ஏழைகளின் ஊட்டி –
பகுதி 7
சென்ற
பதிவில் கிளியூர் நீர்வீழ்ச்சி பார்த்து விட்டு கால்களைப் பிடித்தபடியே மேலே நடந்து
வந்து கொண்டிருந்தோம். ஒருவழியாக எல்லாப் படிகளையும் கடந்து வந்தாயிற்று. வழியில் ஆங்காங்கே நின்று கொஞ்சம் ஓய்வெடுத்துக்
கொண்டபோது பார்த்த இயற்கைக் காட்சிகள் மிக அழகு.
மழை கொஞ்சமாக தூறிக் கொண்டிருந்ததால் கேமரா கண்களால் அக்காட்சிகளைப் பார்த்து
படம் பிடித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. எடுத்த ஒன்றிரண்டு படங்களையும் சென்ற பதிவில் பகிர்ந்து
கொண்டேன்.
கிளியூர் நீர்வீழ்ச்சியிலிருந்து புறப்பட்டு வரும் வழியில்...
அங்கிருந்து
காரில் அமர்ந்து அடுத்ததாய் சென்ற
இடம் ஏற்காடு நகரின் பெயருக்குக் காரணமாக அமைந்த இரண்டு விஷயங்களில் ஒன்றான ஏரி தான். ஏரி மற்றும் காடுகள் சூழ்ந்த இடம் என்பதால் ஏற்காடு
என்பதை முந்தைய பகுதி ஒன்றில் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்! வாயிலிலேயே படகுக் குழாம் இருக்கிறது. தமிழக அரசின்
சுற்றுலாத் துறையினர் இந்த ஏரிகளில் பல்வேறு அளவுகளில் படகுகளை இயக்குகிறார்கள்.
மற்றுமோர் இயற்கைக் காட்சி....
இரண்டு
பேர் மட்டும் அமர்ந்து கால்களால் மிதித்து செலுத்தும் படகு, நான்கு பேர் அமர்ந்து கொள்ள
துடுப்புகளால் படகினைச் செலுத்தும் விதமான படகுகள், மோட்டார் வைத்து இயக்கப்படும் படகுகள்
என அங்கே வசதிகள் உண்டு. செல்லும் நபர்களுக்கு
ஏற்பவும், படகுகளின் வகையைப் பொறுத்தும் கட்டணம் வசூலிக்கிறார்கள். எட்டு பேர் அமர்ந்து செல்லும் விசைப்படகிற்கு
10 நிமிடத்திற்கு ரூபாய் 300 கட்டணம். ஐந்து
பேர் செல்லும் துடுப்புப் படகிற்கு 30 நிமிடத்திற்கு 100 ரூபாய்! [கட்டணங்கள் தற்போது
அதிகமாகி இருக்கலாம்]. நாங்கள் துடுப்புகளால் செலுத்தும் படகு ஒன்றினை அமர்த்திக் கொண்டோம். அதனைச் செலுத்தும் நபரிடம் சென்று நாங்கள் பணம்
செலுத்தியதற்கான ரசீதைக் காண்பித்ததும், அனைவருக்கும் அணிந்து கொள்ள Life
Jacket தந்தார்.
படகில் பயணித்தபடியே பார்த்த இயற்கைக் காட்சிகள்
இது மாதிரி இடங்களில் தரும் Life
Jacket பார்க்கும்போதே கொஞ்சம் அருவருப்பாகத் தான் இருக்கிறது! அதை எப்போதாவது சுத்தம்
செய்வதுண்டா என்ற எண்ணம் மனதுக்குள் வருவதால் அதை அணிந்து கொள்வதில் தயக்கம்! ஆனாலும்
பாதுகாப்பு கருதி அவற்றை அணிந்து கொள்வது அவசியமாகிறது. மிதிப் படகுகள் அன்னப்பறவையின்
வடிவில் அமைத்திருப்பது பார்க்கும்போதே அழகாய் இருந்தது.
படகில் பயணித்தபடியே ஏற்காடு நகரின்
அழகையும், மலைகள், மரங்கள் என இயற்கைக் காட்சிகளையும் ரசிப்பது ஒரு சுகானுபவம் தான். படகில் இருந்தபடியே கண்ணில் காணும் அனைத்து காட்சிகளையும்
காமிராவில் படம் பிடித்தபடியே இருந்தேன். கூடவே
படகோட்டியிடம் பேச்சும் கொடுத்தேன். அவர்களுக்கு
என்ன கூலி கிடைக்கும், அவர்கள் தமிழக அரசு ஊழியர்களா, நாளொன்றுக்கு எத்தனை ரூபாய் சம்பாதிக்க
முடியும் என்றெல்லாம் கேட்கும்போது அவருக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி – தன்னையும் மதித்து
ஒருவர் கேள்வி கேட்கிறாரே என்று, நமக்கும் சில தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறதே!
நாளொன்றுக்கு எட்டு முதல் பத்து முறை
படகோட்டும் வாய்ப்பு ஒவ்வொரு படகோட்டிக்கும் கிடைக்கும் – விடுமுறை நாட்களில் கொஞ்சம்
அதிகம் கிடைக்கும் – இருக்கும் அத்தனை படகோட்டிகளுக்கும் வரிசை முறைப்படி வாய்ப்புகள்
கொடுப்பார்களாம். ஒரு முறை ஏரியைச் சுற்றி
வந்தால் 38 ரூபாய் கிடைக்கும் என்றார். அதைத்
தவிர படகில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் கொடுக்கும் சன்மானமும் கிடைத்தால் மனதில்
திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்று சொல்லி வந்தார்.
படகில்
பயணம் செய்யும் பயணிகளுக்கு இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் ஆர்வத்தில் அதற்காக படகோட்டி
உழைப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை! ஒவ்வொரு முறையும் துடுப்பு போடும்போது எத்தனை பிரயத்தனப்
படவேண்டியிருக்கிறது! சுற்றுலாவாக வருபவர்கள்
கண்களுக்குத் தெரியும் அத்தனை காட்சிகளையும் ரசிப்பதில் அப்படகோட்டிக்கும் ஒரு பங்கு
இருக்கிறதே!
ஏரியைச்
சுற்றி எத்தனை எத்தனை மரங்கள் அழகான இயற்கைக் காட்சிகள் – அத்தனையும் பார்க்கும்போது
மனதில் அமைதியும் ஒரு சந்தோஷமும் கிடைப்பது உண்மை தான்! என்ன ஒரு அமைதி. அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக ஸ்பீட் போட்டில்
செல்லும் சிலர் மகிழ்ச்சியில் கூச்சல் போடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! சில
பயணிகள் மற்ற படகுகளில் வருபவர்களைப் பார்த்து கைகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொள்வதும் அழகு!
தாங்களும்
படகுப் பயணம் செய்கிறோம் என்ற எண்ணமே பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! அனைவருக்கும்
மகிழ்ச்சி தரும் அந்த ஏரியில் சில பயணிகள் பிளாஸ்டிக் குப்பிகளை வீசுவதும், கொண்டு
வரும் தின்பண்டங்களின் ப்ளாஸ்டிக் குப்பைகளை ஏரியில் போடுவதும் பார்க்கும்போது, வெளி
நாடுகளில் இருப்பது போல கடுமையான அபராதம் விதித்தால் தான் இவர்களை திருத்த முடியும் என்று தோன்றியது.
அரை
மணி நேரத்திற்கு மேல் படகுப் பயணம் செய்து இயற்கைக் காட்சிகளை ரசித்தபிறகு படகோட்டி
எங்களை கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.
அவருக்கு கொஞ்சம் சன்மானமும் கொடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து கரையேறினோம். வெளியே வேக வைத்த மக்காச் சோளம், வேர்க்கடலை, பஜ்ஜி,
போண்டா போன்ற பல வித தின்பண்டங்களும், குளிர்பானங்களும் விற்றுக் கொண்டிருக்க, அனைத்து கடைகளிலுமே சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை நிறையவே – உண்ணப்போவது இன்று தான் கடைசி என்பது போல சிலர் உண்டு கொண்டிருந்தார்கள்.
என்ன நண்பர்களே ஏற்காடு ஏரியில் நாம்
சென்ற படகோட்டத்தினை ரசித்தீர்களா? அடுத்ததாய்
நாம் செல்லப் போவது எங்கே? படகோட்டத்தினைப்
பற்றிய எண்ணங்களில் சற்றே சஞ்சரித்துக் கொண்டிருங்களேன்….. அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்!
மீண்டும்
சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
படகுப் பயணத்தை மட்டும் ரசிக்காமல் படகோட்டியின் கஷ்டத்தையும் மனதில் கொண்டு கூறியது அருமை. அனைத்துப் புகைப் படங்களும் நேரில் பார்த்த உணர்வை ஏறபடுத்தி விட்டன
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குஉங்கள் பயண அனுபவத்தை அழகான படங்களுடன் தெளிவான அதே சமயத்தில் மிக எளிய நடையுடன் சொல்லும் பாங்கு மிக அருமையாக இருக்கிறது.. இதயம் பேசுகிறது வார இதழ் ஆசிரியர் மணியணின் கட்டுரைகளை படிப்பது போல இனிமையா இருக்கிறது. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபாராட்டுகளுக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
குப்பை போவது பற்றி அரசாங்கம் பல குப்பை தொட்டிகளை பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப அருககே வைத்து அதை அடிக்கடி சுத்தம் செய்ய முயலுமானால் மக்களும் அந்த இடத்தை சுத்தமாக வைத்து இருப்பார்கள் அல்லவா
பதிலளிநீக்குகுப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே இருந்தன நண்பரே. ஆனாலும் அருகே சென்று குப்பையைப் போட பலருக்கு சோம்பேறித்தனம்! சில இடங்களில் குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழிந்தபடி இருந்ததும் காண முடிந்தது!
நீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
பதிலளிநீக்குலைஃப் ஜாக்கெட் அணியும் முன் ஒரு பெரிய பிளாஸ்டி கவரை சர்ட் மாதிரி போட்டு கொண்டு அதன் மேல் லைப் ஜாக்கெட் அணியலாம்
ப்ளாஸ்டிக் கவரால் சட்டை! நல்ல ஐடியாவா இருக்கே மதுரைத் தமிழன்!
நீக்குதங்களின் படங்களே,
பதிலளிநீக்குஎங்களை அவ்விடத்திற்கு நேரில் அழைத்துச் செல்கின்றன ஐயா
நன்றி
தங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடகு பயணத்தை இரசித்தேன். படங்கள் கொள்ளை அழகு. வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குலைப் ஜாக்கெட் அனுபவம் நாங்களும் பெற்றதுதான். மிகவும் மோசமாக இருந்தன. மிக அருமையான இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கும், அழகான புகைப்படங்கள் இட்டமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅழகான இடங்களை சுற்றிப் பார்த்தோம்... படகோட்டிக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குலைஃப் ஜாக்கெட் பற்றிச் சொன்னது உண்மையோ உண்மை:(
பதிலளிநீக்குகன்யாகுமரியில் விவேகானந்தா பாறைக்குப் போகும் படகில் கொடுக்கும் லைஃப் ஜாக்கெட் பற்றி முன்பு புலம்பி இருக்கேன்.
நம்ம மக்கள்ஸ் லேசுப்பட்டவங்க இல்லை. கழட்டி மடிச்சு இருக்கையில் வைக்கலாம். ஆனால் கீழே கடாசிட்டு அதுமேலே நடந்துல்லெ போறாங்க. யக்:(
// உண்ணப்போவது இன்று தான் கடைசி என்பது போல சிலர் உண்டு கொண்டிருந்தார்கள்.//
ஒரு மணி நேரம்... தின்னாம இருக்கச் சொன்னால் செத்துருவாங்க. உண்ணப்போவது இதுதான் கடைசி நிமிசம் என்று வயித்துலே அடைச்சுக்கிட்டாத்தான் நிம்மதி:(
அடைச்சுக்கிட்டா தான் நிம்மதி! :))))
நீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
படங்கள் அழகு. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலா மகள்.
நீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அனைத்துப் படங்களும் அருமை. பயண அனுபவத்தை வெகு சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபடகுப்பயணத்தில் கூடவே வந்தது போன்ற ஓர் உணர்வு! அருமையான பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஇந்தப் பதிவைப் படிக்கும் போது கொடைக்கானலில் துழாவும் படகை எங்களிடமே கொடுத்து படகோட்டி இல்லாமல் நாங்கள் படகைத் துழாவி சவாரி செய்தது நினைவிலாடுகிறது. அந்த அனுபவத்தைப் பதிவிலும் முன்பே பகிர்ந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குதில்லியில் இப்படி பயணம் செய்ததுண்டு......
நீக்குதங்களது வருகைக்கும்கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
அனைத்து படங்களும் மிக அருமை.
பதிலளிநீக்குகுப்பைகளை போகும் அழகான இடங்களில் எல்லாம் வீசி ஏறியும் பழக்கத்தை விட்டால் நன்றாக இருக்கும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குபடகில் பயணம் செய்த உணர்வு ஏற்பட்டது! திருந்தாத சிலரைத் திருத்த கடும் நடவடிக்கை தேவைதான்! படகுப் பயணம் பயனுள்ளதாகவும், மகிழ்வளிப்பதாகவும் அமைய உதவும் ஊழியர்களின் பங்கினை மறவாமல் நினைவு கூர்ந்ந்தமை பாராட்டுக்குரியது! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார்க்கும் எங்களின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
அழகான இயற்கைப் படங்களுடன் தங்களின் வர்ணனை அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குஉங்கள் பேச்சு ,துடுப்பு போடும் வலியை நிச்சயம் குறைத்திருக்கும் படகோட்டிக்கு :)
பதிலளிநீக்குத ம 7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குபடங்கள் அழகு ! நானும் இரண்டுமுறை சென்றிருக்கிறேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்கும்ம் படகுப் பயணம், லைஃப் ஜாக்கெட் விஷயம் எல்லாம் தமிழ்நாட்டிற்கு சகஜமான ஒன்று தானே! :(நம் மக்கள் லேசில் திருந்த மாட்டாங்க! மிச்சத்தை அப்புறமாப் படிக்கணும். :)
பதிலளிநீக்குமுடிந்த போது படிங்க..... மக்கள் திருந்துவது எப்போது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
அனுபவங்களும் புகைப்படங்களும் அருமை! முதல் புகைப்படம் மிக அழகு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபடங்கள் அழகு அண்ணா.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
படகுப் பயண விவரணம் ரசித்தோம். படகோட்டியின் கோணத்தில் தங்கள் கருத்தும் சரியெ! அருமையான விவரணம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குதங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.