எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, March 9, 2017

ஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 103

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

அடுத்த நாள் காலை எனக்கு தில்லி செல்லும் விமானம் 07.00 மணிக்கு, திருவனந்தபுரம் செல்லும் நண்பர்களுக்கான விமானம் புறப்படுவது 08.00 மணிக்கு. அனைவரும் ஒன்றாகவே விமான நிலையம் சென்று சேர்ந்துவிடுவோம் என தங்குமிடத்திலிருந்து விமான நிலையம் செல்ல 04.30 மணிக்கு வண்டி வரச் சொல்லி இருந்தோம். புறப்பட்டு தயாராக இருக்க, வண்டியும் வந்தது. பதினைந்து நிமிடத்தில் விமான நிலையத்தின் வாசலில் இறக்கி விட்டார் வாகன ஓட்டி.  பாதுகாப்பு சோதனைகள் முடிந்து உள்ளே நுழைந்து ஏர் இந்தியா சிப்பந்தி இருக்கும் இடத்திற்குச் சென்றதும் அந்தப் பெண்மணி சொன்னது, உங்கள் விமானத்தின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது – 08.45 மணிக்கு தான்!

அம்மாடி, இதை முன்னாடியே அலைபேசி மூலம் சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் தூங்கி இருப்போமே என அவரிடம் சொல்ல, ஒரு பொய் புன்னகையை வீசினார் – பொய்யான புன்னகை என்று தெரிந்தால் கொஞ்சம் பயமும், அதே சமயத்தில் கோபமும் வரத்தான் செய்கிறது! வேறு வழியில்லை. நண்பர்களும் அவர்களுக்கான Boarding Pass வாங்கிக் கொண்டு வர, விரிவான பாதுகாப்பு சோதனைகளை முடித்துக் கொண்டு விமான நிலையத்தினுள்ளே அமர்ந்து பயணம் பற்றிய குறிப்புகளையும், எங்கள் அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்தோம்.இந்தப் பயணத்தில், என்னைத் தவிர கேரள நண்பர்கள் பிரமோத், சுரேஷ், சசிகுமார் மற்றும் நசீர் ஆகியோரும் இருந்தார்கள். அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது இன்னுமொரு நண்பர் வின்ஸெண்ட்-உம் சேர்ந்து கொண்டார். மொத்தம் பதினைந்து நாட்கள் பயணம். நிறைய இடங்கள், நிறைய பயணங்கள் என மொத்தம் பதினைந்து நாட்களும் வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்தன. நான் செய்த பயணங்களிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் பயணித்தது இந்த பயணத்தில் தான்.  பயணித்த தொலைவு எவ்வளவு என்ற கணக்கு பார்த்தால் கொஞ்சம் தலை சுற்றுகிறது இப்போது!விமான வழி, தரை வழி, ரயில் மார்க்கம் யானைச் சவாரி, ஜீப் சவாரி, பேருந்துப் பயணம் என பல வழிகளில் பயணித்த ஒரு பயணம் இது. ஹெலிகாப்டர் பயணமும் திட்டமிட்டிருந்தோம் என்றாலும், தட்பவெட்ப நிலை காரணமாக கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் வாய்க்கவில்லை. வித்தியாசமான மனிதர்கள், இரண்டு நாட்டு எல்லைகள் – சீனா மற்றும் பங்க்ளாதேஷ் எல்லைகளும் பார்க்க முடிந்தது இப்பயணத்தில் தான். பஞ்சாப் மாநிலத்தின் வாகாவில் பாகிஸ்தான் எல்லை வரை சென்றிருந்தாலும் இந்த இரண்டு எல்லைகளில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை.

வெவ்வேறு விதமான தட்பவெப்பம், தவாங் [அருணாச்சலப் பிரதேசம்] பகுதியில் பனிப்பொழிவு என்றால், சில இடங்களில் மிதமான குளிர், சில இடங்களில் மழை, வெயில் என மாற்றி மாற்றி அனுபவம் கிடைத்தது. வித்தியாசமான உணவு [மோமோஸ்], சைவ உணவிற்கான தேடல், என கிடைத்த அனுபவங்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  மொத்தம் பதினைந்து நாட்கள் என்பதால் தொடர்ந்து வெளியே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தாலும், யாருக்கும் உடல் நலக் குறைவு ஏற்படாமல் இருந்ததும் நல்ல விஷயம்.

பயணம் நமக்கு பல பாடங்களை, அனுபவங்களைத் தருகிறது என்றாலும் இப்படித் தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்யும் போது உடல் நலக் குறைவு ஏற்படாமல் பயணிப்பது முக்கியம். இந்தப் பயணத்தில் எங்களில் யாருக்குமே பிரச்சனை ஏற்படவில்லை என்பதில் மகிழ்ச்சி.

சரி கொல்கத்தா விமான நிலையத்தில் காத்திருந்த போது பேசியதை இங்கேயும் பகிர்ந்து கொண்டு விட்டேன். நண்பர்களுக்கு விமானத்திற்கு வர அழைப்பு வர அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.  அதற்குப் பிறகு தில்லி புறப்படும் விமானம் பற்றிய அறிவிப்பு வர நானும் விமானம் நோக்கிப் புறப்பட்டேன். கொல்கத்தாவிலிருந்து தில்லி வர சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம்.  இந்த விமானப் பயணத்தில் பெரிதாக அனுபவங்கள் இல்லை. பயணம் முடிந்து விட்டதே என்ற எண்ணம் மனதில் வந்தது தவிர, அடுத்த நாள் முதல் மீண்டும் அலுவலகம் சென்று வேலை பார்க்க வேண்டுமே என்ற எண்ணமும் வந்தது.  அது தவிர, பதினைந்து நாட்களாக பூட்டி இருக்கும் வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டிய வேலையும் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது!

சரி இந்தப் பதினைந்து நாள் பயணத்திற்கு எவ்வளவு செலவு ஆனது என்று யாரும் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன். ஒரு சிலர் ஊர்களில் அரசுத் துறையின் தங்குமிடங்களில் குறைந்த வாடகையில் தங்கியதால் எங்களுக்குச் செலவு குறைந்தது. ஆனாலும், போக்குவரத்து, உணவு, தங்குமிட வாடகை என அனைத்தும் சேர்த்தால், ஒருவருக்கு நாளொன்றுக்கு, சராசரியாக இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு வரை செலவு ஆனது.  இதைத் தவிர சொந்த செலவுகளும் இருக்கலாம்.  மொத்தமாக ஒருவருக்கான செலவு சுமார் 36000/- ரூபாய். தனியார் தங்குமிடங்களில் தங்கி இருந்தால் இன்னும் அதிகமாக ஆகியிருக்கலாம்.

கொஞ்சம் செலவு அதிகம் என்று சொன்னாலும், இது போன்ற பயணங்களில் கிடைக்கும் அனுபவங்களுக்காகவும், தொடர்ந்து செய்யும் வேலைகளிலிருந்து கொஞ்சம் மாற்றம் வேண்டியும் பயணிப்பது நல்லது. 

இந்தப் பயணத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள், எடுத்த புகைப்படங்கள் என பெரும்பாலானவற்றை உங்களுடன் இந்தத் தொடரின் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  தொடரின் மொத்த பகுதிகள் [இப்பகுதியையும் சேர்த்து] 103! அனைத்து பகுதிகளுக்குமான சுட்டி, பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது போல வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

தொடரின் மூலம் என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்பயணத் தொடர் உங்களுக்கும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறேன். 

ஆதலினால் தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 comments:

 1. பயண அனுபவம் விலை மதிக்க முடியாதுதான். ஆனாலும் சற்று அதிகமோ! இந்தப் பயணம்தான் இப்படியா? எல்லாப் பயணமுமே இப்படித்தசனா? செலவைப் பார்த்தால் இந்த அனுபவங்கள் கிடைக்காதே...

  ReplyDelete
  Replies
  1. அத்தனை அதிகமில்லை......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. உங்கள் பதிவுடன் பயணிக்க நாங்களும் தயார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 3. எனக்கும் பயணத்தில் விருப்பம் உண்டு ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. #யாருக்கும் உடல் நலக் குறைவு ஏற்படாமல் இருந்ததும் நல்ல விஷயம்#
  உண்மையில் நல்ல விஷயம்தான் , ஏழு சகோதரிகள் மாநிலங்கள் சுற்றுப் பயணத்தில் ஏழரை ஏதும் வராமல் போனதே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 5. இந்த மாதிரி பயணம் யாருக்கு தான் பிடிக்காது... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. பைசா காசு கூட செலவழிக்காமல்,
  அறையில் அமர்ந்தபடியே
  நாங்களும் தங்களுடன்இணைந்து பயணித்த உணர்வு
  நன்றி ஐயா
  வாழ்க்கை எனும் பயணத்திற்கு இதுபோன்ற பயணங்களே
  புத்துணர்ச்சியையும் புத்தெழுச்சியையும் வழங்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. வணக்கம்
  ஐயா
  பயண அனுபவம் பற்றி சொல்லிய விதம் சிறப்பு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 8. பயணம் சுவாரசியமாக இருந்தது. செலவு ரொம்ப இல்லை. இந்தமாதிரி 15 நாள், இத்தனை தூரம், இத்தனை இடங்கள் பார்க்க 50,000 கூட ஆகும். ஆனால் இத்தகைய பயணம் அரிதல்லவா? எத்தனை பேருக்கு வாய்க்கும் (வாழ்க்கையில் கூடவே பயணிக்கும் குடும்பத்திற்கும் இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லையே).

  ReplyDelete
  Replies
  1. குடும்பத்திற்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.

   Delete
 10. உங்களுடன் பயணித்த அனுபவம் எங்களுக்கு என்ன அந்த உணவுவகைகளை கற்பனையில் உண்டு நிறைவு பெற்றோம் எல்லாமே நினிவில் வருவது கடினம் மறந்தால் இருக்கவே இருக்கிறது பதிவுகள் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 11. பயணத்துடன் தொடர்ந்தே வந்த உணர்வு.உடனுக்குடன் அத்தனையும் படித்தாலும் போனில் படித்ததால் கருத்துக்கள் அவ்வப்போது தான் இட்டேன்.

  உண்மையில் படங்களுடன் விபரங்களும் எங்களையும் இம்மாதிர் பயணங்கள் செய்ய வேண்டும் எனும் தூண்டுதலை தருகின்றது. பல இடங்கள் சென்றாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தது மனதின் உறுதியினாலும், உற்சாகத்தினாலும் கூட இருக்கலாம்.

  எப்போது சுவிஸ் வரப்போகின்றீர்கள்? சுவிஸ் பயணக்கட்டுரையை உங்கள் பாணியில் படிக்க காத்திருக்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. சுவிஸ் வர அழைத்ததற்கு நன்றி நிஷா... வெளி நாடு வர முதலில் பாஸ்போர்ட் வாங்க வேண்டும்! :) வெளி நாடு வர வாய்ப்பு குறைவே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 12. அத்தனை அதிகமாகத் தெரியவில்லை ஜி! ஏனென்றால் பயண அனுபவம் மட்டுமின்றி பலவிதமான பயணங்க்ள், மலைப்பிரதேசம் அங்கு வண்டி ஓட்டுவது என்பது தனித் திறமை என்று பல விதங்களிலும் ரொம்ப அதிகம் என்று சொல்லுவதற்கில்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல் தனியார் விடுதி என்றால் இன்னும் அதிகமாகியிருக்கலாம்....என்றாலும் மனதில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அதெல்லாம் ஜுஜுபியாகிவிடும்! எங்களுக்கே வாசிக்கும் போது அத்தனை சுவாரஸ்யம் மகிழ்வு கிடைத்தது என்றால் உங்களுக்கு நேரில் எனும் போது அதைச் சொல்லிட வார்த்தைகள் இல்லைதான் இல்லையா....நல்லதொரு பயணம் ஜி! நாங்களும் உங்களுடன் வந்து பல தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி..

  கீதா: மேற்சொன்ன கருத்துடன் குறித்தும் கொண்டுவிட்டேன்...மிக்க நன்றி ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. இந்த இரண்டு நாட்களாக தங்களின் 'ஏழு சகோதரிகள்' பயணத் தொடரைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். அருமை.

  மாநில எல்லைகளில் ILP வாங்க வேண்டுமெனில் எத்தனை காலம் ஆகும் என்று தங்களுக்குத் தெரியுமா? இணையத்தில் தேடினால், பதில் இல்லை.

  - ஞானசேகர்

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் தலைநகரில் உள்ள Resident Commissioner அலுவலகத்தில் வாங்கினோம் - சுலபமாகக் கிடைத்தது. எல்லயில் வாங்க தகுந்த ஆதாரங்களுடன் சென்றால் விரைவாக தரலாம்.

   வருகைக்கு நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....