும், அவற்றை வர்த்தக நிறுவனங்களும் ஹோட்டல்களும் வாங்க மறுத்ததால் மக்கள் செய்வது அறியாமல் திகைத்தார்கள். வெளியூர்களைச் சேர்ந்த சிலர் சாப்பிடக் கூட பணம் இல்லாமல் தவித்தார்கள்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான ஹோட்டல்களில் இதே நிலை நீடித்ததால் பலர் உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தனர். சில ஹோட்டல்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்பட்டன.

ஆனால் நெல்லையில் உள்ள ஒரு ஹோட்டலில் ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகள் பெறப்படவில்லை. அதே நேரத்தில் பணம் இல்லாவிட்டாலும் சாப்பிட்டுச்செல்லலாம் என புதுவிதமாய் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அந்த ஹோட்டல் நிர்வாகம். நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்து, அதை செயல்படுத்தியும் வருகிறது.

இதற்கான அறிவிப்பு பலகை ஹோட்டலின் முன்புறம் மட்டுமல்லாது, அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் வைக்கப்பட்டு உள்ளதால், சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள்.

இது பற்றி ஹோட்டலின் உரிமையாளரான கோவி என்கிற கோவிந்தனிடம் பேசினோம். ‘‘திடீரென 500, 1000 ரூபாய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதுடன் ஏ.டி.எம் மையங்களும் மூடப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக, பையில் பணம் இருந்த போதிலும் அதனை யாரும் வாங்காததால் செலவு செய்ய முடியாத நிலைமை உருவானது. அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு உதவுவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களிடம் 500, 1000 ரூபாய்கள் இருந்தபோதிலும் அதனை செலவு செய்ய முடியவில்லை. அதனால் உணவு சப்பிட முடியாமல் சிரமப்படும் தகவல் எனக்கு தெரிய வந்தது.

அதனால் அவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்தேன். நான் ஹோட்டல் வைத்து இருப்பதால் அவர்களுக்கு உணவு கொடுக்க முடிவு செய்தேன். அதனால் இன்றும் நாளையும் யார் வேண்டுமானாலும் வந்து சாப்பிடலாம். அவர்களிடம் ‘பில்’ எதுவும் கேட்க மாட்டோம். அவர்களிடம் பணம் இருந்து, கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் சாப்பிடுவதற்கான தொகையை எப்போது பணம் கிடைக்கிறதோ அப்போது வந்து கொடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை தராமல் போனாலும் பரவாயில்லை என முடிவு செய்து உள்ளோம்.

பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அதே சமயம், இலவசமாக சப்பாடு கொடுக்கிறோம் என்று சொல்லி அவர்களை கொச்சைப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் தான், அவர்களாகவே எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்கலாம் என்று தெரிவித்து உள்ளோம்’’ என்றார்.

சமூக அக்கறையுடன் செயல்படும் இந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள்!

இந்த வார முகப்புத்தக இற்றை:



இந்த வார குறுஞ்செய்தி:

பணத்திற்கு கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

இந்த வார காணொளி:

பணம் அச்சடிப்பது எப்படி? பாருங்களேன்!


இந்த வார புகைப்படம்:


இது எல்லாம் உங்களுக்குத் தான். யார் வேணும்னாலும் எடுத்துக்கோங்க!

படித்ததில் பிடித்தது:

பணம் என்னும் மாயை:

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?

மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்' என்று உணவுப்பொருட்களைப் பதுக்கிக்கொண்டார்கள்.

வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும் உணவுப்பொருட்களைத் தேடி ஓட ஆரம்பித்தார்கள். ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன.

கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன. அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப் பட்டது. பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்துக்கு 10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது.

எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும், மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும் மாதக் கட்டணமாகத் தங்கம் பெறப்பட்டது.

நாடே போர்க்களம் போல் அல்லோலப்பட்டுக் கொண்டு இருக்க… விவசாயிகள் மட்டும் எந்தவித பதற்றமோ சலனமோ இன்றி எப்போதும்போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வாரச் சந்தைகளில் விவசாயிகளிடம் அரிசி, பருப்பு வாங்க, நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள். உணவுப் பொருட்களுக்காக பங்களா, கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது.

வேலை தேடி எல்லோரும் கிராமங்களுக்குச் செல்ல... மூன்று வேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்துக்குத் தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டன.

ஒட்டுமொத்த தனியார் கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு, அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின. அரசுக்குத் தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாகப் பெற்றார்கள். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்ததால், நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டது. வறண்ட பூமியெல்லாம் தவறாது மழை பெய்ததால் விவசாய நிலங்களாக மாறின. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால், மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!

பணம் எனும் மாய வலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை, மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப் பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது.

தயவுசெய்து குறட்டையை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள்… இது கனவுதான். ஆனால், எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை. சில கனவுகள் நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை

இந்தக் கனவும் அப்படித்தான்...

உயிரற்ற காகிதத்தால் ஆன காசிற்காக,

உயிருள்ள
மனித இனமே,
மனித
இனத்தை அழித்து
கொண்டிருக்கிறது.
எங்கும் கலப்படம்,
எதிலும் கலப்படம்.

பணம் என்பது எந்த மனதையும் மயக்கும் மாயப் பேய். பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய, பணத்துக்கு நாம் அடிமையாகக் கூடாது!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 17 நவம்பர், 2016

கண்ணீரால் உருவான உமியம் ஏரி - மேகாலயா….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 69

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ஷில்லாங்க் உமியம் ஏரி
படம்: இணையத்திலிருந்து....

ஷில்லாங்க் நகரில் உள்ளே நுழைந்ததும் அந்த காலை நேரத்திலேயே நாங்கள் சென்ற முதல் இடம் நகரின் முக்கியமான இடமான உமியம் ஏரிக்குத் தான்! ஷில்லாங்க் நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த ஏரி. அத்தனை அழகான ஏரியை சாலையில் இருந்தே பார்க்கும்படி வசதி இருக்கிறது.  ஏரிக்கரைக்குச் சென்று அந்த காலை நேரத்தில் செய்யப்போவது ஒன்றும் இல்லை என்பதால் சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி அங்கே சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தோம். அந்த ஏரி இயற்கையாக உருவானது இல்லை, செயற்கையாக உருவானது என்பதும் ஒரு செய்தி! எப்படி உருவானது என்பதற்கு ஒரு கதை உண்டு….


படம்: இணையத்திலிருந்து....

உமியம் என்பதற்கு மேகாலயாவின் பாரம்பரிய மொழியில் ”கண்ணீரால் உருவான தண்ணீர்” என்ற அர்த்தமாம்….  அதாவது ஏரி உருவானதே கண்ணீரால் என்பது தான் இந்தப் பெயர் சொல்லும் செய்தி! அதுவும் ஒரு பெண்ணின் கண்ணீரால் உருவானதாம் இந்த ஏரி. அழுதே காரியம் சாதிக்கிறார்கள் என்று பல பெண்கள் பற்றிச் சொல்லுவார்கள். ஆனால் ஒரு பெண் அழுது ஒரு ஏரியே உருவாகும் அளவிற்கு அழுவாளா? அழுதிருக்கிறாள் என்று சொல்கிறார்கள்.  எதற்காக அழுதாள், அது என்ன கதை, என்பதைப் பார்க்கலாமா?


 சாலையிலிருந்து பார்த்த உமியம் ஏரி...

இரண்டு தேவலோகப் பெண்கள் தேவலோகத்திலிருந்து பூமியைச் சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.  அவர்களும் பயணப் பிரியர்கள் போல! ஆனால் என்னவொரு வசதி – பேருந்து, விமானம் என எதுவும் இல்லாமல் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்குப் பயணம் செய்யும் சக்தி அவர்களுக்கு உண்டே…. அப்படி ஒரு சக்தி இருந்தால் பாதி நேரம் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன்.  சரி என் விருப்பம் விடுங்கள், அந்த தேவலோகப் பெண்களின் கதைக்கு வருவோம்!  அப்படி பூமியைச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது, இருவரில் ஒரு பெண் காணாமல் போய்விடுகிறார். எங்கே சென்றார், அதுவும் தனது தோழியிடம் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, யாரேனும் கடத்தி விட்டார்களா? என்று எதுவும் மற்றவருக்குத் தெரியாது.


காலை நேரத்தில் உமியம் ஏரி - என்னவொரு அமைதி! 

தொலைந்து போன தேவலோகப் பெண்ணைத் தேடி மற்றவர் அங்கும் இங்கும் அலைகிறார். அப்படி அலைந்து திரிந்து அவர் வந்து சேர்ந்த இடம் மேகாலயா! தேடித்தேடிக் களைத்து இதற்கு மேல் தேடமுடியாது என்ற நிலையில் மேகாலயாவில் வந்து சேர்ந்த இடத்தில் அவரால் தோழியைப் பிரிந்ததை தாங்கவே முடியவில்லை.  கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிகிறது.  இடைவிடாத கண்ணீர்!  அந்த தேவலோகப் பெண்மணியின் கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை! அப்படித் தொடர்ந்து அந்தப் பெண் அழுததில், அவரது கண்ணீரால் உருவானது தானாம் இந்த உமியம் ஏரி!


படம்: படகு இல்லத்திற்கு ஒரு விளம்பரம்

அழகான ஏரி – எதிரே KHகாசி மலைத்தொடர், ஏரிக்கரையில் புல்வெளி என ரம்மியமான சூழல். ஏரிக்கு நடுவே ஒரு சிறிய தீவு – பெயர் லும்பாங்டெங்… அங்கே ஒரு சிறிய படகு இல்லமும் உண்டு. அங்கே தங்கும் வசதிகளும் உண்டு. ஏரிக்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி இருக்கலாம்.  ஷில்லாங் நகர் வாசிகளுக்கு பொழுதுபோக்கே இந்த ஏரிக்கரையில் அமர்ந்து கொண்டு இருப்பது தானாம். இயற்கைச் சூழலில் இருக்க யாருக்குத் தான் பிடிக்காது! இந்த ஏரிக்கு இன்னுமொரு பெயரும் உண்டு! அது படாபானி – ஹிந்தியில் படா என்றால் பெரிய என்ற அர்த்தமுண்டு – இதற்கும் அதே அர்த்தம் – நிறைய தண்ணீர்!


ஏரிக்கரையின் மேலே....

நகரின் மொத்த தண்ணீர் தேவையையும் இந்த ஏரிதான் பூர்த்தி செய்கிறது. தவிர ஊரில் உள்ள மக்களுக்குத் தேவையான மீன்களும் இந்த ஏரியில் இருந்து தான் பிடிக்கிறார்கள்.  கண்ணீரில் உருவான ஏரி என்றால் உப்பு கரிக்குமே அதை எப்படிக் குடிக்கிறார்கள் என்ற அறிவு பூர்வமான கேள்வி கேட்டீர்கள் என்றால் நான்கு நாட்களுக்கு உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காது! நகரின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கத்தின் பகுதியாக உருவானது இந்த ஏரி என்றும் சொல்வதுண்டு. கண்ணீரால் உருவானதோ, இல்லை இயற்கையாக பெய்த மழையால் உருவானதோ, எப்படி இருந்தால் என்ன – ஏரியின் அழகையும், அந்தச் சூழலையும் ரசிப்போம்.


படம்: ஏரிக்கரையில் நான்!

இங்கே 9 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின்நிலையமும் அமைந்திருக்கிறது.  அரசின் இரு துறைகளும் சேர்ந்து இந்த இடத்தினை பராமரிக்கிறார்கள். அரசுத்துறையின் பராமரிப்பில் இருந்தாலும், இந்த ஏரிப்பகுதியில் சில தனியார் தங்குமிடங்கள், ரிசார்ட்டுகளும் உண்டு.  சுற்றுலாவாக வருபவர்கள் அந்த ரிசார்ட்டுகளில் தங்கி இயற்கையை ரசிக்கலாம். ஓய்வும் எடுக்கலாம்!


படம்: இணையத்திலிருந்து....

இந்த ஏரிப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு நிறைய வசதிகள் செய்து தருகிறது மேகாலயா சுற்றுலா வாரியம். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பலவித வசதிகள் – படகுப் பயணம் செய்யும் வசதிகள், தண்ணீரில் செல்லும் ஸ்கூட்டர்கள் தவிர விளையாட்டு வசதிகள் இங்கே உண்டு.  ஷில்லாங்க் நகருக்குச் சென்றால் இந்த உமியம் ஏரிக்குச் சென்று இரண்டு மணி நேரம் உல்லாசமாக இருந்து வரலாம். சாலையின் ஓரத்தில் இருக்கும் மேடைகளில் நின்றபடி நாங்களும் இயற்கையை ரசித்து சுத்தமான காற்றைச் சுவாசித்தோம்.  அப்பகுதியில் பார்த்தபோது நிறைய பேர் இங்கே உல்லாசமாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொண்டோம் – எப்படி என்று தானே கேட்கிறீர்கள் – அங்கே அத்தனை சரக்கு பாட்டில்கள் கிடந்தன!


படம்: இணையத்திலிருந்து....

தவிர நகரின் கழிவுகளை ஏரியில் கலப்பது, தண்ணீர் வரும் வழிகளை அடைத்து வீடுகள் கட்டுவது, நகரமயமாக்கல் என முன்னேற்றப் பாதையில் செல்வதாய் நினைத்து செய்யும் பலவித கொடுஞ்செயல்களால் இந்த ஏரி இப்போது திணறிக்கொண்டிருக்கிறது. பல இடங்களைப் போலவே இந்த உமியம் ஏரியும் அழிந்து விடுமோ என்ற பயம் இயற்கைப் பிரியர்களுக்கு உண்டு. மேகாலயா அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா இல்லை மற்ற அரசாங்கம்/மக்களைப் போலவே இந்த ஏரியின் அழிவினைப் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்களா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.


படம்: இணையத்திலிருந்து....

மேகாலயா பக்கம் சென்றால் நிச்சயம் இந்த ஏரிக்குச் சென்று இயற்கையை ரசியுங்கள்! படகுப் பயணம் செல்வது மட்டுமின்றி Water Sports வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 

அடுத்ததாய் நாங்கள் எங்கே சென்றோம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.